எரிதங்கள் வாழ்க
Google Buzz Logo

மின்னஞ்சல் எரிதங்களும் மின்னஞ்சல் சங்கிலித் தொடர்களும் எரிச்சலூட்டக் கூடியவை என்றாலும் அவற்றால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்!

அவற்றால் நான் அறிந்த சில விஷயங்கள்:

  1. கோக் குடிப்பதற்கு மட்டுமல்ல (கழிவறையைக் கழுவவும் பயன்படும். )
  2. திரையரங்கில் எயிட்ஸ் ஊசி இருக்கும் (என்பதால் திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு போக வேண்டியதில்லை)
  3. வாசனைத் திரவியங்கள் மூலம் புற்றுநோய் வரும் (ஆனா இப்ப கப்படிக்குதுங்க... )
  4. தனியா கார்ல போனா மயக்க மருந்து குடுத்து கொள்ளையடிச்சிடுவாங்க (காருக்கு போடுற பெட்ரோல் இப்பல்லாம் மிச்சம்)
  5. டின்ல அடைச்சி விக்குற எல்லா உணவுலயும் எலியோட எச்சங்கள் கலந்து வருது (டின்ல விக்கறதெல்லாம் வாங்கறதுக்கு காசு இல்லீங்கோவ்)
  6. போன்ல சில நம்பருக்கு டயல் செஞ்சா அத வச்சி அவுங்க நம்ம போனைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கெல்லாம் கால் பண்ணீடுவாங்க (மூனு மாசமா கால் பண்ணாம வாடகை மட்டும் கட்டுறனுங்க)
  7. பார்டிக்கெல்லாம் போனா சில அழகான பொண்ணுங்க வசிய மருந்து குடுத்து மயக்கிடுவாங்க(பெரிய மன்மதன்னு நெனப்பு.. நம்மையெல்லாம் யாருங்க மயக்கப் போறாங்க...)
  8. என்கிட்ட இருந்த எல்லா காசையும் ஏமி புரூஸுக்கு தானம் குடுத்துட்டேன் (பாவம் இந்த பொண்ணு, தீராத வியாதியால 1993ல இருந்து பல முறை ஒரு வாரத்துல செத்துக்கிட்டு இருக்கு)
  9. மின்னஞ்சல் அனுப்பினா யாஹூ, மைக்ரோசாப்ட், AOL, எல்லாம் ஆளாளுக்கு ஒரு மின்னஞ்சலுக்கு 2 ரூபா குடுப்பாங்க.. (ஆனா அது கூடிய சீக்கிரம் வந்துகிட்டே இருக்குதுங்க)
  10. மின்னஞ்சல் அனுப்பினா இலவச நோக்கியா மொபைல்.. டிஸ்னி வோர்ல்டுக்கு இலவச அனுமதி.. எல்லாம் கெடைக்கும்.. (கெடச்சா யாராவது.. எனக்கும் ஒன்னு குடுங்களேன்)
  11. வங்கிக் கணக்கு எண் குடுத்தா பல்கேரியாவுல ராஜ பரம்பரையச்சேர்ந்த ஒருத்தர் அவரோட பரம்பரை சொத்துல இருந்து கோடிக் கணக்குல பணம் அனுப்புவாரு(இதுக்காகவே புதுசா காசே இல்லாம ஒரு கணக்கை தொடங்கி வச்சி காசு வரும்னு காத்துக்கிட்டு இருக்கனுங்க)
  12. மதுரை மீனாட்சி கோயிலை உலக அதியசயத்துல ஒன்னா ஆக்கனும்னா ஆளுக்கு ஒரு போன் ஓட்டு போட்டாப் போதும் (எங்க வீட்ட உலக அதிசயமா ஆக்கலாம்னு ஒரு யோசனை..)
  13. திருப்பதி வெங்கடாஜலபதி கிட்ட மின்னஞ்சல் முகவரி.. இணைய இணைப்பு எல்லாம் இருக்கு . (அப்பப்ப அவரு அனுப்பற மின்னஞ்சலை எல்லாருக்கும் அனுப்பினா நேரா சொர்க்கம்தான் நமக்கு)

முக்கிய அறிவிப்பு: இந்த பக்கத்தின் சுட்டியை ஒரு மின்னஞ்சலில் 1246 பேருக்கு உடனே அனுப்பலைன்னா இன்னிக்கு சாயந்திரம் 6:30 மணிக்கு உங்க தலை மேல காக்கா அசிங்கம் பண்ணீரும்... ஜாக்கிரதை!

பின் குறிப்பு: ஹி..ஹி வேற ஒன்னுமில்லீங்க.. எரிதங்களால் வெறுத்துப் போன நண்பர் ஒருவர் அனுப்பின எரிதத்தின் தமிழாக்கம் இது.

அண்ணா பல்கலை பழைய மன்னராட்சி
Google Buzz Logo

முகமூடியின் அண்ணா பல்கலை மன்னராட்சி பதிவைப் பார்த்ததும் இதைப் பதிக்கனும்னு தோனுச்சி.

இது அண்ணா பல்கலையில் இப்போதிருக்கும் துனைவேந்தருக்கு முன்னிருந்த பாலகுரு மன்னருக்கு முன்னிருந்த கலையான நிதி மன்னர் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவம்:

அப்போது தான் சுற்றுப்புற சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த சமயம்.

காலையில் நேரம்..

நண்பனொருவனும் உடன் படித்த இன்னொரு அம்மணியும் மாலை நடக்க இருந்த தேர்வுக்கு உலோகவியல் பாடப்பிரிவின் எதிர்ப்புறமிருந்த மரத்தடி மேடையில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இருவரும் படிப்பு முடிந்து பணியில் அமர்ந்ததும் திருமணம் செய்து கொள்ள எண்ணியிருந்தவர்கள். எனவே அவர்கள் அந்நியோன்னியத்தை கெடுக்க விரும்பாமல் வழக்கம் போல அருகிலிருந்த இன்னோரு மரத்தடி மேடையில் அமர்ந்து நானும் இன்னொரு நண்பனும் படித்துக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரம் கழித்து மிகவும் வெறுமையாய் உணர்ந்ததால் (அதானே படிக்கும் போது தான் நமக்கு போர் அடிக்கும்...) கேண்டீனில் போய் பூனம் கேசர்பாதாம் (அறிமுகமான புதிது.. கேண்டீனில் சலுகை விலை) அருந்திவிட்டு வரலாம் என நானும் என்னுடன் படித்த நண்பனும் மட்டும் சென்றோம்.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்தால் கலையான நிதி மன்னர் காரசாரமாய் நண்பனிடமும் அம்மணியிடமும் கத்திக் கொண்டிருந்தார்..

விஷயம் இது தான்... அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களின் அடையாள அட்டையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு "பெற்றோரை கூட்டிவா.. ஆ.. ஊ.." என கத்தியுள்ளார். (நல்லா கவனிங்க இது ஏதோ ஒரு ஆரம்ப பாடசாலையில நடக்கலை.. முதுநிலை பட்டய படிப்பின் போது நடந்தது). நண்பன் பதிலுக்கு கத்தியுள்ளான்.

அப்றம் என்ன.. கலையான மன்னர் வேகமாய் அந்த இடத்தைவிட்டு போய்விட்டார்.

அப்புறம் எப்படி அடையாள அட்டையை திரும்பி வாங்கினாங்கன்னு கேக்கறீங்களா.. அந்த நண்பனின் தந்தை அப்போது அண்ணா பல்கலையில் ஒரு பாடப்பிரிவின் தலைவராய் இருந்தவர். அவருக்கு நண்பனின் காதல் விஷயம் நன்கு தெரியும். கலையான மன்னர் போன உடனே அவர் பின்னாலேயே இவர் போய் "எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்று சொல்லி அடையாள அட்டையை திரும்ப வாங்கிக் கொடுத்தார். (கொடுக்கும் போது கலையான நிதி மன்னரின் முகத்தில் தெரிந்த ஏமாற்ற உணர்ச்சியை காணக் கண் கோடி பத்தாது. இன்னிக்கு நெனச்சி பாத்தாலும் மறக்கமுடியாது அந்த முகத்தை..)

பின் குறிப்பு: இந்தப் பதிவு "டீ.சர்ட் அணிய தடை" சம்பந்தமானதல்ல. அந்த விதி சம்பந்தமான எனது கருத்து:

மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் படிக்கவும்: விதிமுறைகள் மீறுவதற்கே - Rules are made to be broken.

வருடம் ஒன்று பதிவுகள் நூறு
Google Buzz Logo

ஒரு வருடத்தின் அருமையை சொற்ப மதிப்பெண் குறைந்ததால் தேர்வில் தோல்வியடைந்த மாணவனிடம் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமையை குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்ற தாயிடம் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் அருமையை வாரப் பத்திரிக்கை ஆசிரியரிடம் கேளுங்கள்.

ஒரு நாளின் அருமையை மரணப்படுக்கையில் இருப்பவரை கேளுங்கள்.

ஒரு மணியின் அருமையை காதலியைச் சந்திக்க காத்திருக்கும் காதலனை கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமையை ரெயிலைத் தவறவிட்டவரிடம் கேளுங்கள்.

ஒரு நொடியின் அருமையை விபத்திலிருந்து உயிர் தப்பியவரிடம் கேளுங்கள்.

ஒரு மில்லி செகண்டின் அருமையை ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாய் வந்தவரிடம் கேளுங்கள்.

இதையெல்லாத்தையும் எப்படி வீணாக்கறதுன்னு என் கிட்ட கேளுங்க.

குறிப்பு:


1) இந்த மின்னஞ்சலை ஏற்கனவே நீங்க படிச்சிருப்பீங்க, இருந்தாலும், ஒரு வருஷத்துல நூறு பதிவுகள்ன்னு சொல்றதுக்காக ஒரு பதிவை வேற எப்படி பதியறதுன்னு தெரியலை.. ஹி... ஹி... அதனாலதான்...

