வலைப்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைப்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வலைப்பூ - நன்றி சொல்லவே
Google Buzz Logo

என்னை வலைப்பூ ஆசிரியப்பணிக்கு தேர்ந்தெடுத்த மதி அவர்களுக்கும் இந்த வார நட்சத்திரமாய் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் குழுவினருக்கும் முதற்கண் எனது நன்றி!

கடந்த ஒரு வாரத்திலே இந்த ஆபீஸ்பாய் செய்த அலம்பல்களை பொறுமையோடு படித்துப் பார்த்து ரசித்த, பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்திய, மின்னஞ்சல் அனுப்பி யோசனைகளைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயாஸ்கோப் நன்றி!

காசி ஃப்ளாஸ்க் கொடுத்துக் கேட்ட நம்ம ஊர் காப்பிக்காக காப்பித்தூள், பால், சர்க்கரை எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன். காப்பி போட்டு எடுத்துட்டு போகனும்!

இன்னும் ஏகப்பட்ட வேலை இருக்குதுங்க! வரட்டுங்களா? (உக்கும்! என்னமோ தலையில உலகத்தையே தாங்குற மாதிரி இந்த ஆபீஸ்பாய்க்கு ஏத்தத்தைப் பாரு!)

அப்பப்ப இந்த ஆபீஸ்பாய்க்கு மின்னஞ்சல் அனுப்புங்க, இங்க வந்து பாத்து பின்னூட்டம் குடுத்து உற்சாகப்படுத்துங்க

விளையாட்டம்மை ஒரு முறை வந்தால் அந்த தழும்புகளின் அடியிலேயே வைரஸ் தங்கிவிடுமாம் அதுபோல விளையாட்டாய் எழுத ஆரம்பித்த நான், உங்கள் அடி மனதில் இடம் கிடைத்தால்

தங்கி, தொடர்கிறேன் .....

வலைப்பூ - மொழிகள் ஒரு அலசல்
Google Buzz Logo

ஒரு விஷயத்தைப் பத்தி நாம தாய்மொழியில் தான் சிந்திக்கறோம்னு சொல்வாங்க இல்லையா ? அது உண்மையில்லை.

எப்படின்னு பாக்கலாம். இன்னும் சரியாக தாய்மொழியில் கூட பேசாத மழலை ஒன்றை கூட்டிக்கொண்டு கடற்கரை செல்வதாக் கொள்வோம், வண்டியிலிருந்து இறங்கி கடற்கரைக்கு சென்று அலைகளின் முன்னே அந்தக் குழந்தையை நிறுத்தினால் என்ன செய்யும்?

1) முதலில் அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பையும் அலைகளின் ஓசையையும் பார்த்து திகைப்படையும்
2) சற்றே பழகியபின் முன்னும் பின்னுமாக செல்லும் அலையை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும்
3) பிறகு அலைகளிலும் மணற்பரப்பிலும் விளையாடும்

இப்ப நாம விஷயத்துக்கு வருவோம். அந்தக் குழந்தை தமிழ்க் குழந்தையாயின் அதனிடம் நாம் கடற்கரையைக் காட்டி ஆங்கிலத்தில் பீச் என்று சொன்னால் அந்த பிம்பங்களையும் சத்தம் போன்ற உணர்வுகளையும் நீங்கள் சொன்ன "பீச்" என்ற வார்த்தையையும் உள்வாங்கி மூளையில் பதித்துக் கொள்கிறது.

பின்பு மீண்டும் ஒரு நாள் நீங்கள் "பீச்"சுக்கு போகலாம் என அந்தக் குழந்தையைக் கூப்பிட்டால் அது "பீச்" என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மூளையில் பதித்து வைத்துள்ள அலைகள், நீல நிற கடற்பரப்பு ஆகிய பிம்பகளாக அதை அர்த்தம் செய்து கொண்டு சந்தோசமாக துள்ளிக் குதித்துக் கிளம்புகிறது

நாம் ஒரு விஷயத்தை சிந்திப்பது பிம்பங்களாகவும் உணர்வுகளாகவும் மட்டுமே! அதை வெளிப்படுத்த வேண்டுமெனில் பிம்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் பொருத்தமாக மூளையில் பதிக்கும் போது எந்த மொழியில் பதிக்கிறோமோ அதே மொழியில் மொழி பெயர்க்கிறோம். அது தாய்மொழியாகவும் இருக்கலாம். வேறெதுவாகவும் இருக்கலாம்.

சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம். தாய்மொழி தவிர மற்ற மொழிகள் பேச, எழுத, படிக்க நமக்கு ஏன் சிரமமாக இருக்கிறது? ஏனெனில் நாம் முன்பு சொன்னது போல பிம்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த நாம் பயன்படுத்துவது நாம் பதித்த மொழியை. பிறகே அதை மற்ற மொழியில் மொழிபெயர்க்கிறோம்.

ஒரு மொழி நமக்கு சரளமாக வர வேண்டுமெனில் நாம் பதித்துள்ள பிம்பங்கள் மற்றும் உணர்வுகளின் வார்த்தைகளையும் அந்த மொழியில் இணைத்து (linked-list) மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும்

உதாரணத்துக்கு,

மழையின் பிம்பத்துக்கு "ரெயின்" என்று முதலில் கற்றவர் பின்பு தமிழில் அதன் சமான வார்த்தையான "மழை" என்பதை கற்கும் போது ( பிம்பம் => "ரெயின்" => "மழை") என்று மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும். பின்னொரு நாளில் அவர் தெலுங்கு கற்றால் அதன் சமான வார்த்தை "வர்ஷம்" எனத் தெரிய வரும் போது மீண்டும் ( பிம்பம் => "ரெயின்" => "மழை" => "வர்ஷம்" ) என்று மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாம் ஒரு மொழியில் பேசும் போது நேரடியாய் பிம்பங்களை அந்த மொழியிலேயே தொடர்புபடுத்திப் பேசுவோம். இதனால் மொழிபெயர்ப்பு நேரம் குறையும். மொழிபெயர்ப்பு நேரத்தை நாம் சரி கட்ட அடிக்கடி இடைவெளிகளில் உச்சரிக்கும் "ம்...", "ஆங்..." போன்ற அர்த்தமற்ற உளரல்கள் குறையும், பேச வந்த கருத்துதெளிவாகவும் சிறப்பாகவும் அமையும்

சரி. புதிதாய் ஒரு மொழியை கற்க என்ன செய்யலாம் ?

1) புத்தகங்களைப் படிக்கலாம்
2) இணைய தளங்களைத் தேடலாம் (உ.ம் தெலுங்கு கற்க http://sirigina.com/learn/ஐ நாடலாம்)
3) சிலகாலம் நண்பர்கள் வட்டாரத்தில் அனைவருமே அந்த மொழி மட்டும் பேசுபவர்களாக அமைத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு நீங்கள் பேசும் மற்ற ஏதேனும் ஒரு மொழி (உ.ம் ஆங்கிலம்) தெரிந்திருக்க வேண்டும்
4) அந்த மொழியில் வந்த திரைப்படங்கள், தொலைக்காட்சியை பார்க்கலாம்
5)அந்த மொழியில் வரும் திரைப்பட சுவரொட்டிகள், தினசரி/வார/மாத நாளிதழ்களைப் படிக்கலாம்

இப்படி எது செய்தாலும் மூளையில் நீங்கள் பதித்துள்ள பிம்பம்/உணர்வுடன் நேரடியாய் அந்த மொழியின் வார்த்தைகளை இணைத்து மறுபதிப்பு செய்ய வேண்டும்.

