தமிழ்வழி தனிவழி 1
தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் தனியொரு வரலாறு என்ற ஒன்று இல்லாமலே செய்து விட வேண்டும் என்ற ஆசை, சிலருக்கு சங்க காலம் தொட்டு இருந்து வருவது ஒரு வேதனை என்றால் இம்முயற்சியில் சில தமிழர்களே அவ்வப்போது ஈடுபடுவது தான் கொடுமை.
பழங்காலத்தில் பிற மொழி இலக்கியங்களுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் போட்டி வைப்பார்களாம். எப்படி? தத்தம் மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆற்றில் வீசி எறிந்து, அவற்றுள் நீரோட்டத்தை எதிர்த்து வருபவையே நல்லவை என்று போட்டி. அடப்பாவிகளா... நல்ல இலக்கியத்தை படிச்சி பாத்தா தெரியுமே.. எதுக்கு ஆத்துல வீசனும் ? இந்த சூழ்ச்சியை நம்பிய நம் முன்னொர்களின் அறியாமையால் எத்தனை நிகரற்ற தமிழ் இலக்கிய நூல்கள் அழிந்தனவோ?
இவ்வாறு வரலாற்றை அழித்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதில் பழந்தமிழனுக்கு தற்காலத் தமிழன் சற்றும் சளைத்தவன் இல்லை. எங்கோ ஒன்றாக மலைப் பாறைகளுள் ஒளிந்து கிடக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுக்களை கொஞ்சம் கூட கவலைப்படாமல் கல் குவாரிகள் அமைத்து தன் வரலாற்றுக்கு தானே வேட்டு வைத்து வருகிறான் (மேலதிக தகவல்)
இப்படி தமிழ் மொழிக்கும் தமிழருக்குமான வரலாற்றை அழிக்க நினைப்போர் கணினி/இணைய வெளியை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? அப்படி முயற்சிக்கும் சிலரின் முயற்சிகள் பற்றியும் அவற்றை நாம் ஏன், எப்படி எதிர்க்க வேண்டும் என்பது பற்றியும் இந்த கட்டுரைத் தொடரில் நாம் விரிவாக அலசப் போகிறோம்.
அதற்கு முன்பு, இது தொடர்பான சில நுட்பங்களைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
ஒருங்குறி (Unicode): இப்போ நீங்க தமிழ்ல படிச்சிக்கிட்டு இருக்கீங்களே, இந்த கட்டுரையே ஒருங்குறியில எழுதுனது தான். ஒருங்குறின்னா ஒன்னுமில்லீங்க. உலகத்துல இருக்கும் எல்லா மொழி எழுத்துக்களுக்கும் கணினி புரிந்து கொள்ளுமாறு எண்களை ஒதுக்கி தரும் ஒரு முறை. இதனால என்ன பலன்னு பாத்தீங்கன்னா, இந்த ஒருங்குறி விண்டோஸ் லினக்ஸ் மாதிரி எல்லா இயங்கு தளங்களிலும்(Operating Systems) முன்கூட்டியே இருக்கறதல, தமிழ் எழுத்துக்களை படிக்க தனியா எழுத்துருக்களை (Fonts) நிறுவ வேண்டியதில்லை
இந்த ஒருங்குறியில் பயன்பாட்டில் இருக்கும் எல்லா மொழி எழுத்துக்களுக்கும் (உ.ம்: தமிழ், ஆங்கிலம், அரபி) BMP - Basic Multilingual Plane என்ற வரிசையில் எண்களை ஒதுக்கி தந்திருக்காங்க .
பயன்பாட்டில் இல்லாத வழக்கொழிந்து போன மொழி எழுத்துக்களுக்கும் (உ.ம்:எகிப்து கல்வேட்டு எழுத்துக்கள், பிராமி, பர்சியா, கோதிக் போன்றவை) SMP - Supplementary Multilingual Plane என்ற வரிசையில் எண்களை ஒதுக்கி தந்திருக்காங்க .