2) ஏப்ரல் 2004 முதல் வலைப்பூக்களை ஒரு வருகையாளனாய் பார்வையிட்டு வந்த நான், கடந்த ஜூலை 22, 2004 அன்று, வாழும் கலை அறிவோம் என்று பதித்து துவக்கிய ப்ருந்தாவனத்தில் இன்று இந்தப் பதிவோடு நூறு பதிவுகள் (ஒரு வருடம், 9629 வருகைகள், 464 பின்னூட்டங்கள்) முடிவடைகிறது. அவ்வப்போது வந்து பின்னூட்டமிட்ட, பின்னூட்டமிடாமல் பதிவைப் படித்துவிட்டு மட்டும் சென்ற, தமிழ்மணத்தில் பரிந்துரைத்த (அதாவது + ஐ அழுத்திய) அனைவருக்கும் நன்றி.

3) தொடரும்....

நூறாவது பதிவைக் கொண்டாடும் இந்த சமயத்தில் ஒரு புதிய முயற்சி பற்றி இங்கே...

ஓராண்டுக்கு முன்பு ஆடியோ ப்ளாகிங் செய்ய சிலர் முயன்றார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் நேரம் பற்றாக்குறையோ அல்லது வேறு என்ன காரணமோ அந்த முயற்சி தொடரப்படவில்லை.

இப்போது முகிலன் அவர்களின் தமிழ்பாட்காஸ்ட் என்ற முயற்சி ஆடியோ ப்ளாகிங்கினை விட மேம்படுத்தப்பட்டதாய் (with ipodder support etc.,) இருக்கிறது. சுமார் மூன்று மாதங்களில் மூன்று பதிவுகளை பதித்துள்ளார். ஆடியோ ப்ளாகிங் கடினமான, நேரத்தை விழுங்கும் பணி என்றாலும் முடிந்தால் இன்னும் பல பதிவுகளை இட்டால் நன்றாய் இருக்கும்.

இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்ட, அனைவரும் இந்த தமிழ்பாட்காஸ்ட்க்கு சென்று உங்கள் பரிந்துரைகளையும் பின்னூட்டங்களையும் இடுவீர்!

சும்மா விளையாடிப் பாருங்க
Google Buzz Logo

விண்டோஸ் பயன்படுத்தறவங்க எல்லாம் யூனிக்ஸ் பற்றி மிகப் பெரிய குறைபாடா சொல்றது அது பயனீட்டாளருக்கு நட்பாய் இருப்பதில்லைன்னு.

யாருங்க சொன்னது அப்படி.. யூனிக்ஸ் எவ்வளவு நட்பாய் இருக்கும்னு தெரியனுமா உங்களுக்கு?

யூனிக்ஸ் கிட்ட கீழ இருக்கிற மாதிரி பேசிப் பாருங்க என்ன சொல்லுதுன்னு.


$ got a light?
No match.

$ sleep with me
bad character

$ man: Why did you get a divorce?
man:: Too many arguments.

$ make 'heads or tails of all this'
Make: Don't know how to make heads or tails of all this.
Stop.

$ \(-
(-: Command not found.

$ date me
You are not superuser: date not set
Mon Jul 11 07:48:43 PDT 2005

$ If I had a ) for every dollar Clinton spent, what would I
have?
Too many )'s.

$ %Vice-President
%Vice-President: No such job.

% ls Honest-Politician
Honest-Politician not found

% [Where is Jimmy Hoffa?
Missing ]. |


(இத எல்லாத்தையும் லினக்ஸ் கிட்டயோ வேற வேற Xனிக்ஸ் கிட்டயோ பேசுனா வேற மாதிரி சொல்லும்.. அதனால யூனிக்ஸ் இருக்கறவங்க மட்டும் சொல்லிப் பாருங்க)

இதவிட நட்பா வேற எப்படிங்க இருக்க முடியும்?

குழந்தைகளுக்கான வலைப்பூக்கள்
Google Buzz Logo

குழந்தைகள் முகம் எப்பவுமே மலர்ச்சியா இருக்க காரணம் அவங்க மனசுல வஞ்சம் ஏதும் இல்லாம இருக்கறது தான். குழந்தைகள் யாரோடாவது சண்டையிட்டால் கூட மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் அவர்களோடு இன்முகம் காட்டி பழகும்.

இப்படி இருக்கும் குழந்தைகள் நாளடைவில் சுற்றத்தாரைப் பார்த்தும் வளர்ப்பு முறையினாலும் வஞ்சங்களைப் பழகிக் கொள்கிறது.

குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்பும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கேற்ற வகையில் நல்ல பல நீதிக்கதைகளையும் குட்டிக் கதைகளையும் பதியும் சில வலைப்பூக்கள் கீழே:

பரஞ்சோதியின் சிறுவர் பூங்காவில் "சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்." என்கிறார். இந்த வலைப்பக்க வடிவமைப்பைப் பார்க்கும்போது அம்புலிமாமா,பாலமித்ரா படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

கங்காவின் தினம் ஒரு ஸென் கதையில் பல்வேறு ஸென் கதைகளை மொழிபெயர்த்து தனது கருத்துக்களுடன் வெளியிட்டு வருகிறார். சமீப காலம் வரை தினம் ஒரு கதையாகத்தான் பதித்து வந்தார். தற்சமயம் அவ்வாறில்லாமல் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பதிக்கிறார். இது நான் தவறாமல் படிக்கும் வலைப்பூ.

ந. உதயகுமாரின் குட்டிக் கதைகள். இவர் இந்தப் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளிவந்த சின்னஞ்சிறு நீதிக்கதைகளைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டு வருகிறார். சிறுவர்களுக்கு ஏற்றவாறு அருமையாய் இருக்கிறது.

சந்திரமதி கந்தசாமி (மதி) சிறுவர் பாடல்கள் என்ற தளத்தில் சிறுவர்களுக்கான பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சந்திரவதனா குழந்தைகள் - தாய்ப்பால் முதல் முதலுதவி வரை என்ற தளத்தில் தலைப்பில் கூறியவாறு குழந்தை வளர்ப்பு சம்பந்தமாய் பயனுள்ள அனைத்து விவரங்களையும் பதித்து வருகிறார்.

இன்னும் இது போல குழந்தைகளுக்கான எத்தனையோ தளங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

எல்லோரும் படிப்போம். குழந்தைகள் ஆவோம் மனதினால்!

பி.கு: இது வலைப்பூக்களில் சர்ச்சைக்குறிய விவாதங்கள் மூலம் வீண் பரபரப்பை ஏற்படுத்துவோரையோ, மூன்றாம் தர பின்னூட்டம் இடுவோரையோ திசை திருப்பும் முயற்சியல்ல. என் போன்ற பாமரர்கள் சொல்லியா இது போன்றவற்றை மாற்ற முடியும்?

இந்த ஜென் கதை சொல்வது போல "துப்ப விரும்புவோர் துப்பிக் கொள்ளுங்கள், ஆனால் நான் தலை வணங்கவே விரும்புகிறேன்" தமிழ் மொழியை.

மனமென்னும் மாயாஜாலம் - 7
Google Buzz Logo

கடந்த அக்டோபர் 2004ல் வலைப்பூவிலிருந்து தமிழ்மணத்திற்கு தமிழ் வலைப்பதிவர்கள்/வருகையாளர்கள் மாறிய போது அறிமுகப்படுத்தப்பட்ட "இந்த வார நட்சத்திரம்" பகுதியில் முதல் நட்சத்திரமாய் நான் எழுதிய பதிவுகளில் மனம் பற்றிய தன்னம்பிக்கைத் தொடர் "மனமென்னும் மாயாஜாலம்".

மனமென்னும் மாயாஜாலம் - 1
மனமென்னும் மாயாஜாலம் - 2
மனமென்னும் மாயாஜாலம் - 3
மனமென்னும் மாயாஜாலம் - 4
மனமென்னும் மாயாஜாலம் - 5
மனமென்னும் மாயாஜாலம் - 6

பல ஞானிகளின் கருத்துக்களையும் எளிய பயிற்சிகளையும் உள்ளடக்கிய இந்தத் தொடரை இனி அவ்வப்போது தொடர்கிறேன், இனி வரும் இந்தப்பதிப்புகள் நம்பிக்கை குழுமத்திலும் மின்னஞ்சலாய் பதிக்கப்படும்.

எல்லாத்துக்கு மனசு தாங்க காரணம்

ஒரு பிரச்சனை நம்மை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் அடுத்த கட்ட விளைவுகள் இருக்கின்றது. எந்த ஒரு பிரச்சனையும் நம்மை இரு விதமாய் பாதிக்கலாம். அது நம்மை அழிக்கும் வண்ணம் கவலையில் ஆழ்த்தலாம் அல்லது தீயிலிட்ட தங்கம் போல சோதனையில் நம்மை மேம்படுத்தலாம்.

இந்த இரண்டு வகை பாதிப்புகளில் எவ்விதமாய் பாதிக்கப் படுவதை நீங்கள் விரும்புவீர்கள்? நான் முன்பே சொன்ன படி வாழத்தான் நமக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே நான் இரண்டாவதைத்தான் விரும்புவேன்.

சரி, முதல் விதமாய் பாதிப்படையாமல் இருக்க என்ன செய்யலாம்? அதுக்கு முன்னால ஒரு சின்ன நிகழ்ச்சி:

ஒரு தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அனாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். குழந்தை வளர்ந்து, மற்ற குழந்தைகளோடு விளையாட ஆரம்பித்த வயதிலே ஒரு சக குழந்தைக்கும் இந்தக் குழந்தைக்கும் சண்டை வருது. அப்ப சண்டை போட்ட குழந்தை இந்தக் குழந்தையை "போடா! டேய்! அனாதைப் பயலே" அப்படின்னு திட்டிடுச்சி.

ஒரு நிமிஷம் அமைதியா இருந்த இந்தக் குழந்தை "அனாதைன்னா என்ன தெரியுமா உனக்கு" அப்படின்னு கேட்டுச்சி

"எனக்கு தெரியாது, எங்க அப்பாதான் சொன்னாங்க.. நீ அனாதைன்னு" அப்புடின்னுச்சி சண்டை புடிச்ச குழந்தை.

அதுக்கு "நீங்க எல்லாம் உங்கம்மா வயித்துல வளந்தீங்க, நான் எங்கம்மா இதயத்துல வளந்தேன்" அப்படீன்னு சொல்லீட்டு வீட்டுக்கு போயிருச்சி அந்தக் குழந்தை.