வலைப்பூ - பூச்சரம் - 2
Google Buzz Logo

கபாலி: ஏ வந்தனோம் வந்தனோம் வந்தஜனம் குந்தனோம் அடே தம்பி சந்தானம் அள்ளி குட்றா சந்தனம்.

பக்கிரி: இன்னா மாம்ஸூ! படா குஷியா கீற போல கீது!

கபாலி: பின்ன இன்னா பக்கிரி! டெய்லி டெய்லி வர்ஸொல்லொ புச்சு புச்சா தமிளு ஆளுங்கள பாக்றனா, மன்சு சந்தோசத்ல பீலிங்ஸ் ஆய்கிதுபா

பக்கிரி: இன்னா சொல்ற நீ! கொஞ்சம் பிர்யற மாறி சொல்பா

கபாலி: நம்ப ந. உதயகுமார் (குட்டிக் கதைகள் எய்துன அதே ஆளு தாம்பா இங்கிலிபீஸ்ல Stories and Parablesன்னு கூட எய்திகீறாரு) இல்ல? அவுரு கருத்துக்கள்BSNLஐ வாரு வாருன்னு வாரிகீறாரு

பக்கிரி: ஓ! நம்ம தமிளு சனங்களோட எணைய பக்கம் பத்தி சொல்றியா நீயி. இப்பிடிதான் குந்தவை கொடயப் பத்தி ஒரு கதைய கூட அழகா சொல்ல ஆரம்பிச்சி அப்டியே கடக்குதுபா

கபாலி: எதுனா பெர்சனல் வேல இர்க்கும்பா. அத்த வுடு
வைகை நதிக்கரையில்...ன்னு வைகை வர்லாறு சொல்லி கீறாரு வீரமணி இளங்கோ கவுன்ச்சியா நீயி

பக்கிரி: அப்பாலிக்கா
தோழனின் தும்மல் - தூறலில் நனைந்த தோழன் துவட்டமுன் தும்ம வருகிறான்னு ஆரம்பிச்சி எயுதுறாரு நம்ம தோழரு

கபாலி: குழவில வெடிகுண்டு தேசம்ன்னு ஆந்ரேயி சொல்ற விசியத்த படிக்க சொல்ல மன்சு கஸ்டமாவுதுபா

பக்கிரி: மேட்டர் தெர்யுமா உனுக்கு? நம்ப கண்ணன் ப்லாக்கர்லேந்து புதுசா கண்ணனின் வலைமொட்டுகள்க்கு வூடு மாறிட்டாரு பா

கபாலி: அப்பிடியா மேட்டரு இராஜ.தியாகராஜனின் தமிழிலக்கியப் பக்கம்ல இலக்கியம், டிஸ்க்கி, யுனிகோட் பத்தியெல்லாம் சொல்றாரு

பக்கிரி: பினாத்தல்கள்ல நம்ப சுரேஷ் பினாத்த ஆரம்பிச்சிட்டாரு. வீரப்பனுக்கு சில இரங்கல் கவிதைகள்ல அவரு அடிக்கிற லூட்டி செம டமாசு

கபாலி: காட்சியும், கனவும், எழுத்தும் மாறி மாறி வர்துன்றாரு சுந்தரவடிவேல். அந்தரத்தில் பந்தாடுற பொம்பள செலயோட போட்டோ சூப்பரு

பக்கிரி: அறுபத்தைந்தாம் கட்டம்ல செஸ் பத்தி விவாதிக்கறாரு கண்ணன் இராமநாதன்

கபாலி: அதே மாரி பங்குச் சந்தை பொங்கு தமிழில் பங்குச் சந்தை குறிப்புகள்ன்னு சூப்பரா இஷ்டாக்கு பத்தியெல்லாம் சொல்லித் தருது தமிழ்சசி

பக்கிரி: நெற்யோ பேரு எய்துராங்க! அல்லாமே சூப்பரா கீது. அல்லாம் பட்ச்சி பாக்கனும்னாக்க டையம் கெடிக்க மாட்து.

கபாலி: கரீக்ட்டா சொன்ன பக்கிரி!

வலைப்பூ - வின்டோஸ் குளறுபடிகள்
Google Buzz Logo

மைக்ரோசாப்ட் வின்டோஸ் பயன்படுத்துகிறீங்களா ?

புதுசா ஒரு கோப்பு உருவாக்கும் போது கீழ்க்கண்ட பெயர்களை அந்தக் கோப்புக்கு கொடுத்துப் பாருங்க

con, nul, aux, lpt1 ..... lpt9

வின்டோஸ், அந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு கோப்பிருப்பதாக சொல்லிவிடும்

இந்தச் சொற்கள் எல்லாம் வின்டோஸில் Reserved Key Words

ஆரம்பத்தில் எம்.எஸ். டாஸின் மெல் தான் வின்டோஸ் எழுதப்பட்டது (இன்றும் கூட என்பது ஒரளவு உண்மையே)

வின்டோஸ், மேற்கண்ட பெயர்களை ப்ரிண்டர் போன்ற Device களுக்காக பயன்படுத்துகிறது எனவே நமது கோப்புக்களுக்கு இந்தப் பெயர்களை வைக்க அது நம்மை அனுமதிப்பதில்லை


வலைப்பூ - ஊர்வலம் - 5
Google Buzz Logo

செஞ்சிக் கோட்டை



சுமார் எழுனூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த கோட்டை மூன்று மலைகளை சுற்றிவளைத்து நெடுந்துயர்ந்த கோட்டை சுவர்களுடன் நடுவில் ஊர் அமைத்து உருவாக்கப்பட்ட கோட்டை.



இந்தப்பகுதியிலுள்ள மலைகளின் அமைப்பை பார்த்தீர்களானால் ஆச்சர்யப்படுவீர்கள்! ஒரு பெரிய பாத்திரத்தில் உருண்டையான பாறைகளை எடுத்து கவிழ்த்து உருவாக்கியது போல இருக்கும்.

கோட்டைச் சுவருக்கு ஏழு வாசல்கள் உண்டு. கோட்டைக்குள்ளே, ஒரு புராதன மசூதியும், சிவன் கோயிலும் அருகருகே அமைந்து மத ஒற்றுமையை பறை சாற்றிக் கொண்டு இருக்கிறது



கோட்டையின் உள்வாசலில் நுழைந்து (கட்டணம் உண்டு) சற்றே நடந்தோமேயானால் தேசிங்கு மன்னனின் அரசவை மண்டபம் (புனரமைக்கப்பட்டது), ஒரு திருமண மஹால், சில தாணியக் கிடங்குகள், குளங்கள் (இன்னும் கூட தண்ணீர் உள்ளது - ஆனால் உபயோகத்திலில்லை) ஆகியவை இருக்கின்றன. இன்னும் சில புனரமைப்புகளை தொல்பொருள்த்துறை மேற்கொண்டுள்ளது.



எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தால் ஒரு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. மரத்தடி நிழலில் சற்றே இளைப்பாறிவிட்டு மலை மேல் ஏறிப்பார்க்கலாம் என ஆரம்பித்து செங்குத்தான நெடிய பாதையில் செல்ல ஆரம்பித்தோம். இடையிடையே இளைப்பாறினோம் - வழியில் எங்கும் தண்ணீரில்லை. ஒவ்வொருவருக்கு ஒன்னரை லிட்டர் என்ற அளவில் எடுத்து சென்ற தண்ணீர் மேலே ஏற மட்டுமே பயன்பட்டது. எதிரே கீழிறங்கிக் கொண்டிருந்த சிலர் இன்னும் கொஞ்ச தூரம் தான் என உற்சாகப் படுத்தி சென்றதால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம். எங்கும் ஆளரவமில்லை சுமார் 2 மணி நேரம் நடந்தபின் ஒரு கருவூலம், இரு தாணியக்கிடங்கு ஒரு பீரங்கித் தளம், ஒரு கோவில், ஒரு மணிக்கூண்டு ஆகியனவற்றைப் பார்த்தோம். மணிக்கூண்டில் ஏறிப்பார்த்தால் மூன்று மலைகளுக்கு இடையிலே கட்டப்பட்ட கோட்டைசுவரின் முழு அமைப்பு, செஞ்சி ஊர், கோட்டையின் உள்ளேயுள்ள அத்தனை இடங்களும் தெளிவாக இருந்தது. (இந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு மேலே ஏறி வரவேண்டுமா என்று தோன்றியது. உடன் வந்த நண்பர்கள் கடுப்பாகி திட்ட ஆரம்பித்தனர். எனவே, குடும்பம் குழந்தைகளோடு வருபவர்கள் மலை மேலே ஏறி சிரமப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்)




ஒரு வழியாக கீழிறங்கி கோட்டையின் உள் வாசலிலிருக்கும் தொல்பொருள்த்துறை அலுவலகத்துக்கு வந்தடைந்தோம். தண்ணீர் தாகத்தில் தவித்த எங்களுக்கு கோட்டை உள்வாசலருகே இருக்கும் கினற்று நீர் இனித்தது (நிஜமாகவே அது அவ்வளவு உப்பாக இல்லை குடிக்கவும் அங்குள்ளவர்கள் அதைத்தான் பயன்படுத்துவதாகக் கூறினர்).

பிறகு அலுவலகத்திலிருந்த ஒரு கடை நிலை ஊழியரிடம் பேசுகையில் அவர் தேசிங்கு ராஜனின் வரலாற்றை கூறினார். (அதில் முக்கியமானது, தேசிங்கு ராஜன் ரகசியக் கூட்டங்களை மலைமேலிருக்கும் ஒரு மண்டபத்தில் நடத்துவார் என்பதும். அதற்கு தேசிங்கு மற்றும் முதன்மை அமைச்சர்களும் நடந்தே மேலேறி வருவார்கள் என்பதும் தான், ஹூம்... அவர்கள் பலசாலிகள்)

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 6
Google Buzz Logo

ப்ரச்சனை

உங்க ப்ரச்சனைக்கு வருவோம். எது உங்க ப்ரச்சனை?

1) வேலை பளு
2) காதல் தோல்வி
3) சுயபட்சாதாபம்
4) பணம் இழப்பு
5) துனையில்லை

வேலை பளுவா? கொஞ்சம் கொறைவா வேல செஞ்சா ஒன்னும் போகாது, (பதவி/சம்பள உயர்வு, போனஸ் எல்லாம் கொறையும் பரவாயில்லை வாழத்தான் வேலை! வேலைக்கு வாழ்வில்லை)

காதல் தோல்வியா? உண்மையில வருத்தப்படவேண்டியது நீங்க இல்ல ஏன்னா உங்களை விரும்பாதவரைத்தான் நீங்க இழக்கப் போறீங்க. ஆனா அவுங்க? உயிருக்குயிரா நேசிச்ச உங்களை இல்ல இழக்க போறாங்க.

உங்களை யாரும் மதிக்கலையா? நீங்களே இப்படி சொன்னா எப்படி, உங்க பதவிக்கும் பணத்துக்கு ஆசப்பட்டா இவ்வளவு தூரம் படிக்கவச்சி ஆளக்கினாங்க? தாலி கட்டின ஒரே காரணத்துக்காக 20 வருஷத்துக்கும் மேல வசிச்ச வீடு, அப்பா அம்மா இவுங்களையெல்லாம் விட்டுட்டு உங்க மனைவி உங்களோட வந்தது கேவலம் பணத்துக்கும் பதவிக்கும்னா நெனக்கிறீங்க ?

பணம் போச்சா? அப்படின்னா உங்களால அவ்வளவு பணத்த திரும்ப சேக்கவே முடியாதா என்ன? முன் ஒரு முறை பணப் ப்ரச்சனை வந்தப்போ எவ்வளவு திறமையா சமாளிச்சிங்க! அந்த திறமை என்னாச்சி?

உங்களுக்கு யாருமே இல்லையா? நீங்க நெனக்கறது சரிதானா பாருங்க ? நம்ம ஒவ்வொருத்தருக்கும் உயிரயே விட தயாரா ஒருத்தர், ஆபத்துன்னா காப்பாத்த பத்து பேர், சிரிச்சா சிரிக்கவும், அழுதா அழவும் ஐம்பது பேர், நாம் மறைந்தால் வருத்தப்பட நூறு பேராவது இருக்காங்கன்னு ஒரு புள்ளி விவரத்துல சொல்லியிருக்கு. நல்லா தேடிப்பாருங்க, நாங்கல்லாம் இருக்கோமில்ல?

வாழத்தான் நமக்கு விதிக்கப்பட்டுள்ளது வாழ்வை என்று, எப்படி முடிப்பது என்பது நம் கையிலில்லை

நீங்க நெனச்சாலும் நூறு வருசத்துக்கு மேல வாழறது ரொம்ப கஷ்டம். அதனால கொஞ்ச நாள் வாழ்ந்து பாருங்களேன்

வலைப்பூ - அசைவப் பிரியர்களுக்கு
Google Buzz Logo

ஹலீம்

ரம்ஜான் நோன்பிருப்பவர்களுக்கு ஹலீம் ஒரு சிறந்த உணவு (பசி, சக்தி இழப்பு இரண்டையும் ஈடுசெய்யும்). இதன் செய்முறையை இங்கு பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:
300 கிராம் இறைச்சி (எலும்பில்லாதது)
200 கிராம் கோதுமை
3 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
10 பச்சை மிளகாய் (காரம் அதிகம் வேண்டுமெனில் இன்னும் சேர்த்துக்கொள்ளவும்)
2 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட் (அல்லது மசித்த பூண்டு)
2 தேக்கரண்டி இஞ்சி (பொடிப்பொடியாய் நறுக்கியது)
2 எலுமிச்சை
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
2 தேக்கரண்டி கறி மசாலா
உப்பு (சுவைக்கேற்ப)
கொத்துமல்லி/கறிவேப்பிலை (அலங்காரத்துக்கும் சுவைக்கும்)
4 தேக்கரண்டி சமையல் எண்ணை



