+++ மற்றுமொரு கடல் கொந்தளிப்பு - அவசர அறிவிப்பு +++
Google Buzz Logo

தமிழக கடலோரப் பகுதிகளை முழுவதும் மீண்டும் ஒரு சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

CNN

NDTV


உற்றார் தோழர்கள் எவரேனும் தமிழக கடலோரப் பகுதிக்கு சென்றிருந்தால் உடனே கடலோரப் பகுதியிலிருந்து விலகியிருக்க சொல்லுங்கள். மீட்புப் பணிக்கு சென்றவர்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

ஜி-மெயில் மின்னஞ்சல் அழைப்புகள்
Google Buzz Logo

உங்களில் எவருக்கேனும் இன்னும் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரி இல்லையா? கீழுள்ள சுட்டிகளை உபயோகித்து புதிய முகவரி ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்

சுட்டி 1 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 2 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 3 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 4 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 5 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)

சுட்டிகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் எவருக்கேனும் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரி தேவையா? எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்.ஜி-மெயில் எனக்கு அழைக்க வாய்ப்பளிக்கும்போது உங்களுக்கு பதில் மின்னஞ்சலில் சுட்டியை அனுப்புகிறேன்.

மாறாக, நீங்கள் இந்த சுட்டியை(http://isnoop.net/gmailomatic.php) தொடர்ந்து கவனித்து வந்தீர்களேயானால் உங்களுக்கு ஜீ-மெயில் மின்னஞ்சல் உருவாக்குவதற்கான சுட்டி கிடைக்கலாம்.

நிலநடுக்கம் - கடல் கொந்தளிப்பு
Google Buzz Logo

மிகக் கொடூரமான இந்த இயற்கைச் சீரழிவின் பாதிப்பைப் பற்றி பேசுவது, வலைப்பதிப்பது, இவையெல்லாம் தாண்டி எவரேனும் பாதிக்கப்பட்ட இந்தியருக்கு உதவ விரும்பினால் பிரதமர் தேசிய நிவாரண நிதித் திட்டத்தில் பங்கேற்பீர்

இலங்கைத் தோழர்களுக்கு உதவ கவிதனின் வலைப்பதிவில் உள்ள விவரங்களைப் பார்க்கவும்

விடுமுறையில் செல்கிறீர்களா - 2
Google Buzz Logo

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்காக விடுமுறையில் செல்லத் தீர்மானிக்கிறீர்களா? இந்நேரம் விடுமுறையில் செல்கிறீர்களா - 1ல் சொன்ன யோசனைகளின் படி மின்னஞ்சல் பதிலிகளை தயார் செய்துவிட்டிருப்பீங்க.

அலுவலகத்தில் எல்லாவற்றையும் முடித்து அழகாக அடுக்கிவிட்டு செல்லத் தயாராக இருப்பீங்க. எதுக்கும் ரொம்ப நாள் விடுமுறையில் போகாதீங்க இல்லைன்னா நீங்க திரும்பி வரும் போது உங்க மேஜையும் அறையும் இப்படி இருந்தா ஆச்சரியப்படுறதுக்கில்லை








என்ன... எல்லாத்தையும் தூக்கி குப்பையில போடாம ஒன்னொன்னா படிச்சிப் பாக்கனும்னாதான் கஷ்டம்!

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விடுமுறையில் செல்கிறீர்களா - 1
Google Buzz Logo

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்காக விடுமுறையில் செல்லத் தீர்மானிக்கிறீர்களா?

உங்களுக்கு உதவ சில மின்னஞ்சல் பதிலிகள் இதோ:

1) ஒரு நேர்முகத்தேர்வுக்காக விடுமுறையில் செல்கிறேன். அந்த வேலை கிடைக்காவிட்டால் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

2) நிஜம்மா நான் விடுமுறையில் இல்லை. உங்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை அவ்ளவுதான்.

3) நான் அலுவலகத்தில் இல்லாததால் இந்த பதிலியை பெறுகிறீர்கள். இல்லையென்றால் இது கூட அனுப்பியிருக்கமாட்டேன்.

4) என் மூளையை எடுத்துட்டாத்தான் மேலாளராக்குவேன்னு சொல்லிட்டாங்க. அதனால அறுவை சிகிச்சைக்கு விடுமுறையில போறேன்.

5) விடுமுறையிலிருந்து திரும்பி வரும்வரை உன்னை மாதிரி வேலையத்தவங்க அனுப்புற உபயோகமில்லாத மின்னஞ்சலையெல்லாம் அழிக்க முடியாது. வந்ததும் அழிச்சிடுறேன், என்ன?

6) உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. நீங்கள் அனுப்பிய முதல் 10 வார்த்தைகளுக்கு ரூ.50, அதற்கு மேல் ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ.10 உங்கள் கிரடிட் கார்டிலிருந்து கழிக்கப்பட்டது.

7) நன்றி. உங்கள் மின்னஞ்சல் எண் 999. சுமாராக 5 வாரங்களுக்கு பிறகு உங்கள் மின்னஞ்சல் படிக்கப்பட (அல்லது அழிக்கப்பட) வாய்ப்புள்ளது.

8) உங்கள் மின்னஞ்சல் சரியாக வந்தடையவில்லை. உங்கள் கணினியை ஒருமுறை ரீ-பூட் செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல் அனுப்பவும். (விடுமுறை விட்டு வந்து பாத்தா திரும்பத் திரும்ப இதே மாதிரி சில மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்திருக்கும்)

9) உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. இந்த பதிலி கிடைத்ததா என்று பதில் மின்னஞ்சல் அனுப்பவும்.

10) நீங்க அனுப்பிய மின்னஞ்சல் பத்திதான் யோசிச்சிட்டிருக்கேன். எங்கேயும் போயிடாம கணினிக்கு பக்கத்துலயே இருங்க, கூடிய சீக்கிரம் பதில் அனுப்புறேன்.

11) புது வேலைக்கு சம்பளம் எவ்வளவுன்னு பேசிக்கிட்டிருக்கேன். கவலைப்படாம தகவல் எதுனா இருந்தா சொல்லுங்க.

12) நான் வேற சர்க்கஸ்ல சேந்துட்டனுங்க.

13) மருத்துவக் காரணங்களுக்காக விடுமுறையில் சென்றுள்ளேன். திரும்பி வரும்போது என்னை 'அர்ஜுன்' என்பதற்கு பதிலாக 'அவ்வை சண்முகி' என்றழைக்கவும்.

சிறுகதை
Google Buzz Logo

ப்ருந்தாவனத்தின் லட்சக்கணக்கான வருகையாளர்கள்(சரி. சரி. கொஞ்சமே கொஞ்சம் பேர்) கேட்டுக் கொண்டதால் சில காலம் முன் நான் முயற்சித்த சிறுகதையின் மறுபதிப்பு...


(வருகையாளர்கள் - வார்த்தைக்கு நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

பதிக்க ஒன்னுமில்லைன்னு பழசை தூசி தட்டிப் பதிச்சாலும் அலட்டலுக்கு ஒன்னும் கொறச்சலில்லை.

மாயமான்

சென்னையின் புறநகர் பகுதிகளுள் ஒன்றான இந்தப் பகுதிக்கு நான் எஸ்.ஐயாகப் பதவியேற்று ஒரு வாரம் ஆகிறது. இன்னும் மனைவி, குழந்தைகளை கூட்டி வரவில்லை.

சென்னைக்கு அருகாமையில் இருந்தாலும் நகரின் பாதிப்புகள் குறைவாகவே இருந்தது. பதவியேற்றவுடன் நான் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாக் இருந்தது ஊருக்குள் திருட்டுத் தொல்லை மலிந்துவிட்டது என்பதே.

முந்தய திருட்டுக்களில் துப்பு கிடைக்குமா என்று பார்க்க ஆரம்பித்தேன். பொதுவாக இத்தகைய "மாஸ் தெஃப்ட்" கேஸ்களில் பெரும்பாலும் ஒரு கும்பலே சம்பந்தப்பட்டிருக்கும். அனைத்து திருட்டுக்களுக்கும் ஒருவித ஒற்றுமை இருக்கும். ஆனால் எஃப்.ஐ.ஆர் ஃபைல்களைப் புரட்டியதில் ஒன்றும் தேறவில்லை.

மாலையில் ரெகுலர் டியூட்டி முடிந்ததும் "நைட் பீட்"க்கு செல்லும் கான்ஸ்டபிள்களுக்கு பின்னால் அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன்.

"நைட் பீட்"க்கு செல்லும் கான்ஸ்டபிள்கள் சுமார் 3 மணியளவில் தூக்கம் வருவதைத் தவிர்க்க பஸ் ஸ்டான்ட் டீக்கடையில் டீ குடித்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு மீன்டும் 6 மணிவரை ரவுன்ட்ஸ் வந்துவிட்டு ஸ்டேஷனுக்கு வந்து ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு "நைட் பீட்" முடிப்பர்.

முதல் இரண்டு நாட்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததில் ஏதும் கிடைக்கவில்லை.

மூன்றாம் நாள் இரவு,

கான்ஸ்டபிள்கள் "நைட் பீட்"க்கு கிளம்பியவுடன் அவர்களுக்குத் தெரியாமல் வழக்கம் போல அவர்களைத் தொடர்ந்தேன். நான்கைந்து தெருக்கள் சுற்றியபின் இன்று புதிதாக சேர்க்கப்பட்ட ரூட்டில் நடக்க ஆரம்பித்தார்கள். சற்றே இடைவெளி விட்டு நானும்.

திடீரென்று அவர்களைக் காணவில்லை. திரும்பி அவர்களைத் தேடி நடந்ததில் வழி தவறிவிட்டேன். சரி திரும்ப வந்த வழியிலேயே திரும்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே நடந்தபோது "உர்ர்ர்ர்ர்ர்ர்..." என்றபடி என் மீது பாய்ந்தது அது.

சுதாரித்துகொண்டு எழுந்து பார்த்தேன். என் இடுப்புயரத்திற்கு ஜெர்மன் ஷெப்பர்டையும் ராஜபாளையத்தையும் கலந்து உருவாக்கிய மாதிரி நின்றுகொண்டிருந்தது அந்த நாய். ஜெர்மன் ஷெப்பர்டா? ராஜபாளையமா? எங்கு தப்பு நடந்தது என்றெல்லாம் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த நேரமில்லை. ஆபத்து என அட்ரினலின் மூளைக்குணர்த்த ஓட ஆரம்பித்தேன்.

நான்காம் வகுப்பு படித்த போது ஒரு தெரு நாய் என்னைக் கடிக்கும் வரை நான் நாய்க்கு பயப்படாமல் தான் இருந்தேன். அன்று யாரோ அதற்கு உணவிடாமல் வம்பு செய்திருக்கிறார்கள் என்று எனக்கெப்படி தெரியும்? காரணமே இல்லாமல் அது என்னை கடித்துக் குதறியதில் மாலைமலரில் "சம்பவம் நடந்தபோது" என ஆரம்பிக்கும் நாலாம்பக்கச் செய்தியானேன்

அன்று முதல் இப்போது மிடுக்கான எஸ்.ஐ ஆன பிறகும் கூட எனக்கு நாய் என்றால் அடிமனதில் ஒரு கலக்கம்தான்.

நான் ஓட ஆரம்பித்தவுடன் நாய் மேலும் உற்சாகமாகி என்னைத் துரத்த ஆரம்பித்தது. ஓடி ஓடி களைத்து போன நான் கடைசியாக அந்த அபார்ட்மென்ட் பின்புறமாக இருந்த தென்னை மரத்தில் ஏறி மொட்டை மாடியில் குதிதேன். அடடா, கிராமத்தில் சிறுவயதில் மரமேற கற்றுக்கொண்டது எவ்வளவு நல்லதாப் போச்சி என்று எண்ணியபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான். சற்று நேரம் உறுமிய நாய் ஏமாற்றத்தில் தலையைத் தொங்கப் போட்டபடி திரும்பி ஓடியது.

கீழே இறங்கி வர படிகளைத் தேடினேன். படிகளுக்கு போகும் வழியின் கதவு தாழிடப்பட்டிருந்தது. மொட்டை மாடியை சுற்றிப்பார்த்ததில் மழைநீர் சேகரிப்புக் குழாய் தெரிந்தது. போலீஸான என்னை இப்படி திருடன் போல குழாய் மூலம் இறங்க வைத்த நாயை சபித்த படி மெதுவாக குழாயை பிடித்தபடி இறங்க ஆரம்பித்தேன்.

முதல் மாடியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றின் பின்புறம் வந்தபோது வென்டிலேட்டர் வழியாக சில பேச்சுக்குரல்கள் கேட்டது. சற்றே கவனித்ததில் நான்கைந்து பேர் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

"இன்னிக்கு எம்.ஜி.ஆர் நகர்ல நாலஞ்சி மாயமான் பாத்து வச்சிருக்கேன்"

"நான் கடைவீதியில ஒரு மாயமான் பாத்து வச்சிருக்கேன்"

"சரி எல்லாரும் ஆளுக்கொரு ராமனை எடுத்துக்கினு போய் ஒவ்வொரு மாயமானா அடிச்சிகினு வாங்க"

ஒன்றும் புரியவில்லை என்றாலும் மனதுக்குள் ஏதோ தப்பு நடப்பதாகப் பொறி தட்டியது. எட்டிப்பார்த்ததில் ஒரு மேஜை நிறைய பேனாக்களாக தெரிந்தது. எல்லாரும் ஆளுக்கு ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

எல்லாரும் சென்றபின் ஒருவன் மட்டும் அங்கேயே உறங்கிப்போனான்.

அப்பார்ட்மென்ட் நம்பர், பெயர் எல்லாவற்றையும் மனதில் குறித்துக்கொண்டு ஸ்டேசனுக்கு திரும்பினேன்.

மறுநாள் காலை அந்த அப்பார்மென்ட்டுக்கு சில கான்ஸ்சபிள்களொடு சென்றபோது முன்தினம் இரவு அங்கேயே உறங்கியவன் இருந்தான். விசாரனைக்கு வந்திருப்பதாகச் சொல்லாமல் புதிதாக ஊருக்கு வந்திருப்பதாகவும் இந்த வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று ஒரு ப்ரோக்கர் சொன்னதாகவும் சொல்ல, வாடகைக்கு இந்த வீடு கிடைக்காது என்று கூறினான். மெதுவாக பேச்சு கொடுத்தேன். அவன் நூதனப்பொருள் இறக்குமதி செய்து இன்டர்நெட் மூலம் விற்பனை செய்துவருவதாகச் சொன்னான்.

ஒரு பேனாவை எடுத்துக்காட்டிய அவன், "இது ஒரு மேஜிக் பேனா சார், எதுமேல வேணா எழுதலாம், எழுத்து சாதாரணமா கண்ணுக்கு தெரியாது. எழுதினத பாக்கனும்னா ரூபா நோட்டுல கள்ள நோட்டான்னு கண்டுபிடிக்கரமில்லியா அந்த UV பேனா லைட்ட இதுமேல அடிச்சம்னா தெரியும்" என்றான்.

"மாய மானின்" அர்த்தம் எனக்கு மெதுவாக விளங்க ஆரம்பித்தது. அவனை பிடித்து "உரிய மரியாதை" கொடுத்து விசாரித்ததில் பகல் நேரத்தில் கினற்றுக்கு மருந்தடிக்க, குழாய் ரிப்பேர் செய்ய, ட்ரெய்னேஜ் சுத்தம் செய்ய என்று வீடுகளின் உள்ளே வந்து நோட்டமிட்டு வீட்டின் முன் சுவற்றில் இந்த மாயப் பேனா கொண்டு வீட்டின் அமைப்பு திருடிவிட்டு தப்பிக்க வசதியான வழிகள் எல்லாவற்றையும் எழுதிவிட்டு வந்து, இரவில் ஆளிலாத வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பதாக ஒப்புக்கொண்டான்.