யோசிச்சிப் பாத்தீங்கன்னா ஒரு விஷயம் நம்மை எப்படி பாதிக்கிறதுங்கறது அந்த விஷயத்தை நான் எப்படி எடுத்துக் கொள்கிறோம், அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் எனபதைப் பொறுத்து அமையுது.

ஒரு நண்பன் நம்மை "வெட்டி நாயே"ன்னு சொல்லும் போது நாம் அதை செல்லமாய்த் திட்டுவதாய் எடுத்துக்கறோம். அதையே வேறொருவர் சொல்லும் போது சண்டைக்கு போய் ரெண்டுல ஒன்னு பாத்துட்டுதான் மறுவேலை!

அதுக்காக சொரனையே இல்லாம இருக்கனும்னு சொல்லலை. உங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்தறீங்க, கோவத்துல இருக்கும் போது எப்படி சிந்திக்கறீங்க இதையெல்லாம் கவனிச்சிப் பாத்தீங்கன்னா நாம அழிவடையறதும் சந்தோசமா இருக்கிறதும் இன்னொருத்தர் கையில இல்லை. அது நம்முடைய எண்ணம்/செயல்/பேச்சு முதலானவற்றையொட்டியே அமையுதுன்னு தெரியும்.

உங்களை யாராவது காயப்படுத்திட்டா அதனால உங்களுக்கு கோவம் வருதுன்னு வச்சிக்குவோம். பதிலுக்கு எதிராளியைக் காயப்படுத்துறதுனால நீங்க காயப்பட்டது சரியாகாது. உங்கள் காயம் ஆறவும் வேண்டும் அதே சமயத்தில் அந்த எதிராளி உங்களை எப்படி காயப்படுத்தியுள்ளார் என அவர் உணர தெரிவிக்கவும் வேண்டும் என்றால் அதற்கு ஆக்கபூர்வமாய் பல வழிகள் உள்ளன.

கோபத்துல இருக்கும் போது எப்படி சிந்திக்கிறோம்.. எப்படி சிந்தித்தால் நமக்கு நல்லது, அவ்வாறு சிந்திக்க கற்றுக் கொள்வது எப்படி என்று அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

சில சிந்தனைகள்
Google Buzz Logo

மனித மூளை அற்புதமானது. அது நாம் காலையில் விழித்தவுடன் பணிபுரிய ஆரம்பிக்கிறது. அலுவலகத்துக்குள் நுழையும் வரை அயராது பணிபுரிகிறது.

- ராபர்ட் ஃப்ரோஸ்ட்


ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். அதைப் போல ஒவ்வொரு வெற்றி பெற்ற பெண்ணுக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறான், எப்படி சாத்தியம் என சிந்தித்தபடி.

நேரம் தவறாமல் இருப்பதில் உள்ள சிரமம் என்னவென்றால் அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போது பாராட்ட எவரும் இருப்பதில்லை.
-ஃப்ராங்க்ளின் ஜொன்ஸ்

அதிர்ஷ்டத்தைக் கண்டிப்பாய் நான் நம்புகிறேன். நமக்குப் பிடிக்காதவர்கள் வெற்றி பெறுவது குறித்து வேறு என்ன சாக்கு சொல்ல முடியும் ?
- ஜெர்ரி செய்ன்ஃபீல்ட்

வாழ்வில் நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் ஜெயிக்கிறேனா இல்லையா என்பது தான் விஷயம்.
- டார்ரின் வெய்ன்பெர்க்

வாழ்க்கை இனிமையானது. சாவு அமைதியானது, இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் தான் பிரச்சனையானது.

பிரச்சனையில் இருக்கும் மனிதருக்கு உதவுங்கள், அப்போது தான் அவர் மறுபடி பிரச்சனையில் இருக்கும் போது மட்டும் உங்களை நினைப்பார்.

கடினமான பிரச்சனைகளுக்கு எளிய, சுலபமாய் புரியக்கூடிய பல தவறான தீர்வுகள் உண்டு.

பணத்தால் சந்தோசத்தை விலைக்கு வாங்க முடியாதுன்னு யார் சொன்னது? எந்தக் கடையில கெடைக்கும்னு அவங்களுக்கு தெரியலை! அவ்வளவுதான்.

குடிப்பழக்கம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. அதனால் என்ன, பாலோ பழரசமோ மட்டும் பிரச்சனைகளுக்குத் தீர்வாகிடுமா?

நாட்டுல நெறைய பேரு உயிரோட இருக்கறதே அவங்களைச் கொன்னா சட்டவிரோதம்ங்கற ஒரே காரணத்தால தான்

உங்கள் எதிரிகளை மன்னித்துவிடுங்கள். அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எத்தனைப் பேர் உங்களை கவனிக்கிறார்கள் என்பது நீங்கள் எவ்வளவு முட்டாள்த்தனமாய் செயல் படுகிறீர்கள் என்பதற்கு நேர்மறையானது.

ஒரு சுடான தோசைக் கல் மீது ஒரு நிமிடம் அமரும் போது அது ஒரு மணி நேரம் போல இருக்கிறது, ஒரு அழகான பெண் அருகில் அமர்ந்து பேசும் போது ஒரு மணி நேரம் கூட ஒரு நிமிடம் போல இருக்கிறது. இது தான் சார்புக் கோட்பாட்டு ( Relativity theory)
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பட்டைய கெளப்புற பட்டம் நம் பட்டம்
Google Buzz Logo

வர வர வயசாயிட்டே போறதுனால புத்தி மழுங்கிட்டே போவுதோன்னு தோனுச்சி. சின்னப் புள்ளைங்களுக்கு இருக்கிற அறிவு கூட நமக்கு இல்லியே என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

என் வலைப்பூவுல கடந்த ரெண்டு பதிவுகளைப் படிச்சிட்டு என் அறைவாசி, சின்னப் புள்ளைங்க அளவு அறிவு நமக்கும் கெடைக்கனும்னா நாம கூட சின்னப் புள்ளைங்களா மாறிடனும் அப்புடின்னான்.

துளசியக்கா சொன்ன மாதிரி குள்ளமா வளர முடியும்.. ஆனா வயசு கொறைவா வளர்றது எப்படின்னு தெரியல.

"டேய், சூப்பர் ஸ்டார் சந்திரமுகியில பட்டம் உட்டா மாதிரி நாம்மலும் பட்டம் உட்டாக்க மீச வெச்ச கொழந்தையாயிடலாம்" அப்படின்னான் என் அறைவாசி. சரின்னு பட்டம் செய்யத் தேவையானதை வாங்கி வரக் கிளம்பினோம்

கலர் காகிதம் தேடி ஊரு பூராம் அலைஞ்சும் கெடைக்கல. (பேருதான் ஹைட்டெக் சிட்டி, ஆனா உண்மையில ஒரு நல்ல சோப் வாங்கனும்னா கூட 4-5 கி.மீ போகனும்) சரின்னு நியூஸ் பேப்பர் (நேற்றைய நியூஸ் பேப்பர் இன்றைய வேஸ்ட் பேப்பர்னு சக வலைப்பதிவாளர் ஒருத்தர் சொன்ன மாதிரி), கோந்து, தென்னங்குச்சி, ட்வைன் நூல் எல்லாம் வச்சி ஒரு பட்டம் ரெடி பண்ணியாச்சி.

இந்த ஊருல யாரு நமக்கு டீல் போடப் போறாங்க, நம்ம பட்டம் தான் ஒரே பட்டம்!

அதனால் மாஞ்சா எல்லாம் இல்லாம் ஒரு சாதாரண ட்வைன் நூல் கண்டுல பட்டத்தை கட்டி மொட்டை மாடியில பறக்க வுட்டா கோத்தா அடிக்க ஆரம்பிச்சிடுச்சி (பட்டம் பறக்கவிட்டு அனுபவமில்லாதவங்களுக்கு.. கோத்தா அடிக்குதுன்னா பட்டம் மேலயும் கீழயுமா வட்டம் அடிக்குதுன்னு அர்த்தம்)




சரின்னு பட்டத்த கீழ எறக்கி நூலை ஒழுங்கா கட்டி (இதுக்கு எங்க வட்டாரத்துல சூத்திரம் போடுறதுன்னுவாங்க) திரும்பி பறக்க விட்டோம்




அப்பாடா! இந்த வாட்டி நல்லா பறந்தது.. சாயங்காலத்துல ஒரு ரெண்டு மணி நேரம் போனதே தெரியல. ஒரு வழியா பட்டத்தை எங்கயும் மாட்டாம (பொதுவா ஒழுங்கா எறக்காட்டி எலக்ட்ரிக் கம்பி, மரம், பக்கத்து மொட்டை மாடி இப்புடி எங்கையாவது மாட்டி கிழிஞ்சிதான் வரும்.. ) ஒழுங்கா எறக்கி அழகா மடிச்சி வச்சாச்சி..

இனி அடுத்த வாரம் பட்டம் உடனும். நீங்களும் பட்டம் உட்டுப் பாருங்க.... அதுல இருக்குற சுகமே தனி...

பட்டம் செய்வது எப்படின்னு தெரியனும்னா சுய முகவரியிட்ட தனி மின்னஞ்சலில் பத்து ரூபா போஸ்டல் ஆர்டர் அட்டாச் பண்ணி அனுப்புங்க ...

சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு - 2
Google Buzz Logo

போட்டோ

பள்ளிக்கூடத்துல ஒரு வகுப்புல எல்லாரையும் நிக்க வச்சி குரூப் போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாங்க. எடுத்து முடிச்சதும் அதை எல்லா மாணவர்களையும் வாங்க வைக்கனும்னு நெனச்ச டீச்சர் "ஆகா! எல்லாரும் இந்த போட்டோவ வாங்கி வச்சி, பெரியவங்களா ஆனப்புறம் பாத்தா எப்படி இருக்கும்! இதோ பாரு ரமேஷ், இப்ப இவன் டாக்டர்! இதோ பாரு சுரேஷ், இப்ப இவன் வக்கீல்.. இப்டி சொல்லிப் பாத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்"

சொல்லி முடிக்கறதுக்குள்ள கடைசி டெஸ்க்ல இருந்து குரல் மட்டும் வந்தது "இதோ பாரு டீச்சர்.. இப்ப இவங்க உயிரோட இல்ல"ன்னு.