செய்முறை:
1) கோதுமையைச் சுத்தப்படுத்தி 2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2) இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை வதக்கி அரைத்து பசை போல ஆக்கி அதில் இறைச்சியை சுத்தப்படுத்தி 1 மணிநேரம் ஊற வைக்கவும் (சற்று வினிகர் கிடைத்தால் சேர்க்கவும்)
3) ஊற வைத்த கோதுமை மற்றும் இறைச்சியை குக்கரில் 45 நிமிடத்துக்கு வேகவைக்கவும்
4) குக்கர் ஆவி அடங்கியவுடன் வெந்த இறைச்சி, கோதுமையை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
5) வாணலியில் எண்ணை ஊற்றி அடுப்பை SLM ல் வைத்து வெங்காயத்தை பொன் வறுவலாக தாளித்து, இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, உப்பு, கறி மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், பிறகு மிக்ஸியில் மசித்து வைத்துள்ள கோதுமை, இறைச்சி கலவையை வாணலியில் கொட்டி ஒரு கொதி வரும் வரை கிளறவும்.
6) அவ்வளவுதான்! சூடான ஹலீம் தயார். சூப் கப்புகளில் ஊற்றி கொத்துமல்லி கறிவேப்பிலை தூவி நறிக்கிய எலுமிச்சையோடு பரிமாறவும்.


பின்குறிப்பு: ஹலீம், அசைவப் பிரியர்களுக்கு சிறந்த சத்துள்ள உணவு என்ற அடிப்படையில் எனது இஸ்லாமிய நண்பனொருவன் கூறிய செய்முறை விளக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன். மதரீதியான கட்டுப்பாடுகள், முறைகள் எதையும் நான் அறிந்திலன் (நான் அசைவமல்ல எனவே இதன் சுவையையும் அனுபவித்ததில்லை. நன்றாக இருக்கும் என கேட்டு அறிந்ததே)

வலைப்பூ - ஊர்வலம் - 4
Google Buzz Logo

கோல்கொண்டா அற்புதங்கள்

கோல்கொண்டா கோட்டையின் அற்புதங்கள் பற்றி அனாமிகா மெய்யப்பன் அவர்கள் சிறப்பாக சொல்லியுள்ளதால் அவருக்கு சுட்டி கொடுத்துவிட்டேன்



மகாபலிபுரம்



மகாபலிபுரம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பஞ்ச பாண்டவர் ரதம், புலிக்குகை, அர்ஜுனன் தவம், என சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பூமி.

இங்குள்ள சிற்பிகள் வாழும் அற்புதங்கள், சிறிதளவே லாபம் (அல்லது மிகுந்த நஷ்டம்) என்றலும் கூட சிற்பம் தவிர பிற தொழில்களை நாடாமல் செய்துவரும் இவர்கள் கூறுவது சிற்பங்கள் வடிப்பது தவிர வேறு தொழில்கள் தெரியாது என்பதே.

உண்மைதான். ஒரு கலையை வாழ வைக்க அதைத் தவிர பிழைப்புக்கு வேறு வழியில்லாத ஆட்களால் மட்டுமே முடியும்.

மகாபலிபுர சிற்பங்களின் அழகை பறைசாற்றும் சில புகைப்படங்கள் இங்கே...
(பெரிய அளவிலான கோப்புகள் என்பதால் தனியே பதித்துவிட்டேன்)

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

வலைப்பூ - வர்ணஜாலம்
Google Buzz Logo

அன்பார்ந்த தமிழ்ச்சமூகமே!

இன்றையதினம் உலக வர்ணதினம்!




இந்த தினத்திலே அனைவரும்

கருப்பு சிந்தனைகளை விட்டொழித்து
வெள்ளை மனத்துடனும்
கொடுத்து சிவந்த கரங்களோடும்
இயற்கை வளமளித்த பசுமையோடும்
ஆகாய நீலம் போல் பரந்த நட்புடனும்
மஞ்சளின் மங்களத்துடனும்
அவரவர் விரும்பி ண்ம்
எண்ணியதெல்லாம் அடையும் வண்ணம்

மிகச் சிறந்த வண்ணமயமான வாழ்வு அமைய வாழ்த்திடுகிறேன்

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 5
Google Buzz Logo

உங்களுக்காக வாழுங்கள்

நமக்கு வாழ்நாள் எவ்வளவுன்னு யாருக்கும் தெரியாது

ஆனா நூறு வருஷத்துக்கு மேல இருக்கறவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான். நூறு வருஷம்னு வச்சிகிட்டாலும் இதுல தூங்கியே ஐம்பது வருஷத்த இழக்கறோம். அப்றம் காலைக்கடன் முடிக்கறதுல நாலு வருஷம், சாப்பிடுறதுல பன்னிரண்டு வருசம், படிப்புக்கு எட்டு வருஷம், வேலை செய்யுறதுக்கு மீதின்னு அப்படி இப்படின்னு பாத்தா நாம நமக்காக வாழ்ந்த காலம் ரொம்ப குறைவா இருக்கு

நாம நமக்காக வாழ்ந்த காலம்னா? அப்பாவுக்கு பிடிக்கும்னு நல்லா படிச்சதா? அம்மாவுக்கு பிடிக்கும்னு பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கறதா? இல்ல சிலருக்கு பிடிக்கும்னு சில விசயங்களை செய்யாம இருக்கறதா? இல்லன்னா சிலர் சில மாதிரி பேசிடக் கூடாதுன்னு செய்யுறதா?

இல்லவே இல்லை. யாரைப்பத்தியும் கவலைப்படாம, யாருக்கும் பிடிக்குமா பிடிக்காதான்னு பாக்காம. நம்ம இஷ்டப்பட்ட மாதிரி, நம்ம சந்தோசத்துக்காக இருக்குற காலம் தான் நாம நமக்காக வாழ்ந்த காலம்

நம்ம வாழ்நாள் எத்தனை முறை மூச்சு விட்டம்னு அளக்கப்படுறது இல்ல. சந்தோசத்துல எத்தனை முறை மூச்சடைச்சி நின்னோம்கிறதை வச்சித் தான் அளக்கப்படுது

நம்முடைய எண்ணங்கள் தான் நம்மை வாழ வைக்குது. எதை நினைக்கிறயோ அதுவாகவே ஆகிறாய். எதை விரும்புகிறாயோ அதையே அடைகிறாய் அப்படின்னு பெரியவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க

அதனால

நமக்காக வாழ்வோம்! நலமாய் வாழ்வோம்!

வலைப்பூ - பூச்சரம் - 1
Google Buzz Logo

வில்லுப் பாடகர்: தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா! வில்லினில் பாட ..

வலைப்பதிவாளர் சமூகத்திலே சமீபத்தில் பூத்த சில மலர்கள் பற்றி இன்றைய வில்லுப்பாட்டுல பேசப் போறோம்.

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: வெண்பாப் பதிவுல சொ. மணியன் அவருக்கு தெரிந்த உலகத்தை அவருக்கு தெரிந்த வெண்பாவுல சொல்லுறாரு. வலைப்பதிவுலகத்தில இது ஒரு புது மாதிரி முயற்சி!

குழு:ஓஹோ!