நோட்டமிட்டவன் தானே கொள்ளையடிக்கப் போகிறான், இந்த பேனா கொண்டு எழுதவேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்ததில், திருடும் போது மாட்டிக்கொண்டால் உடனே மாட்டியவனை வேறு ஊருக்கு அனுப்பிவிடுவதாகவும் அது போல வேறு ஊரில் இருந்து புத்தாக இங்கு கொள்ளையடிக்க வருபவனுக்கு வசதியாக இருக்க அது போல எழுதிவைப்பதாக கூறினான்.

"ஆகா! ஒரு குரூப்பாத்தான்யா அலையறனுவ"ன்னு நடிகர் வடிவேலு பொல மனசுக்குள் நினைத்தபடி சம்பதப்பட்ட அத்தனை பேரையும் உள்ளே தள்ள ஏற்பாடு செய்துவிட்டு இன்ஸ்பெக்டராகும் ப்ரமோஷன் கனவோடு வீடு திரும்பினேன்.

சாம்பிளுக்கு எடுத்து வந்த UV லைட் பேனாவை முன் சுவற்றில் அடித்த போது. வீட்டின் மொத்த அமைப்பையும் விலாவரியாக எழுதியிருந்தது தெரிந்தது. "பி.கு: இது எஸ்.ஐயின் கவர்மென்ட் குவார்ட்டர்ஸ் எனவே இந்த அமைப்பில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் எந்த மாற்றமும் இருக்காது" என்று வேறு எழுதியிருந்தது.

"அடப்பாவிகளா! அங்க கைவச்சி இங்க கைவச்சி அடிமடியிலயே கை வச்சிருப்பானுக போல இருக்கே!". முதல் வேலையாக இது போல எந்தெந்த வீடுகளில் எழுதியிருக்குன்னு கண்டுபிடிச்சி அழிக்க வழி பண்ணனும். நாளைக்கு வேற ஊர்ல இருந்து மனைவி, குழந்தைகள்ளாம் வர்றாங்க அதுக்குள்ள நம்ம வீட்ல மட்டுமாவது அழிக்கனும்னு நெனச்சிகிட்டேன்.

காதலும் கல்யாணமும்
Google Buzz Logo

ஒரு ஊர்ல ஒரு (நிஜமாவே ரொம்ப நல்ல) சாமியார் இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை சில மணிநேரம் மக்களை சந்திக்கறது அவர் வழக்கம். ஒரு நாள் அவர் கிட்ட ஒரு இளைஞன் வந்தான். அவன் வெகுநேரம் ஏதும் பேசாம ஓரமா நின்னுகிட்டிருந்தான்.

எல்லோரும் போனப்றம் அவன் அந்த சாமியார் கிட்ட போய் "சாமி, உங்க கிட்ட இதக் கேக்கலாமான்னு தயக்கமா இருக்கு, இருந்தாலும் எனக்கு வேற யாரும் சிறப்பா விளக்க முடியுமான்னு தெரியல. காதல்னா என்ன?" அப்பிடின்னான்

அதுக்கு அந்த சாமியார் "தம்பி, ஆசிரமத்துக்கு எதிர்ல ஒரு பெரிய கரும்புத் தோட்டம் இருக்கு, அதுல இறங்கி நடந்துக்கிட்டே போ, இருக்கிறதுலயே பெரிய கரும்பாப் பாத்து வெட்டிகிட்டு வா, காதல்னா என்னன்னு அப்றம் சொல்றேன். ஞாபகம் வச்சிக்க, திரும்பிப் பாக்காம நடந்து போய் கரும்பு வெட்டி முடிச்சப்றம் திரும்பி வா"ன்னாரு

கொஞ்ச நேரம் ஆச்சு. போனவன் வெறுங்கையோட திரும்பி வந்தான். சாமியார் "என்னப்பா? பெரிய கரும்பு எதுவும் சிக்கலையா ?"ன்னு கேட்டார்.

"வழியில சில பெரிய கரும்புங்களைப் பாத்தேன் சாமி ஆனா அதவிட பெரிசு இன்னும் கொஞ்சம் தூரத்துல இருக்குமோன்னு சந்தேகத்துல தோட்டத்தோட கடைசி வரைக்கும் போனேன், கடைசியில பெரிய கரும்பு ஏதும் இல்ல" அப்டின்னான்

"காதலும் அப்படித்தான், அதுவா நம்ம வழியில வரும்போது நமக்கு அது பெருசா தெரியாது, ஆனா காலம் கடந்து போனப்புறம் நாம தேடுனா கெடைக்காது"ன்னாரு சாமியார்.

"சாமி. இன்னோரு சந்தேகம், கல்யாணம்னா என்ன" அப்டின்னான்

அதுக்கு அவரு "ஆசிரமத்துக்கு பின்னால தேக்கு மரத்தோப்பு இருக்கு, போயி இருக்கறதுலயே பெரிய தேக்கு மரத்தை வெட்டி வண்டியில போட்டு எடுத்து வா, முன்ன மாதிரியே திரும்பிப் பாக்காம போய் வரனும். அப்றம் சொல்றேன் கல்யாணம்னா என்னன்னு" அப்டின்னாரு

கொஞ்ச நேரம் போனப்றம் அவன் ஒரு வண்டியில ஒரு தேக்கு மரத்தை போட்டு எடுத்து வந்தான். பார்த்தா அப்படி ஒன்னும் பெரிய மரமாத் தெரியலை.

சாமியார் "என்னப்பா இதுதான் நீ பாத்ததுலயே பெரிய மரமா?"ன்னாரு

அவன் "இல்லைங்க சாமி, போன தடவை மாதிரி இந்த தடவையும் ஏதும் கெடைக்காம போயிறக் கூடாதுன்னு முதல்ல பாத்த மரங்கள்ல பெரிசா இருந்ததை வெட்டிகிட்டு வந்தேன், அப்றம் கொஞ்ச தூரம் உள்ளே போய் பாத்தா இத விட பெரிய மரமெல்லாம் இருந்தது" அப்டின்னான்.

"இப்படி நம்முடைய எதிர்பார்ப்பையெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு எதோ ஒன்னு கெடைச்சாப் போதும்னு பண்ணிக்றதுதான் கல்யாணம். சில சமயம் நீ வெட்டினதே பெரிய மரமா இருக்கலாம், ஆனா பல சமயம் பெரிய மரம் வேற எங்கயாவது இருக்கும்"ன்னாரு

பூங்கொத்தும் மலர் வளையமும்
Google Buzz Logo

ஒரு வியாபாரி தனது புதிய நிறுவனத்தை ஆரம்பிக்க இருந்தார். அவருக்கு அவரது நண்பர் ஒரு பூங்கொத்தை அனுப்பச் சொல்லி பூங்கொத்து விற்பனையாளரிடம் சொல்லியிருந்தார்.

நிறுவனத் துவக்க தினத்தன்று பூங்கொத்துக்கு பதிலாக 'உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்' என்ற வாசகத்துடன் மலர்வளையம் வந்தது. வியாபாரி மிகுந்த கோபத்தோடு பூங்கொத்து விற்பனையாளருக்கு தொலைபேசி செய்து திட்டினார்.

அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பூங்கொத்து விற்பனையாளர். "நீங்களாவது பரவாயில்லை. இன்னிக்கு உங்களுக்கு அனுப்ப வேண்டிய பூங்கொத்தை ஒரு சவ ஊர்வலத்துக்கு அனுப்பி வச்சிட்டான் எங்க கடைப் பையன். அதுல 'உங்களின் இந்தப் புதிய துவக்கம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்'ன்னு எழுதியிருந்துச்சி. அங்க இருந்து எப்ப திட்டுவரும்னு பயமாயிருக்கு" அப்படின்னார்

சாக்பீஸில் கலைவண்ணம் கண்டான்
Google Buzz Logo

விகடன் வார இதழில் ஒரு வளரும் சிற்பி சாக்பீஸில் தாஜ்மகால் செதுக்கியிருந்தார். நமக்குத்தான் யாராவது எதையாவது புதுசா செஞ்சா உடனே காப்பி அடிச்சி பாக்கத் தோனுமே.

என்ன ஒன்னு. நாம காப்பி அடிச்சி முடிச்சி பாத்தாக்க நம்ம அளவுக்கு ஒரிஜினல் கூட வராது (ஹி.ஹி. சும்மா டமாசு)

அவருக்கு ஒரு தாஜ்மகால்னா நமக்கு ஒரு கோவில் அப்பிடின்னு ஆரம்பிச்சி செதுக்கினா....











சாக்பீஸிலேயே உருவங்கள் சரியாக வரவில்லையே எனக்கு, கல்லில் உளி கொண்டு செதுக்கும் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு சிற்பங்களைப் படைப்பார்களோ!


படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

காதல் இல்லை இது காமம் இல்லை
Google Buzz Logo

அப்பாடா! மலைக்கு போய் வந்த உடனே சுடச்சுட மேல்Kind பாணியில் ஒரு விஷயம்

வேலையிடத்தில் ஒரு பெண் (நீங்கள் பெண்ணாயின் ஒரு ஆண்) உங்களோடு நெருங்கிப் பழக விரும்பினால் அதை எப்படித் தெரிந்து கொள்வது? உங்களுக்கு உதவ பத்து குறிப்புகள் (பயன்படுத்துவதும் பிறகு அடிவாங்குவதும் உங்கள் விருப்பம். அப்றம் நான் சொன்னேன்னு என்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது ஆமா!)

கீழ் சொல்லியுள்ள அனைத்தும் நீங்களும் அவளும் தனியே இருக்கும் போது என்பதை நினைவில் கொள்க.(நீங்கள் பெண்ணாயின் ள் க்கு பதில் ன் போட்டுக்கொள்க)

10) கடைக்கண் பார்வை

அவள் வழியில் நீங்கள் போக நேரும் போதெல்லாம் உங்கள் மீது அவள் பார்வை படிகிறதா, அதை நீங்கள் கண்டுபித்துவிட்டீர்களென்று அவளுக்கு தெரிந்தால் அவள் கண்கள் உங்களைத் தவிர்க்க அங்குமிங்கும் அலை பாய்கிறதா? கொஞ்ச நாள் பொறுங்கள் காலம் இன்னும் கனியவில்லை(சிலருக்கு கண்பார்வையே அந்த மாதிரி இருக்கலாம்)

9) புன்னகை

உண்மையான புன்னகை திறந்த மனதுக்கும் நட்புக்கும் அடையாளம். கண்களில் பிரகாசத்துடன் அவள் உங்களைப் பார்த்து சிரிக்கிறாளா? உங்களின் அருகிலிருப்பது அவளுக்கு பிடித்திருக்கிறது. அவளை அடிக்கடிப் புன்னகைக்க வையுங்கள் நீங்கள் நெருங்கியவர்களாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. (காரணமில்லாமல் அடிக்கடி புன்னகைத்தால் நட்டு கழன்ட கேசா கூட இருக்கலாம்)

8) உங்கள் பார்வை

சம்பந்தமே இல்லாமல் உங்கள் பார்வையில்பட வேண்டும் என்பதற்காக உங்கள் இருக்கை வழியாக வந்து செல்கிறாளா? உதாரணத்துக்கு நீங்கள் அமர்ந்திருப்பது உணவு அறையிலிருந்து பல அடிகள் தொலைவில் என்றாலும் ஒவ்வொரு முறை காபி அருந்த வரும்போதும் அவள் உங்கள் இருக்கை வழியாகவே செல்கிறாள் என்றால்...(உஷார் உடற்பயிற்சிக்காக நடை பழகலாம். இல்லைன்னா உங்க இருக்கைக்கு பின்னாலிருக்கும் ஜன்னலில் தெரியும் இயற்கை காட்சி பிடிச்சிருக்கலாம்)

7) தலைமுடி கோதுதல்

ஒருவரின் தலை முடி அவர்களின் தன்னம்பிக்கை, தைரியத்தின் அடையாளம். உங்களோடு பேசும்போது அவளையறியாமல் அவள் தலைமுடியை கோதுகின்றாள் என்றாள் ஏறகுறைய காலம் கனிந்துவிட்டது என்று அர்த்தம் (பாத்து பொடுகு/பேன் தொல்லையா இருக்கப்போவுது)

6) முதல் பேச்சு

அவர்களாகவே பேச ஆரம்பிப்பது என்பது மிகப் பெரிய விஷயம். அதுலயும் "நீங்க என் நண்பன் ஒருத்தன் மாதிரியே இருக்கறீங்க"ன்னு ஆரம்பிச்சா கண்டிப்பா உங்களோடு நெருங்கிப் பழக விரும்புகிறாள் என்று அர்த்தம்.

பேச்சின் நடுவில் உங்கள் பெயரை அவள் உச்சரிக்கும் விதத்தை கவனியுங்கள், மற்றவர் பெயரை சொல்வதற்கும் அதற்கும் நல்ல வித்யாசம் தெரியும்.

அதுக்கப்றம் அவர்கள் அடிக்கடி உங்களின் காதருகில் நெருங்கி "ரகசியம்" என்ற பெயரில் ஏதாவது சொல்லலாம். (சில பேரு சகஜமா பேசுவது அவர்களின் சுபாவமா இருக்கலாம், பாத்துக்கோங்க)

5) சிரிப்பு

உங்கள் அசட்டு ஜோக்குகளுக்கும் சிரிக்கிறாளா? "ப்ரமாதம்", "ஆச்சரியமா இருக்கே!" என்றெல்லாம் சொன்னாள் என்றால் உங்களுக்கு பச்சை சிக்னல் கெடச்சாச்சி ( "ஓ இது ஜோக்கா! எத்தனை பல்லு தெரியற மாறி சிரிக்கனும்"ன்னு கேட்டா, அப்படியே ஓடிப்போயிருங்க இது பிரயோஜனப்படாது)

4) உங்கள் விருப்பம்

உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன என்பதை அறிய ஆர்வமாக அடிக்கடி கேள்வி கேட்கிறாளா? அல்லது "அந்தப் படம் பிடிக்குமா?", "இந்த ஓட்டலில் பிரியானி நல்லா இருக்கும் தெரியுமா" என்றெல்லாம் சொன்னால் நீங்கள் அந்தப் படம்/ஓட்டலுக்கு அவளை தைரியமாக கூட்டிச்செல்லலாம் (பர்ஸுக்கு வேட்டு வைக்கனும்கிற குறிக்கோளோட சில பேர் இருக்காங்க ஆமா சொல்லிட்டேன்)

3) பரிசு

காரணமேதுமில்லாமல் பரிசு தருவது என்பது அரிது. அப்படி யாரும் உங்களுக்கு பரிசு தந்தா உங்க முதுகுல நீங்களே ஒரு தட்டு தட்டிக்கங்க அந்த பரிசுக்கும் அப்றம் பரிசா கிடைச்ச அந்த நட்புக்கும் (சின்னமீனை போட்டு பெரிய மீன் புடிக்கிற டெக்னிக்காவும் இருக்கலாம். அப்றம் அவுங்களுக்காக சனி,ஞாயிறு விடுமுறையில எல்லாம் ஆபீஸ் வந்து Code எழுதி கொடுக்கற மாறி ஆயிடப் போவுது)

2) தொடுதல்

திட்டக் குழு விவாதங்களின் போது, அல்லது நெருங்கிப் பேசும் மற்ற சமயங்களில் உங்கள் தோளில் தட்டுவது, உங்கள் தலைமுடியை சரி செய்வது இது போலெல்லாம் செய்தால் அவள் உங்களின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வர விரும்புகிறாள் என்பது உறுதி (உங்கள் தலையிலிருக்கும் வழுக்கையை அடிக்கடி தடவிப் பார்க்க ஆசை வந்தால் ஆபத்து)

1) தட்டாமாலை

பணியிடத்தில் ஒரு திட்டத்தின் வெற்றிக்கு பிறகு உற்சாக மிகுதியால் அணைப்பது/தூக்கி தட்டாமாலை சுற்றுவது (மிக மிக அரிது சில அலுவலகங்களில் மட்டுமே சாத்தியம்) போன்று செயல்பட்டால், நீங்கள் ஏற்கனவே நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் (இவ்வளவுக்கு அப்றமும் நீங்க இந்த நெருக்கத்தை உதாசீனப் படுத்தினீங்கன்னா உங்களைத் திருத்தவே முடியாது)

பணியிடத்தில் சக பணியாளர் என்பதைத் தாண்டி ஒரு நெருக்கத்தை வளர்த்துக் கொள்வது பணியில் பல சமயங்களில் ஏணி போல் உதவினாலும் பாம்பு போல சில சமயங்களில் பாதாளத்தில் தள்ளிவிடும் எனவே பரமபதம் ஆடுவதா என்று நீங்களே முடிவெடுங்கள்

காதல் இல்லை! இது காமம் இல்லை!! இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை!!!