ரத்தம்

ஒரு டீச்சர் ரத்தத்தைப் பத்தி பாடம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

டீச்சர்: நான் தலைகீழா நிக்கும் போது ரத்தம் தலைக்கு போய் மூஞ்சி செவப்பா ஆகுது இல்லையா?
பசங்க: ஆமா டீச்சர்!
டீச்சர்: அப்படின்னா நான் நேரா நிக்கும் போது ஏன் காலுக்கு ரத்தப் போய் செவப்பா ஆவறதில்லை?
பசங்க: ஏன்னா உங்க காலு காலியா இல்லை டீச்சர்!

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்

மதிய உணவு நேரம்,

பெரிய மேஜையில் பல விதமான உணவை வைத்து பசங்களை எடுத்து போட்டு சாப்பிட சொன்னாங்க. ஆப்பிள் வச்சிருந்த இடத்துல "ஒரு ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்! கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்" அப்டின்னு போர்டு வச்சிருந்தாங்க.

அந்த மேஜையின் இன்னொரு கடைசியில ஐஸ்கிரீம் வச்சிருந்த இடத்துல யாரோ ஒரு குறும்பு குழந்தை "எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ! கடவுள் ஆப்பிளைப் பார்த்துக்கிட்டு இருக்கார்"ன்னு கிறுக்கி வச்சிருந்தது

பி.கு: மேற்கண்ட கதைகள் ஒரு ஆங்கில மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப் பட்ட குட்டிக்(குழந்தை) கதைகளின் தமிழாக்கம்

சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு - 1
Google Buzz Logo

திமிங்கலம்

ஒரு டீச்சர், திமிங்கலத்தைப் பத்தி பாடம் எடுத்துகிட்டிருந்தாங்க. ஒரு குட்டிப் பொண்ணு "டீச்சர், ரமேஷோட அப்பா கடலுக்கு போனப்போ அவரைத் திமிங்கலம் முழுங்கிடிச்சி"ன்னா.

டீச்சர் உடனே கோவமா "என்ன கவனிச்ச நீ? இப்பத்தான் திமிங்கலத்தோட தொண்டை ரொம்பச் சின்னது அதால மனுசனை முழுங்க முடியாதுன்னு சொன்னேன்"ன்னாங்க.

அதுக்கு அந்தக் குட்டிப் பொண்ணு "நம்பலைன்னா போங்க டீச்சர், நான் செத்தப்புறம் சொர்கத்துக்கு போயி ரமேஷோட அப்பா கிட்ட கேட்டுக்கறேன்"ன்னா.

அதுக்கு டீச்சர் "ரமேஷோட அப்பா நரகத்துல இருந்தா என்ன பண்ணுவே"ன்னாங்க. உடனே குட்டிப் பொண்ணு "நீங்க செத்தப்புறம் போயி கேட்டுக்கங்க"ன்னா.

கடவுள்

ஒரு வரைகலை வகுப்புல குழந்தைகள் கிட்ட பென்சில் பேப்பர் எல்லாம் கொடுத்து எதையாவது வரையச் சொல்லியிருந்தாங்க. ஒவ்வொரு குழந்தையும் என்ன வரையுதுன்னு பாத்துகிட்டே வந்த டீச்சர் ஒரு குழந்தை என்ன வரையுதுன்னு கண்டுபிடிக்க முடியாம கொஞ்ச நேரம் பாத்துட்டு அந்தக் குழந்தைய "என்ன வரையுற நீ"ன்னு கேட்டங்க.

அதுக்கு "கடவுளை வரையுறேன்"ன்னுச்சி அந்த குழந்தை.

"கடவுளைத்தான் இது வரைக்கும் யாருமே பாத்ததில்லையே"ன்னாங்க டீச்சர்

"இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் பாப்பாங்க"ன்னுச்சி அந்த குழந்தை.

நரைச்ச முடி

ஒரு நாள் அம்மா சமையல் எல்லாம் முடிச்சி பாத்திரம் கழுவிக்கிட்டு இருக்கும் போது குட்டிப் பொண்ணு அம்மாவோட முடியில சிலது நரைச்சி போனதப் பாத்துட்டு எப்படி நரைச்சிப் போச்சின்னு கேட்டுச்சி

அதுக்கு அம்மா "ஒவ்வொரு முறை நீ என் பேச்சை கேக்காம தப்பு பண்ணும் போதும் எனக்கு ஒரு முடி நரைச்சிடும்"ன்னாங்க

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு அந்த சின்னப் பொண்ணு "இப்பத்தான் தெரியுது! பாட்டிக்கு எப்படி எல்லா முடியும் நரைச்சிப் போச்சி"ன்னு சொல்லீட்டு ஓடியேப் போயிடுச்சி


பி.கு: மேற்கண்ட கதைகள் ஒரு ஆங்கில மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப் பட்ட குட்டிக்(குழந்தை) கதைகளின் தமிழாக்கம்

வலைப்பூ உலகில் ஒரு கீதோபதேசம்
Google Buzz Logo

முன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம போயிட்டே இருக்கனும்! ஆமா!

கிஷ்டன்: குர்ஜுனா! இணையச் சேவைகளை மதிக்கக் கற்றுக் கொள்! வலைப்பூக்களில் அனானிமஸாய்ப் புகுந்து வலைப்பதிவர்களை கடைமட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு திட்டத் தயங்காதே!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா! வலைப்பூ வைத்திருப்போர் என் அருமை நண்பர்கள், தமிழ்மணத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பெரியோர்கள், வல்லுனர்கள், அவர்களுக்கெல்லாம் எப்படி நான் இத்தகைய பின்னூட்டம் இடுவேன்.

கிஷ்டன்: குர்ஜுனா! இந்தக் கணத்தில் உனக்கு எதிரியோ நண்பனோ யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வலைப்பதிவர்கள். எனவே, இணைய தர்மத்தை கடைப்பிடிப்பாயாக! எல்லோருக்கும் பின்னூட்டம் இடு முடிந்தவரையில் திட்டு! அதுதான் உன் கர்மம்! அதுவே தர்மமும் ஆகும்.

குர்ஜுனன்: கிஷ்டா! இவையெல்லாம் பார்த்தால் இணைத்தின் இணைப்பையே துண்டித்துக் கொள்ளத் தோன்றுகிறது

கிஷ்டன்: குர்ஜுனா! வலைப்பூ என்னும் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளாய். இந்த மாய உலகில் நீயும் மாயை உன்னால் திட்டப் படுபவரும் மாயை. வலைப்பூக்கள் தோன்றும் முன்பிருந்தே இது போல ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது குழுமங்களிலும் மற்ற வலைத்தளங்களிலும் இருந்துள்ளது. நீ செய்யாவிட்டாலும் இதை வேறொருவர் செய்வார். கீழ்த்தரமாய் பின்னூட்டம் இடுவது உன் கடமை! அதைச் செய்!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா!

கிஷ்டன்:குர்ஜுனா! திட்டப் படுபவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே! உனக்குத் தெரிந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் கேவலமான சிந்தனைகளையும் உலகுக்கு தெரியவைக்கத் தவறிவிடாதே!

குர்ஜுனன்: கிஷ்டா! கீழ்த்தரமாய் பின்னூட்டம் இட்டு, திட்டுவதற்கும் சாதி மத பேதங்களுக்கும் என்ன சம்பந்தம்.

கிஷ்டன்: குர்ஜுனா! இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கும் இன்னொருவருக்கும் மனக்கசப்பு என்றால் முதலில் சாதியைக் கொண்டு திட்டவேண்டும். அப்போது தான் சாதி சார்பாக இன்னும் சில பேர் திட்டுவதற்காக அணி திரள்வார்கள். இப்படியாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது பல விதமான மூன்றாம் தர வார்த்தைகள் வலைப்பூ உலகின் வருகையாளருக்கு அறிமுகமாகும். இதனால் தமிழ் மொழி அபரிமிதமான வளர்ச்சியடையும்.

குர்ஜுனன்: கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.

கிஷ்டன்: இத்தகைய வார்த்தைகள் உடனடியாய் எதிராளியைக் காயப் படுத்த வல்லவை. இந்த வார்த்தைகளால் மனம் பாதிக்கப் பட்டவர்களை வழக்காடு மன்றம், வழக்கறிஞர் என்றெல்லாம் சிந்திக்க வைக்குமளவுக்கு கொடூரமானவை.

குர்ஜுனன்: கிஷ்டா! திட்டுவோருக்கு இதனால் என்ன பலன்.

கிஷ்டன்: குர்ஜுனா! எல்லாம் மாயை! திட்டும் போது எழுவது ஒரு அல்ப சந்தோசம். சாதியால், மதத்தினால், இன்ன பிற காரணங்களால் வலைப்பூவுலகம் பிளவுற்று, தரமான படைப்புகள் குறைந்திடும் போது இந்த அல்ப சந்தோசம் அதிகரிக்கும். இந்தத் திட்டுக்கள் சண்டைகள் தொடர்பான பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கையில் அது பலமடங்கு பெருகி பிறந்த பலனை அடைந்த இன்பம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை யாரும் அறியார். உனது கடமை யாரையேனும் திட்டிப் பின்னூட்டம் இடுவது! இதை எப்போதும் உன் மனதில் வை!

குர்ஜுனன்:கிஷ்டா!திட்டும் போது என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய?

கிஷ்டன்: இந்த வலைப்பூ உலகம் என்னும் மாயையில் திட்டுவது எப்படி உன் கடமையோ அது போலவே உன்னோடு அணி சேர்வது சிலரது கடமை.உன் எதிரணியில் சேர்வது இன்னும் சிலரின் கடமை. எனவே பயம் ஏதும் கொள்ளாமல் உன் கடமையைச் செய்!

குர்ஜுனன்: கிஷ்டா! அறியாமையில் உழன்று கொண்டிருந்த என் கண்களைத் திறந்திட்டாய். வணங்குகிறேன்.

(கிஷ்டனின் உபதேசத்தில் மனம் தெளிவடைந்த(!) குர்ஜுணன் அடுத்த சாதிச் சண்டைக்கு பின்னூட்டமிட செல்கிறான்)

பின் குறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. என்னை அறியாமல் யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
Google Buzz Logo

சரியாத்தான் பாடி வச்சிருக்காங்க.. எப்படின்னு கேக்கறீங்களா? கீழ இருக்க படத்துல இருக்குற + ஐ கொஞ்ச நேரம் உத்துப் பாருங்க, அதை சுத்தித் தெரியற வெளிர்சிகப்பு வட்டங்கள் மறைஞ்சி சுத்திக்கிட்டிருக்கிற பச்சை வட்டம் ஒன்னு தெரியும்..