வில்லுப் பாடகர்: குட்டிக் கதைகள்ல ந. உதயகுமார் சின்னச் சின்ன நீதிக்கதைகளை சொல்லி வருகிறார். குழந்தைகளோட படிக்கனும் நாமெல்லாம்!

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: ஒரு மாசமா சிக்கல் செஞ்சுக்கிட்டு இருக்கிற montresor (அப்படின்னா என்னங்க?) சில சமயங்கள்ல (அந்துமணியின் முட்டாள்தனமான வாரமலர் உளறல்கள் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.) சூடான விவாதத்துக்கான சிக்கலை ஏற்படுத்துறாரு

குழு:அப்படியா!

வில்லுப் பாடகர்: கோமானின் எழுத்துக்கள்ல தன்னோட தாத்தா எழுதிய கட்டுரைகளை எழுத்து மாறாம பதித்துள்ள கோமான், திவ்விய பிரபந்தம்லயும் கலக்கியிருக்காரு. இலக்கிய ஆர்வமுள்ளவங்க எல்லாருக்கும் ஒரு விருந்து

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: கனாக் காணுங்கள்னு சொல்லி கவிதைகளை பதிச்சிகிட்டு இருக்கிறாரு "புதிய கனா". புலத்தில் ஆவணப்படுத்தப்படாமல் உள்ள படைப்புக்களை அடையாளங்காண்பதும் முடிகிறபோது பதிப்பிக்க முனைவதையும், நோக்கமாகக் கொண்டது 'கனா' என்கிறாரு.

குழு:ஓஹோ!

வில்லுப் பாடகர்:
நியூக்ளியஸ் வலைப்பதிவு உருவாக்குவதெப்படி?ன்னு நிகழ்வுகள் சொல்லித் தருது.

குழு:பிரமாதம்!

வில்லுப் பாடகர் & குழு:இந்த புதுப் பூக்களை வரவேற்று நல்ல ஒரு வில்லுப்பாட்டு பாடலாம் எல்லாரும் சேந்து பாடுங்க ... தரிகிட தரிகிட தோம்... தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா! வில்லினில் பாட .....


அப்பாடா! ஒரு வழியா ப்ருந்தாவனத்துல இத்தோட சேத்து அரை சதம் (50 பதிவுகள்) அடிச்சாச்சி

வலைப்பூ - ஊர்வலம் - 3
Google Buzz Logo

ஸ்ரீசைலம் பாதாள கங்கை


ஸ்ரீசைலம் அணைக்கட்டு மற்றவைகளிலிருந்த வித்யாசமானது. எவ்வாறெனில் இந்த நீர்த்தேக்கத்தில் நீர் தேங்கியிருப்பதைப் பார்க்க மக்கள் வருவது மலைமேலிருந்து கீழிறங்கி (சுமார் 650 அடிகள்) பாதாள கங்கை என்ற இடத்திற்கு

ஆம்! ஊர் மலை மேலே உள்ளது, அணைக்கட்டு மலையடிவாரத்தில்.


சுற்றிலும் இயற்கை வளம் கொழிக்கும் காட்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கெங்கு காணினும் தண்ணீர்! தண்ணீர்!



அணைக்கட்டினை சுற்றிப்பார்க்க, பாதாள கங்கையிலிருந்து விசைப்படகு சவாரியை ஆந்திர அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ளது. ரோப் கார் (இதுக்கு தமிழ்ல என்னங்க?) வடிவமைத்து வருகிறார்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும்.

இங்கு ஊருக்குள் உள்ள சில கடைகளில் மரத்தாலான பொம்மைப் பாம்புகள் விற்கிறார்கள், அவை நெளிவதைப் பார்த்தால் நிஜமான பாம்புகள் பொலவே (பயமாக) இருக்கிறது

இங்குள்ள சிவன் கோவில் இந்துக்களின் முக்கிய சிவஸ்தலங்களுள் ஒன்று


வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 4
Google Buzz Logo

உடல் ஒரு அற்புதக் கருவி

நம்மையும் நமது எண்ணங்களையும் செயல்படுத்தி உயிருள்ளவரை நம் மனதையும் உள்ளடக்கி நம்மை வெற்றியடையச் செய்வது நமது உடல். அதனைப் பேணிக்காக்க நாம் அக்கறை எடுத்துள்ளோமா?

சரி பேணிக் காப்பதிருக்கட்டும் குறைந்தபட்சம் அவை என்ன சொல்கிறது என்றாவது உணர்ந்திருக்கிறோமா? உடலை உணர்வது எப்படின்னு இன்னைக்கு பாக்கலாம்,

காற்றோட்டமான அறையில் காலை நீட்டி கண்களை மூடி மால்லாந்து படுத்துக்கங்க. மெதுவாக முழு நுரையீரலும் நிரம்பும் அளவுக்கு மூச்சை இழுங்கள் இழுக்கும்போது நுரையீரலின் பரிமாணத்தை உணருங்க. மெதுவாக முழு நுரையீரலிலிருக்கும் காற்றையும் வெளியிடுங்க. இன்னொரு முறை இதே மாதிரி செய்யுங்க இந்த முறை நுரையீரலின் சத்ததை உணருங்க. மூனாவது முறை இதே மாதிரி செய்யும் போது நுரையீரலில் பாயும் ரத்த ஓட்டத்தை உணருங்க.

அடுத்ததா இதேபோல மூச்சு விடும்போது இரைப்பையை உணருங்க, இதேபோல அடிவயிறு, இடுப்பு, முதுகு,இடது கை,இடது கால்,வலது கை, வலது கால், தலை என ஒவ்வொன்றாக உணருங்கள்.

நீங்க பயன் படுத்துற வாகனங்களை வாரம் ஒருமுறையேனும் பேணி காக்கறீங்க. நாளுக்கு ஒருமணி நேரம் ஓட்டும் வாகனத்துக்கே இவ்வளவு கவனிப்புன்னா எப்பவும் பயன் படுத்திக்கிட்டிருக்கிற உடலுக்கு வாரம் ஒரு முறை இந்த பயிற்சிய செய்ய மாட்டிங்களா என்ன?

சில வார பயிற்சிக்கு பின் உடலில் சில பகுதிகளில் பிரச்சனைகளிருந்தால் மருத்துவரிடம் சென்று பார்க்கும் முன்னரே உங்களாலேயே உணர முடியும்

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க

பயிற்சி விளக்கம்: நம் மனத்தில் சில உணர்வுகள்(உ.ம்: துக்கம், ஆச்சர்யம், மிதமிஞ்சிய மகிழ்ச்சி) இருக்கும் போது நாம் சரியான அலகில்(unit) மூச்சு விடுவதில்லை, இது நாள்பட நாள்பட நமது உடல் நலத்தை பாதிப்பதோடல்லாமல் நாம் மூச்சு விடும் முறை(pattern)யையே மாற்றிவிடுகிறது. இந்தப் பயிற்சி நம் மூச்சை சீராக்கப் பயன்படும்

வலைப்பூ - சோதிடம் + வானவியல் + ஒரு கேள்வி
Google Buzz Logo

வானவியலில் உள்ள அத்தனை கிரகங்களும் சோதிடத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆச்சர்யப்படவைக்கும் உண்மை என்னவென்றால், அவற்றின் சுற்றுக் காலங்களும் சோதிடத்தில் சரியாக பயன்படுத்துவதே

உதாரணத்துக்கு,

பன்னிரு ராசிகளையும் வியாழன் (குரு) ஒருமுறை கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் சோதிடத்தில் பன்னிரு வருடங்கள் வானவியல் கண்டுபிடித்தது 11 வருடமும் 314.96 நாட்களும்.