சாமியே சரணம் ஐயப்பா
Google Buzz Logo



வெற்றிக்கு அருளும் சபரிமலைக்கு
விரதமிருந்தால் வெற்றி கிடைக்கும்
மாளிகைப்புரத்து மஞ்சம்மா தேவியின்
மனம் கவர் சந்நிதியாம் சத்யமான
பொன் பதினெட்டாம் படி மேல் வாழும்
எங்கள் பந்தளத்து செல்வனைக்
கண்டு களிப்புற்று வரும் வரை
சாமியே சரணம் ஐயப்பா

கணினியிலிருந்து கைத்தொலைபேசிக்கு குறுஞ்செய்தி
Google Buzz Logo

உங்கள் கணினியிலிருந்து கைத்தொலைபேசிக்கு(mobile) குறுஞ்செய்தி(SMS) அனுப்ப வேண்டுமா ? அந்தக் கைத்தொலைபேசி சேவையில் EMAIL2SMS - அதாவது மின்னஞ்சல் முகவரி (919849098490@airtelap.com போல) இருக்கிறதா?

அந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் குறுஞ்செய்தியாக கைத்தொலைபேசிக்கு அனுப்பப்படும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்

இந்தியாவிலுள்ள சில சேவைதாரர்களின் கைத்தொலைபேசிக்கான மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையா? கவலையை விடுங்கள்! இதற்கு Javaவில் ஒரு சிறு tool எழுதியுள்ளேன்.

இதன் சுட்டி:
http://smtp2sms.sourceforge.net/

இதைப் பயன்படுத்தி நீங்கள் கணினியிலிருந்து இந்திய கைத்தொலைபேசிகள் சிலவற்றுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் (தற்சமயம் இந்தியாவிலுள்ள BSNL, Reliance, TataIndicom நீங்கலாக மற்ற சேவைதாரர்களுக்கு Configure செய்துள்ளேன், மற்ற நாட்டு சேவைதாரர்களுக்கும் நீங்களே Configure செய்துகொள்ளலாம் விபரங்களுக்கு பதிவறக்கம் செய்யப்பட்ட Zip File ல் உள்ள README.txtயைப் படிக்கவும்)

ஞாபகமாய் மறந்துவிட்டேன்
Google Buzz Logo

தாயின் திருமண தினம்
சோதரனின் பிறந்ததினம்
ஏதுமென் நினைவிலில்லை
ஒன்றுக்கும் பயனில்லை
என்கிறார்கள் என் வீட்டில்

முதன்முதலில் சென்ற இடம்
முதன்முதலில் எடுத்த படம்
ஏதுமென் நினைவிலில்லை
ஒன்றுக்கும் பயனில்லை
என்கிறார்கள் என் நட்பில்

திட்டத்தின் துவக்கதினம்
திட்டத்தின் முடிவுதினம்
ஏதுமென் நினைவிலில்லை
ஒன்றுக்கும் பயனில்லை
என்கிறார்கள் பணியிடத்தில்

சின்னஞ்சிறு வயதினிலே
பிஞ்சுக்கரம் என் விரல் பிடித்து
துள்ளாட்டம் போட்டபடி
என்னோடு நீ நடக்க
சுற்றி வந்த நினைவுகளும்

சதுரங்கம் ஆடுகையில்
தோல்வி எனைத் தழுவுமெனில்
அழுகை முட்டும் விழிகளோடு
ஆட்டத்தை நீ கலைத்து
வீசியெறிந்த ஞாபகமும்

நீக்கமற நிறைந்திருக்கும்
நீ வசிக்கும் என்னுள்ளே
வேறெதையிம் ஏற்றிடவே
இடமில்லை எண்ணத்தில்
Out of Memory Error!

ஆண் (டவன்)
Google Buzz Logo

வரைந்தால் ஓவியத்தில் ஒரு பெண்ணவது இருக்கவேண்டும் என்ற என் கொள்கை மண்ணாவது என்று யாராவது மனசுல நெனைச்சிருப்பாங்களோ....

நான் வரைந்த ஆண்(டவன்) ஓவியத்தை கீழே கொடுத்துள்ளேன்



படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

தமிழ்த் திரைப்படப் பாடல் ரிங் டோன்கள்
Google Buzz Logo

உங்கள் கைத்தொலைபேசியில் WAP இருக்கிறதா? உங்கள் கைத்தொலைபேசி SP-MIDI (Polyphonic) ரிங் டோன்களை ஏற்கும் திறம்படைத்ததா?

http://tagtag.com/higopi/ என்ற சுட்டியை தட்டினால் உங்களுக்காக சில தமிழ்த் திரைப்படப் பாடல்கள் SP-MIDI (Polyphonic) ரிங் டோன் வடிவத்தில் காத்திருக்கின்றன. (குறிப்பு: இது WML வடிவத்தில் பதிக்கப்பட்ட இணையதளம் எனவே IE/Netsapeல் திறந்தால் இந்தப்பக்கத்தில் என்ன இருக்கிறது என தெரியாது. உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள WAP Browserல் திறக்கவும்)

உங்களுக்கு பிடித்த ஏதேனும் பாடலிருக்கிறதா? எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் கிடைத்தால் பதிவேற்றி வைக்கிறேன்

வழுக்கையிலிருந்து ......
Google Buzz Logo

வழுக்கைப் பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு அருமையான யோசனை! உடனடி பலன்! உடனே செயல்படுத்துங்கள்! என்று ஒரு மின்னஞ்சல் வந்தது.

ஆஹா! நம்ம தலைக்கும் ஒரு விமோசனம் என்று திறந்து பார்த்தால்......





அடிக்காதீங்க... அடிக்காதீங்க... இதுக்கு நான் பொறுப்பல்ல

வலைப்பூ - நன்றி சொல்லவே
Google Buzz Logo

என்னை வலைப்பூ ஆசிரியப்பணிக்கு தேர்ந்தெடுத்த மதி அவர்களுக்கும் இந்த வார நட்சத்திரமாய் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் குழுவினருக்கும் முதற்கண் எனது நன்றி!

கடந்த ஒரு வாரத்திலே இந்த ஆபீஸ்பாய் செய்த அலம்பல்களை பொறுமையோடு படித்துப் பார்த்து ரசித்த, பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்திய, மின்னஞ்சல் அனுப்பி யோசனைகளைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயாஸ்கோப் நன்றி!

காசி ஃப்ளாஸ்க் கொடுத்துக் கேட்ட நம்ம ஊர் காப்பிக்காக காப்பித்தூள், பால், சர்க்கரை எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன். காப்பி போட்டு எடுத்துட்டு போகனும்!

இன்னும் ஏகப்பட்ட வேலை இருக்குதுங்க! வரட்டுங்களா? (உக்கும்! என்னமோ தலையில உலகத்தையே தாங்குற மாதிரி இந்த ஆபீஸ்பாய்க்கு ஏத்தத்தைப் பாரு!)

அப்பப்ப இந்த ஆபீஸ்பாய்க்கு மின்னஞ்சல் அனுப்புங்க, இங்க வந்து பாத்து பின்னூட்டம் குடுத்து உற்சாகப்படுத்துங்க

விளையாட்டம்மை ஒரு முறை வந்தால் அந்த தழும்புகளின் அடியிலேயே வைரஸ் தங்கிவிடுமாம் அதுபோல விளையாட்டாய் எழுத ஆரம்பித்த நான், உங்கள் அடி மனதில் இடம் கிடைத்தால்

தங்கி, தொடர்கிறேன் .....

வலைப்பூ - மொழிகள் ஒரு அலசல்
Google Buzz Logo

ஒரு விஷயத்தைப் பத்தி நாம தாய்மொழியில் தான் சிந்திக்கறோம்னு சொல்வாங்க இல்லையா ? அது உண்மையில்லை.

எப்படின்னு பாக்கலாம். இன்னும் சரியாக தாய்மொழியில் கூட பேசாத மழலை ஒன்றை கூட்டிக்கொண்டு கடற்கரை செல்வதாக் கொள்வோம், வண்டியிலிருந்து இறங்கி கடற்கரைக்கு சென்று அலைகளின் முன்னே அந்தக் குழந்தையை நிறுத்தினால் என்ன செய்யும்?

1) முதலில் அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பையும் அலைகளின் ஓசையையும் பார்த்து திகைப்படையும்
2) சற்றே பழகியபின் முன்னும் பின்னுமாக செல்லும் அலையை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும்
3) பிறகு அலைகளிலும் மணற்பரப்பிலும் விளையாடும்

இப்ப நாம விஷயத்துக்கு வருவோம். அந்தக் குழந்தை தமிழ்க் குழந்தையாயின் அதனிடம் நாம் கடற்கரையைக் காட்டி ஆங்கிலத்தில் பீச் என்று சொன்னால் அந்த பிம்பங்களையும் சத்தம் போன்ற உணர்வுகளையும் நீங்கள் சொன்ன "பீச்" என்ற வார்த்தையையும் உள்வாங்கி மூளையில் பதித்துக் கொள்கிறது.

பின்பு மீண்டும் ஒரு நாள் நீங்கள் "பீச்"சுக்கு போகலாம் என அந்தக் குழந்தையைக் கூப்பிட்டால் அது "பீச்" என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மூளையில் பதித்து வைத்துள்ள அலைகள், நீல நிற கடற்பரப்பு ஆகிய பிம்பகளாக அதை அர்த்தம் செய்து கொண்டு சந்தோசமாக துள்ளிக் குதித்துக் கிளம்புகிறது

நாம் ஒரு விஷயத்தை சிந்திப்பது பிம்பங்களாகவும் உணர்வுகளாகவும் மட்டுமே! அதை வெளிப்படுத்த வேண்டுமெனில் பிம்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் பொருத்தமாக மூளையில் பதிக்கும் போது எந்த மொழியில் பதிக்கிறோமோ அதே மொழியில் மொழி பெயர்க்கிறோம். அது தாய்மொழியாகவும் இருக்கலாம். வேறெதுவாகவும் இருக்கலாம்.

சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம். தாய்மொழி தவிர மற்ற மொழிகள் பேச, எழுத, படிக்க நமக்கு ஏன் சிரமமாக இருக்கிறது? ஏனெனில் நாம் முன்பு சொன்னது போல பிம்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த நாம் பயன்படுத்துவது நாம் பதித்த மொழியை. பிறகே அதை மற்ற மொழியில் மொழிபெயர்க்கிறோம்.

ஒரு மொழி நமக்கு சரளமாக வர வேண்டுமெனில் நாம் பதித்துள்ள பிம்பங்கள் மற்றும் உணர்வுகளின் வார்த்தைகளையும் அந்த மொழியில் இணைத்து (linked-list) மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும்

உதாரணத்துக்கு,

மழையின் பிம்பத்துக்கு "ரெயின்" என்று முதலில் கற்றவர் பின்பு தமிழில் அதன் சமான வார்த்தையான "மழை" என்பதை கற்கும் போது ( பிம்பம் => "ரெயின்" => "மழை") என்று மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும். பின்னொரு நாளில் அவர் தெலுங்கு கற்றால் அதன் சமான வார்த்தை "வர்ஷம்" எனத் தெரிய வரும் போது மீண்டும் ( பிம்பம் => "ரெயின்" => "மழை" => "வர்ஷம்" ) என்று மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாம் ஒரு மொழியில் பேசும் போது நேரடியாய் பிம்பங்களை அந்த மொழியிலேயே தொடர்புபடுத்திப் பேசுவோம். இதனால் மொழிபெயர்ப்பு நேரம் குறையும். மொழிபெயர்ப்பு நேரத்தை நாம் சரி கட்ட அடிக்கடி இடைவெளிகளில் உச்சரிக்கும் "ம்...", "ஆங்..." போன்ற அர்த்தமற்ற உளரல்கள் குறையும், பேச வந்த கருத்துதெளிவாகவும் சிறப்பாகவும் அமையும்

சரி. புதிதாய் ஒரு மொழியை கற்க என்ன செய்யலாம் ?

1) புத்தகங்களைப் படிக்கலாம்
2) இணைய தளங்களைத் தேடலாம் (உ.ம் தெலுங்கு கற்க http://sirigina.com/learn/ஐ நாடலாம்)
3) சிலகாலம் நண்பர்கள் வட்டாரத்தில் அனைவருமே அந்த மொழி மட்டும் பேசுபவர்களாக அமைத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு நீங்கள் பேசும் மற்ற ஏதேனும் ஒரு மொழி (உ.ம் ஆங்கிலம்) தெரிந்திருக்க வேண்டும்
4) அந்த மொழியில் வந்த திரைப்படங்கள், தொலைக்காட்சியை பார்க்கலாம்
5)அந்த மொழியில் வரும் திரைப்பட சுவரொட்டிகள், தினசரி/வார/மாத நாளிதழ்களைப் படிக்கலாம்

இப்படி எது செய்தாலும் மூளையில் நீங்கள் பதித்துள்ள பிம்பம்/உணர்வுடன் நேரடியாய் அந்த மொழியின் வார்த்தைகளை இணைத்து மறுபதிப்பு செய்ய வேண்டும்.

வலைப்பூ - பூச்சரம் - 2
Google Buzz Logo

கபாலி: ஏ வந்தனோம் வந்தனோம் வந்தஜனம் குந்தனோம் அடே தம்பி சந்தானம் அள்ளி குட்றா சந்தனம்.

பக்கிரி: இன்னா மாம்ஸூ! படா குஷியா கீற போல கீது!

