அண்ணா பல்கலை பழைய மன்னராட்சி
Google Buzz Logo

முகமூடியின் அண்ணா பல்கலை மன்னராட்சி பதிவைப் பார்த்ததும் இதைப் பதிக்கனும்னு தோனுச்சி.

இது அண்ணா பல்கலையில் இப்போதிருக்கும் துனைவேந்தருக்கு முன்னிருந்த பாலகுரு மன்னருக்கு முன்னிருந்த கலையான நிதி மன்னர் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவம்:

அப்போது தான் சுற்றுப்புற சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த சமயம்.

காலையில் நேரம்..

நண்பனொருவனும் உடன் படித்த இன்னொரு அம்மணியும் மாலை நடக்க இருந்த தேர்வுக்கு உலோகவியல் பாடப்பிரிவின் எதிர்ப்புறமிருந்த மரத்தடி மேடையில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இருவரும் படிப்பு முடிந்து பணியில் அமர்ந்ததும் திருமணம் செய்து கொள்ள எண்ணியிருந்தவர்கள். எனவே அவர்கள் அந்நியோன்னியத்தை கெடுக்க விரும்பாமல் வழக்கம் போல அருகிலிருந்த இன்னோரு மரத்தடி மேடையில் அமர்ந்து நானும் இன்னொரு நண்பனும் படித்துக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரம் கழித்து மிகவும் வெறுமையாய் உணர்ந்ததால் (அதானே படிக்கும் போது தான் நமக்கு போர் அடிக்கும்...) கேண்டீனில் போய் பூனம் கேசர்பாதாம் (அறிமுகமான புதிது.. கேண்டீனில் சலுகை விலை) அருந்திவிட்டு வரலாம் என நானும் என்னுடன் படித்த நண்பனும் மட்டும் சென்றோம்.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்தால் கலையான நிதி மன்னர் காரசாரமாய் நண்பனிடமும் அம்மணியிடமும் கத்திக் கொண்டிருந்தார்..

விஷயம் இது தான்... அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களின் அடையாள அட்டையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு "பெற்றோரை கூட்டிவா.. ஆ.. ஊ.." என கத்தியுள்ளார். (நல்லா கவனிங்க இது ஏதோ ஒரு ஆரம்ப பாடசாலையில நடக்கலை.. முதுநிலை பட்டய படிப்பின் போது நடந்தது). நண்பன் பதிலுக்கு கத்தியுள்ளான்.

அப்றம் என்ன.. கலையான மன்னர் வேகமாய் அந்த இடத்தைவிட்டு போய்விட்டார்.

அப்புறம் எப்படி அடையாள அட்டையை திரும்பி வாங்கினாங்கன்னு கேக்கறீங்களா.. அந்த நண்பனின் தந்தை அப்போது அண்ணா பல்கலையில் ஒரு பாடப்பிரிவின் தலைவராய் இருந்தவர். அவருக்கு நண்பனின் காதல் விஷயம் நன்கு தெரியும். கலையான மன்னர் போன உடனே அவர் பின்னாலேயே இவர் போய் "எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்று சொல்லி அடையாள அட்டையை திரும்ப வாங்கிக் கொடுத்தார். (கொடுக்கும் போது கலையான நிதி மன்னரின் முகத்தில் தெரிந்த ஏமாற்ற உணர்ச்சியை காணக் கண் கோடி பத்தாது. இன்னிக்கு நெனச்சி பாத்தாலும் மறக்கமுடியாது அந்த முகத்தை..)

பின் குறிப்பு: இந்தப் பதிவு "டீ.சர்ட் அணிய தடை" சம்பந்தமானதல்ல. அந்த விதி சம்பந்தமான எனது கருத்து:

மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் படிக்கவும்: விதிமுறைகள் மீறுவதற்கே - Rules are made to be broken.

வருடம் ஒன்று பதிவுகள் நூறு
Google Buzz Logo

ஒரு வருடத்தின் அருமையை சொற்ப மதிப்பெண் குறைந்ததால் தேர்வில் தோல்வியடைந்த மாணவனிடம் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமையை குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்ற தாயிடம் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் அருமையை வாரப் பத்திரிக்கை ஆசிரியரிடம் கேளுங்கள்.