சூரியன் பன்னிரு ராசிகளையும் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு 1 வருடம். சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க பூமி 1 வருடம் எடுத்துக் கொள்கிறது.

சந்திரன் பன்னிரு ராசிகளையும் கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. ஒருமுறை சுற்றி முடிக்க பூமி 1 வருடம் எடுத்துக் கொள்கிறது.

அதே போல ஒவ்வொரு மாத்திற்கு ஒரு சிறப்பு நட்சத்திரமுண்டு,

தைப்பூசம், மாசி மகம், ஆவனி அவிட்டம், இப்படி, மாதத்தின் சிறப்பு நட்சத்திரங்கள் வரும் நாட்கள் அனைத்தும் பௌர்னமி தினங்களே! இந்த ஒற்றுமை ஆச்சர்யமூட்டுகிறது

வானவியல் நிகழ்வுகளின் போது பாதிக்கப்படும் கிரகங்கள் சோதிடத்திலும் அதன்படியே எழுதப்பட்டிருக்கின்றன. (உ.ம் ஷூ மேக்கர்/லேவியால் வியாழன் கிரகம் பாதிக்கப் பட்ட போது சோதிடத்தில் குருவின் ஆதிக்கத்திலிருந்தவர்களுக்கு தீய பலனகள் சொல்லப்பட்டது (நடந்ததா என்பது வேறு விஷயம்)

ப்ருஹுத் ஜாதகா, ப்ருஹுத் சம்ஹிதா போன்ற சோதிடக்கலை சம்பந்தப்பட்ட நூல்களில் பூகம்பம், வறட்சி, போர், மழை போன்றவை வர சாத்தியமான கிரக அமைப்புகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டுள்ளது

இது போலவே சோதிடத்திலும் வானவியலிலும் உள்ள ஒற்றுமைகளைக் கூற இன்னும் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்

சோதிடம் உண்மையா? பொய்யா? சோதிடர்கள் பொய்யர்களா? இதெல்லாம் எனக்குள் எழும் கேள்விகளல்ல

ட்ரில்லியனுக்கு அப்பால் ஒரு எண் வந்தால் அதை என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்று தெரியாதவர்கள் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்த வானத்து நட்சத்திரங்கள், ராசி மண்டலங்கள், கிரகங்கள் அவற்றின் சூரியனைச் சுற்றும் கால அளவுகள், ஆகியவற்றைத் தொலைநோக்கி போன்ற வசதிகள் ஏதும் இல்லாத காலத்திலேயே துல்லியமாக கணக்கிட நமது சோதிட மேதைகளால் எப்படி முடிந்தது?

வலைப்பூ - மேலாண்மை
Google Buzz Logo

ஒரு மேலாண்மைக் கல்லூரியின் நுழைவுத் தேர்விலே கேட்டப்பட்ட கேள்வி:

ஒரு பெரிய ஆற்றின் நடுவில் துடுப்புப் படகில், நீங்கள், உங்கள் நண்பர், உங்கள் தாய் மற்றும் உங்கள் மனைவி/கணவர் எல்லோரும் இயற்கையை ரசித்தபடி சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஆற்று வெள்ளம் அதிகரித்து படகு அதில் கவிழ்ந்து விடுகிறது. தண்ணீரில் விழுந்து தத்தளிப்போரில் நண்பர்,தாய்,மனைவி/கணவர் யாருக்கும் நீந்தத் தெரியாது உங்களுக்கு மட்டுமே நீந்தத் தெரியும். ஆனால் கரைக்கும் உங்களுக்குமான தூரத்தைப் பார்த்தால் உங்களோடு யாரேனும் ஒருவரை மட்டுமே நீங்கள் காப்பாற்ற முடியும்.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புவீர்கள்? ஏன்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் பதியுங்கள்

அந்த மேலாண்மைக் கல்லூரி எதிர்பார்த்த பதிலை சில மணித்துளிகளில் பின்னூட்டத்தில் பதிக்கிறேன்

(என்ன? பதிலை இப்பவே சொல்லனுமா ? சினிமால மட்டும் டாக்டருங்க கண்ணாடிய தொடச்சிகிட்டு "எதையும் 24 மணி நேரத்துக்கப்றம் தான் சொல்ல முடியும்"னு சொன்னா ஏத்துக்கறீங்க? அட கொஞ்ச நேரம் பொறுங்க! )

வலைப்பூ - ஊர்வலம் - 2
Google Buzz Logo

நாகார்ஜுன சாகர்




பொதுவாக அணைக்கட்டு என்பது இரு மலைகளுக்கு இடையில் நீர்வீழ்ச்சியிலிருந்து சற்று தொலைவில் ஆர்ப்பரித்து வரும் நீர் சமாதானமாய் தேங்க தயாராகும் இடத்தில் கட்டப்படும்.



நாகர்ஜுன சாகர் இந்த வகை அணைக்கட்டுகளிலிருந்து சற்றே மாறுபட்டும் நீர்வீழ்ச்சியின் வெகு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.




நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும் நீர்வீழ்ச்சிக்கு அருகே முதலைகள் உலாவுவதை தொலைவிலிருந்தே பார்க்க முடிவதால் வாழ்வின் மேல் ஆசை கொண்டு மேற்கொண்டு செல்லவில்லை





சாகர் என்று ஏன் சொல்கிறார்கள் என அங்கு சென்ற பிறகே தெரிந்தது. அப்பப்பா! எவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு! நாங்கள் சென்ற போது அணை ஏறகுறைய நிரம்பியிருந்தது. அங்கிருந்த அரசு ஊழியரை விசாரித்ததில் ஆண்டு முழுவதுமே தண்ணீர் ஓரளவு நிரம்பியே இருக்கும் என சுந்தரத் தெலுங்கில் செப்பினார்

(மேட்டூர் அணையின் பதினாறு கதவுகளைத் தாண்டி உபரி நீரை வெளியேற்றும் காட்சியை மிகச்சிறுவனாய் இருக்கையில் பார்த்த நினைவு... ஹும்....)




பசுமையான இந்த இடத்தைப் பார்த்த பிறகு ஆந்திரத்தை ஏன் வறன்ட மாநிலம் என்கிறார்கள் எனத் தோன்றிற்று (பிறகு அங்கிருந்து ஹைதராபாத் வரும் வழியெல்லாம் பார்த்ததும் அந்த சந்தேகம் விலகியது)

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 3
Google Buzz Logo

ஜோதியில் போகி

குற்ற உணர்வா இருக்கா? தப்பு செஞ்சுட்டம்னு தோனுதா, அப்படி செஞ்சிருக்க கூடாதுன்னு தோனுதா?