கபாலி: பின்ன இன்னா பக்கிரி! டெய்லி டெய்லி வர்ஸொல்லொ புச்சு புச்சா தமிளு ஆளுங்கள பாக்றனா, மன்சு சந்தோசத்ல பீலிங்ஸ் ஆய்கிதுபா

பக்கிரி: இன்னா சொல்ற நீ! கொஞ்சம் பிர்யற மாறி சொல்பா

கபாலி: நம்ப ந. உதயகுமார் (குட்டிக் கதைகள் எய்துன அதே ஆளு தாம்பா இங்கிலிபீஸ்ல Stories and Parablesன்னு கூட எய்திகீறாரு) இல்ல? அவுரு கருத்துக்கள்BSNLஐ வாரு வாருன்னு வாரிகீறாரு

பக்கிரி: ஓ! நம்ம தமிளு சனங்களோட எணைய பக்கம் பத்தி சொல்றியா நீயி. இப்பிடிதான் குந்தவை கொடயப் பத்தி ஒரு கதைய கூட அழகா சொல்ல ஆரம்பிச்சி அப்டியே கடக்குதுபா

கபாலி: எதுனா பெர்சனல் வேல இர்க்கும்பா. அத்த வுடு
வைகை நதிக்கரையில்...ன்னு வைகை வர்லாறு சொல்லி கீறாரு வீரமணி இளங்கோ கவுன்ச்சியா நீயி

பக்கிரி: அப்பாலிக்கா
தோழனின் தும்மல் - தூறலில் நனைந்த தோழன் துவட்டமுன் தும்ம வருகிறான்னு ஆரம்பிச்சி எயுதுறாரு நம்ம தோழரு

கபாலி: குழவில வெடிகுண்டு தேசம்ன்னு ஆந்ரேயி சொல்ற விசியத்த படிக்க சொல்ல மன்சு கஸ்டமாவுதுபா

பக்கிரி: மேட்டர் தெர்யுமா உனுக்கு? நம்ப கண்ணன் ப்லாக்கர்லேந்து புதுசா கண்ணனின் வலைமொட்டுகள்க்கு வூடு மாறிட்டாரு பா

கபாலி: அப்பிடியா மேட்டரு இராஜ.தியாகராஜனின் தமிழிலக்கியப் பக்கம்ல இலக்கியம், டிஸ்க்கி, யுனிகோட் பத்தியெல்லாம் சொல்றாரு

பக்கிரி: பினாத்தல்கள்ல நம்ப சுரேஷ் பினாத்த ஆரம்பிச்சிட்டாரு. வீரப்பனுக்கு சில இரங்கல் கவிதைகள்ல அவரு அடிக்கிற லூட்டி செம டமாசு

கபாலி: காட்சியும், கனவும், எழுத்தும் மாறி மாறி வர்துன்றாரு சுந்தரவடிவேல். அந்தரத்தில் பந்தாடுற பொம்பள செலயோட போட்டோ சூப்பரு

பக்கிரி: அறுபத்தைந்தாம் கட்டம்ல செஸ் பத்தி விவாதிக்கறாரு கண்ணன் இராமநாதன்

கபாலி: அதே மாரி பங்குச் சந்தை பொங்கு தமிழில் பங்குச் சந்தை குறிப்புகள்ன்னு சூப்பரா இஷ்டாக்கு பத்தியெல்லாம் சொல்லித் தருது தமிழ்சசி

பக்கிரி: நெற்யோ பேரு எய்துராங்க! அல்லாமே சூப்பரா கீது. அல்லாம் பட்ச்சி பாக்கனும்னாக்க டையம் கெடிக்க மாட்து.

கபாலி: கரீக்ட்டா சொன்ன பக்கிரி!

வலைப்பூ - வின்டோஸ் குளறுபடிகள்
Google Buzz Logo

மைக்ரோசாப்ட் வின்டோஸ் பயன்படுத்துகிறீங்களா ?

புதுசா ஒரு கோப்பு உருவாக்கும் போது கீழ்க்கண்ட பெயர்களை அந்தக் கோப்புக்கு கொடுத்துப் பாருங்க

con, nul, aux, lpt1 ..... lpt9

வின்டோஸ், அந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு கோப்பிருப்பதாக சொல்லிவிடும்

இந்தச் சொற்கள் எல்லாம் வின்டோஸில் Reserved Key Words

ஆரம்பத்தில் எம்.எஸ். டாஸின் மெல் தான் வின்டோஸ் எழுதப்பட்டது (இன்றும் கூட என்பது ஒரளவு உண்மையே)

வின்டோஸ், மேற்கண்ட பெயர்களை ப்ரிண்டர் போன்ற Device களுக்காக பயன்படுத்துகிறது எனவே நமது கோப்புக்களுக்கு இந்தப் பெயர்களை வைக்க அது நம்மை அனுமதிப்பதில்லை


வலைப்பூ - ஊர்வலம் - 5
Google Buzz Logo

செஞ்சிக் கோட்டை



சுமார் எழுனூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த கோட்டை மூன்று மலைகளை சுற்றிவளைத்து நெடுந்துயர்ந்த கோட்டை சுவர்களுடன் நடுவில் ஊர் அமைத்து உருவாக்கப்பட்ட கோட்டை.



இந்தப்பகுதியிலுள்ள மலைகளின் அமைப்பை பார்த்தீர்களானால் ஆச்சர்யப்படுவீர்கள்! ஒரு பெரிய பாத்திரத்தில் உருண்டையான பாறைகளை எடுத்து கவிழ்த்து உருவாக்கியது போல இருக்கும்.

கோட்டைச் சுவருக்கு ஏழு வாசல்கள் உண்டு. கோட்டைக்குள்ளே, ஒரு புராதன மசூதியும், சிவன் கோயிலும் அருகருகே அமைந்து மத ஒற்றுமையை பறை சாற்றிக் கொண்டு இருக்கிறது



கோட்டையின் உள்வாசலில் நுழைந்து (கட்டணம் உண்டு) சற்றே நடந்தோமேயானால் தேசிங்கு மன்னனின் அரசவை மண்டபம் (புனரமைக்கப்பட்டது), ஒரு திருமண மஹால், சில தாணியக் கிடங்குகள், குளங்கள் (இன்னும் கூட தண்ணீர் உள்ளது - ஆனால் உபயோகத்திலில்லை) ஆகியவை இருக்கின்றன. இன்னும் சில புனரமைப்புகளை தொல்பொருள்த்துறை மேற்கொண்டுள்ளது.



எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தால் ஒரு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. மரத்தடி நிழலில் சற்றே இளைப்பாறிவிட்டு மலை மேல் ஏறிப்பார்க்கலாம் என ஆரம்பித்து செங்குத்தான நெடிய பாதையில் செல்ல ஆரம்பித்தோம். இடையிடையே இளைப்பாறினோம் - வழியில் எங்கும் தண்ணீரில்லை. ஒவ்வொருவருக்கு ஒன்னரை லிட்டர் என்ற அளவில் எடுத்து சென்ற தண்ணீர் மேலே ஏற மட்டுமே பயன்பட்டது. எதிரே கீழிறங்கிக் கொண்டிருந்த சிலர் இன்னும் கொஞ்ச தூரம் தான் என உற்சாகப் படுத்தி சென்றதால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம். எங்கும் ஆளரவமில்லை சுமார் 2 மணி நேரம் நடந்தபின் ஒரு கருவூலம், இரு தாணியக்கிடங்கு ஒரு பீரங்கித் தளம், ஒரு கோவில், ஒரு மணிக்கூண்டு ஆகியனவற்றைப் பார்த்தோம். மணிக்கூண்டில் ஏறிப்பார்த்தால் மூன்று மலைகளுக்கு இடையிலே கட்டப்பட்ட கோட்டைசுவரின் முழு அமைப்பு, செஞ்சி ஊர், கோட்டையின் உள்ளேயுள்ள அத்தனை இடங்களும் தெளிவாக இருந்தது. (இந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு மேலே ஏறி வரவேண்டுமா என்று தோன்றியது. உடன் வந்த நண்பர்கள் கடுப்பாகி திட்ட ஆரம்பித்தனர். எனவே, குடும்பம் குழந்தைகளோடு வருபவர்கள் மலை மேலே ஏறி சிரமப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்)




ஒரு வழியாக கீழிறங்கி கோட்டையின் உள் வாசலிலிருக்கும் தொல்பொருள்த்துறை அலுவலகத்துக்கு வந்தடைந்தோம். தண்ணீர் தாகத்தில் தவித்த எங்களுக்கு கோட்டை உள்வாசலருகே இருக்கும் கினற்று நீர் இனித்தது (நிஜமாகவே அது அவ்வளவு உப்பாக இல்லை குடிக்கவும் அங்குள்ளவர்கள் அதைத்தான் பயன்படுத்துவதாகக் கூறினர்).

பிறகு அலுவலகத்திலிருந்த ஒரு கடை நிலை ஊழியரிடம் பேசுகையில் அவர் தேசிங்கு ராஜனின் வரலாற்றை கூறினார். (அதில் முக்கியமானது, தேசிங்கு ராஜன் ரகசியக் கூட்டங்களை மலைமேலிருக்கும் ஒரு மண்டபத்தில் நடத்துவார் என்பதும். அதற்கு தேசிங்கு மற்றும் முதன்மை அமைச்சர்களும் நடந்தே மேலேறி வருவார்கள் என்பதும் தான், ஹூம்... அவர்கள் பலசாலிகள்)

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 6
Google Buzz Logo

ப்ரச்சனை

உங்க ப்ரச்சனைக்கு வருவோம். எது உங்க ப்ரச்சனை?

1) வேலை பளு
2) காதல் தோல்வி
3) சுயபட்சாதாபம்
4) பணம் இழப்பு
5) துனையில்லை

வேலை பளுவா? கொஞ்சம் கொறைவா வேல செஞ்சா ஒன்னும் போகாது, (பதவி/சம்பள உயர்வு, போனஸ் எல்லாம் கொறையும் பரவாயில்லை வாழத்தான் வேலை! வேலைக்கு வாழ்வில்லை)

காதல் தோல்வியா? உண்மையில வருத்தப்படவேண்டியது நீங்க இல்ல ஏன்னா உங்களை விரும்பாதவரைத்தான் நீங்க இழக்கப் போறீங்க. ஆனா அவுங்க? உயிருக்குயிரா நேசிச்ச உங்களை இல்ல இழக்க போறாங்க.

உங்களை யாரும் மதிக்கலையா? நீங்களே இப்படி சொன்னா எப்படி, உங்க பதவிக்கும் பணத்துக்கு ஆசப்பட்டா இவ்வளவு தூரம் படிக்கவச்சி ஆளக்கினாங்க? தாலி கட்டின ஒரே காரணத்துக்காக 20 வருஷத்துக்கும் மேல வசிச்ச வீடு, அப்பா அம்மா இவுங்களையெல்லாம் விட்டுட்டு உங்க மனைவி உங்களோட வந்தது கேவலம் பணத்துக்கும் பதவிக்கும்னா நெனக்கிறீங்க ?

பணம் போச்சா? அப்படின்னா உங்களால அவ்வளவு பணத்த திரும்ப சேக்கவே முடியாதா என்ன? முன் ஒரு முறை பணப் ப்ரச்சனை வந்தப்போ எவ்வளவு திறமையா சமாளிச்சிங்க! அந்த திறமை என்னாச்சி?

உங்களுக்கு யாருமே இல்லையா? நீங்க நெனக்கறது சரிதானா பாருங்க ? நம்ம ஒவ்வொருத்தருக்கும் உயிரயே விட தயாரா ஒருத்தர், ஆபத்துன்னா காப்பாத்த பத்து பேர், சிரிச்சா சிரிக்கவும், அழுதா அழவும் ஐம்பது பேர், நாம் மறைந்தால் வருத்தப்பட நூறு பேராவது இருக்காங்கன்னு ஒரு புள்ளி விவரத்துல சொல்லியிருக்கு. நல்லா தேடிப்பாருங்க, நாங்கல்லாம் இருக்கோமில்ல?

வாழத்தான் நமக்கு விதிக்கப்பட்டுள்ளது வாழ்வை என்று, எப்படி முடிப்பது என்பது நம் கையிலில்லை

நீங்க நெனச்சாலும் நூறு வருசத்துக்கு மேல வாழறது ரொம்ப கஷ்டம். அதனால கொஞ்ச நாள் வாழ்ந்து பாருங்களேன்

வலைப்பூ - அசைவப் பிரியர்களுக்கு
Google Buzz Logo

ஹலீம்

ரம்ஜான் நோன்பிருப்பவர்களுக்கு ஹலீம் ஒரு சிறந்த உணவு (பசி, சக்தி இழப்பு இரண்டையும் ஈடுசெய்யும்). இதன் செய்முறையை இங்கு பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:
300 கிராம் இறைச்சி (எலும்பில்லாதது)
200 கிராம் கோதுமை
3 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
10 பச்சை மிளகாய் (காரம் அதிகம் வேண்டுமெனில் இன்னும் சேர்த்துக்கொள்ளவும்)
2 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட் (அல்லது மசித்த பூண்டு)
2 தேக்கரண்டி இஞ்சி (பொடிப்பொடியாய் நறுக்கியது)
2 எலுமிச்சை
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
2 தேக்கரண்டி கறி மசாலா
உப்பு (சுவைக்கேற்ப)
கொத்துமல்லி/கறிவேப்பிலை (அலங்காரத்துக்கும் சுவைக்கும்)
4 தேக்கரண்டி சமையல் எண்ணை



செய்முறை:
1) கோதுமையைச் சுத்தப்படுத்தி 2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2) இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை வதக்கி அரைத்து பசை போல ஆக்கி அதில் இறைச்சியை சுத்தப்படுத்தி 1 மணிநேரம் ஊற வைக்கவும் (சற்று வினிகர் கிடைத்தால் சேர்க்கவும்)
3) ஊற வைத்த கோதுமை மற்றும் இறைச்சியை குக்கரில் 45 நிமிடத்துக்கு வேகவைக்கவும்
4) குக்கர் ஆவி அடங்கியவுடன் வெந்த இறைச்சி, கோதுமையை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
5) வாணலியில் எண்ணை ஊற்றி அடுப்பை SLM ல் வைத்து வெங்காயத்தை பொன் வறுவலாக தாளித்து, இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, உப்பு, கறி மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், பிறகு மிக்ஸியில் மசித்து வைத்துள்ள கோதுமை, இறைச்சி கலவையை வாணலியில் கொட்டி ஒரு கொதி வரும் வரை கிளறவும்.
6) அவ்வளவுதான்! சூடான ஹலீம் தயார். சூப் கப்புகளில் ஊற்றி கொத்துமல்லி கறிவேப்பிலை தூவி நறிக்கிய எலுமிச்சையோடு பரிமாறவும்.


பின்குறிப்பு: ஹலீம், அசைவப் பிரியர்களுக்கு சிறந்த சத்துள்ள உணவு என்ற அடிப்படையில் எனது இஸ்லாமிய நண்பனொருவன் கூறிய செய்முறை விளக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன். மதரீதியான கட்டுப்பாடுகள், முறைகள் எதையும் நான் அறிந்திலன் (நான் அசைவமல்ல எனவே இதன் சுவையையும் அனுபவித்ததில்லை. நன்றாக இருக்கும் என கேட்டு அறிந்ததே)

வலைப்பூ - ஊர்வலம் - 4
Google Buzz Logo

கோல்கொண்டா அற்புதங்கள்

கோல்கொண்டா கோட்டையின் அற்புதங்கள் பற்றி அனாமிகா மெய்யப்பன் அவர்கள் சிறப்பாக சொல்லியுள்ளதால் அவருக்கு சுட்டி கொடுத்துவிட்டேன்



மகாபலிபுரம்



மகாபலிபுரம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பஞ்ச பாண்டவர் ரதம், புலிக்குகை, அர்ஜுனன் தவம், என சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பூமி.

இங்குள்ள சிற்பிகள் வாழும் அற்புதங்கள், சிறிதளவே லாபம் (அல்லது மிகுந்த நஷ்டம்) என்றலும் கூட சிற்பம் தவிர பிற தொழில்களை நாடாமல் செய்துவரும் இவர்கள் கூறுவது சிற்பங்கள் வடிப்பது தவிர வேறு தொழில்கள் தெரியாது என்பதே.

உண்மைதான். ஒரு கலையை வாழ வைக்க அதைத் தவிர பிழைப்புக்கு வேறு வழியில்லாத ஆட்களால் மட்டுமே முடியும்.