ஏன்னு யாராவது அறிவியல் பூர்வமா விளக்க முடியுமா?

(பாண்டிய மாமன்னருக்கு ஒரு மாபெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதை தீர்த்து வைக்கும் சரியான பாட்டெழுதும் புலவருக்கு... ஹி. ஹி. ப்ருந்தாவனத்தில் ஒரு பின்னூட்டம் பரிசாய் அளிக்கப்படும் :-P )

புக்கு செயினு வெள்ளாடலாம் வா மச்சி
Google Buzz Logo

என்னிய ஆட்டத்துக்கு சேத்திகின என்னென்னிக்கும் லவ்வோட பாலாவுக்கு ஒரு சலாம் போட்டுக்றம்பா!

அப்பாலிக்கா உன்னும் யார்னா என்னிய கூப்டிருந்தா(ஹக்காங்... பெரிய இவுரு.. இன்னும் நாலு பேரு இன்விடேசன் குட்த்தாத்தான் எய்துவியா?) அவங்க அல்லாருக்கும் ஒரு டாங்க்ஸ்பா.

இன்னாடா இப்ப பாத்து ஒரு சினி இஸ்டாரு இண்ட்ரியூ கூட இல்லியேன்னு படா ஃபீலிங்ஸ் ஆவுது.(அதுல இர்ந்து ஒரு நாலஞ்சி இங்கிலிபீஸ் புக்கு பேரு எட்த்து உட்டா ஃபிகர்ல்லாம் நம்மளையப் பாத்து ஒரு லுக்கு உடாது?)

என்னாவோ சேரி.. நம்ம கதிய சொல்றேன்.. கேளு மச்சி!

கம்மி-ஜாஸ்தி லுக்கு உட சொல்லோ நம்ம கதயும் அல்வாநகர் விஜய் கத மாதிரியேதான் கீது

தமுக்கூண்டா இர்க்கொ சொல்லோ சிர்வர் மலரு, பூந்தளிரு, அம்புலிமாமா, லயன்காமிக்சு, இதுல்லாம் பட்ச்சிகினு இர்ந்தேன்

மீச மொளச்ச ஒடனே பட்ச்சது வேற புக்கு.. அதெல்லாம் கண்டுக்காத நைனா வயசு கோளாறு (தோடா... வண்ட்டாரு உத்தமப் புருசரு).

மீச மொளச்ச கொஞ்சம் நாளுல பாக்கீட் நாவல், சூப்பரு நாவல், க்ரைமு நாவல் இப்டி தமிளு நாவல் எல்லாத்தையும் பட்ச்சிகினு கெடப்பேன் (பட்டுக்கோட்டை பிரபாகரோட பரத்து-சுசி, சுபாவோட நரேனு-வைஜி, ராஜேஷ்குமாரோட விவேக்கு-ரூபலா, சுஜாதாத்தாவோட கனேசு-வசந்து அல்லாரியும் புடிக்கும்பா).

அப்பாலிக்கா தமிளு இஸ்ட்ரி மேல இண்ட்ரஸ்ட் ஆயி பொன்னியின் செல்வன், கடல் புறா, பாலகுமாரரு எய்துன உடையார், இப்புடி ஒரு ரெண்டு மூனு இஸ்ட்ரி நாவல் மேல உயுந்து பொரண்டன்.

கடேசியா தொளிலப் பாக்க அங்க இங்க போவ சொல்லோ கார்ஃபீல்டு காமிக்ஸ், ப்ரைன் டீசர் வெள்ளாட்டு புக்கு, ஜுல்ஸ்வெர்ன் சயின்ஸ் பிக்ஸன், சுஜாதாவோட சிரிரங்கத்து தேவத புக்கு இப்புடி சால்னாக் கடைல பிரியாணிய பிரிச்சி புரொட்டாவோட வச்சி சைடு கேப்புல கல்யாணி பீரை ஊத்திகின மாரி கதம்பமா பட்ச்சதுல மூளை கொயம்பிப் போய் பாய பிராண்டிக்கினு கீரேன்.

அப்பாலிக்கா டச்சு உட்டு போச்சிப்பா. எப்பன்னா ரயில்ல போவ சொல்லோ எதுனா பாத்தா வாங்கி படிக்கறன்னு ஊட்ல கடாசிடுவேன் (என்னிக்காச்சும் பாத்து டயம் கெடச்சா அப்புடி கடாசினதுல ஒன்னு ரண்டு எட்த்து பொரட்டிப் பாப்பேன்)

நம்முளுக்கு இந்த இங்கிலிபீஸ் புக்குல்லாம் அவ்ளோ தெர்யாதுபா. எங்கூட்டுகாரியாவப் போற ஃபிகருதான் அப்பப்ப ஜெஃப்ரி ஆர்ச்சரு, சிட்னி செல்டனு, அவுரு இவுருன்னு கூவிகினு கெடக்கும். தாம்மே! சும்மா கெடன்னு ஒரு கொரலு உட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவேன்

இப்ப இன்னா படிக்கரன்றியா? எல்லாம் எணையத்துல படிக்கற்தோட செரி.. பேப்பர் கடில புக்கு வாங்கி பட்ச்சே ரொம்ப நாளு ஆவுது மாம்ஸூ

செரி செரி இப்ப மேட்டருக்கு வர்ரேன்

எவ்ளோ புக்கு வச்சிகீற உன்னாண்ட அப்பிடின்னு கேட்டினாக்க, நம்ம கைல ஒரு நாலஞ்சி கலக்டர்ஸ்(கலக்டருக்கு தமிளுல பொறுக்கின்னுவாங்கபா) பேக் புக்குங்கோ இர்க்குது அவ்ளோதான். (மத்த சுட்ட புக்குல்லாம் ஆட்டதுல சேத்துக்கலான்றியா?)

கட்ச்சியா பட்ச்ச புக்கு: Journey to the Center of the Earth - Jules Vern

ரீடிங் உடனும்னு நென்ச்சிகினே கீற புக்கு:
20,000 Leagues Under the Sea - Jules Vern
(வாங்கி வெச்சி ரொம்ப நாளாவுது)

கட்ச்சியா வாங்குன புக்கு:
Jules Vern Classics - Collectors pack

பட்ச்சதுல புட்ச்ச இங்கிலிபீஸ் புக்குங்கோ(புட்ச்ச வர்ஸைல இல்ல):
1) Rapidex English speaking Course (ரவுசு தாங்கலடா சாமி!)
2) Garfield Comics - Collectors pack
3) Journey to the Center of the Earth - Jules Vern
4) From the Earth to the Moon - Jules Vern
5) Harry Potter - Collectors pack -இன்னும் ஆறாவது புக்கு (அதாம்பா ஆப் பளடட் பிரின்ஸு) வாங்கிப் படிக்கனும். நெஜம்மா படத்தவிட புக்கு படிக்க சொல்ல சூப்பரா கீது.

பட்ச்சதுல புட்ச்ச தமிளு புக்குங்கோ(புட்ச்ச வர்ஸைல இல்ல):
1) பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி
2) கடல் புறா - சாண்டில்யன்
3) கொலையுதிர்காலம் - சுஜாதா
4) தொட்டால் தொடரும் - பட்டுக்கோட்டை பிரபாகர்
5) அஷ்டாவக்ரன் - எண்டமூரி வீரேந்திர நாத் (தெலுங்கு, மலையாளம் கன்னடத்துல கூட வன்ச்சி இந்த கத)
6) வீர இளைஞர்களுக்கு - சுவாமி விவேகானந்தர்


செரி உன்னிய இன்விட் பண்ண மாரி நீ யாரப் பண்ணுவேனு கேக்றயா மச்சி? இந்த புட்ச்சிக்க

1) கொசப்பேட்ட குப்புசாமி(நம்ம கே.வி.ஆர் ஏற்கனவே சொல்ட்டாரு, ஆனாக்க நம்ம ஜிகிரி தோஸ்த்து, ரிக்சா வலிக்கிற குப்ஸாமி இன்னா சொல்றாருன்னு பாக்கலாம்)
2) துளசியக்கா
3) குப்பை அன்பு
4) மூர்த்தி
5) கொங்கு ராசா
6) மாயவரத்தான்
7) உதவாக்கரை க்ருபா சங்கர்

இன்னாது.. அஞ்சி பேருதான் சொல்லனுமா? இன்னா மச்சி... இம்மாந் நேரம் பேசிகினு கீறேன்... ஒரு கொசுறு கெடயாதா? அப்பவும் ஆறுதான்றயா கொசுறுக்கு கொசுறா உன்னோன்னு வெச்சிக்க இன்னா ?

ஏயு பேர கூப்டு கீறேன். எத்தினி பேரு வெளாட்டுக்கு வராங்கன்னு பாக்கலாம்.

சரி டயம் ஆவுது .. அல்லாருக்கும் டாட்டா சொல்லிக்கறான் கோபி..

வர்ட்டா!.. போலாம் ரெய் ரெய் ரெய்ய்ய்ய்ட்...

பி.கு:நகைச்சுவைக்காக சென்னைத் தமிழில் எழுதப்படுள்ள இந்தப் பதிவை தமிழ்க் குடிதாங்கிகள் யாரும் தார் பூசி அழித்திட வேண்டாம் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் (மீட்டிங் முடிஞ்சாக்க இஸ்டேஜ் பின்னால வாங்கப்பா அல்லாரையும் பெசலா சிக்கன் பிரியானி பார்சல், வாட்டர் பாக்கிட்டோட கவுன்ச்சிடுரேன்)

இதுக்கும் டாட்டாவுக்கும் சம்பந்தமில்லை
Google Buzz Logo

ஹி. ஹி. சும்மா உலூலூவாய்க்கு...



அட இதுவும் தமிழ் வலைப்பூ தானுங்க (என்ன சொன்னாலும் தமிழ்மணத்துக்கு புரியமாட்டேங்குதுப்பா.)

ஹூம்... இப்படி ரெண்டு மூனு வரி தமிழ்ல போட்டா தமிழ்மணம் பட்டியல்ல வருதான்னு பாக்கலாம்...