இதிலிருந்து விடுபட இன்னிக்கு நாம கத்துக்கப் போறது எளிய முறை தியானம்

காற்று பலமா வீசாத அறையில சுகாசனத்துல(சப்பனமிட்டு) உக்காருங்க. எதிர்ல ஒரு விளக்கையோ மெழுகுவர்த்தியையோ ஏத்தி வையுங்க. கொஞ்ச நேரம் எரியும் ஜோதியைப் பாருங்க! அந்த வெளிர்மஞ்சள் நிறம், அதனுள் ஆரஞ்சு நிறம், இன்னும் உள்ளே சற்று வெளிர் நிறப் புள்ளி அதனுள் திரியின் கருமை அதன் கீழே நீல நிற அடிப்புறம். ஆஹா! இந்த சிறு சுடர்தான் எத்தனை அழகு! அப்பப்பா!

சரி இப்ப லேசா கண்ணை மூடுங்க. நீங்க கொஞ்ச நேரம் முன்னாடி ரசிச்ச சுடரின் பிம்பம் இப்ப தெரியுதா? நீங்க செஞ்ச தவறுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும் விசயத்தை ஒரு பேப்பரில் எழுதி அந்த பிம்பத்தில் போடுவதாக கற்பனை செய்யுங்க!

உங்க கற்பனையில் அந்த பேப்பர் கொஞ்சம் கொஞ்சமா சுடரில் கரைந்து மறையும். வ்விஷ்ஷ்.... அவ்வளவுதான் நீங்க செஞ்ச அந்த தப்பு மறைஞ்சி போச்சு! இப்படி உங்க குற்ற உணர்வுக்கு காரணமான எல்லா தப்பையும் மறைய வைய்யுங்க.

எல்லாம் முடிஞ்சதா! இப்ப கண்ணை திறங்க! சுடர் அனைந்திடாவிட்டால் அனைத்துவிட்டு அறையை விட்டு வெளிய வாங்க. இப்ப நீங்க செஞ்ச தப்பெல்லாம் உங்களை விட்டு போயாச்சி!

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க

வலைப்பூ - தொடர்புகளும் வலைகளும்
Google Buzz Logo

இந்த அவசர யுகத்திலே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது எத்தனை சிறப்பாக அமைகிறதோ அதைப் பொருத்தே அவர்களிருவருக்குமான உறவும் அமைகிறது

உதாரணத்துக்கு பணியிடத்திலே நீங்கள் உங்கள் மேலதிகாரியிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம், நீங்கள் நினைப்பதை மிகச் சரியாக உங்கள் மேலதிகாரி புரிந்துகொள்ளும்படி நீங்கள் வெளிப்படுத்தினால் தான் உங்கள் பணி சிக்கலேதுமில்லாமல் நடக்கும். உங்கள் மேலதிகாரிக்கும் உங்களுக்குமான உறவு, முற்றிலும் நீங்கள் அவரிடத்தில் தொடர்பு கொள்ளும்போது எவ்வாறு பேசுகிறீர்கள் என்பதைப் பொருத்தே அமையும். மேலதிகாரிக்கும் உங்களுக்குமான உறவு, பணியிடத்தில் உங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரி. இப்போது ஒருவரிடம் தொடர்பு கொள்ளும்போது எவ்வாறெல்லாம் பேசக்கூடாது என்பதைப் பார்ப்போம்

விவாத வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் "சரிதான், ஆனா" என்று ஆரம்பிக்கிறீர்கள் என்றால் "விவாத வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். உங்கள் விவாதம் சரியான ஆதாரங்களுடன் இல்லாத போது அது மற்றவருக்கு எரிச்சல் மூட்டுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மீதான மதிப்பையும் குறைக்கும்

ஒப்பீட்டு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இதேமாதிரி ஒரு முறை எங்க ஊருலகூட ஒருத்தனுக்கு நாக்கு வெளிய வந்து விழுந்துச்சிபா" என்றால் நீங்கள் "ஒப்பீட்டு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இதனால் ஒருவருக்கு நீங்கள் ஆதரவாய் பேசுவதாய் நீங்கள் நினைத்தாலும் அது அவருக்கு எரிச்சலூட்டுவதாகவே அமையும்

பரவாயில்லை வலை:உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இது பரவாயில்லைப்பா எனக்கு ஒரு முறை சளி பிடிச்சி மூக்கு சிந்தும்போது மூக்கே கழண்டு விழுந்துடுச்சி. அப்றம் 10 தையல் போட்டு ஒட்ட வச்சாங்க" என்றால் நீங்கள் "பரவாயில்லை வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். எதிராளியைவிட நாந்தான் பெரியவன் என்று மார் தட்டிக் கொள்வதால் நீங்கள் சாதிப்பது ஏதுமில்லை மாறாக உங்களை அது பாதிப்பதே அதிகம்

பழங்கதை வலை:உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இப்படித்தான் 1946ல" என்று ஆரம்பித்து சம்பந்தமே இல்லாமல் உங்கள் பழங்கதையை பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் "பழங்கதை வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இப்படிப் பேசுறதுனால பெரிய பாதிப்பு ஒன்னுமில்லை, என்ன அடுத்தவாட்டி உங்க தலை தெரிஞ்சாவே அவனவன் தலைதெறிக்க ஓடுவான்

அபிப்ராய வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இப்படி நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும் அவன் இருமும்போது எப்பவுமே நாக்க தொங்கப் போட்டுட்டு தான் இருமுவான் அவன்லாம் உருப்படமாட்டான்" என்றால் நீங்கள் "அபிப்ராய வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். அவருக்கு ஆதரவாப் பேசுறதா நீங்க நெனைக்கலாம். ஆனா அவர் உங்களை ஒரு கோள்மூட்டும் நபராகவே பார்ப்பார்.

குறுக்கீட்டு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து.. " என்று பேசிக்கொண்டிருக்கும் போதே சம்பந்தமில்லாமல் குறுக்கிட்டு "மீனுக்கு நாக்கு இருக்குதா இல்லையா" என்றால் நீங்கள் "குறுக்கீட்டு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இது சம்பந்தப்பட்டவரை மற்றுமின்றி எல்லோரையும் எரிச்சலடையச் செய்யும்

குற்றச்சாட்டு வலை/சுயபட்சாதாப வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "எனக்கு கூட சளி இருக்கு ஒருத்தனுக்கும் என்னைப் பத்தி கவலையில்லை" என்றால் நீங்கள் "குற்றச்சாட்டு வலை/சுயபட்சாதாப வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இப்படியே பேசிக்கிட்டிருந்தா பழங்கதை வலைல ஆன மாதிரி அடுத்தவாட்டி உங்க தலை தெரிஞ்சாவே அவனவன் தலைதெறிக்க ஓடுவான்

கிசு கிசு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதைக்கேட்டுக் கொண்டு வந்து பிறகு பல பேரிடம் ரகசியமாக (சம்பந்தமில்லாதவரிடம் கூட) கூறுகிறீர்கள் என்றால் நீங்கள் "கிசு கிசு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இருக்கறதுலயே மோசமான வலை இதுதான். கிசு கிசு பேசுறவங்களை நண்பன் எதிரி ரெண்டு பேருமே விரும்பமாட்டார்கள்

இப்படி எந்த வலையிலும் சிக்காமல் ஒருத்தரிடம் பேசி நம்ம சொல்லவந்த விஷயத்தை சரியாகச் சொன்னால் தொடர்புகளையும் நட்புகளையும் எந்தச் சிக்கலுமில்லாமல் நடத்திச் செல்லலாம்

(என்று சொன்னாலும் எந்த வலையிலும் சிக்காமல் இதுவரை என்னால் இருக்க முடியவில்லை. எந்த வலையிலும் சிக்காத யாராவது இருக்கீங்களா?)