மகாபலிபுர சிற்பங்களின் அழகை பறைசாற்றும் சில புகைப்படங்கள் இங்கே...
(பெரிய அளவிலான கோப்புகள் என்பதால் தனியே பதித்துவிட்டேன்)

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

வலைப்பூ - வர்ணஜாலம்
Google Buzz Logo

அன்பார்ந்த தமிழ்ச்சமூகமே!

இன்றையதினம் உலக வர்ணதினம்!




இந்த தினத்திலே அனைவரும்

கருப்பு சிந்தனைகளை விட்டொழித்து
வெள்ளை மனத்துடனும்
கொடுத்து சிவந்த கரங்களோடும்
இயற்கை வளமளித்த பசுமையோடும்
ஆகாய நீலம் போல் பரந்த நட்புடனும்
மஞ்சளின் மங்களத்துடனும்
அவரவர் விரும்பி ண்ம்
எண்ணியதெல்லாம் அடையும் வண்ணம்

மிகச் சிறந்த வண்ணமயமான வாழ்வு அமைய வாழ்த்திடுகிறேன்

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 5
Google Buzz Logo

உங்களுக்காக வாழுங்கள்

நமக்கு வாழ்நாள் எவ்வளவுன்னு யாருக்கும் தெரியாது

ஆனா நூறு வருஷத்துக்கு மேல இருக்கறவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான். நூறு வருஷம்னு வச்சிகிட்டாலும் இதுல தூங்கியே ஐம்பது வருஷத்த இழக்கறோம். அப்றம் காலைக்கடன் முடிக்கறதுல நாலு வருஷம், சாப்பிடுறதுல பன்னிரண்டு வருசம், படிப்புக்கு எட்டு வருஷம், வேலை செய்யுறதுக்கு மீதின்னு அப்படி இப்படின்னு பாத்தா நாம நமக்காக வாழ்ந்த காலம் ரொம்ப குறைவா இருக்கு

நாம நமக்காக வாழ்ந்த காலம்னா? அப்பாவுக்கு பிடிக்கும்னு நல்லா படிச்சதா? அம்மாவுக்கு பிடிக்கும்னு பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கறதா? இல்ல சிலருக்கு பிடிக்கும்னு சில விசயங்களை செய்யாம இருக்கறதா? இல்லன்னா சிலர் சில மாதிரி பேசிடக் கூடாதுன்னு செய்யுறதா?

இல்லவே இல்லை. யாரைப்பத்தியும் கவலைப்படாம, யாருக்கும் பிடிக்குமா பிடிக்காதான்னு பாக்காம. நம்ம இஷ்டப்பட்ட மாதிரி, நம்ம சந்தோசத்துக்காக இருக்குற காலம் தான் நாம நமக்காக வாழ்ந்த காலம்

நம்ம வாழ்நாள் எத்தனை முறை மூச்சு விட்டம்னு அளக்கப்படுறது இல்ல. சந்தோசத்துல எத்தனை முறை மூச்சடைச்சி நின்னோம்கிறதை வச்சித் தான் அளக்கப்படுது

நம்முடைய எண்ணங்கள் தான் நம்மை வாழ வைக்குது. எதை நினைக்கிறயோ அதுவாகவே ஆகிறாய். எதை விரும்புகிறாயோ அதையே அடைகிறாய் அப்படின்னு பெரியவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க

அதனால

நமக்காக வாழ்வோம்! நலமாய் வாழ்வோம்!

வலைப்பூ - பூச்சரம் - 1
Google Buzz Logo

வில்லுப் பாடகர்: தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா! வில்லினில் பாட ..

வலைப்பதிவாளர் சமூகத்திலே சமீபத்தில் பூத்த சில மலர்கள் பற்றி இன்றைய வில்லுப்பாட்டுல பேசப் போறோம்.

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: வெண்பாப் பதிவுல சொ. மணியன் அவருக்கு தெரிந்த உலகத்தை அவருக்கு தெரிந்த வெண்பாவுல சொல்லுறாரு. வலைப்பதிவுலகத்தில இது ஒரு புது மாதிரி முயற்சி!

குழு:ஓஹோ!

வில்லுப் பாடகர்: குட்டிக் கதைகள்ல ந. உதயகுமார் சின்னச் சின்ன நீதிக்கதைகளை சொல்லி வருகிறார். குழந்தைகளோட படிக்கனும் நாமெல்லாம்!

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: ஒரு மாசமா சிக்கல் செஞ்சுக்கிட்டு இருக்கிற montresor (அப்படின்னா என்னங்க?) சில சமயங்கள்ல (அந்துமணியின் முட்டாள்தனமான வாரமலர் உளறல்கள் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.) சூடான விவாதத்துக்கான சிக்கலை ஏற்படுத்துறாரு

குழு:அப்படியா!

வில்லுப் பாடகர்: கோமானின் எழுத்துக்கள்ல தன்னோட தாத்தா எழுதிய கட்டுரைகளை எழுத்து மாறாம பதித்துள்ள கோமான், திவ்விய பிரபந்தம்லயும் கலக்கியிருக்காரு. இலக்கிய ஆர்வமுள்ளவங்க எல்லாருக்கும் ஒரு விருந்து

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: கனாக் காணுங்கள்னு சொல்லி கவிதைகளை பதிச்சிகிட்டு இருக்கிறாரு "புதிய கனா". புலத்தில் ஆவணப்படுத்தப்படாமல் உள்ள படைப்புக்களை அடையாளங்காண்பதும் முடிகிறபோது பதிப்பிக்க முனைவதையும், நோக்கமாகக் கொண்டது 'கனா' என்கிறாரு.

குழு:ஓஹோ!

வில்லுப் பாடகர்:
நியூக்ளியஸ் வலைப்பதிவு உருவாக்குவதெப்படி?ன்னு நிகழ்வுகள் சொல்லித் தருது.

குழு:பிரமாதம்!

வில்லுப் பாடகர் & குழு:இந்த புதுப் பூக்களை வரவேற்று நல்ல ஒரு வில்லுப்பாட்டு பாடலாம் எல்லாரும் சேந்து பாடுங்க ... தரிகிட தரிகிட தோம்... தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா! வில்லினில் பாட .....


அப்பாடா! ஒரு வழியா ப்ருந்தாவனத்துல இத்தோட சேத்து அரை சதம் (50 பதிவுகள்) அடிச்சாச்சி

வலைப்பூ - ஊர்வலம் - 3
Google Buzz Logo

ஸ்ரீசைலம் பாதாள கங்கை


ஸ்ரீசைலம் அணைக்கட்டு மற்றவைகளிலிருந்த வித்யாசமானது. எவ்வாறெனில் இந்த நீர்த்தேக்கத்தில் நீர் தேங்கியிருப்பதைப் பார்க்க மக்கள் வருவது மலைமேலிருந்து கீழிறங்கி (சுமார் 650 அடிகள்) பாதாள கங்கை என்ற இடத்திற்கு

ஆம்! ஊர் மலை மேலே உள்ளது, அணைக்கட்டு மலையடிவாரத்தில்.


சுற்றிலும் இயற்கை வளம் கொழிக்கும் காட்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கெங்கு காணினும் தண்ணீர்! தண்ணீர்!



அணைக்கட்டினை சுற்றிப்பார்க்க, பாதாள கங்கையிலிருந்து விசைப்படகு சவாரியை ஆந்திர அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ளது. ரோப் கார் (இதுக்கு தமிழ்ல என்னங்க?) வடிவமைத்து வருகிறார்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும்.

இங்கு ஊருக்குள் உள்ள சில கடைகளில் மரத்தாலான பொம்மைப் பாம்புகள் விற்கிறார்கள், அவை நெளிவதைப் பார்த்தால் நிஜமான பாம்புகள் பொலவே (பயமாக) இருக்கிறது

இங்குள்ள சிவன் கோவில் இந்துக்களின் முக்கிய சிவஸ்தலங்களுள் ஒன்று


வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 4
Google Buzz Logo

உடல் ஒரு அற்புதக் கருவி

நம்மையும் நமது எண்ணங்களையும் செயல்படுத்தி உயிருள்ளவரை நம் மனதையும் உள்ளடக்கி நம்மை வெற்றியடையச் செய்வது நமது உடல். அதனைப் பேணிக்காக்க நாம் அக்கறை எடுத்துள்ளோமா?

சரி பேணிக் காப்பதிருக்கட்டும் குறைந்தபட்சம் அவை என்ன சொல்கிறது என்றாவது உணர்ந்திருக்கிறோமா? உடலை உணர்வது எப்படின்னு இன்னைக்கு பாக்கலாம்,

காற்றோட்டமான அறையில் காலை நீட்டி கண்களை மூடி மால்லாந்து படுத்துக்கங்க. மெதுவாக முழு நுரையீரலும் நிரம்பும் அளவுக்கு மூச்சை இழுங்கள் இழுக்கும்போது நுரையீரலின் பரிமாணத்தை உணருங்க. மெதுவாக முழு நுரையீரலிலிருக்கும் காற்றையும் வெளியிடுங்க. இன்னொரு முறை இதே மாதிரி செய்யுங்க இந்த முறை நுரையீரலின் சத்ததை உணருங்க. மூனாவது முறை இதே மாதிரி செய்யும் போது நுரையீரலில் பாயும் ரத்த ஓட்டத்தை உணருங்க.

அடுத்ததா இதேபோல மூச்சு விடும்போது இரைப்பையை உணருங்க, இதேபோல அடிவயிறு, இடுப்பு, முதுகு,இடது கை,இடது கால்,வலது கை, வலது கால், தலை என ஒவ்வொன்றாக உணருங்கள்.

நீங்க பயன் படுத்துற வாகனங்களை வாரம் ஒருமுறையேனும் பேணி காக்கறீங்க. நாளுக்கு ஒருமணி நேரம் ஓட்டும் வாகனத்துக்கே இவ்வளவு கவனிப்புன்னா எப்பவும் பயன் படுத்திக்கிட்டிருக்கிற உடலுக்கு வாரம் ஒரு முறை இந்த பயிற்சிய செய்ய மாட்டிங்களா என்ன?

சில வார பயிற்சிக்கு பின் உடலில் சில பகுதிகளில் பிரச்சனைகளிருந்தால் மருத்துவரிடம் சென்று பார்க்கும் முன்னரே உங்களாலேயே உணர முடியும்

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க

பயிற்சி விளக்கம்: நம் மனத்தில் சில உணர்வுகள்(உ.ம்: துக்கம், ஆச்சர்யம், மிதமிஞ்சிய மகிழ்ச்சி) இருக்கும் போது நாம் சரியான அலகில்(unit) மூச்சு விடுவதில்லை, இது நாள்பட நாள்பட நமது உடல் நலத்தை பாதிப்பதோடல்லாமல் நாம் மூச்சு விடும் முறை(pattern)யையே மாற்றிவிடுகிறது. இந்தப் பயிற்சி நம் மூச்சை சீராக்கப் பயன்படும்

வலைப்பூ - சோதிடம் + வானவியல் + ஒரு கேள்வி
Google Buzz Logo

வானவியலில் உள்ள அத்தனை கிரகங்களும் சோதிடத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆச்சர்யப்படவைக்கும் உண்மை என்னவென்றால், அவற்றின் சுற்றுக் காலங்களும் சோதிடத்தில் சரியாக பயன்படுத்துவதே

உதாரணத்துக்கு,

பன்னிரு ராசிகளையும் வியாழன் (குரு) ஒருமுறை கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் சோதிடத்தில் பன்னிரு வருடங்கள் வானவியல் கண்டுபிடித்தது 11 வருடமும் 314.96 நாட்களும்.

சூரியன் பன்னிரு ராசிகளையும் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு 1 வருடம். சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க பூமி 1 வருடம் எடுத்துக் கொள்கிறது.

சந்திரன் பன்னிரு ராசிகளையும் கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. ஒருமுறை சுற்றி முடிக்க பூமி 1 வருடம் எடுத்துக் கொள்கிறது.

அதே போல ஒவ்வொரு மாத்திற்கு ஒரு சிறப்பு நட்சத்திரமுண்டு,

தைப்பூசம், மாசி மகம், ஆவனி அவிட்டம், இப்படி, மாதத்தின் சிறப்பு நட்சத்திரங்கள் வரும் நாட்கள் அனைத்தும் பௌர்னமி தினங்களே! இந்த ஒற்றுமை ஆச்சர்யமூட்டுகிறது

வானவியல் நிகழ்வுகளின் போது பாதிக்கப்படும் கிரகங்கள் சோதிடத்திலும் அதன்படியே எழுதப்பட்டிருக்கின்றன. (உ.ம் ஷூ மேக்கர்/லேவியால் வியாழன் கிரகம் பாதிக்கப் பட்ட போது சோதிடத்தில் குருவின் ஆதிக்கத்திலிருந்தவர்களுக்கு தீய பலனகள் சொல்லப்பட்டது (நடந்ததா என்பது வேறு விஷயம்)

ப்ருஹுத் ஜாதகா, ப்ருஹுத் சம்ஹிதா போன்ற சோதிடக்கலை சம்பந்தப்பட்ட நூல்களில் பூகம்பம், வறட்சி, போர், மழை போன்றவை வர சாத்தியமான கிரக அமைப்புகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டுள்ளது

இது போலவே சோதிடத்திலும் வானவியலிலும் உள்ள ஒற்றுமைகளைக் கூற இன்னும் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்

சோதிடம் உண்மையா? பொய்யா? சோதிடர்கள் பொய்யர்களா? இதெல்லாம் எனக்குள் எழும் கேள்விகளல்ல

ட்ரில்லியனுக்கு அப்பால் ஒரு எண் வந்தால் அதை என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்று தெரியாதவர்கள் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்த வானத்து நட்சத்திரங்கள், ராசி மண்டலங்கள், கிரகங்கள் அவற்றின் சூரியனைச் சுற்றும் கால அளவுகள், ஆகியவற்றைத் தொலைநோக்கி போன்ற வசதிகள் ஏதும் இல்லாத காலத்திலேயே துல்லியமாக கணக்கிட நமது சோதிட மேதைகளால் எப்படி முடிந்தது?

வலைப்பூ - மேலாண்மை
Google Buzz Logo

ஒரு மேலாண்மைக் கல்லூரியின் நுழைவுத் தேர்விலே கேட்டப்பட்ட கேள்வி:

ஒரு பெரிய ஆற்றின் நடுவில் துடுப்புப் படகில், நீங்கள், உங்கள் நண்பர், உங்கள் தாய் மற்றும் உங்கள் மனைவி/கணவர் எல்லோரும் இயற்கையை ரசித்தபடி சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஆற்று வெள்ளம் அதிகரித்து படகு அதில் கவிழ்ந்து விடுகிறது. தண்ணீரில் விழுந்து தத்தளிப்போரில் நண்பர்,தாய்,மனைவி/கணவர் யாருக்கும் நீந்தத் தெரியாது உங்களுக்கு மட்டுமே நீந்தத் தெரியும். ஆனால் கரைக்கும் உங்களுக்குமான தூரத்தைப் பார்த்தால் உங்களோடு யாரேனும் ஒருவரை மட்டுமே நீங்கள் காப்பாற்ற முடியும்.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புவீர்கள்? ஏன்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் பதியுங்கள்

அந்த மேலாண்மைக் கல்லூரி எதிர்பார்த்த பதிலை சில மணித்துளிகளில் பின்னூட்டத்தில் பதிக்கிறேன்

(என்ன? பதிலை இப்பவே சொல்லனுமா ? சினிமால மட்டும் டாக்டருங்க கண்ணாடிய தொடச்சிகிட்டு "எதையும் 24 மணி நேரத்துக்கப்றம் தான் சொல்ல முடியும்"னு சொன்னா ஏத்துக்கறீங்க? அட கொஞ்ச நேரம் பொறுங்க! )

வலைப்பூ - ஊர்வலம் - 2
Google Buzz Logo

நாகார்ஜுன சாகர்




பொதுவாக அணைக்கட்டு என்பது இரு மலைகளுக்கு இடையில் நீர்வீழ்ச்சியிலிருந்து சற்று தொலைவில் ஆர்ப்பரித்து வரும் நீர் சமாதானமாய் தேங்க தயாராகும் இடத்தில் கட்டப்படும்.