ஒருங்குறி சேர்த்தியம்(Unicode Consortium): இந்த பொது நல அமைப்பு தான் மேலே சொன்ன ஒருங்குறி(Unicode) ஐ வடிவமைத்து வருகிறது. புதுசா ஒரு எழுத்தை சேர்க்கனும்னா இவங்க கிட்ட அவங்க கேக்குற விதிகளுக்கு உட்பட்டு சொல்லி சேக்கலாம். (மேலதிக தகவல்)
தமிழ் வரிவடிவம்: இப்போ நாம தமிழை எழுதும் எழுத்து வடிவத்தை தான் தமிழ் வரி வடிவம் அப்படின்னு சொல்றோம். அதாவது ஒவ்வொரு உச்சரிப்புக்கும் உரிய எழுத்தை வரிவடிவம் என்று அழைக்கின்றோம்.(மேலதிக தகவல்)
கிரந்தம் வரிவடிவம்: இது பழங்காலத்தில் பயன்பட்டு வந்த ஒரு எழுத்து வடிவம். பெரும்பாலும் இதை சமஸ்கிருத மொழி உச்சரிப்புகளை தென்னிந்திய மொழிகளில் எழுத பயன்படுத்தினார்கள். கி.பி 6ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 16 ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த இந்த கிரந்த எழுத்துக்கள், சமஸ்கிருதத்தை எழுத 'தேவநகரி' என்ற இந்தி போன்ற எழுத்துமுறை (வரிவடிவம்) ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் இப்போது முற்றிலும் வழக்கொழிந்துவிட்டன. (மேலதிக தகவல்)
எழுத்துக்களுக்கும் மொழிக்குமான தொடர்பு: எந்த ஒரு மொழியையுமே எழுதனும்னா ஒரு எழுத்து வடிவம் தேவை இல்லையா? ஆனா ஒரு மொழிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துமுறை (வரி வடிவம்) இருக்கலாம். அதே மாதிரி ஒரே எழுத்துமுறை (வரி வடிவம்) பல மொழிகளை எழுதப் பயன்படலாம்..
புரியலை இல்லை? சரி விரிவா பார்க்கலாம்..
ரகுபதி அப்படிங்கற பேரை ஆங்கிலத்துல எழுதினா 'RAGHUPATHY' அப்படின்னு எழுதலாம்.அதையே ப்ரெஞ்சுல எழுதினா 'RAGOUBADY' அப்படின்னு எழுதுவாங்க. இங்கே கவனிச்சீங்கன்னா ஆங்கிலம், ப்ரெஞ்சு, ரெண்டுலயுமே பயன்படுவது லத்தீன் எழுத்துமுறை (வரிவடிவம்). ஆனா ஆங்கில உச்சரிப்பும் ப்ரெஞ்சு உச்சரிப்பும் வேற வேற... இப்படித்தான் ஒரே எழுத்துமுறை (வரி வடிவம்) பல மொழிகளில் பயன்படுது
எப்படி கிரந்தம், தேவநகரி என்று இரு எழுத்து முறைகளை (வரிவடிவம்) சமஸ்கிருதம் எழுத பயன்படுத்தினார்களோ அதே போல பழங்காலத்துல தமிழ் என்ற ஒரே மொழியை எழுதுவதற்கு வட்டெழுத்து (மேலதிக தகவல்) தமிழ் ப்ராமி/தமிழி (மேலதிக தகவல்) போன்ற பல்வேறு எழுத்துமுறைகளை (வரிவடிவம்) பயன்படுத்தினாங்க. இது போக தமிழில் சமஸ்கிருத உச்சரிப்புகளை எழுத கிரந்த எழுத்துக்களை (மேலதிக தகவல்) பயன்படுத்தினாங்க.
இப்படி பல எழுத்து முறைகளை வைத்து எழுதிக் கொண்டிருந்த தமிழ் பிற்காலத்துல இன்றைக்கு நாம் பயன்படுத்தும் எழுத்துமுறைக்கு வந்தது.
புரிஞ்சதுங்களா?
சரி, இப்போது இச்சிக்கல் குறித்து பார்க்கலாம்.
கொஞ்ச நாளுக்கு முன்னாடி நீங்க தொலைக்காட்சி செய்திகள்ல "தமிழ் ஒருங்குறி அமைப்பதை தள்ளி வைக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்" அப்படின்னு ஒரு செய்தி பார்த்திருப்பீங்க. அது பத்தி தான் நாம இங்கே பேசப் போறோம்.
வேடிக்கை என்னன்னா தமிழ் ஒருங்குறியெல்லாம் எப்பவோ அமைச்சாச்சு, அதைத்தான் நாம பயன்படுத்துறோம். நீங்க உங்க கணினியில எந்த ஒரு ஃபாண்ட்(font)டையும் நிறுவாம(install) இந்த கட்டுரையை படிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னா அது இந்த கட்டுரையை ஒருங்குறியில எழுதியிருக்கறதால தான்.