வலைப்பூ - ஊர்வலம் - 1
Google Buzz Logo

ஹொகேனக்கல் - புக்ககம் பாயும் காவிரி



பிறந்த வீடான கர்னாடகத்திலிருந்து புகுந்த வீடான தமிழ்நாட்டுக்கு காவேரி வலது காலெடுத்து பொங்கிப் பாய்ந்து ஓடிவரும் இடம் தான் ஒகேனக்கல். (அரசியல்வாதிகளால் காவேரிக்கு வேறு அர்த்தம் ஆகிவிட்டதாலேயே இந்த அறிமுகம்)

நீர்வீழ்ச்சியைச் சுற்றி புகை போல நீர்ச்சாறல் தெரிப்பதனாலேயே ஹொகேனக்கல் (கன்னடத்தில் ஹொகெ என்றால் புகை) எனப் பெயர் வந்தது. நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு குளிக்கும் ஆசை வரும்.



ஆயில் மசாஜ் இங்க ரொம்ப பிரபலம். ஆயில் மசாஜ் செய்வதானால் அரசாங்க அனுமதி பெற்றவரிடம் செய்துகொள்ளுங்கள். காசு குறைவு என கண்டவர்களிடம் மசாஜ் செய்து அப்றம் அங்க வலிக்குது இங்க வலிக்குது அப்பிடின்னு கத்த வேண்டாம்.

நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.




குளித்து முடித்து பசிக்கிறதா? அசைவப் பிரியரானால் வகை வகையாய் சுவையான மீன்கள் சாப்பிடலாம். சைவமானால் வரும்போதே சமைத்து எடுத்துவருவது நல்லது (ஒன்றிரண்டு சைவ ஓட்டல்கள் இருக்கின்றன ஆனால் அவ்வளவாக ருசிக்காது)



சரி சாப்டாச்சா, வாங்க ஒரு சுத்து சுத்திப் பாத்துட்டு வரலாம். இங்க பாக்க வேண்டிய இடம்னா

1) தேசிய முதலைப் பண்ணை,
2) பாலம் தாண்டிப் போய் கர்னாடகப் பக்கத்தில் பார்த்தால் தெரியும் (குளிக்க முடியாத அளவிற்கு வேகம் அதிகமான) நீர்வீழ்ச்சிகளின் முழு அழகு,
3) நீர்வீழ்ச்சிக்கருகே சென்று பார்க்கும் பரிசல் பயணம் (மிக ஆபத்தானது தவறி விழுந்தால் உயிர் பிழைப்பது கடினம். நீந்தத் தெரிந்தாலும் தப்பிக்க முடியாது காரனம்: ஆழம், சுழல், முதலைகள்)

காலைல பெங்களூரிலிருந்து கிளம்பினீங்கன்னா ஒரு வழியா எல்லாம் முடிச்சப்றம் கொஞ்சம் காவேரிக் கரையில ஓய்வெடுத்துட்டு மாலைச் சூரியன் மறைந்த பிறகு பெங்களூர் திரும்பலாம் (பெங்களூரிலிருந்து சுமார் 180 கி.மீ).

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 2
Google Buzz Logo

கடவுளே நீ எங்க இருக்க

நம்ம எல்லாருக்கும், எல்லா மதத்தினருக்கும் ஒரு தீராத சந்தேகம்! கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்?

இதுக்கு ஒரு சின்ன கதை

கடவுள் இந்த உலகத்தையும் மனிதனையும் இன்ன பிற ஜீவராசிகளையும் படைத்தார் என எல்லா மதநூல்களும் சொல்கின்றன. அப்படி கடவுள் மனிதனைப் படைத்த போது அவனுக்கு ஒரு வரம் கொடுத்தாரு. "நான் இருக்குமிடத்தினை மனதில் நினைத்து அழைத்தால் வருவேன்". அப்படின்னாரு. நம்பாளு என்னா பண்ணான், ஆ ஊன்னா கடவுளை கூப்பிட ஆரம்பிச்சான். உச்சா போக முடியலையா? கடவுள கூப்பிடு கக்கா போக முடியலையா? கடவுளக் கூப்பிடு.

கடவுளும் கஷ்டம் பாக்காம அவன் கூப்பிட்டப்பல்லாம் வந்துகிட்டிருந்தாரு. அப்படியும் விட்டானா நம்ப ஆளு? கூப்பிட்டா வர்றத்துக்கு கொஞ்சம் நேரமானா கூட திட்ட ஆரம்பிச்சான்.

பார்த்தாரு கடவுள், இவனால கண்டுபிடிக்கவே முடியாத இடத்துல பொய் தங்கிட்டாத்தான் நிம்மதின்னு யோசிச்சாரு. மனுஷன் மனசுதான் அவன் நினச்சிப் பாக்காத இடம்னு முடிவு பண்ணி அங்க போய் தங்கிட்டாரு.

மனுஷன் அதுக்கப்றம் கடவுள் எங்க இருக்காருன்னு நெனச்சாலும் தப்பாவே ஆச்சி. அவன் தான் மனசப்பத்தி நெனச்சிப் பாக்றதே இல்லையே. இப்பவும் மனசுக்குள்ள இருக்குற கடவுள கண்டுபிடிச்சி கூப்பிட்டவங்களுக்கு அவர் வந்து உதவுறாருன்னு ஒரு பேச்சி இருக்கு

உங்க மனசுல இருக்குற கடவுளப்பத்தி எப்பவாவது நெனச்சதுண்டா?

என்னது கடவுள் உங்க மனசுல இருக்காரான்னு சந்தேகமா இருக்கா?

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க !

உதறித் தள்ளுங்க

எப்பவாச்சும் ரொம்ப மன அழுத்ததோட இருக்கும் போது அதிலிருந்து விடுபட ஒரு எளிய பயிற்சி

உங்களை தனிமை படுத்திக் கொள்ளுங்கள்

மீனவன் வலை வீசுவதைப் பாத்திருக்கீங்களா? "ஹூம்" என்றபடி இரு கைகளையும் பலம் கொண்ட மட்டும் அதைப் போல காற்றில் வீசுங்க (எது மேலயும் இடிச்சிடாம பாத்துக்கங்க கை கழன்டு போற மாதிரி இல்லாம ஒரளவு மிதமான வேகத்தோட வீசுங்க)

இப்படி வீசும் போது உங்களை விட்டு இரு விஷயங்கள் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்க. ஒன்னு ஈகோ என்னும் ஆணவம், இன்னொன்னு உங்க மன அழுத்தம். இப்படி மூனு-நாலு முறை செய்யுங்க

சரி இப்ப எல்லாம் உங்களை விட்டு மன அழுத்தமும் ஈகோவும் போயிடுச்சி இல்லயா? ஈகோ இல்லாம எல்லாரோடவும் போய் பழகுங்க

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க!

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க !