எதிர்பாராது வந்த பிறந்தநாள் பரிசு
Google Buzz Logo

பொதுவா பிறந்தநாளை அமைதியா குடும்பத்தோட ஏதாவது ஒரு குழந்தைகள் வாழும் கோவிலுக்கு(எதுன்னு அங்கு சென்றவர்களுக்கு புரியும்) சென்று நிம்மதியா இருந்து சந்தோசமா திரும்பி வருவேன்.

இந்த முறை திருமணத்துக்கு முன் கடைசி பிறந்தநாள் என்பதால் நண்பர்களோடு மகிழ்ந்திருக்க எண்ணி ஹைத்ராபாத்துலயே தங்கிட்டேன். நள்ளிரவு கேக் வெட்டி அழுகிய முட்டை/கேக் அடித்து விளையாடி மேற்கத்திய முறையில் அழிச்சாட்டியம் பண்ணி முடிச்சி குறைத்தூக்கம் போட்டு எந்திரிச்சி காலைக்கடன் எல்லாம் முடிச்சா அம்மணி கிட்ட இருந்து தொலைபேசி! (எல்லாரும் நள்ளிரவு 12:00 வாழ்த்துவாங்க, ஆனா எங்க அம்மணி நான் பிறந்த மணித்துளியில் கூப்பிட்டு பேசுவாங்க)

அதுல பேசி முடிச்சி, தயாராகி இனிப்பெல்லாம் வாங்கிகிட்டு அலுவலகம் போய் வேலைய ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சி, அப்றமா தனி மின்னஞ்சல்களை பார்க்க ஆரம்பித்தேன். நெருங்கிய நண்பர்களின் வாழ்த்துச் செய்திகள்.. எல்லாம் படிச்சுட்டு பாத்தா மதுரையைச் சேர்ந்த பத்திரிக்கையாள நண்பரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதுல தினமலர் டாட்காம் பகுதி சுட்டி கொடுத்து (இல்லைன்னா இன்றைய தினமலர் நாளிதழில் இரண்டாம் பக்கம்) போய் பாருன்னு எழுதியிருந்தாரு!

அட! இந்தப் பாமரனின் வலைப்பூவைப் பத்தி ஒரு பத்தி!

கணங்கள்,ப்ருந்தாவனம்,என்றென்றும் அன்புடன் பாலா,இட்லிவடை,அல்வாசிட்டி,மாயவரத்தான்,லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.. ஆகியவற்றின் சுட்டிகளோட...

இன்று என் பிறந்தநாள் என்று அறியாமலேயே எனக்கு எதிர்பாராத பிறந்தநாள் பரிசளித்த அந்த மதுரைப் பத்திரிக்கையாளருக்கு(பேரைச் சொல்லவா.. அது நியாயமாகுமா...)

இதயத்திலிருந்து நன்றி!

ஓரு பாடல் நான் கேட்டேன்
Google Buzz Logo

ஒரு அமைதியான மாலை, அழகான அந்தி நேர மஞ்சள் வானம், குளிர்ந்த தென்றல், இந்த இனிய வேளையில் அருமையான இசை கேட்கிறது.

எனது தெலுங்கு நண்பனொருவன் அமெரிக்காவிலிருந்து புதிதாய் வாங்கி வந்த ஆப்பிள் ஐ-ப்பாடில்(சுமார் 5000 பாடல்களை சேமிக்கும் திறனுடயது) அவன் பதிவேற்றிய சில தெலுங்கு பாடல்களை கேட்டுவிட்டுத் தருகிறேன் என்று வாங்கி(பிடுங்கி)யிருந்தேன்.

முதல் பாடல். முதன்முறை கேட்டபோது நெஞ்சினில் ஏதோ இனம் புரியாத குதூகலம். வெகுநாட்களாய் கேட்டுப் பழகிய பாடல் போன்ற ஒரு உணர்வு. உடன் சேர்ந்து பாட அழைத்தது அந்த இசை. அடுத்தப் பாட்டுக்கு தாவ மனசு வரவில்லை.

மீண்டும் அதே பாடலை கேட்டேன். இம்முறை மெதுவாய் ஒவ்வொரு வார்த்தையாய் அர்த்தம் புரிந்துக்கொண்டு கேட்டேன்.

இசை மட்டுமல்ல, பாடல் வரிகளும் எளிமையாயும் அருமையாயும் இருக்கிறது.

அந்த பாடல் "அவுனன்னா காதன்னா" என்ற தெலுங்கு படத்தில் வரும் "குடிகண்டலா" என்ற பாடல். இசை ஆர்.பி.பட்னாயக். பாடலை பாடியோர் எஸ்.பி.சரண், உஷா.

பாடலை எனக்கு தெரிந்த வரை தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன். என்னதான் மொழிமாற்றம் செய்தாலும் நிஜப்பாடலின் இனிமை போல வராது. (உதாரணமாக, தமிழ் சந்திரமுகியில் வரும் தெலுங்குப் பாடல் "ராரா.. சரசகு ராரா.." இதன் தமிழ் பதிப்பு தெலுங்கு சந்திரமுகியில் "வரம் நான் உன்னைத் தேடி" என்று வரும். அது தெலுங்கில் கேட்டது போல அத்தனை அருமையாய் இல்லை.)

சரி. பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்:

கோவில் மணிபோல சிரிக்கிறாய் ஏனோ
தெரியலை எனக்கு தெரியலை
கூந்தல் மணி(குஞ்சம்) போல துள்ளுகின்றாய் ஏனோ
தெரியலை எனக்கு தெரியலை
சரி என்ன சங்கதி, ஓ! பாலா
தெரியலை தெரியலை தெரியலை தெரியலையே

(கோவில் மணிபோல..)

உன் பக்கமாய் பார்த்திருந்தால் பசியும் மறக்கின்றது.
உன் பார்வையில் கட்டுண்டேன் மந்திரம் என்ன அது!
உன் பேச்சை கேட்டிருந்தால் நாளும் உருண்டோடுது
என்னோடு நீ இருந்தால் சொர்க்கமே சின்னது
மனம் ஏன் தான் இப்படி துள்ளியோடுதோ ராமா! ......தெரியலை
மல்லிகைப்பூ போல வாசம் வீசுகின்றதேனோ! ......தெரியலை
(கோவில் மணிபோல..)

உன் நிழலிலே நானுண்டா காண ஆசையிருக்கு
இந்த இன்பத்தின் பேரென்ன புதியதாக இருக்கு
என் கண்களை வேண்டாமென்றேன், உன்னை காணுவேன் என்றது
நான் எவ்வளவுதான் சொன்னாலும் இஷ்டம் அதுவென்றது
அட இதைதான் உலகம் காதல் என்கிறதோ! ......தெரியலை
அது தூராமாயிருந்தும் நெருங்கிப் போகுதே ராமா! ......தெரியலை
(கோவில் மணிபோல..)

பி.கு:நான் கவிஞனல்ல என்பதால் இனிமையான வார்த்தைகளிட்டு மொழிபெயர்க்கத் தெரியவில்லை. தெலுங்கு தெரிந்த யாரேனும் என் தமிழாக்கத்தில் தவறுகளிருந்து சுட்டிக்காட்டினால் திருத்திக்(தெரிந்து) கொள்கிறேன்.

நிலாச்சாரலில் மென்பொருள் வல்லுனனின் பராசக்தி
Google Buzz Logo

சற்று நேரம் ஓய்வாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சரி, பழைய மின்னஞ்சல்களைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் வலைதளங்களை மேய்ந்து பல நாட்களாயிற்றே என எண்ணியிருந்தேன்.

மின்னஞ்சல்களுள் ஒன்று "மென்பொருள் வல்லுனன் பராசக்தி பட நீதிமன்ற வசனம் பேசினால் எப்படியிருக்கும்" என்ற தலைப்புடன் வந்திருந்தது.

மின்னஞ்சலில் இருந்த சுட்டியைத் தட்டினால், லண்டனைச் சேர்ந்த நிலாச்சாரல் வலைத்தளத்திற்கு சென்றது.

ஆஹா! மிக அருமையான நகைச்சுவை!

பிறகு அந்தத் தளத்திலுள்ள ஸ்பெஷல்ஸ் மற்றும் சில பகுதிகளை மேம்போக்காய் நோட்டமிட்ட பிறகு பார்த்தால், இத்தளத்தின் பின்னனியில் ஒரு உலகளாவிய குழுவே இருப்பது தெரிய வந்தது.

வளர்க நிலாச்சாரல் குழுவினரின் பணி! வாழ்க தாய் தமிழ் மொழி!

சரி, சரி,இந்த நிலாச்சாரலை அனுபவிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.

சில ஆங்கில வார்த்தைகள் தோன்றிய பின்னனி
Google Buzz Logo

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில ஆங்கில சொற்கள் உண்மையில் வேறு சில ஆங்கில வார்த்தைகளிலிருந்து தோன்றியவை..

உதாரணமாக,

MOPED என்ற சொல் 'Motorized Pedaling' என்பதன் சுருக்கம்.

POP MUSIC என்ற சொல் 'Popular Music'லிருந்து தோன்றியது

BUS என்ற சொல் 'Omnibus' (அனைவரும் என்று பொருள்) என்பதன் சுருக்கம்.

FORTNIGHT என்பது 'Fourteen Nights' (பதினான்கு இரவுகள்).

DRAWING ROOM என்பது 'withdrawing room' அதாவது உணவுக்குப் பின் விருந்தினர் ஓய்வெடுக்கும் அறை

NEWS என்பது (N)orth , (E)ast, (W)est மற்றும் (S)outh ஆகிய நான்கு திசையிலிருந்து வரும் செய்தி.

AGMARK என்ற சொல் 'Agricultural Marketing'லிருந்து தோன்றியது.

JOURNAL என்ற சொல் 'Journey for a day'லிருந்து தோன்றியது.

QUEUE என்ற சொல் 'Queen's Quest'லிருந்து தோன்றியது. அரசாட்சி காலத்தில் ராணியைப் பார்க்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அந்த வழக்கத்தில் தோன்றியதே இந்தச் சொல்

TIPS என்ற சொல் 'To Insure Prompt Service' என்பதன் சுருக்கம்.