அந்த செய்திக்கு காரணமான சிக்கல் என்னன்னா தமிழ் ஒருங்குறியில சிலர் கேட்டிருக்கும் மாற்றங்கள் தான். அதைத்தான் தள்ளி வைக்கனும்னு மத்திய அரசை கேட்டிருங்காங்க. இந்த சிக்கல் என்ன? இதுக்கு நாம ஏன் மத்திய அரசை கேக்கனும்? நேரடியா ஒருங்குறி சேர்த்தியதையே கேக்க முடியாதா? அப்படின்னு இங்கே பார்க்கலாம்.
இந்த தமிழ் ஒருங்குறி தொடர்பா 4 வகையான மாற்றங்கள் ஒருங்குறி சேர்த்தியத்திடம் கோரப்பட்டன.
முதல்ல ஸ்ரீ ரமண சர்மா அவர்களின் 'விரிவுபடுத்தப்பட்ட தமிழ்' முன்மொழிவு: இதற்கும் கிரந்த வரிவடிவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த முன்மொழிவில் கிரந்த/வடமொழி உச்சரிப்புகளை தமிழில் எழுதுவதற்காக, தமிழ் எழுத்துக்களுடன் 2,3,4 முதலிய எண்களை superscript ஆக சேர்த்து க² க⁴ ஜ² த⁴ ப³ என்றவாறு எழுதுவதற்கு ஏதுவாக அந்த எழுத்துக்களை தமிழ் ஒருங்குறி வரிசை இருக்கும் BMP (Basic Multilingual Plane - அடிப்படை பன்மொழி வெளி) வரிசையில் 'விரிவுபடுத்தப்பட்ட தமிழ்' என்று தனியாக சேர்க்க கோரப்பட்டுள்ளது.
இதை நிறைய பேர் கிரந்த எழுத்துக்களை தமிழோட சேர்க்கனும்னு தப்பா புரிஞ்சிகிட்டு போராட்டமெல்லாம் நடத்துறாங்க. இந்த கோரிக்கை கிரந்த எழுத்துக்களை தமிழோட சேர்க்க இல்லை, தமிழ் எழுத்துக்களோட 1,2,3 போன்ற எண்களை மேற்கோள்களாக (superscript) சேர்க்க.
அதாவது, தமிழில் வடமொழி போன்றவற்றில் இருக்கும் உச்சரிப்புகளை எழுத "இலத்தீன் எழுத்துக்களை grave, accent, caret போன்ற துணைக்குறியீடுகளை இணைத்து புதிய ஒலிகளை குறிப்பிடுவது போலத்தான். உதாரணமாக, e என்ற எழுத்து è é ê ë என்றவாறாக பல்வேறு துணைகுறியீடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு ஒலிகளை வெளியிடுவது போல" இந்த 1,2,3,4 மேற்கோள்களுடன் கூடிய எழுத்துக்களும் தேவை அப்படின்னு மாற்றம் கேட்டாங்க. இதை "விரிவுபடுத்தப்பட்ட தமிழ்" (Extended Tamil) அப்படின்னு இப்ப தமிழ் இருக்கும் வரிசையுடன் தனியாக ஒருங்குறியில சேர்க்கனும் அப்படிங்கறாங்க.
இந்த மாதிரி 1,2,3,4 மேற்கோளையும் இலத்தீனின் grave, accent, caret போன்ற குறியீடுகளையும் ஒப்பிட கூடாது. ஏன்னா ஆங்கில எழுத்துக்களோட இலத்தீனின் grave, accent, caret இதெல்லாம் தனியா சேக்க முடியாது. ஆனா 1,2,3,4 மேற்கோளை தமிழ் எழுத்துக்களோட தனித்தனியா சேத்து இவங்க கேக்குற மாற்றம் இல்லாமலேயே இந்த எழுத்துக்களை கொண்டு வர முடியும்
அதாவது 'க' இருக்கா, அது கூட ' ² ' சேர்த்துங்க... க² வந்துடுச்சில்ல.. அவ்வளவுதான். ஆக, அச்சுக்கும், இணையத்துக்கும் ஏணைய தேவைகளுக்கும் இவங்க கேட்கும் இந்த மாற்றம் இல்லாமலே இப்போ இருக்கும் ஒருங்குறி எழுத்துக்களை வச்சே எழுத முடியும். அப்புறம் எதுக்கு 'க' வையும் ' ² ' ஐயும் சேர்த்து புதுசா க² அப்படின்னு இன்னோரு தனி எழுத்து..?
