தமிழ்வழி தனிவழி 2
சென்ற பகுதியில கிரந்தம் தொடர்பான ஒரு முன்மொழிவை பார்த்தோம். இந்த பகுதியில அடுத்து ஒரு முன் மொழிவு பத்தி பார்ப்போம்.
2) ஸ்ரீ ரமண சர்மா அவர்களின் கிரந்த முன்மொழிவு: இந்த முன்மொழிவில் கிரந்தத்தின் 68 வரிவடிவங்களை ஒருங்குறியின் SMP (Supplementary Multilingual Plane - துணைப் பன்மொழி வெளி) வரிசையில் சேர்க்க கோரப்பட்டுள்ளது.
பழைய கிரந்த கல்வெட்டுகள்,ஓலைச்சுவடிகள்,செப்பேடுகள் போன்றவற்றை கணிமைப்படுத்தி அலசுவதற்காகவும், கிரந்தத்தில் எழுதப்பட்ட வடமொழி வேதநூல்களை கணிமைப்படுத்தி அவற்றை வேதம் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தவும் வழக்கொழிந்து போன வரிவடிவங்களை சேர்க்கும் SMP (Supplementary Multilingual Plane - துணைப் பன்மொழி வெளி) வரிசையில் இந்த எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு தேவையா அப்படின்னு கொஞ்சம் விவரமா பாக்கலாம். கிரந்த வரிவடிவ எழுத்துக்களை பழங்காலத்தில் தமிழையும் வடமொழியையும் எழுதுவதற்காக பயன்படுத்தினாங்க. கீழே இருக்கும் கல்வெட்டு இராசேந்திர சோழனுடைய கல்வெட்டு தஞ்சாவூர் கோயில் இராசகோபுரத்துக் கருவறையில் தென்புறத்திலுள்ள முதற்படை, இரண்டாம் படைகளில் இப்பவும் பார்க்கலாம்.
இந்த கல்வெட்டு தமிழ் வரிவடிவமும் கிரந்த வரி வடிவமும் கலந்து எழுதியிருக்காங்க (மேலதிக தகவல்)
மேலே நீங்க பார்த்த மாதிரி உலகம் முழுக்க நிறைய கல்வெட்டுக்கள் தமிழ் வரி வடிவமும் கிரந்த வரி வடிவமும் கலந்து எழுதியிருக்காங்க. தஞ்சாவூர் / தாராசுரம் கோயில்களுக்கு போனீங்கன்னா இது மாதிரி நிறைய பார்க்க முடியும்.
இந்த மாதிரி கல்வெட்டுகள் பத்தி செய்தி தெரியனும்னா இப்ப என்ன செய்யறாங்க? அந்தந்த ஊருக்கு போய் புகைப்படம் எடுத்துகிட்டு வந்து ஆய்வு செய்யறாங்க. திடீர்னு ஒரு கல்வட்டு பத்தி நமக்கு ஏதும் தகவல் வேணும்னா தேடிக் கண்டுபிடிக்கறது ரொம்ப பெரிய வேலை.
இந்த சிக்கலை தீர்க்கனும்னா நாம கல்வெட்டுக்களோட புகைப்படத்தையும் அது தரும் செய்தியையும் இணையத்துலயும், கணினி தகவல் தளங்களிலும் எழுதி சேமிச்சு வைக்கனும். அப்படி செஞ்சா எந்த கல்வெட்டு பத்தியும் கூகுள் மாதிரி தேடுபொறி வலைத்தளங்களில தேடினா கிடைக்கும். உட்கார்ந்த இடத்துல இருந்து எளிதா எந்த கல்வெட்டு பத்தியும் தேடி எடுத்து ஆய்வு செய்யலாம்.
ஆனா, இப்போ இருக்கும் ஒருங்குறியில கிரந்த வரிவடிவம் இல்லைங்கறதால இந்த மாதிரி கல்வெட்டு /ஓலைச்சுவடி /செப்பேடுகளை முழுசா தமிழில தான் எழுதி வைக்க முடியும். ஆனா இந்த கல்வெட்டுக்களோட தொன்மையான வரிவடிவம் சிதையாமல் எழுதுறது தான் நல்லது. அதுக்கு நமக்கு மேலே சொன்ன கிரந்தம் ஒருங்குறியில தேவை.
அது மட்டுமில்லை, பழங்காலத் தமிழ் பல வரி வடிவங்கள்ல எழுதப்பட்டிருக்கு. உதாரணமா, கீழே நீங்க பார்க்கும் படத்தில், எகிப்தில் கிடைத்த ஒரு உடைந்த சாடி ஒன்றில் தமிழ் பிராமி வரிவடிவத்துல தமிழ் எழுதப்பட்டிருக்கு.
இது போக வட்டெழுத்து என்ற ஒரு வரிவடிவத்தில் கூட தமிழை எழுதியிருக்காங்க. கீழே வட்டெழுத்தில் தமிழில் எழுதிய ஒரு செப்புத் தகடு பாருங்க.
இன்னும் சுருக்கமா இந்த வரிவடிவங்களின் வளர்ச்சியையும் பயன்பாட்டையும் கீழே இருக்கும் படம் மூலமா விளக்கலாம்.
மேலே இருக்கும் படத்தை பார்த்தீங்கன்னா, தமிழின் நீண்ட வரலாற்றை, கல்வெட்டுக்கள், செப்புத் தகடுகள், ஓலைச்சுவடிகள், பழமை வாய்ந்த சாடிகள் என இன்ன பிற தொல்பொருள் ஆதாரங்களின் மூலம் கணினி மயப்படுத்தும் போது அவற்றின் தொன்மையான வரிவடிவம் சிதையாமல் பதிவு செய்வது தான் வருங்காலத்துக்கு நல்லது. அப்படி செய்யனும்னா நமக்கு கிரந்தம் மட்டும் ஒருங்குறியில வந்தா பத்தாது. வட்டெழுத்து, தமிழ் பிராமி போன்ற வரிவடிவங்களையும் ஒருங்குறியின் SMP (துணைப் பன்மொழி வெளி) வரிசையில சேர்க்கச் சொல்லி நாம ஒருங்குறி சேர்த்தியத்திடம் முன்மொழியனும்.
மேலும், இந்த முன்மொழிவுல சொன்ன மாதிரி கிரந்த வரிவடிவத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட வேத பாட நூல்களை மறுபடி ஒருங்குறி எழுத்து மூலம் அச்சடிக்கனும்னாலும் ஒருங்குறியில கிரந்தம் வேணும்.
எனவே இது ஒரு உண்மையிலே தெளிவான வெளிப்படையான தேவையின் அடிப்படையில் அமைந்த முன்மொழிவு. இந்த முன்மொழிவை நிறைவேற்றுவதில் நேர்மையான மொழியியலாளர் யாருக்கும் எந்த எதிர்ப்போ சிக்கலோ ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே இந்த முன்மொழிவை நாமெல்லாம் கண்டிப்பாக ஆதரிக்கனும்.
இன்னும் இரண்டு கோரிக்கைகள் என்ன, அவற்றின் தேவை என்ன என்பதை பற்றியெல்லாம் அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
----- தொடரும்.
படங்களுக்கு நன்றி: விக்கிபீடியா.
( ரஜினிஃபேன்ஸ்.காம் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வரும் இந்தத் தொடர் எனது வலைப்பதிவில் மறுபதிப்பு செய்யப்படுகிறது.)