நாகர்ஜுன சாகர் இந்த வகை அணைக்கட்டுகளிலிருந்து சற்றே மாறுபட்டும் நீர்வீழ்ச்சியின் வெகு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.




நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும் நீர்வீழ்ச்சிக்கு அருகே முதலைகள் உலாவுவதை தொலைவிலிருந்தே பார்க்க முடிவதால் வாழ்வின் மேல் ஆசை கொண்டு மேற்கொண்டு செல்லவில்லை





சாகர் என்று ஏன் சொல்கிறார்கள் என அங்கு சென்ற பிறகே தெரிந்தது. அப்பப்பா! எவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு! நாங்கள் சென்ற போது அணை ஏறகுறைய நிரம்பியிருந்தது. அங்கிருந்த அரசு ஊழியரை விசாரித்ததில் ஆண்டு முழுவதுமே தண்ணீர் ஓரளவு நிரம்பியே இருக்கும் என சுந்தரத் தெலுங்கில் செப்பினார்

(மேட்டூர் அணையின் பதினாறு கதவுகளைத் தாண்டி உபரி நீரை வெளியேற்றும் காட்சியை மிகச்சிறுவனாய் இருக்கையில் பார்த்த நினைவு... ஹும்....)




பசுமையான இந்த இடத்தைப் பார்த்த பிறகு ஆந்திரத்தை ஏன் வறன்ட மாநிலம் என்கிறார்கள் எனத் தோன்றிற்று (பிறகு அங்கிருந்து ஹைதராபாத் வரும் வழியெல்லாம் பார்த்ததும் அந்த சந்தேகம் விலகியது)

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 3
Google Buzz Logo

ஜோதியில் போகி

குற்ற உணர்வா இருக்கா? தப்பு செஞ்சுட்டம்னு தோனுதா, அப்படி செஞ்சிருக்க கூடாதுன்னு தோனுதா?

இதிலிருந்து விடுபட இன்னிக்கு நாம கத்துக்கப் போறது எளிய முறை தியானம்

காற்று பலமா வீசாத அறையில சுகாசனத்துல(சப்பனமிட்டு) உக்காருங்க. எதிர்ல ஒரு விளக்கையோ மெழுகுவர்த்தியையோ ஏத்தி வையுங்க. கொஞ்ச நேரம் எரியும் ஜோதியைப் பாருங்க! அந்த வெளிர்மஞ்சள் நிறம், அதனுள் ஆரஞ்சு நிறம், இன்னும் உள்ளே சற்று வெளிர் நிறப் புள்ளி அதனுள் திரியின் கருமை அதன் கீழே நீல நிற அடிப்புறம். ஆஹா! இந்த சிறு சுடர்தான் எத்தனை அழகு! அப்பப்பா!

சரி இப்ப லேசா கண்ணை மூடுங்க. நீங்க கொஞ்ச நேரம் முன்னாடி ரசிச்ச சுடரின் பிம்பம் இப்ப தெரியுதா? நீங்க செஞ்ச தவறுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும் விசயத்தை ஒரு பேப்பரில் எழுதி அந்த பிம்பத்தில் போடுவதாக கற்பனை செய்யுங்க!

உங்க கற்பனையில் அந்த பேப்பர் கொஞ்சம் கொஞ்சமா சுடரில் கரைந்து மறையும். வ்விஷ்ஷ்.... அவ்வளவுதான் நீங்க செஞ்ச அந்த தப்பு மறைஞ்சி போச்சு! இப்படி உங்க குற்ற உணர்வுக்கு காரணமான எல்லா தப்பையும் மறைய வைய்யுங்க.

எல்லாம் முடிஞ்சதா! இப்ப கண்ணை திறங்க! சுடர் அனைந்திடாவிட்டால் அனைத்துவிட்டு அறையை விட்டு வெளிய வாங்க. இப்ப நீங்க செஞ்ச தப்பெல்லாம் உங்களை விட்டு போயாச்சி!

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க

வலைப்பூ - தொடர்புகளும் வலைகளும்
Google Buzz Logo

இந்த அவசர யுகத்திலே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது எத்தனை சிறப்பாக அமைகிறதோ அதைப் பொருத்தே அவர்களிருவருக்குமான உறவும் அமைகிறது

உதாரணத்துக்கு பணியிடத்திலே நீங்கள் உங்கள் மேலதிகாரியிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம், நீங்கள் நினைப்பதை மிகச் சரியாக உங்கள் மேலதிகாரி புரிந்துகொள்ளும்படி நீங்கள் வெளிப்படுத்தினால் தான் உங்கள் பணி சிக்கலேதுமில்லாமல் நடக்கும். உங்கள் மேலதிகாரிக்கும் உங்களுக்குமான உறவு, முற்றிலும் நீங்கள் அவரிடத்தில் தொடர்பு கொள்ளும்போது எவ்வாறு பேசுகிறீர்கள் என்பதைப் பொருத்தே அமையும். மேலதிகாரிக்கும் உங்களுக்குமான உறவு, பணியிடத்தில் உங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரி. இப்போது ஒருவரிடம் தொடர்பு கொள்ளும்போது எவ்வாறெல்லாம் பேசக்கூடாது என்பதைப் பார்ப்போம்

விவாத வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் "சரிதான், ஆனா" என்று ஆரம்பிக்கிறீர்கள் என்றால் "விவாத வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். உங்கள் விவாதம் சரியான ஆதாரங்களுடன் இல்லாத போது அது மற்றவருக்கு எரிச்சல் மூட்டுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மீதான மதிப்பையும் குறைக்கும்

ஒப்பீட்டு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இதேமாதிரி ஒரு முறை எங்க ஊருலகூட ஒருத்தனுக்கு நாக்கு வெளிய வந்து விழுந்துச்சிபா" என்றால் நீங்கள் "ஒப்பீட்டு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இதனால் ஒருவருக்கு நீங்கள் ஆதரவாய் பேசுவதாய் நீங்கள் நினைத்தாலும் அது அவருக்கு எரிச்சலூட்டுவதாகவே அமையும்

பரவாயில்லை வலை:உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இது பரவாயில்லைப்பா எனக்கு ஒரு முறை சளி பிடிச்சி மூக்கு சிந்தும்போது மூக்கே கழண்டு விழுந்துடுச்சி. அப்றம் 10 தையல் போட்டு ஒட்ட வச்சாங்க" என்றால் நீங்கள் "பரவாயில்லை வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். எதிராளியைவிட நாந்தான் பெரியவன் என்று மார் தட்டிக் கொள்வதால் நீங்கள் சாதிப்பது ஏதுமில்லை மாறாக உங்களை அது பாதிப்பதே அதிகம்

பழங்கதை வலை:உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இப்படித்தான் 1946ல" என்று ஆரம்பித்து சம்பந்தமே இல்லாமல் உங்கள் பழங்கதையை பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் "பழங்கதை வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இப்படிப் பேசுறதுனால பெரிய பாதிப்பு ஒன்னுமில்லை, என்ன அடுத்தவாட்டி உங்க தலை தெரிஞ்சாவே அவனவன் தலைதெறிக்க ஓடுவான்

அபிப்ராய வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இப்படி நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும் அவன் இருமும்போது எப்பவுமே நாக்க தொங்கப் போட்டுட்டு தான் இருமுவான் அவன்லாம் உருப்படமாட்டான்" என்றால் நீங்கள் "அபிப்ராய வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். அவருக்கு ஆதரவாப் பேசுறதா நீங்க நெனைக்கலாம். ஆனா அவர் உங்களை ஒரு கோள்மூட்டும் நபராகவே பார்ப்பார்.

குறுக்கீட்டு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து.. " என்று பேசிக்கொண்டிருக்கும் போதே சம்பந்தமில்லாமல் குறுக்கிட்டு "மீனுக்கு நாக்கு இருக்குதா இல்லையா" என்றால் நீங்கள் "குறுக்கீட்டு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இது சம்பந்தப்பட்டவரை மற்றுமின்றி எல்லோரையும் எரிச்சலடையச் செய்யும்

குற்றச்சாட்டு வலை/சுயபட்சாதாப வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "எனக்கு கூட சளி இருக்கு ஒருத்தனுக்கும் என்னைப் பத்தி கவலையில்லை" என்றால் நீங்கள் "குற்றச்சாட்டு வலை/சுயபட்சாதாப வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இப்படியே பேசிக்கிட்டிருந்தா பழங்கதை வலைல ஆன மாதிரி அடுத்தவாட்டி உங்க தலை தெரிஞ்சாவே அவனவன் தலைதெறிக்க ஓடுவான்

கிசு கிசு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதைக்கேட்டுக் கொண்டு வந்து பிறகு பல பேரிடம் ரகசியமாக (சம்பந்தமில்லாதவரிடம் கூட) கூறுகிறீர்கள் என்றால் நீங்கள் "கிசு கிசு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இருக்கறதுலயே மோசமான வலை இதுதான். கிசு கிசு பேசுறவங்களை நண்பன் எதிரி ரெண்டு பேருமே விரும்பமாட்டார்கள்

இப்படி எந்த வலையிலும் சிக்காமல் ஒருத்தரிடம் பேசி நம்ம சொல்லவந்த விஷயத்தை சரியாகச் சொன்னால் தொடர்புகளையும் நட்புகளையும் எந்தச் சிக்கலுமில்லாமல் நடத்திச் செல்லலாம்

(என்று சொன்னாலும் எந்த வலையிலும் சிக்காமல் இதுவரை என்னால் இருக்க முடியவில்லை. எந்த வலையிலும் சிக்காத யாராவது இருக்கீங்களா?)

வலைப்பூ - ஊர்வலம் - 1
Google Buzz Logo

ஹொகேனக்கல் - புக்ககம் பாயும் காவிரி



பிறந்த வீடான கர்னாடகத்திலிருந்து புகுந்த வீடான தமிழ்நாட்டுக்கு காவேரி வலது காலெடுத்து பொங்கிப் பாய்ந்து ஓடிவரும் இடம் தான் ஒகேனக்கல். (அரசியல்வாதிகளால் காவேரிக்கு வேறு அர்த்தம் ஆகிவிட்டதாலேயே இந்த அறிமுகம்)

நீர்வீழ்ச்சியைச் சுற்றி புகை போல நீர்ச்சாறல் தெரிப்பதனாலேயே ஹொகேனக்கல் (கன்னடத்தில் ஹொகெ என்றால் புகை) எனப் பெயர் வந்தது. நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு குளிக்கும் ஆசை வரும்.



ஆயில் மசாஜ் இங்க ரொம்ப பிரபலம். ஆயில் மசாஜ் செய்வதானால் அரசாங்க அனுமதி பெற்றவரிடம் செய்துகொள்ளுங்கள். காசு குறைவு என கண்டவர்களிடம் மசாஜ் செய்து அப்றம் அங்க வலிக்குது இங்க வலிக்குது அப்பிடின்னு கத்த வேண்டாம்.

நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.




குளித்து முடித்து பசிக்கிறதா? அசைவப் பிரியரானால் வகை வகையாய் சுவையான மீன்கள் சாப்பிடலாம். சைவமானால் வரும்போதே சமைத்து எடுத்துவருவது நல்லது (ஒன்றிரண்டு சைவ ஓட்டல்கள் இருக்கின்றன ஆனால் அவ்வளவாக ருசிக்காது)



சரி சாப்டாச்சா, வாங்க ஒரு சுத்து சுத்திப் பாத்துட்டு வரலாம். இங்க பாக்க வேண்டிய இடம்னா

1) தேசிய முதலைப் பண்ணை,
2) பாலம் தாண்டிப் போய் கர்னாடகப் பக்கத்தில் பார்த்தால் தெரியும் (குளிக்க முடியாத அளவிற்கு வேகம் அதிகமான) நீர்வீழ்ச்சிகளின் முழு அழகு,
3) நீர்வீழ்ச்சிக்கருகே சென்று பார்க்கும் பரிசல் பயணம் (மிக ஆபத்தானது தவறி விழுந்தால் உயிர் பிழைப்பது கடினம். நீந்தத் தெரிந்தாலும் தப்பிக்க முடியாது காரனம்: ஆழம், சுழல், முதலைகள்)

காலைல பெங்களூரிலிருந்து கிளம்பினீங்கன்னா ஒரு வழியா எல்லாம் முடிச்சப்றம் கொஞ்சம் காவேரிக் கரையில ஓய்வெடுத்துட்டு மாலைச் சூரியன் மறைந்த பிறகு பெங்களூர் திரும்பலாம் (பெங்களூரிலிருந்து சுமார் 180 கி.மீ).

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 2
Google Buzz Logo

கடவுளே நீ எங்க இருக்க

நம்ம எல்லாருக்கும், எல்லா மதத்தினருக்கும் ஒரு தீராத சந்தேகம்! கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்?

இதுக்கு ஒரு சின்ன கதை

கடவுள் இந்த உலகத்தையும் மனிதனையும் இன்ன பிற ஜீவராசிகளையும் படைத்தார் என எல்லா மதநூல்களும் சொல்கின்றன. அப்படி கடவுள் மனிதனைப் படைத்த போது அவனுக்கு ஒரு வரம் கொடுத்தாரு. "நான் இருக்குமிடத்தினை மனதில் நினைத்து அழைத்தால் வருவேன்". அப்படின்னாரு. நம்பாளு என்னா பண்ணான், ஆ ஊன்னா கடவுளை கூப்பிட ஆரம்பிச்சான். உச்சா போக முடியலையா? கடவுள கூப்பிடு கக்கா போக முடியலையா? கடவுளக் கூப்பிடு.

கடவுளும் கஷ்டம் பாக்காம அவன் கூப்பிட்டப்பல்லாம் வந்துகிட்டிருந்தாரு. அப்படியும் விட்டானா நம்ப ஆளு? கூப்பிட்டா வர்றத்துக்கு கொஞ்சம் நேரமானா கூட திட்ட ஆரம்பிச்சான்.

பார்த்தாரு கடவுள், இவனால கண்டுபிடிக்கவே முடியாத இடத்துல பொய் தங்கிட்டாத்தான் நிம்மதின்னு யோசிச்சாரு. மனுஷன் மனசுதான் அவன் நினச்சிப் பாக்காத இடம்னு முடிவு பண்ணி அங்க போய் தங்கிட்டாரு.

மனுஷன் அதுக்கப்றம் கடவுள் எங்க இருக்காருன்னு நெனச்சாலும் தப்பாவே ஆச்சி. அவன் தான் மனசப்பத்தி நெனச்சிப் பாக்றதே இல்லையே. இப்பவும் மனசுக்குள்ள இருக்குற கடவுள கண்டுபிடிச்சி கூப்பிட்டவங்களுக்கு அவர் வந்து உதவுறாருன்னு ஒரு பேச்சி இருக்கு

உங்க மனசுல இருக்குற கடவுளப்பத்தி எப்பவாவது நெனச்சதுண்டா?

என்னது கடவுள் உங்க மனசுல இருக்காரான்னு சந்தேகமா இருக்கா?

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க !

