ஃபயர்ஃபாக்ஸ் 3 பதிவிறக்க உலக சாதனை தினம் 18 ஜூன் 2008 - பங்குகொள்வீர்!

நீங்கள் ஃபயர்ஃபாக்ஸ் ஆர்வலரா? ஃபயர்ஃபாக்ஸ் உலக சாதனை படைக்க வேண்டுமா? உங்களால் அதற்கு உதவ முடியும்.

ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபயர்ஃபாக்ஸ் 3.0 வெளியீட்டை இன்று (18 ஜூன் 2008) பதிவிறக்க வகை செய்திருக்கிறது. ஒரே நாளில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை படைக்க இந்நிறுவனத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.

அதற்கு உங்களால் உதவ முடியும். இந்திய நேரம் 18 ஜூன் 2008 இரவு 11:46க்குள் http://www.spreadfirefox.com/en-US/worldrecord என்ற சுட்டியிலிருந்து ஃபயர்ஃபாக்ஸ் 3 ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் கணினிகளில் நிறுவிக் கொள்ளுங்கள்.

ஃபயர்ஃபாக்ஸ் உலக சாதனை படைக்க நீங்களும் பங்கு பெறுங்கள்.

தொழில்நுட்ப பதிவர்களின் கவனத்துக்கு - கணிமொழி

கணிமொழி வலைத்தளத்தின் அறிமுகம் மற்றும் படைப்புகளுக்கான விண்ணப்ப மடலை தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவுக்கு தபுண்டு லினக்ஸ் குழுவைச் சார்ந்த ஆமாச்சு (ம. ஸ்ரீ ராமதாஸ்) அனுப்பியிருந்தார்.

தங்கள் வலைப்பதிவுகளில் தொழில்நுட்பம் (முக்கியமாய் ஒரு குறிப்பிட்ட நுட்பம் பற்றி கற்று தரும் பாடங்கள்) சார்ந்த பதிவுகளை எழுதிவரும் பதிவர்கள் தங்கள் படைப்புகளை கணிமொழி தளத்துக்கு அனுப்பலாமே.

மடலின் நகல் கீழே:

அறிமுகம்

கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம் உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும் மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள். இரண்டாவது உருவாக்குபவருக்கே உரித்தான தனியுரிம மென்பொருள். இவ்விரண்டினுள் கட்டற்ற மென்பொருள் உலகின் விடயங்களை மொழிய விழையும் முயற்சி கணிமொழி.

இலக்குகள்

  • கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விடயங்கள் துவங்கி அதிநுட்ப விடயங்களையும் அறிந்திட விழையும் ஒருவருக்கு வேண்டிய தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது.
  • உரை, ஒலி, ஒளி என இயன்ற ஊடக வகைகளில் படைப்புகளை ஊக்குவிப்பது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்துறையில் நிகழ்பவற்றை எடுத்துரைப்பது. தற்போதைய இலக்கு ஒரு மாத கால இடைவெளி.
  • எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது.
  • அச்சுப் பிரதிகள் இட்டும் விநியோகிக்கப்படும். (சிறிய அளவில் துவங்க உத்தேசம்.)
  • தங்கள் பகுதியில் அச்சிட்டு விநியோகிப்பது அதிக பலனைத் தருமாயின் அங்ஙனம் செய்ய முனைந்து முயற்சிகள் மேற்கொள்ளவும்.
  • விவரங்கள் வளர வளர அவற்றை புத்தகங்களாகவும் வட்டுக்கள் உள்ளிட்ட ஏனைய சேமிப்பு ஊடகங்களின் வாயிலாகவும் வெளியிடுவது.

பங்களிக்க

  • விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
  • கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த விடயமாக இருத்தல் வேண்டும்.
  • பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு காபிலெப்ட்.
  • தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
  • கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவையாகவும் இருக்கலாம்.
  • படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
  • தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசுவைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
  • தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
  • தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக திட்டப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கவும்.
  • தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் தாங்கள் பங்களிக்கலாம்.
  • ஐயங்களிருப்பின் திட்டப் பொறுப்பாளருக்கு மடலியற்றவும்.

விண்ணப்பங்கள்

  • தொழில்நுட்பத்தை அறிய விழையும் எளிய மக்களுக்காக மேற்கொள்ளப்படும் சிறிய முயற்சியாகும் இது.
  • இதில பங்களிக்க தாங்கள் அதிநுட்ப ஆற்றல் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
  • தங்களுக்கு தெரிந்த விடயத்தை இயன்ற எளிய முறையில் எடுத்துரைக்க ஆர்வம் இருப்பின் போதுமானது.
  • இதன் வளர்ச்சி நம் ஒவ்வொருவரின் கையிலுமே உள்ளது.
  • குறைகளிலிருப்பின் முறையாக தெரியப்படுத்தி முன்னேற்றத்திற்கு தோள் கொடுக்கவும்.

முதல் இதழ் வரும் சித்திரையிலிருந்து துவங்கும். தங்கள் படைப்புகளை ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இணையதளம்: http://kanimozhi.org.in

தற்காலிக மடலாடற் குழு: http://groups.google.com/group/kanimozhi-aakkam

ரஜினி செய்தது சரியா?

ரஜினி நிலம் வாங்கியது தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த தகவலில் வருமான வரி ஏய்ப்பு அல்லது கருப்பு பணம் என்பது எப்படி ஏற்படுகிறது எனப் பார்ப்போம்.

பொதுவாக ஏன் நிலம் வாங்கிய விலையை விட குறைவாக பதிவு செய்கிறார்கள்?