ஒரு நாளின் அருமையை மரணப்படுக்கையில் இருப்பவரை கேளுங்கள்.

ஒரு மணியின் அருமையை காதலியைச் சந்திக்க காத்திருக்கும் காதலனை கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமையை ரெயிலைத் தவறவிட்டவரிடம் கேளுங்கள்.

ஒரு நொடியின் அருமையை விபத்திலிருந்து உயிர் தப்பியவரிடம் கேளுங்கள்.

ஒரு மில்லி செகண்டின் அருமையை ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாய் வந்தவரிடம் கேளுங்கள்.

இதையெல்லாத்தையும் எப்படி வீணாக்கறதுன்னு என் கிட்ட கேளுங்க.

குறிப்பு:


1) இந்த மின்னஞ்சலை ஏற்கனவே நீங்க படிச்சிருப்பீங்க, இருந்தாலும், ஒரு வருஷத்துல நூறு பதிவுகள்ன்னு சொல்றதுக்காக ஒரு பதிவை வேற எப்படி பதியறதுன்னு தெரியலை.. ஹி... ஹி... அதனாலதான்...

2) ஏப்ரல் 2004 முதல் வலைப்பூக்களை ஒரு வருகையாளனாய் பார்வையிட்டு வந்த நான், கடந்த ஜூலை 22, 2004 அன்று, வாழும் கலை அறிவோம் என்று பதித்து துவக்கிய ப்ருந்தாவனத்தில் இன்று இந்தப் பதிவோடு நூறு பதிவுகள் (ஒரு வருடம், 9629 வருகைகள், 464 பின்னூட்டங்கள்) முடிவடைகிறது. அவ்வப்போது வந்து பின்னூட்டமிட்ட, பின்னூட்டமிடாமல் பதிவைப் படித்துவிட்டு மட்டும் சென்ற, தமிழ்மணத்தில் பரிந்துரைத்த (அதாவது + ஐ அழுத்திய) அனைவருக்கும் நன்றி.

3) தொடரும்....

நூறாவது பதிவைக் கொண்டாடும் இந்த சமயத்தில் ஒரு புதிய முயற்சி பற்றி இங்கே...

ஓராண்டுக்கு முன்பு ஆடியோ ப்ளாகிங் செய்ய சிலர் முயன்றார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் நேரம் பற்றாக்குறையோ அல்லது வேறு என்ன காரணமோ அந்த முயற்சி தொடரப்படவில்லை.

இப்போது முகிலன் அவர்களின் தமிழ்பாட்காஸ்ட் என்ற முயற்சி ஆடியோ ப்ளாகிங்கினை விட மேம்படுத்தப்பட்டதாய் (with ipodder support etc.,) இருக்கிறது. சுமார் மூன்று மாதங்களில் மூன்று பதிவுகளை பதித்துள்ளார். ஆடியோ ப்ளாகிங் கடினமான, நேரத்தை விழுங்கும் பணி என்றாலும் முடிந்தால் இன்னும் பல பதிவுகளை இட்டால் நன்றாய் இருக்கும்.

இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்ட, அனைவரும் இந்த தமிழ்பாட்காஸ்ட்க்கு சென்று உங்கள் பரிந்துரைகளையும் பின்னூட்டங்களையும் இடுவீர்!

சும்மா விளையாடிப் பாருங்க
Google Buzz Logo

விண்டோஸ் பயன்படுத்தறவங்க எல்லாம் யூனிக்ஸ் பற்றி மிகப் பெரிய குறைபாடா சொல்றது அது பயனீட்டாளருக்கு நட்பாய் இருப்பதில்லைன்னு.

யாருங்க சொன்னது அப்படி.. யூனிக்ஸ் எவ்வளவு நட்பாய் இருக்கும்னு தெரியனுமா உங்களுக்கு?

யூனிக்ஸ் கிட்ட கீழ இருக்கிற மாதிரி பேசிப் பாருங்க என்ன சொல்லுதுன்னு.


$ got a light?
No match.

$ sleep with me
bad character

$ man: Why did you get a divorce?
man:: Too many arguments.

$ make 'heads or tails of all this'
Make: Don't know how to make heads or tails of all this.
Stop.

$ \(-
(-: Command not found.

$ date me
You are not superuser: date not set
Mon Jul 11 07:48:43 PDT 2005

$ If I had a ) for every dollar Clinton spent, what would I
have?
Too many )'s.

