ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நள்ளிரவு சுமார் 2.00 மணி. எலும்பில் ஊசி வைத்து குத்துவது போல தாக்கும் கடும்குளிர்.
பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். இரவு பணி முடிய வெகுநேரம் ஆகும்பொது பணியாளர்களை நிறுவனத்தின் வாகனமே வீடு வரை விட்டுச் செல்லும்.
நான் பொதுவாக எனது வாகனத்திலேதான் வீடு திரும்புவது வழக்கம். கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட சில விபத்துக்களால் சக பணியாளர்கள் படுகாயம் அடைந்ததால், நள்ளிரவு வீடு திரும்புவோர் சொந்த வாகனம் வைத்திருந்தாலும் நிறுவனத்தின் வாகனத்தையே பயன்படுத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டது. எனவே இம்முறை நிறுவனத்தின் வாகனத்தில் பயணித்தேன்.
சுமார் பத்து நிமிடம் பயணித்திருப்போம், வினோதமான சத்தத்துடன் வண்டி நின்றது. முன்னே சென்று பரிசோதித்த ஓட்டுனன், வண்டி சரி செய்ய நகரிலிருந்து ஆள் கூட்டி வரவேண்டும், அரை மணி நேரம் ஆகும் என இந்தியில் சொல்லிவிட்டு வழியில் வந்த ஒரு இருசக்கர வண்டிக்காரனுடன் சென்றான்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த நான் வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தேன். வண்டியின் வெளியே இன்னும் குளிரெடுத்தது. நீண்டு பரந்த கரிய நெடுஞ்சாலை ஆளரவமற்று இருந்தது. எல்லாம் இருந்தும் யாருமற்ற தனியனாய் நான். நிலவொளியையும் நட்சத்திரக் கூட்டங்களையும் ரசிக்க முடியவில்லை. வயிறு வேறு பசித்தது.
சற்றே தூரத்தில் சில வீடுகளும் பேச்சு சத்தமும் கேட்டது. இந்த நேரத்தில் யார் விழித்திருப்பார்கள் என ஆச்சர்யத்துடன் வீடுகளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்
நெருங்கிய போது இன்னும் ஆச்சர்யம்! பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் உன் ஊர் எப்படி இருந்ததோ அதே அமைப்பில் வீடுகள்! ஒரு ஊரைப் போலவே இன்னொரு ஊர் இருக்க முடியுமா?
யோசனையாய் உன் வீடிருந்த இடத்தில் சென்று பார்க்கிறேன்.. அதே பழைய வீடு. வாசலில் அதே பழைய மரக்கட்டில். அங்கே அமர்ந்திருந்த தாத்தா சாளேஸ்வரக் கண்ணாடியூடே என்னை அடையாளம் கண்டுகொண்டு "வாப்பா! நல்லாயிருக்கியா" என்கிறார். உள்ளே சமையலறையில் வேலையாய் இருந்த பாட்டியிடம் "உன் பேரன் வந்திருக்கான், அவனுக்கு சாப்பிட எதாவது எடுத்துனு வா" என்கிறார்.
வாசலில் இருந்த பெரிய கண்ணாடியில் என்னைப் பார்த்தால்.. கண்ணாடியிலிருந்தது ஆறாம் வகுப்பு படிக்கும் நான்!
பாட்டிக்கு சிரமம் தராமல் சமையலறைக்கு சென்று நொறுக்குத் தீனி வைத்திருக்கும் தூக்குப் பையில் இருந்த முறுக்கை எடுத்து வாயில் போட்ட படி திரும்பினால்,ஆறு வயது சிறுமியாய் நீ!
ஏனென்று தெரியவில்லை, என்னைப் பார்த்தவுடன் கோபப் பார்வை வீசினாய். உன் கோபத்தைப் போக்க கிச்சு கிச்சு மூட்டினேன். இன்னும் கோபமாய் "உங்க கூட பேசமாட்டேன் போங்க மாமா, இவ்வளவு நாள் எங்க போயிருந்தீங்களோ அங்கயே போங்க" என்றபடி பூஜையறைக்கு சென்று கதவை உட்புறமாய் தாளிட்டுக் கொண்டாய்.
பின்னாலேயே ஓடிய நான் "செல்லம். நாளையிலிருந்து எங்கேயும் போகலை. உன் கூடவே இருக்கேன். கதவைத் திற" என்று கதவைத் தட்டுகிறேன்.
தட்..தட்..தட்..
"கர் ஆகயா சாப்" என்றபடி கதவைத் திறந்தான் ஓட்டுனன்.
நிலவரத்திற்கு வர சில வினாடிகளானது.
சரி, போய் சாப்பிட்டுட்டு தூங்கனும், நாளைக்கு நெறைய வேலையிருக்குது. வரட்டுங்களா?
பி.கு:(அம்மணிக்கு மட்டும்) கனவுல கூட உன்னோட "நாளைக்கு இருப்பேன்"னு தாங்கண்ணு சொல்ல வருது! ஹும்... எப்ப நான் எனக்காக,உனக்காக, நமக்கே நமக்காக மட்டும் "இன்னிய" பொழுத கழிக்கப் போறேன்னு தெரியல..