சரி, இந்த கோரிக்கைன்னால தமிழுக்கு என்ன கேடு வந்துடப் போவுது? வடமொழி உச்சரிப்பை எழுதத் தானே இப்படி புது எழுத்துக்களை கேட்கறாங்க.. குடுத்தா என்ன? அப்படீங்கறீங்களா? இப்ப வடமொழி உச்சரிப்பை எழுதக் கேட்டவங்க தமிழையே அப்படி எழுத ஆரம்பிச்சா என்ன ஆகும்?
என்னுடை³ய பெ¹யர் த¹க³டூ³ர் கோ³பி¹, இந்த³ ப்³ருந்தா³வனம் வலைப்¹ப¹தி³வு த¹க³டூ³ர் கோ³பி¹யின் எண்ணங்க³ளை உங்க³ளுட³ன் பகி³ர்ந்து³ கொ¹ள்ள ஏற்ப¹டு³த்¹த¹ப்¹ப¹ட்¹ட¹து³.
மேலே சொன்ன ஏதாவது புரியுதா? தமிழில் ஒலிப்பு இந்த மாதிரி 1,2,3,4 கொண்டு கட்டுப்படுத்தப்படுவதில்லை. தமிழ் ஒலிப்பு முற்றிலும் தமிழ் இலக்கண விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அதாவது, 'க' அப்படிங்கற எழுத்து தங்கம் என்ற சொல்லில் க³ (ga) ஒலிப்புடன் இருக்கனும், அகம் என்ற சொல்லில் ஹ (ha) ஒலிப்புடன் இருக்கனும், கவிதை என்ற சொல்லில் க¹ (ka) ஒலிப்புடன் இருக்கனும் இது ஒரு தமிழ் இலக்கண விதி. இது போல எந்த இடத்தில் வரும் தமிழ் எழுத்தை எப்படி உச்சரிக்கனும்ங்கறதுக்கு பல விதிகள் இருக்கு. மற்ற மொழி எழுத்துக்கள் போல ஒவ்வொரு ஒலிப்புக்கும் தமிழில் தனி எழுத்து தேவையில்லை, இலக்கணம் இருக்கு, அதனாலதான் தமிழ் மிகக் குறைந்த அடிப்படை எழுத்துக்களுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த மொழியா இருக்கு.
இலக்கணம் படிக்க சோம்பேறித்தனப்பட்டு இப்படி 1,2,3,4, போட்டு எழுத ஆரம்பிச்சா இப்படித்தான் தமிழ் மாறிப்போயிடும்னு தமிழ் உணர்வாளர்கள் பயப்படுறாங்க.
ஆனா நான் அப்படியெல்லாம் மாறிடும்னு பயப்படலை. ஏன்னா, வெளி மாநிலத்திலயும் வெளிநாடுகள்லயும் வாழும் தமிழ் குழந்தைகள் இப்ப இருக்குற 30 + 1 (உயிர் 12, மெய் 18, ஆயுதம் 1) அடிப்படை தமிழ் எழுத்துக்களையே எழுதப் படிக்கத் தெரியாம வளர்றாங்க. அவங்க பேசுறது மட்டும் தான் தமிழ், அதைக்கூட ஆங்கிலம் போன்ற பிற மொழி எழுத்துக்களில் தான் எழுதிப் படிக்கறாங்க. அதனால புதுசா இந்த 1,2,3,4 மேற்கோள் கொண்ட எழுத்துக்கள் அப்படியெல்லாம் தமிழைக் கெடுக்க முடியாது.
நான் என்ன சொல்றேன்னா... இந்த 1,2,3,4 மேற்கோள் கூட்டின தனி எழுத்துக்கள் நமக்கு எதுக்குமே தேவையில்லை, வடமொழி எழுத்தை எழுத விரும்புறவங்க மேலே நான் சொன்ன மாதிரி தமிழ் எழுத்துடன் தனித்தனியே மேற்கோள்களை சேர்த்து எழுதிக்கலாம்.
இதைத் தான் தமிழ் மேல அக்கறை இருக்கும் எல்லாரும் ஒருங்குறி சேர்த்தியத்துக்கு சொல்லியிருக்காங்க. ஆக, இந்த கோரிக்கை நிராகரிக்கப்படும்னு நம்புவோம்.
சரி இது போக இன்னும் மூன்று கோரிக்கை இருக்குன்னு சொன்னேன் இல்லையா? அதை எல்லாம் அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
----- தொடரும்.
( ரஜினிஃபேன்ஸ்.காம் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வரும் இந்தத் தொடர் எனது வலைப்பதிவில் மறுபதிப்பு செய்யப்படுகிறது.)