$ %Vice-President
%Vice-President: No such job.

% ls Honest-Politician
Honest-Politician not found

% [Where is Jimmy Hoffa?
Missing ]. |


(இத எல்லாத்தையும் லினக்ஸ் கிட்டயோ வேற வேற Xனிக்ஸ் கிட்டயோ பேசுனா வேற மாதிரி சொல்லும்.. அதனால யூனிக்ஸ் இருக்கறவங்க மட்டும் சொல்லிப் பாருங்க)

இதவிட நட்பா வேற எப்படிங்க இருக்க முடியும்?

குழந்தைகளுக்கான வலைப்பூக்கள்
Google Buzz Logo

குழந்தைகள் முகம் எப்பவுமே மலர்ச்சியா இருக்க காரணம் அவங்க மனசுல வஞ்சம் ஏதும் இல்லாம இருக்கறது தான். குழந்தைகள் யாரோடாவது சண்டையிட்டால் கூட மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் அவர்களோடு இன்முகம் காட்டி பழகும்.

இப்படி இருக்கும் குழந்தைகள் நாளடைவில் சுற்றத்தாரைப் பார்த்தும் வளர்ப்பு முறையினாலும் வஞ்சங்களைப் பழகிக் கொள்கிறது.

குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்பும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கேற்ற வகையில் நல்ல பல நீதிக்கதைகளையும் குட்டிக் கதைகளையும் பதியும் சில வலைப்பூக்கள் கீழே:

பரஞ்சோதியின் சிறுவர் பூங்காவில் "சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்." என்கிறார். இந்த வலைப்பக்க வடிவமைப்பைப் பார்க்கும்போது அம்புலிமாமா,பாலமித்ரா படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

கங்காவின் தினம் ஒரு ஸென் கதையில் பல்வேறு ஸென் கதைகளை மொழிபெயர்த்து தனது கருத்துக்களுடன் வெளியிட்டு வருகிறார். சமீப காலம் வரை தினம் ஒரு கதையாகத்தான் பதித்து வந்தார். தற்சமயம் அவ்வாறில்லாமல் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பதிக்கிறார். இது நான் தவறாமல் படிக்கும் வலைப்பூ.

ந. உதயகுமாரின் குட்டிக் கதைகள். இவர் இந்தப் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளிவந்த சின்னஞ்சிறு நீதிக்கதைகளைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டு வருகிறார். சிறுவர்களுக்கு ஏற்றவாறு அருமையாய் இருக்கிறது.

சந்திரமதி கந்தசாமி (மதி) சிறுவர் பாடல்கள் என்ற தளத்தில் சிறுவர்களுக்கான பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சந்திரவதனா குழந்தைகள் - தாய்ப்பால் முதல் முதலுதவி வரை என்ற தளத்தில் தலைப்பில் கூறியவாறு குழந்தை வளர்ப்பு சம்பந்தமாய் பயனுள்ள அனைத்து விவரங்களையும் பதித்து வருகிறார்.

இன்னும் இது போல குழந்தைகளுக்கான எத்தனையோ தளங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

எல்லோரும் படிப்போம். குழந்தைகள் ஆவோம் மனதினால்!

பி.கு: இது வலைப்பூக்களில் சர்ச்சைக்குறிய விவாதங்கள் மூலம் வீண் பரபரப்பை ஏற்படுத்துவோரையோ, மூன்றாம் தர பின்னூட்டம் இடுவோரையோ திசை திருப்பும் முயற்சியல்ல. என் போன்ற பாமரர்கள் சொல்லியா இது போன்றவற்றை மாற்ற முடியும்?

இந்த ஜென் கதை சொல்வது போல "துப்ப விரும்புவோர் துப்பிக் கொள்ளுங்கள், ஆனால் நான் தலை வணங்கவே விரும்புகிறேன்" தமிழ் மொழியை.

மனமென்னும் மாயாஜாலம் - 7
Google Buzz Logo

கடந்த அக்டோபர் 2004ல் வலைப்பூவிலிருந்து தமிழ்மணத்திற்கு தமிழ் வலைப்பதிவர்கள்/வருகையாளர்கள் மாறிய போது அறிமுகப்படுத்தப்பட்ட "இந்த வார நட்சத்திரம்" பகுதியில் முதல் நட்சத்திரமாய் நான் எழுதிய பதிவுகளில் மனம் பற்றிய தன்னம்பிக்கைத் தொடர் "மனமென்னும் மாயாஜாலம்".