  1. மற்றவர் நலனுக்கு. ஒருவர் வாங்கிய நிலத்திற்கான பதிவு மதிப்பு பொதுவாக அதே பகுதியில் கடைசியாக பதிவு செய்த நிலத்தின் மதிப்போ அல்லது சற்று அதிகமாகவோ கொள்ளப்படுகிறது. இந்த செய்தியில் ரஜினி வாங்கிய நிலத்தின் உண்மை மதிப்புக்கு பதிவு செய்திருந்தால் அடுத்து அந்த பகுதியில் நிலம் வாங்குவோர் அனைவரும் ஏக்கருக்கு 21 லட்சம் அல்லது அதற்கு அதிகமாகத் தான் பதிவு செய்ய வேண்டியிருக்கும் (நிலப்பதிவில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. உண்மையில் நில மதிப்பீடு எப்படி செய்யப்படுகிறது என எனக்கு தெரியாது)
  2. வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணப் புழக்கத்துக்கு. ஒரு ஏக்கர் 21 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 2.3 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்வதன் மூலம்
    • வாங்குபவருக்கு பதிவு செய்த விலையை விட ஏக்கருக்கு 18.7 லட்சம் கூடுதல் எனினும், நிலம் பதிவு செய்யும் கட்டணம் (9-10% நில மதிப்பு) மற்றும் ஒவ்வொரு வருடத்துக்குமான சொத்து வரி ஆகியவை மிகவும் குறைகிறது
    • விற்பவருக்கு தம் சொத்தை விற்பதால் ஏற்படும் வருமானத்தின் மதிப்பில் ஏக்கருக்கு 18.7 லட்சம் கணக்கில் காட்டாததால் அதற்கான வருமான வரி கட்டத் தேவையில்லை
    • ஏக்கருக்கு 18.7 லட்சம் ரூபாய் புழக்கத்திலுள்ள கணக்கில் வராத கருப்புப் பண வரிசையில் கூடுதலாகிறது
இது போல குறைந்த மதிப்பில் செய்வதால் அரசுக்கு 2004-2005ல் சென்னையில் மட்டும் ஏற்பட்ட நட்டம் பற்றிய ஒரு தணிக்கை அறிக்கை இங்கே

இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் நிலம் பதிவு செய்யும் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினி கருப்பு பணத்திற்கு எதிரான பாத்திரத்தில் நடித்தார் என்பதற்காக அவர் செய்தது இது போல நிலம் பதிவு செய்யும் ஏனையோர் செய்வதை விட "கூடுதல் தவறு" என்பது நகைச்சுவை. உண்மையில் சிவாஜி படத்தின் முற்பகுதி கதை போலத்தான் ரஜினி நடந்திருக்கிறார். (இவர் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை, இவருக்கு நிலம் விற்றவர் தான் கணக்கில் வராத கருப்புப் பணமாக பெற்றிருக்கிறார்)

தவறுதல் மனித இயல்பு. ரஜினியும் மனிதரே. ரஜினி ரசிகன் என்பதற்காக ரஜினியின் தவறுகளுக்கெல்லாம் சப்பை கட்டு கட்டிக்கொண்டிருக்க வேண்டிய தேவை ஒரு நல்ல ரசிகனுக்கு இல்லை.

ரஜினியின் ஆளுமை போலவே அவர் செய்யும் சிறு தவறும் பல மடங்காக பெரிதாக்கப்பட்டு ஊடக விற்பனைக்கு பலிகடா ஆக்கப்படுகிறது. ரஜினி என்ற சக்தியின் பெயரில் எந்த செய்தியைப் போட்டாலும் காசு பண்ணலாம் என்பது பல ஊடகத்துறையினர் அறிந்தது. அதை இம்முறை செயல்படுத்தி பலன் கண்டது குமுதம் ரிப்போர்டர்.

அவர் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று கருத்து சொல்லிக் கொண்டிருப்பதை விட, இது போன்ற சூழ்நிலையில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்றால்:

1) நான் முதலில் வாங்கிய போது விற்றவர் ஏற்படுத்திய கருப்புப் பணத்தை அவராய் நினைத்தால் மட்டுமே ஒழிக்க முடியும். எனவே அதை இப்போது என்னளவில் திருத்திக் கொள்ள முடியாது.

2) என் வரையில் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை என்ற நிம்மதியும் இரவில் நல்ல தூக்கமும் பெற
  • அரசு குறைமதிப்பு சொத்துக்கள் குறித்த தணிக்கை நடத்தும் போது நான் வாங்கிய நிலத்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்து அபராதத்துடன் மறுபதிவு செய்து கொள்வேன் (அல்லது)
  • எனக்கு தெரிந்த ஒருவருக்கு விற்று அதை மீண்டும் வாங்கி உண்மையான நில மதிப்புக்கு மறுபதிவு செய்து கொள்வேன். இதனால் ஏற்படும் நிலப்பதிவு செலவுகளுக்கும் நண்பர் செலுத்த வேண்டிய வருமான வரிக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்வேன்.
ஆயினும் சட்டப்படி இது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியவில்லை.

இதே செய்தியில் விக்ரம் நிலம் வாங்கியது பற்றியும் செய்தி வந்துள்ளது. அது உண்மையானால், அவர் நடித்த அன்னியன் படத்தில் இதே போன்ற நிலப்பதிவுக் காட்சியில் அவர் பேசிய வசனத்துக்கு ஏற்ப நடந்திருக்கிறார். அரசுக்கு நட்டம் ஏற்படுத்தவில்லை என்பதில் அவருக்கு பாராட்டுக்கள்.