உதறித் தள்ளுங்க

எப்பவாச்சும் ரொம்ப மன அழுத்ததோட இருக்கும் போது அதிலிருந்து விடுபட ஒரு எளிய பயிற்சி

உங்களை தனிமை படுத்திக் கொள்ளுங்கள்

மீனவன் வலை வீசுவதைப் பாத்திருக்கீங்களா? "ஹூம்" என்றபடி இரு கைகளையும் பலம் கொண்ட மட்டும் அதைப் போல காற்றில் வீசுங்க (எது மேலயும் இடிச்சிடாம பாத்துக்கங்க கை கழன்டு போற மாதிரி இல்லாம ஒரளவு மிதமான வேகத்தோட வீசுங்க)

இப்படி வீசும் போது உங்களை விட்டு இரு விஷயங்கள் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்க. ஒன்னு ஈகோ என்னும் ஆணவம், இன்னொன்னு உங்க மன அழுத்தம். இப்படி மூனு-நாலு முறை செய்யுங்க

சரி இப்ப எல்லாம் உங்களை விட்டு மன அழுத்தமும் ஈகோவும் போயிடுச்சி இல்லயா? ஈகோ இல்லாம எல்லாரோடவும் போய் பழகுங்க

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க!

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க !

வலைப்பூ - மொழிப் போர்
Google Buzz Logo

எங்கள் நிறுவனம் பல்வேறுபட்ட மொழி/மாநில/நாடு சார்ந்த சமூகத்தினர் பணிபுரியும் இடம். தகவல் பறிமாற்றத்துக்கென ஒரு மின்னஞ்சல் குழு உண்டு. சில சமயங்களில் இந்த மின்னஞ்சல் குழுவில் சிலர் சர்ச்சைக்குறிய விஷயங்களை மின்னஞ்சலில் அனுப்ப, அதை ஆதரித்தும் எதிர்த்தும் பூகம்பங்கள் கிளம்புவதுண்டு. அப்படி சமீபத்தில் நிகழ்ந்த பிராந்திய மொழிகள சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் போரை கீழே தமிழ் படுத்தியுள்ளேன்

ஆனந்த்:"ஜீ-மெயில்" மின்னஞ்சல் அழைப்புகள்
மக்களேய்...
என்னிடம் சில "ஜீ-மைல்" மின்னஞ்சல் அழைப்புகள் உள்ளன... தங்களுக்கு தேவைப்பட்டால் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்... மீதம் இருந்தால்... உடன் அனுப்பி வைக்கிறேன்..
அன்புடன்...
ஆனந்த்
(ரோமனைஸ்ட் தமிழ்/ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் இது மட்டுமே, மற்றவை அனைத்தும் ஆங்கிலத்தில் வந்தவை)

ரவி மகேந்திரா: ஆனந்த் உங்கள் தமிழ் பற்றுக்கு பாராட்டுக்கள். ஆனால் இத்தகைய மின்னஞ்சல்களை தகவல் பறிமாற்று மின்னஞ்சல் குழுவுக்கு அனுப்பாதீர்கள், தமிழர் தவிர மற்றவரும் இக்குழுவில் உண்டு

பவன்குமார் நாகராஜூ: இது போன்ற மின்னஞ்சல்களை நம் குழுவிற்கு அனுப்பாமல் இருப்பதே நல்லது. புரியாத மொழியில் ஒரு மின்னஞ்சல் வருவதை நீங்கள் கூட விரும்ப மாட்டீர்கள் ஆனந்த்

கோபி: பவன்/ரவி சொன்னதை நான் வழி மொழிகிறேன். முன்பு சற்று "மராத்தி கோஸ்ட்" பற்றி வந்த மின்னஞ்சல் கூட மராத்தி அறியாதவர்க்கு புரியாது

கார்த்திக்: கோபியை நான் வழி-வழி (இல்லைன்னா வேற எதுவோ அதை) மொழிகிறேன். பாமர ஜனங்களுக்கு புரிய ஆனந்தின் மின்னஞ்சலை இந்திப் படுத்தியுள்ளேன்...... (இந்தியாக்கம்)

அனுராக்: "மக்களேய்!", "அன்புடன்", இதுக்கெல்லாம் இந்தில என்னான்னு நீங்க சொல்லலை கார்த்திக்

கார்த்திக்: ஐய்யையோ, அதுக்கு அர்த்தம் சொன்னா என்னை வேலைய உட்டு தூக்கிடுவாங்க, தனியா வாங்க உங்களுக்கு மட்டும் சொல்றேன் (சும்மா உலூலுவாக்கு சொன்னேன், மக்களேன்னா இந்தில (இந்தியாக்கம்)., அன்புடன்னா இந்தில (இந்தியாக்கம்).)

அநிர்பன்: ஏய் யாருப்பா அது! இந்தியாவிலுள்ள அனைவருக்கும் புரியற மாதிரி அனுப்புங்கப்பா

ஜகன் பிரசாத்:தயவு செய்து ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பாதீர்

ஆனந்த்: மன்னிக்க, "ஜீ-மெயில்" அழைப்புகள் சிலவே என்னிடம் இருந்தன, குறைந்த அளவு மக்களுக்கு மட்டுமே என் செய்தி சென்றடைய வேண்டும் என தமிழில் அனுப்பினேன். தவறு என்றால் எல்லாரும் அதை செய்வதை நிறுத்தனும். கொஞ்சம் முன்னாடி அனுப்பப்பட்ட கன்னட ஜோக், மராத்தி பிசாசு, தெலுங்கு கவிதை, இந்தி செய்தி இதெல்லாம் பரவாயில்லையாம், தமிழ்ன்னு வரும்போது எல்லாருக்கும் ஏன் இப்படி பொத்துகிட்டு வருதுன்னு தெரியலை :-(

பரேஷ்: ஏப்பா ஆனந்த்! எதுக்கு வீனா ப்ரச்சனைய கிளப்புற, உனுக்கு வேனும்னா தமிழ் தகவல் பறிமாற்றக் குழு வச்சிக்க, பொதுவுல இப்படி அசிங்கம் பண்ணாத

பார்த்தசாரதி: ஒரு பொதுவான குழுவுல தமிழனுக்கு மட்டும் நல்லது பண்ணுவேன்னு சொல்றது சரியில்ல ஆனந்த். சக தமிழனா இதுக்காக வெட்கப்படுறேன் வேதனைப்படுறேன்

சாய் கிரண்: பிராந்திய மொழி கவிதைகள் போன்றவை மொழிபெயர்த்தால் அதன் முழு கருத்து மக்களைச் சென்றடையாது ஆனால் "ஜீ-மெயில்" போன்ற தகவல்களை தயவு செய்து ஆங்கிலத்தில் அனுப்புங்கள்

சுனில்: மற்ற மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பக் கூடாதுன்னா அது இந்தி, மராத்தி உட்பட எல்லா ப்ராந்திய மொழிகளுக்கும் பொருந்துமில்ல?

கிரண் ஹெக்டே: இந்தி தேசிய மொழி! அதை யாரும் ப்ராந்திய மொழி லிஸ்ட்ல சேக்காதிங்க

மகாதேவன்: ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா!

சிவா: இந்தி தேசிய மொழியா இருக்கலாம் ப்ரதர். ஆனா அதை எல்லாரும் தெரிஞ்சு வச்சிருக்கனும்னு அவசியமில்லை. ஆனா ஆங்கிலம் தெரியாம நம்ம நிறுவனத்துல வேலை பாக்க முடியாது அதனால ஆங்கிலத்துல மட்டும் மின்னஞ்சல் அனுப்பினா நல்லது

ஜோஜித் பானர்ஜி: தேசியக்கொடி, தேசியப்பறவை மாதிரி தேசியமொழி, இந்தி தெரியாதுன்னு ஒரு இந்தியன் சொல்றதுக்கு வெக்கப்படனும்.

தெய்வத் ஆவஸ்யா: இந்தியரான நம்ம அனைவருக்கும் தெரிந்த ஒரே பொது மொழி ஆங்கிலம்னு நெனச்சா வேதனையா இருக்கு

கோபி: அவ்வளவு தேசியப்பற்று இருக்கற இந்தியனான நீங்க, ஆங்கிலத்தை அலுவல் மொழியா கொண்ட ஒரு அமெரிக்க நிறுவனத்துல பணிபுரியறத நெனச்சி வெக்கப்படலையா ? வேதனைப்படலையா ?

பாலாஜி: ஒரு மொழி பிராந்திய மொழின்னா தாழ்வுமில்ல தேசிய மொழின்னா உயர்வுமில்ல, எத்தன பேர் பேசுறாங்க/உபயோகப்படுத்துறாங்கன்றத பொறுத்துதான் அந்த மொழி இன்னும் எத்தனை காலம் வாழும்னு சொல்லலாம்.

ஸ்ரீராம்: யப்பா, இந்தி மட்டும் தேசிய மொழியில்லப்பா, இந்திய அரசு லிஸ்ட்டப் பாருங்க. இதுல பாத்தீங்கன்னா மற்ற தேசத்தை சேர்ந்த நேபாளி, உருது கூட நம்ம தேசியமொழி! அதவிட ஒரு விஷயம் என்னன்னா, வழக்கொழிந்து போய் பேச ஆளே இல்லாத சில மொழிகள் கூட நம்ம தேசிய மொழி லிஸ்ட வருதுப்பா
(அதோட நகல் கீழே இருக்கு)

அங்கீகரிக்கப்பட்ட இந்திய தேசிய மொழிகள் (அலுவலக உபயோகத்துக்கு மட்டும்)
1) அஸ்ஸாமி (அஸ்ஸாம் அலுவல் மொழி)
2) பெங்காலி (வங்க, திரிபுரா அலுவல் மொழி)
3) போடோ (அஸ்ஸாம் அலுவல் மொழி)
4) தோக்ரி (ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி)
5) குஜராத்தி (குஜராத் மற்றும் சில பகுதிகளின் அலுவல் மொழி)
6) இந்தி (அந்தமான்/நிகோபார், பீகார், சன்டிகார், தில்லி, ஹரியானா, சட்டீஸ்கர், ஜார்கன்ட், இமாசலப்ரதேசம், மத்தியப்ரதேசம், ராஜ்ஸ்தான், உத்திரப்ரதேசம், உத்திராஞ்சல் ஆகியவற்றின் அலுவல் மொழி)
7) கன்னடம் (கர்னாடக அலுவல் மொழி)
8) காஷ்மீரி
9) கொங்கனி (கோவா அலுவல் மொழி)
10) மைதிலி (பீகார் அலுவல் மொழி)
11) மலையாளம் (கேரளா, லட்சத்தீவு ஆகியவற்றின் அலுவல் மொழி)
12) மணிப்பூரி (மணிப்பூர் அலுவல் மொழி)
13) மராத்தி (மகாராஷ்டிர அலுவல் மொழி)
14) நேபாளி (சிக்கிம் அலுவல் மொழி)
15) ஒரியா (ஒரிஸ்ஸா அலுவல் மொழி)
16) பஞ்சாபி (பஞ்சாப் அலுவல் மொழி)
17) சமஸ்கிருதம்
18) சாந்தலி
19) சிந்தி
20) தமிழ் (தமிழ்நாடு, பாண்டிச்சேரி அலுவல் மொழி)
21) தெலுங்கு (ஆந்திரப்பிரதேச அலுவல் மொழி)
22) உருது (ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி)

மத்திய நிர்வாக அலுவலுக்கு மட்டுமான தேசிய மொழிகள்:
1) இந்தி
2) ஆங்கிலம்

சுவாமிநாதன்: நிறுத்தனும், எல்லாத்தையும் நிறுத்தனும், இந்தியா சகல மொழியினரும் வாழும் நாடு, நாம எல்லாம் இந்தியர்.

திலீப்: குறைஞ்சபட்சம் எல்லாருக்கும் புரியற மாதிரி ஆங்கில மொழியாக்கத்தையும் கூடவே அனுப்பலாம்

நாட்டாமை (குழு நிர்வாகி): தகவல் பறிமாற்றத்துக்கான இந்த குழுவுல எல்லாரும் சொந்த தகவல்களை நல்லாவே பறிமாறிகிட்டீங்க, உருப்படியா தகவல் சொன்ன ஸ்ரீராம் தவிர மற்ற அனைவரையும் ஒரு மாதத்துக்கு குழுவை விட்டு விலக்கி வைக்கிறேன்.

(இதுக்கப்புறம் நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு ஒரு மின்னஞ்சல் சங்கிலி ஆரம்பிச்சி அது வேற மின்னஞ்சல் குழுவிலிருந்து இன்னும் பலர் நீக்கப்பட காரணமா இருந்தது)

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 1
Google Buzz Logo

சந்தேகப்படுங்க!

வாழ்க்கையே வெறுத்துப் போச்சா! என்னடா இப்படி ஒரு பொழைப்பா! நாண்டுக்கிட்டு சாகலாம்னு இருக்கா! சாகலாமா வேணாவான்னு முடிவெடுக்கறதுக்கு முன்னாடி, எதுனால அப்படித் தோனுதுன்னு பாக்கலாம்.

  1. செய்யிற வேலைக்கு மதிப்பில்ல. போதிய சம்பளம்/பதவி/வசதியில்ல ஆனா வேலைய மட்டும் வாங்கிக்கறாங்க
  2. உயிருக்குயிரா பழகுன பொண்ணு இப்ப சும்மா ப்ரண்ட்ஷிப்தான்னு கழட்டி விட்டுட்டா
  3. வீட்ல நிம்மதியில்ல என் பதவிக்கும் சம்பளத்துக்கும்தான் மரியாதை! இதெல்லாம் இல்லைன்னா ஒரு பய என்னை மதிக்கமாட்டான்
  4. கஷ்டப்பட்டு சேத்த காசு எல்லாம் போச்சி எதுக்காக வாழனும்
  5. சொந்தக் கஷ்டத்த சொல்லியழ ஆதரவா ஒரு தோள் இல்ல

இப்படி எதுவோ ஒன்னு, எதுவானாலும் ப்ரச்சனை உண்மையில அது இல்ல. உங்க மனசுதான்.

ஒரு கெட்ட விஷயம் நமக்கு நடக்கும்போது அது உண்மையில கெட்டதா அப்டின்னு யாரும் சந்தேகப்படுறதில்லை, அப்படியே அது கெட்டதுன்னு ஏத்துக்கறோம். ஆனா நல்ல விஷயம் நடக்கும் போது மட்டும் ஆயிரம் கோணத்துல அது மேல சந்தேகப்படுறோம்.

உதாரணமா, ஒருத்தன் கெட்டவன்னு யாராவது சொன்னா, நம்ம மனசுக்கு அப்படி தோனுச்சின்னா உடனே அது உண்மையான்னு விசாரிக்காம நம்பிடுறோம். ஆனா அப்படிப் பட்ட கெட்டவன் ஒரு நாள் வலிய வந்து நமக்கு ஏதாவது நல்லது செஞ்சாக்க அது உண்மையா இல்ல அவன் பின்னால ஏதாவது பிரச்சனைக்கு அடி போடுறானா, அப்படின்னு மனசுக்குள்ள ஆயிரம் சந்தேகம்.

உங்க மனசோட இந்த இயல்புதான் உங்க ப்ரச்சனை. உங்களை சந்தேகப்படாதிங்கன்னு சொல்லலை. ஒரு மாறுதலுக்காக மாத்தி சந்தேகப்படுங்கன்னு சொல்லுறேன். எப்படியா?