மனமென்னும் மாயாஜாலம் - 1
மனமென்னும் மாயாஜாலம் - 2
மனமென்னும் மாயாஜாலம் - 3
மனமென்னும் மாயாஜாலம் - 4
மனமென்னும் மாயாஜாலம் - 5
மனமென்னும் மாயாஜாலம் - 6

பல ஞானிகளின் கருத்துக்களையும் எளிய பயிற்சிகளையும் உள்ளடக்கிய இந்தத் தொடரை இனி அவ்வப்போது தொடர்கிறேன், இனி வரும் இந்தப்பதிப்புகள் நம்பிக்கை குழுமத்திலும் மின்னஞ்சலாய் பதிக்கப்படும்.

எல்லாத்துக்கு மனசு தாங்க காரணம்

ஒரு பிரச்சனை நம்மை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் அடுத்த கட்ட விளைவுகள் இருக்கின்றது. எந்த ஒரு பிரச்சனையும் நம்மை இரு விதமாய் பாதிக்கலாம். அது நம்மை அழிக்கும் வண்ணம் கவலையில் ஆழ்த்தலாம் அல்லது தீயிலிட்ட தங்கம் போல சோதனையில் நம்மை மேம்படுத்தலாம்.

இந்த இரண்டு வகை பாதிப்புகளில் எவ்விதமாய் பாதிக்கப் படுவதை நீங்கள் விரும்புவீர்கள்? நான் முன்பே சொன்ன படி வாழத்தான் நமக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே நான் இரண்டாவதைத்தான் விரும்புவேன்.

சரி, முதல் விதமாய் பாதிப்படையாமல் இருக்க என்ன செய்யலாம்? அதுக்கு முன்னால ஒரு சின்ன நிகழ்ச்சி:

ஒரு தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அனாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். குழந்தை வளர்ந்து, மற்ற குழந்தைகளோடு விளையாட ஆரம்பித்த வயதிலே ஒரு சக குழந்தைக்கும் இந்தக் குழந்தைக்கும் சண்டை வருது. அப்ப சண்டை போட்ட குழந்தை இந்தக் குழந்தையை "போடா! டேய்! அனாதைப் பயலே" அப்படின்னு திட்டிடுச்சி.

ஒரு நிமிஷம் அமைதியா இருந்த இந்தக் குழந்தை "அனாதைன்னா என்ன தெரியுமா உனக்கு" அப்படின்னு கேட்டுச்சி

"எனக்கு தெரியாது, எங்க அப்பாதான் சொன்னாங்க.. நீ அனாதைன்னு" அப்புடின்னுச்சி சண்டை புடிச்ச குழந்தை.

அதுக்கு "நீங்க எல்லாம் உங்கம்மா வயித்துல வளந்தீங்க, நான் எங்கம்மா இதயத்துல வளந்தேன்" அப்படீன்னு சொல்லீட்டு வீட்டுக்கு போயிருச்சி அந்தக் குழந்தை.

யோசிச்சிப் பாத்தீங்கன்னா ஒரு விஷயம் நம்மை எப்படி பாதிக்கிறதுங்கறது அந்த விஷயத்தை நான் எப்படி எடுத்துக் கொள்கிறோம், அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் எனபதைப் பொறுத்து அமையுது.

ஒரு நண்பன் நம்மை "வெட்டி நாயே"ன்னு சொல்லும் போது நாம் அதை செல்லமாய்த் திட்டுவதாய் எடுத்துக்கறோம். அதையே வேறொருவர் சொல்லும் போது சண்டைக்கு போய் ரெண்டுல ஒன்னு பாத்துட்டுதான் மறுவேலை!

அதுக்காக சொரனையே இல்லாம இருக்கனும்னு சொல்லலை. உங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்தறீங்க, கோவத்துல இருக்கும் போது எப்படி சிந்திக்கறீங்க இதையெல்லாம் கவனிச்சிப் பாத்தீங்கன்னா நாம அழிவடையறதும் சந்தோசமா இருக்கிறதும் இன்னொருத்தர் கையில இல்லை. அது நம்முடைய எண்ணம்/செயல்/பேச்சு முதலானவற்றையொட்டியே அமையுதுன்னு தெரியும்.