JEEP என்ற சொல் 'General Purpose Vehicle (GP)'என்பதன் சுருக்கம். பிற்காலத்தில் GP என்பது JEEP ஆனது.

இது போல தமிழிலும் பல சொற்கள் உண்மையில் வார்த்தைகளின் சுருக்கம்

உங்களுக்கு தெரிந்த இது போன்ற (வார்த்தைகள் சுருங்கி உருவான) தமிழ் சொற்களை சொல்லுங்களேன்...

கண்ணே!
Google Buzz Logo


நம்புங்கள்! இந்தப் புகைப்படத்தை எடுத்தது ஒரு ஐந்து வயது சிறுமி!


இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Google Buzz Logo

(பாரதிராஜாவின் குரலில் வாசிக்க)
என் இனிய தமிழ் மக்களே,

வேலைப்பளு காரணமாய் சிலகாலம் வலைப்பதிய மறந்த இந்த கோபி, உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூற இன்று தன் வலைப் பதிவு பக்கமாய் வந்துள்ளான்!

வணக்கம்!

உங்கள் அனைவருக்கும் எனது

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்தப் புத்தாண்டு முதல் நீங்கள் எண்ணிய யாவும் கைகூட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ப்ரியமுடன்,

கோபி

வலைப்பக்கத்திலிருந்து கைத்தொலைபேசிக்கு குறுஞ்செய்தி
Google Buzz Logo

எனது கணினியிலிருந்து குறுஞ்செய்தி வசதியைப் பயன்படுத்திய எல்லோரும் மிகப்பெரிய குறையாய் சொன்னது அது பயனர்க்கு எளிதாய் இல்லை என்பதே.

அவர்களில் சிலர், வலைப்பக்கத்திலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப வசதி செய்தால் சிறப்பாய் இருக்கும் எனக் கூறினர்.

அவர்கள் தெரிவித்த யோசனையின்படி http://www.higopi.com/sms/index.html வலைப்பக்கத்திலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப வசதி செய்துள்ளேன். பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் குறைகளையும் எனக்கு தெரிவியுங்கள்.

பி.கு:இந்த வசதி,கைத்தொலைபேசி சேவை வழங்குவோரின் மின்னஞ்சல் சேவையை நம்பியே இருப்பதால் சில நேரங்களில் தாமதமாகவோ, முற்றிலும் இயங்காமலோ போகலாம்.

கூடிய விரைவில் தமிழகத்தில் ஒரு SMS Gateway அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.(இன்னமும் தமிழகத்தில் இலவச குறுஞ்செய்தி வழங்கும் சேவைதாரர்கள் இருக்கிறார்கள் என்கிற தைரியத்தில்). அது தயாரானதும் இத்தகைய ப்ரச்சனைகள் இருக்காது

உடல் என்னும் அற்புதம்
Google Buzz Logo

நமது உடலின் பல்வேறு பாகங்கள் மற்றும் சில நுட்பமான விஷயங்கள் பற்றி பள்ளிப் பருவத்திலே உயிரியல் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் நண்பரொருவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த படங்களைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் திகைத்துப் போனேன்.

தினமலர் வாரமலரில் வரும் "இது என்ன" பகுதி போல உங்களை கேள்வி கேட்டு (பின்னூட்டங்களை எதிர்பார்த்து) காத்திருக்க வைக்காமல், படங்களும் விளக்கமும் ஒன்றாக கீழே ....


இளஞ்சிவப்பு நிறமா அழகாய் இருப்பது வேறொன்றுமில்லை இரத்த சிகப்பணுக்கள்:



தமணியில் செறிவான பிராணவாயுவை கொண்டு செல்லும் அவை சிரையில் திரும்பும் போது அசுத்தங்களை உள்ளடக்கி கீழ்கண்டவாறு மாறிவிடும்


சிறு பாகற்காய் போல இருக்கும் இது மூளைக்கும் உடல் பாகங்களுக்கும் தகவல்களையும் கட்டளைகளையும் பறிமாற்றும் ஒரு நரம்பணு


அழுக்கான நுரை போலக் காணும் இந்தப் படத்திலுள்ளது ஒரு ஆரோக்கியமான பல். கீழே பசுமை நிறத்தில் இருப்பது பல் எனாமல் உருவாக்கும் பகுதி


மடித்து வைத்த ரொட்டித்துண்டு போல காட்சியளிப்பது சிறுகுடலின் ஒரு பகுதி. இங்கேதான் செரித்த உணவின் சத்துப்பொருள்கள் உறிஞ்சப்படும்


முட்க்காடு போல இருக்கும் இது நாக்கின் சுவையுணரும் நரம்புகளின் தொகுதி


இரைப்பையின் உட்பகுதியில் இந்தப்பகுதியில் தான் அமிலத் திரவங்களினால் இரைப்பை பாதிக்கப்படாமலிருக்க சளி போன்ற வழவழப்பான திரவம் சுரக்கிறது


அடுக்கி வைத்த அழகான சீட்டுக்கட்டு போல இருக்கும் இந்தச் சிதறல்கள் உருவாக்கும் சிறுநீரக கற்கள் மிக ஆபத்தானவை


தீக்குச்சி போன்ற இந்தப் பகுதி, மூளை மற்றும் தண்டுவடப் பகுதியை அதிர்ச்சியிலிருந்து காக்கும் நுன்மப் பொருளை உருவாக்குகின்றன


அழகாய் ரோஜாப் பூவின் இதழ்களைத் தூவி வைத்த படுக்கை போலிருக்கும் இது பெருங்குடலின் உட்பகுதி


இப்ப சொல்லுங்க உண்மையில் உடல் ஒரு அற்புதம் தானே!
(அப்பாடா ஒரு வழியா டைட்டில் வந்தாச்சி! )

வீட்ல விசேஷங்க
Google Buzz Logo

எல்லாருக்கும் வணக்கமுங்க.

எனக்கு தமிழ் வலைப்பதிவுலகத்தை அறிமுகப்படுத்திய எனது உறவினரும் நண்பருமான சீனு அவர்களுக்கு 20 பிப்ரவரி 2005 அன்று திருச்செங்கோட்டில் திருமணம். அவருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

காதலிச்சிக்கிட்டிருக்கிற/காதலிக்கப் போற எல்லாருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்

அப்றம் என்னப்பத்தி ஒரு நல்ல செய்தி. வேறொன்னுமில்லிங்க, 7 செப்டம்பர் 2005 அன்னிக்கு (வினாயகர் சதுர்த்தி அன்னிக்குதான்) தர்மபுரியில எனக்கும் என் கனவு தேவதைக்கும் திருமணம் முடிவாகியிருக்கு.

இன்னும் ரொம்ப நாள் இருக்கிறதுனால எல்லாரும் மறந்துடுவீங்கன்னு தெரியும். இன்னொருக்கா கல்யாணத்துக்கு முன்னால ஞாபகப்படுத்தறேன்.

அப்ப வர்னுங்க! ஏற்பாட்டையெல்லாம் கவனிக்கப் போகனுமில்லோ

லவ்வுன்னா....
Google Buzz Logo

லவ்வுன்னா என்ன? அப்டின்னு 4ல் இருந்து 8 வரை வயதுள்ள மேற்கத்திய குழந்தைகளிடம் கேட்கப்பட்ட போது கிடைத்த பதில்கள்.

யாராவது நம்மைக் கஷ்டப்படுத்தும் போதும் நாம அழுதா அது அவங்களை கஷ்டப்படுத்தும்ன்னு அழாம இருக்கறோம் இல்லியா அதுதான்.

-மாத்யூ (6 வயது)

எங்க பாட்டி மூட்டு வலியினால கால் நகத்துக்கு நகப்பூச்சு பண்ண முடியாம இருக்கும் போது தாத்தா அவருக்கு மூட்டு வலியிருந்தாலும் உதவுறாரு இல்லியா அதுதான்
-ரெபெக்கா (8 வயது)

பொண்ணும் பையனும் வாசனை திரவியங்களை அடிச்சிகிட்டு எங்கையாவது வெளியில போய் ஒருத்தர ஒருத்தர் மொகந்து பாத்துக்கறது
-கார்ல் (5 வயது)

அக்கா அவளோட எல்லா துணிகளையும் என் கிட்ட கொடுத்துட்டு போட்டுக்க வேற துணியில்லாம புதுசா வாங்கிக்க வேண்டியிருக்குதில்ல அதுதான்
-லாரன் (4 வயது)

ஒரு ஆளும் ஒரு பொண்ணும் ரொம்ப நாளா ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சவங்களா இருந்தும் இன்னமும் நல்ல நண்பர்களா இருக்கறது
-டாமி (6 வயது)

அன்பான ஒருத்தர் நம்ம பேரை சொன்னா அது மத்தவுங்க சொல்றதவிட வித்யாசமா இருக்கும்
-பில்லி(4 வயது - இந்த வயசுலயே இன்னா அறிவுபா)

வேற யாரும் கொடுக்கட்டும்னு காத்திருக்காம நாம நம்ம நொறுக்குத் தீனியை மத்தவுங்களுக்கு கொடுக்கறது
-கிறிஸ்ஸி(6 வயது)

கிறிஸ்துமஸ் அன்னிக்கு கிறிஸ்துமஸ் தாத்தா கொடுத்த பரிசை பிரிச்சிகிட்டு இருக்காம அவரு சொல்றத காது கொடுத்து கேக்றது
-பாபி(5 வயது)

அன்பாயிருக்க கத்துக்கனும்னா உங்களை விரும்பாத யாருகூடன்னா கொஞ்ச நாள் பழகிப் பாக்கனும்
-நிக்கா(6 வயது)

உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட ஏதாவது உங்களைப்பத்தி தப்பான விஷய்த்த நீங்க சொன்னா எங்க அவுங்களுக்கு உங்களைப் பிடிக்காம போயிடுமோன்னு நெனக்கும் போது அவங்களுக்கு இன்னும் அதிகமா உங்களை பிடிக்குது பாருங்க! அதுதான்
-ஸமந்தா(7 வயது - இன்னா அனுபவம்பா!)