ஒருத்தன் உங்களை அடிச்சிட்டான், உடனே அவன் முரடன், கெட்டவன்னு முடிவு பண்ணாம, அவன் நிஜமாவே அடிக்கனும்கிற நோக்கத்தோட உங்களை அடிச்சானா இல்ல ஏதோ ஒரு வேகத்துல/கோபத்துல அப்படி பண்ணிட்டானா. அப்படியே நோக்கத்தோட அடிச்சாலும் இந்த முறை ஏதோ தவறு செஞ்சிட்டான், தவறுதல் மனித இயல்புதானே, ஒருமுறை மன்னிக்கலாம், திரும்பத் திரும்ப இப்படியே நடந்தால் அப்ப யோசிக்கலாம் அப்படின்னு முடிவெடுங்க.

கெட்டதை சந்தேகப்படுங்க! நல்லதை அப்படியே ஏத்துக்கங்க

வலைப்பூ - வணக்கமுங்க
Google Buzz Logo

போன வாரம் பூரா தானைத்தலைவர் நவன் கலக்கிட்டிருந்தாரு. காத்தால வலைப்பூ ஆபீசுக்கு வந்து பாத்தா "இந்த வார நட்சத்திரம்" போர்டு போட்டுட்டாங்கப்பா

திடீரென்று வலைப்பூ ஆபீசை வேற சில முன்னேற்றங்களோட தமிழ்மணத்துக்கு மாற்றிட்டாங்கன்னு மீனாக்ஸ் கிட்ட இருந்து மின்னஞ்சல் வந்துச்சி.

"முக்கியம்" போர்டு போட்டு ஒரு மின்னஞ்சல் மூலமா, புது ஆபீஸ்ல என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு சொல்லியிருந்தாரு காசி.

வலைப்பூவின் இந்தவார ஆசிரியர் (அல்லது இந்தவார நட்சத்திரம்) என்று சொல்லும் போது மதி தன்னை மிகத்தெளிவு செய்து யோசித்துப் பார்த்ததில் ஆபீஸ் பாய் கோபி என்ற அளவிற்கே என் சிற்றறிவிருக்கிறது. காசி வேறு அவ்வப்போது ப்ளாஸ்க் கொடுத்து "காப்பி" வாங்கிவரச் சொல்கிறார். (இதென்ன புதுக்கதை!) நம்ம ஊர் காப்பி போல இருக்கணும் என்று வேறு சொல்கிறார்.

சிறு அறிமுகம்

ஆக இந்த வார வலைப்பூ இந்த ஆபீஸ் பாய் பார்வையில்! பிழைகளேதும் ஏற்பட்டால் சண்டைக்கு வராமல் இச்சிறுவனின் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான் என்று மன்னித்து விட்டுவிடுங்கள்

எப்படியும் இந்த வார கடைசியில முடியை பிச்சிக்கிட்டு அலையப் போறீங்க, ஆரம்பிக்கும் போது கொஞ்சம் சிரிச்சிகிட்டே ஆரம்பிக்கலாம்

(பரணிலிருந்து இறக்குமதியான பழையது ஒன்று)

ஒரு கப்பல்ல உலக தீவிரவாத்தை அழிக்க, இந்திய, அமெரிக்க, ரஷிய கப்பற்படை தளபதிகள் பேசிக்கிட்டிருந்தாங்க.

அமெரிக்க தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை ஒரு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அவனும் கஷ்டப்பட்டு நீந்தி மேல ஏறி வந்தான். அமெரிக்க தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, "எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா?"ன்னாரு.

அடுத்து ரஷிய தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை மூனு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அவனும் கஷ்டப்பட்டு நீந்தி மேல ஏறி வந்தான். ரஷிய தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, "எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா?"ன்னாரு.

இப்ப இந்திய தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை அஞ்சு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அதுக்கு அவன் "போய்யாங்கு! உங்கொப்பனுக்கு நான் என்ன வேலக்காரனா?" அப்படின்னான். இந்திய தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, "எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா?"ன்னாரு.


மருது - பெண்ணே நீயும் பெண்ணா
Google Buzz Logo

சுந்தரவடிவேல் நேயர் விருப்பமாக சொன்னதையடுத்து ஓவியர் மருது வரைந்த ஓவியம் ஒன்றை வரைந்துள்ளேன். ஓவியர் மருது கணினி ஓவியங்களிலும் வல்லவர்.

சத்தியமா அவர் இந்த ஓவியத்துல என்ன சொல்ல வர்றார்னு புரியல உங்களுக்கு புரியுதா?



படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

தகடூர் எழுத்து மாற்றி சில முன்னேற்றங்கள்
Google Buzz Logo

தகடூர் எழுத்து மாற்றியின் மலையாளம் பதிப்பை முடித்துவிட்டேன். ஒவ்வொரு மொழி மாற்றிக்கும் தனிப்பெயர் சூட்டியுள்ளேன்

தகடூர் (தமிழ்)
கோதாவரி (தெலுங்கு)
சேரன் (மலையாளம்)
காமராஜ் (ஹிந்தி)
காவேரி (கன்னடம் - தயாரிப்பில் உள்ளது)

(தனிப்பெயர் யோசனை : திரு. சுரதா அவர்கள்)

வழக்கம் போலவே காவேரி வர சற்று தாமதமாகிறது.

இணையத்தில் தனிப்பட்டா இல்லையெனும் குறையை நீக்கி, பத்திரம் எழுதிவிட்டேன். இடமளித்து உதவி வரும் நண்பர் சாகரன் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

மொழி மாற்றிகளின் புதிய சுட்டி

http://www.higopi.com/ucedit/

நிறை/குறை/யோசனைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் நன்றி

யாதுமாகி நின்றாய் தோழி!
Google Buzz Logo

என் ப்ரியமான தோழி, நட்பின் பெருமையை உணர்த்த அடிக்கடி ஃப்ரெண்ட்ஷிப் கார்ட் கொடுப்பார். (கார்ட் வாங்கியே பழக்கமில்லாத என்னை "நன்றி" கார்ட் வாங்க வைத்தே பிச்சைக்காரனாக ஆக்கியவர்). அவர் கொடுத்த கார்ட்களுள் என்னை மிகமிகக் கவர்ந்த ஒன்றை வரைந்தேன்.

3' x 2' அளவில் எனது அலுவலக மேஜையை அலங்கரிக்கும் ரெண்டாவது ஓவியம் இது (தங்கம்! உங்கள் ரெண்டாவது ஓவியம் கேள்விக்கு விடை கிடைத்ததா?)




படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.

தகடூர் யுனிகோட் தமிழ் தட்டெழுத்துப் பெட்டி
Google Buzz Logo

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.

சுரதா அவர்களின் புதுவைத் தமிழ் எழுத்து மாற்றி போல தமிழ் மற்றும் பிற மொழிகளுக்கான எழுத்து மாற்றியை உருவாக்க வேண்டும் என்று எண்ணினேன். எனது எண்ணத்தை செயலாக்க, சுரதா அவர்களுக்கு பொங்கு தமிழ் அடிப்படையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி மின்னஞ்சல் அனுப்பினேன்.

ஏறகுறைய அவரின் "புதுவைத் தமிழ்" போலவே தோன்றினாலும் ஆட்சேபம் செய்யாமல் தாராள மனதோடு அவரின் பொங்கு தமிழ் JavaScript அடிப்படையைப் பயன்படுத்த அனுமதி கொடுத்ததோடு என்னை உற்சாகப்படுத்தி அவ்வப்போது இந்த எழுத்து மாற்றியை மேம்படுத்த யோசனைகளை மின்னஞ்சல் மூலம் தெரிவித்து எனக்காக அவர் எடுத்து வரும் சிரத்தை வியக்க வைக்கிறது.

சுரதா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய தமிழில் பொருத்தமான வார்த்தை கிடைக்கவில்லை.

தமிழுடன்,இந்தி மற்றும் தெலுங்கு எழுத்து மாற்றிகளும் தயார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்த எழுத்து மாற்றியைத் தயாரிக்க எண்ணியுள்ளேன்

எனக்கென்று இணையத்தில் சொந்தப் பட்டா நிலம் இல்லாததால் இதை சென்னை சஞ்சார் நெட் இணைய நிறுவனத்தின் இணையதளத்தில் எனக்களிக்கப்பட்ட இடத்தில் நிறுவியுள்ளேன். இதனால் எழுத்து மாற்றிப் பக்கம் பதிவிறங்க சற்று நேரம் ஆகிறது. தாமதத்தைக் களைய என்னாலானதை கூடிய விரைவில் செய்கிறேன்

தகடூர் எழுத்து மாற்றியின் சுட்டி:

http://chennai.sancharnet.in/tgkrishna/ucedit/

நிறை/குறை/யோசனைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

சின்னஞ்சிறு அனாதைகள்
Google Buzz Logo

விகடன் வார இதழில் பரிசுக் கவிதை ஒன்றின் ஓவியம் இது. பணக்கார சிறுமியுடன் பிறந்த நாள் பரிசாக பெற்றோர் அவளுக்களித்த கண் திறக்காத குட்டி நாய் (கவிதையும் ஓவியமும் மனதை என்னவோ செய்தது. அதனால் வரைந்தேன். எனது அலுவலக மேஜையிலிருக்கும் இரு ஓவியங்களுள் இது ஒன்று)



பல சமயங்களில் ஏனோ என்னை இந்தச் சிறுமி போல உணர்கிறேன். ஆனால் என்னோடு ஒரு நாய்க்குட்டி கூட இல்லை என்ற உண்மை உறைக்க மீண்டும் மனதில் ஓர் வெறுமையே மிஞ்சுகிறது


படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

உலகத்துல இதெல்லாம் சகஜமப்பா
Google Buzz Logo

ஒருமுறை ஐக்கிய நாடுகள் சபை ஒரு கருத்துக்கணிப்பு நடத்துச்சி

"மற்ற உலக நாடுகளில் ஏற்படுள்ள உணவுப் பற்றாகுறையை சமாளிக்க தேவையான தீர்வுகளைப்பற்றி உங்கள் நேர்மையான கருத்துக்களை தயவுசெய்து தெரிவிக்கவும்" ன்னு ஒரு சுற்றறிக்கையை எல்லா நாட்டு மக்களுக்கும் அனுப்புனாங்க

யார்கிட்டயிருந்தும் பதில் வரலை. என்னடா விஷயம்னு விசாரிச்சி பாத்தா

ஆப்ரிக்கால ஜனங்களுக்கு உணவுன்னா என்னனு தெரியல.

மேற்கு ஐரோப்பால ஜனங்களுக்கு பற்றாகுறைன்னா என்னனு தெரியல.

கிழக்கு ஐரோப்பால ஜனங்களுக்கு கருத்துன்னா என்னனு தெரியல.

மத்திய கிழக்கு நாடுகள்ல ஜனங்களுக்கு தீர்வுன்னா என்னனு தெரியல.

ஆசியால ஜனங்களுக்கு நேர்மைன்னா என்னனு தெரியல.

தென் அமெரிக்கால ஜனங்களுக்கு தயவுசெய்துன்னா என்னனு தெரியல.

அமெரிக்கால ஜனங்களுக்கு மற்ற உலக நாடுகள்னா என்னனு தெரியல.

(அதெப்படி பொத்தாம் பொதுவா ஒரு கண்டத்தை சேர்ந்த ஜனங்களை குறை சொல்லலாம்னு சண்டைக்கு யாரும் வராதீங்கப்பா)

ஸ்யாம் - இஷ்ட தேவதை கோவிலில்
Google Buzz Logo

இந்த அம்மணி மூஞ்சி மட்டும் ஓவியர் ஸ்யாம் வரைஞ்சிருந்தாரு. நாம முழுசா வரையலாம்னு ஆரம்பிச்சா கடைசில கொழுக் மொழுக்னு ஒரு அம்மணி வந்து நிக்குது. இதப் பாத்த என்னோட சித்தி "லட்சனமா இருக்காடா! கோயிலுக்கு அனுப்பு"ன்னு சொன்னாங்க, கைல அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து அனுப்பிட்டேன்.





படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.

எப்படியாச்சி - 2
Google Buzz Logo

ஒருமுறை ஒரு பயங்கரமான விமான விபத்து. புலனாய்வு அதிகாரிகள் வந்து பார்க்கும்போது ஒரே ஒரு சிம்பன்சி குரங்கு மட்டும் உயிரோட இருந்துச்சி. அதை காப்பாத்தி கூட்டிப் போகும்போது அந்த குரங்கு பேச ஆரம்பிச்சது. புலனாய்வு அதிகாரிகள் ஆச்சர்யமாகி அது கிட்ட நடந்ததப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க

அ: விமானத்துல ஏறினதும் பயனிகள் என்ன பண்ணாங்க
கு: எல்லாரும் சீட் பெல்ட் போட்டாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: எல்லாருக்கும் வணக்கம் சொல்லிகிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: முன்னாடி உக்காந்து எல்லாம் சரியா வேல செய்யுதான்னு பாத்துகிட்டிருந்தாங்க
அ: நீ ?
கு: ஜனங்களையெல்லாம் வேடிக்கை பாத்துகிட்டிருந்தேன்
அ: அப்றம் என்ன நடந்தது
கு: பயனிகள் எல்லாம் சாப்ட்டுகிட்டிருந்தாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: சாப்பாடு பரிமாறிகிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: அறிவிப்பெல்லாம் முடிஞ்சி விமானத்தை ஓட்ட ஆரம்பிச்சாங்க
அ: நீ ?
கு: வாழைப்பழம் சாப்பிட்டுட்டு தோலையெல்லாம் தூக்கி வீசிக்கிட்டிருந்தேன்
அ: அப்றம் என்ன நடந்தது
கு: பயனிகள் எல்லாம் தூங்க ஆரம்பிச்சாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: மேக்கப் போட்டுக்கிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: விமானத்தை ஓட்டிக்கிட்டு இருந்தாங்க
அ: நீ ?
கு: சும்மாதான் இருந்தேன். ரொம்ப போர் அடிச்சது
அ: விபத்து நடக்கறத்துக்கு முன்னால என்ன நடந்தது
கு: ஜனங்கள்ளாம் தூங்கினு இருந்தாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: எல்லாரும் பயனிகளுக்கு தேவையான தலையனை போர்வையை கொடுத்துகிட்டிருந்தாங்க. ரெண்டு பேரு மட்டும் காணோம். காக்பிட்ல போயி பாத்தா விமானிகள் அறையில அவங்களுக்கு முத்தம் குடுத்துகினு இருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: அவங்க ரெண்டு பேருக்கும் முத்தம் குடுத்துகினு இருந்தாங்க
( sheakuக்கு வருத்தமளிப்பதாக கூறியதால் மாற்றப்பட்டது)
அ: நீ ?
கு: விமானத்தை ஓட்டிக்குனு இருந்தேன்

கற்பனை இல்லம்
Google Buzz Logo

அட எத்தனைக்காலம்தான் அடுத்தவங்க வரைஞ்சதயோ இல்ல புகைப்படத்தையோ பார்த்து வரைவது. சுயமா வரைஞ்சி பாக்கலாம்னு முயற்சி பண்ணினேன். எத்தனை கத்துக்குட்டித்தனமா இருக்குதுன்னு புரிஞ்சது. ஓவியர்கள்ளாம் வரையறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னும் புரிஞ்சது.

படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்





இந்த ஓவியத்திலுள்ள பலகுறைகளுள் சில
  1. தோளுக்கு கீழ் பகுதிகளில் அளவுகள் சரியாக இல்லை (கை, கால்,இடை )
  2. கூஜா, தம்ளர் ஆகியன மிகச்சிறிதாய் உள்ளது
  3. முப்பரிமானம் சரியாய் இல்லை
  4. ஊஞ்சல் சீராக இல்லை

இன்னும் குறைகளை கண்டுபிடியுங்கள்?

(நல்லாயிருந்தாலும் நல்லாயில்லைன்னாலும் நான் வரைஞ்சதில்லையா?)