உங்களை யாராவது காயப்படுத்திட்டா அதனால உங்களுக்கு கோவம் வருதுன்னு வச்சிக்குவோம். பதிலுக்கு எதிராளியைக் காயப்படுத்துறதுனால நீங்க காயப்பட்டது சரியாகாது. உங்கள் காயம் ஆறவும் வேண்டும் அதே சமயத்தில் அந்த எதிராளி உங்களை எப்படி காயப்படுத்தியுள்ளார் என அவர் உணர தெரிவிக்கவும் வேண்டும் என்றால் அதற்கு ஆக்கபூர்வமாய் பல வழிகள் உள்ளன.

கோபத்துல இருக்கும் போது எப்படி சிந்திக்கிறோம்.. எப்படி சிந்தித்தால் நமக்கு நல்லது, அவ்வாறு சிந்திக்க கற்றுக் கொள்வது எப்படி என்று அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

சில சிந்தனைகள்
Google Buzz Logo

மனித மூளை அற்புதமானது. அது நாம் காலையில் விழித்தவுடன் பணிபுரிய ஆரம்பிக்கிறது. அலுவலகத்துக்குள் நுழையும் வரை அயராது பணிபுரிகிறது.

- ராபர்ட் ஃப்ரோஸ்ட்


ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். அதைப் போல ஒவ்வொரு வெற்றி பெற்ற பெண்ணுக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறான், எப்படி சாத்தியம் என சிந்தித்தபடி.

நேரம் தவறாமல் இருப்பதில் உள்ள சிரமம் என்னவென்றால் அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போது பாராட்ட எவரும் இருப்பதில்லை.
-ஃப்ராங்க்ளின் ஜொன்ஸ்

அதிர்ஷ்டத்தைக் கண்டிப்பாய் நான் நம்புகிறேன். நமக்குப் பிடிக்காதவர்கள் வெற்றி பெறுவது குறித்து வேறு என்ன சாக்கு சொல்ல முடியும் ?
- ஜெர்ரி செய்ன்ஃபீல்ட்

வாழ்வில் நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் ஜெயிக்கிறேனா இல்லையா என்பது தான் விஷயம்.
- டார்ரின் வெய்ன்பெர்க்

வாழ்க்கை இனிமையானது. சாவு அமைதியானது, இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் தான் பிரச்சனையானது.

பிரச்சனையில் இருக்கும் மனிதருக்கு உதவுங்கள், அப்போது தான் அவர் மறுபடி பிரச்சனையில் இருக்கும் போது மட்டும் உங்களை நினைப்பார்.

கடினமான பிரச்சனைகளுக்கு எளிய, சுலபமாய் புரியக்கூடிய பல தவறான தீர்வுகள் உண்டு.

பணத்தால் சந்தோசத்தை விலைக்கு வாங்க முடியாதுன்னு யார் சொன்னது? எந்தக் கடையில கெடைக்கும்னு அவங்களுக்கு தெரியலை! அவ்வளவுதான்.

குடிப்பழக்கம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. அதனால் என்ன, பாலோ பழரசமோ மட்டும் பிரச்சனைகளுக்குத் தீர்வாகிடுமா?

நாட்டுல நெறைய பேரு உயிரோட இருக்கறதே அவங்களைச் கொன்னா சட்டவிரோதம்ங்கற ஒரே காரணத்தால தான்

உங்கள் எதிரிகளை மன்னித்துவிடுங்கள். அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எத்தனைப் பேர் உங்களை கவனிக்கிறார்கள் என்பது நீங்கள் எவ்வளவு முட்டாள்த்தனமாய் செயல் படுகிறீர்கள் என்பதற்கு நேர்மறையானது.

ஒரு சுடான தோசைக் கல் மீது ஒரு நிமிடம் அமரும் போது அது ஒரு மணி நேரம் போல இருக்கிறது, ஒரு அழகான பெண் அருகில் அமர்ந்து பேசும் போது ஒரு மணி நேரம் கூட ஒரு நிமிடம் போல இருக்கிறது. இது தான் சார்புக் கோட்பாட்டு ( Relativity theory)
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்