அன்பு 2 வகை. ஒன்னு நம்ம அன்பு. இன்னொன்னு கடவுளோட அன்பு. கடவுளோட அன்பு ரெண்டும் சேர்ந்தது
-ஜென்னி(4 வயது)

அப்பா அழுக்கு சட்டையும் கையுமா வண்டியை சரி பண்ணிட்டு வந்து நிக்கும்போது அம்மா அவரைப் பாத்து திட்டாம "இப்பகூட ரொம்ப அழகா இருக்கீங்க" அப்டின்னு சொல்றது
-கிறிஸ்(8 வயது)

ஒரு பையன் தெனமும் ஒரே சட்டை போட்டுக்கிட்டு வந்தாலும் அது நல்லாயிருக்குன்னு சொன்னா அதுதான்
-நோயெல்லி(7 வயது)

ஒருத்தர் மேல அன்பாயிருக்கனும்னு நெனைக்கிறப்பல்லாம் அவுங்க கிட்ட அதை சொல்லிடனும், நெறய பேரு அத சொல்லுறதே இல்லை
- ஜெசிகா(8 வயது)

கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கறது. வேணும்னாலும் வேணான்னு சொல்றது
-பேட்டி(8 வயது)

என்னோட நாயை நாள் பூராவும் தனியா கட்டி வச்சிருந்தாலும் அது நான் வீட்டுக்கு போனவுடனே என் மூஞ்சில நக்குமே அதுதான்
-மேரி (4 வயது)

சில பேரை பாத்தா நம்ம கண்ணுல நட்சத்திரம் பறக்குமே அது
-கரேன்(7 வயது)

அதெல்லாம் இருக்கட்டும் நீங்க என்ன சொல்றீங்க?

நிலநடுக்கமும் சுனாமியும் - ஒரு அலசல்
Google Buzz Logo

நிலநடுக்கமும் சுனாமியும ஏன் வருதுன்னு எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சிட்டங்க.

நிறைய காமெடியனுங்க அதை முன் கூட்டியே சொன்னேன்னு வேற பத்திரிக்கை/தொலைக்காட்சியில பேட்டி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

கொஞ்சம் யோசிச்சி பாத்ததுல சுனாமி, நிலநடுக்கம் இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் எதுன்னு தெரிய வந்தது. எதுன்னு கேக்கறீங்களா? எதுன்னு சொல்றதுக்கு முன்னாடி..

பேண்ட் போட்டுக்கற பழக்கம் இருக்கறவுங்க கவனிச்சி பாத்தீங்கன்னா ஒரு காலை முதலில் நுழைத்து அடுத்த காலை அப்புறமா நுழைத்து போடுவாங்க. இது ஏன்னு பாத்தா அதுக்கு பின்னால ஒரு பெரிய கதையே இருக்குதுங்க.

உதாரணமா, தமிழ்நாட்டுல ஒருத்தர் காத்தால குளிச்சிட்டு ரெண்டு காலையும் ஒரே சமயத்துல தூக்கி பேண்ட்க்குள்ள குதிச்சி ரெடியாவுறார்ன்னு வையுங்க, குதிக்கும் போது அவர் நிலத்துல ஒரு சின்ன அதிர்ச்சியை ஏற்படுத்துறாரு. இது மாதிரியே எல்லாரும் குதிச்சாக்க அந்த அதிர்ச்சி அப்படியே வளர்ந்து பெரிய அதிர்ச்சியா மாறி (பூமி சுத்துறதுனால) கிழக்கு பக்கமா நகர்ந்து போவும்.

கொஞ்ச நேரம் கழிச்சி பாத்தா ஆப்பிரிக்கா,ஐரோப்பாவுல எல்லாம் விடிஞ்சிரும். அங்கேயும் இதே மாதிரி எல்லாரும் குதிச்சி குதிச்சி பேண்ட் போட்டாங்கன்னு வச்சிக்கங்க, ஏற்கனவே நகர்ந்து வந்த அதிர்ச்சியும் இந்த அதிர்ச்சியும் சேர்ந்து பலமடங்கு அதிகமான அதிர்ச்சியாகும் .

அப்றம் இதே மாதிரி அமெரிக்காவுல, ஜப்பான்ல எல்லாம் குதிச்சி குதிச்சி பேண்ட் போட்டாங்கன்னு வச்சிக்கங்க, தென்கிழக்காசியாவுல விடியும் போது எல்லா அதிர்ச்சியும் சேர்ந்து பெரிய நிலநடுக்கமா மாறி தென்கிழக்காசிய கடல் பகுதியில தாக்கும்.

கடல் அதிரும்போது அது சுனாமியை ஏற்படுத்தி அப்படியே நகர்ந்து வந்து தமிழ்நாடு இலங்கை, அந்தமான் இப்படி எல்லா பகுதியையும் தாக்கிடும்.

இப்படியெல்லாம் ஏற்படாம இருக்கனும்னுதாங்க எல்லாரும் முதல்ல ஒரு கால்ல பேண்ட் மாட்டிட்டு அப்புறமா ரெண்டாவது கால்ல பேண்ட் மாட்டனும்ங்கறாங்க.

என்னது? ஆட்டோ அனுப்பறீங்களா? ஐய்யையோ! எஸ்கேப்!!

பி.கு: யாரும் சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வராதீங்க. உலகத்துல எதையாவது/யாரையாவது கொஞ்சம் கூட வருத்தமடையச் செய்யாத ஜோக் இன்னும் யாருமே என்கிட்ட சொல்லலீங்க.

ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
Google Buzz Logo

நள்ளிரவு சுமார் 2.00 மணி. எலும்பில் ஊசி வைத்து குத்துவது போல தாக்கும் கடும்குளிர்.

பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். இரவு பணி முடிய வெகுநேரம் ஆகும்பொது பணியாளர்களை நிறுவனத்தின் வாகனமே வீடு வரை விட்டுச் செல்லும்.

நான் பொதுவாக எனது வாகனத்திலேதான் வீடு திரும்புவது வழக்கம். கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட சில விபத்துக்களால் சக பணியாளர்கள் படுகாயம் அடைந்ததால், நள்ளிரவு வீடு திரும்புவோர் சொந்த வாகனம் வைத்திருந்தாலும் நிறுவனத்தின் வாகனத்தையே பயன்படுத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டது. எனவே இம்முறை நிறுவனத்தின் வாகனத்தில் பயணித்தேன்.

சுமார் பத்து நிமிடம் பயணித்திருப்போம், வினோதமான சத்தத்துடன் வண்டி நின்றது. முன்னே சென்று பரிசோதித்த ஓட்டுனன், வண்டி சரி செய்ய நகரிலிருந்து ஆள் கூட்டி வரவேண்டும், அரை மணி நேரம் ஆகும் என இந்தியில் சொல்லிவிட்டு வழியில் வந்த ஒரு இருசக்கர வண்டிக்காரனுடன் சென்றான்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த நான் வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தேன். வண்டியின் வெளியே இன்னும் குளிரெடுத்தது. நீண்டு பரந்த கரிய நெடுஞ்சாலை ஆளரவமற்று இருந்தது. எல்லாம் இருந்தும் யாருமற்ற தனியனாய் நான். நிலவொளியையும் நட்சத்திரக் கூட்டங்களையும் ரசிக்க முடியவில்லை. வயிறு வேறு பசித்தது.

சற்றே தூரத்தில் சில வீடுகளும் பேச்சு சத்தமும் கேட்டது. இந்த நேரத்தில் யார் விழித்திருப்பார்கள் என ஆச்சர்யத்துடன் வீடுகளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்

நெருங்கிய போது இன்னும் ஆச்சர்யம்! பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் உன் ஊர் எப்படி இருந்ததோ அதே அமைப்பில் வீடுகள்! ஒரு ஊரைப் போலவே இன்னொரு ஊர் இருக்க முடியுமா?

யோசனையாய் உன் வீடிருந்த இடத்தில் சென்று பார்க்கிறேன்.. அதே பழைய வீடு. வாசலில் அதே பழைய மரக்கட்டில். அங்கே அமர்ந்திருந்த தாத்தா சாளேஸ்வரக் கண்ணாடியூடே என்னை அடையாளம் கண்டுகொண்டு "வாப்பா! நல்லாயிருக்கியா" என்கிறார். உள்ளே சமையலறையில் வேலையாய் இருந்த பாட்டியிடம் "உன் பேரன் வந்திருக்கான், அவனுக்கு சாப்பிட எதாவது எடுத்துனு வா" என்கிறார்.

வாசலில் இருந்த பெரிய கண்ணாடியில் என்னைப் பார்த்தால்.. கண்ணாடியிலிருந்தது ஆறாம் வகுப்பு படிக்கும் நான்!

பாட்டிக்கு சிரமம் தராமல் சமையலறைக்கு சென்று நொறுக்குத் தீனி வைத்திருக்கும் தூக்குப் பையில் இருந்த முறுக்கை எடுத்து வாயில் போட்ட படி திரும்பினால்,ஆறு வயது சிறுமியாய் நீ!

ஏனென்று தெரியவில்லை, என்னைப் பார்த்தவுடன் கோபப் பார்வை வீசினாய். உன் கோபத்தைப் போக்க கிச்சு கிச்சு மூட்டினேன். இன்னும் கோபமாய் "உங்க கூட பேசமாட்டேன் போங்க மாமா, இவ்வளவு நாள் எங்க போயிருந்தீங்களோ அங்கயே போங்க" என்றபடி பூஜையறைக்கு சென்று கதவை உட்புறமாய் தாளிட்டுக் கொண்டாய்.

பின்னாலேயே ஓடிய நான் "செல்லம். நாளையிலிருந்து எங்கேயும் போகலை. உன் கூடவே இருக்கேன். கதவைத் திற" என்று கதவைத் தட்டுகிறேன்.

தட்..தட்..தட்..

"கர் ஆகயா சாப்" என்றபடி கதவைத் திறந்தான் ஓட்டுனன்.

நிலவரத்திற்கு வர சில வினாடிகளானது.

சரி, போய் சாப்பிட்டுட்டு தூங்கனும், நாளைக்கு நெறைய வேலையிருக்குது. வரட்டுங்களா?

பி.கு:(அம்மணிக்கு மட்டும்) கனவுல கூட உன்னோட "நாளைக்கு இருப்பேன்"னு தாங்கண்ணு சொல்ல வருது! ஹும்... எப்ப நான் எனக்காக,உனக்காக, நமக்கே நமக்காக மட்டும் "இன்னிய" பொழுத கழிக்கப் போறேன்னு தெரியல..