எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 4
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |
சென்ற இடுகையில் எழுத்துரு உருவாக்கப் பயன்படும் ஃபாண்ட் ஃபோர்ஜ் பற்றியும் அதை நிறுவுதல் குறித்தும் பார்த்தோம். ஃபாண்ட் ஃபோர்ஜ் மூலமாக நாம் விரும்பிய எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றும் வழி குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.
அதிக அளவில் படங்கள் இருப்பதால் இந்த இடுகை பதிவிறங்க சற்று நேரம் பிடிக்கும். ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து நோக்க வேண்டியிருப்பதால் பொறுமையாய் அனைத்து படங்களும் முழுமையாய் பதிவிறங்கி தெரிந்த பின் படிக்கவும்.
1) பகுதி 3 ன் கடைசியில் உள்ளது போல் ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளில் நாம் மாற்ற வேண்டிய எழுத்துருவை திறந்து கொள்ளுங்கள்.
2) நமக்கு ஏற்கனவே உள்ள ஒரு ஒருங்குறி எழுத்துரு தேவை. இதற்காக TAMUni-Tamil042.ttf என்ற சுட்டியிலிருந்து இந்த எழுத்துருவை பதிவிறக்கி வண்தட்டில் சேமித்துக் கொள்ளுங்கள்.
3) கீழ் கண்ட படத்தில் உள்ளவாறு நாம் மாற்ற வேண்டிய எழுத்துருவுடன் மேலே பதிவிறக்கம் செய்த ஒருங்குறி எழுத்துருவை "Element -> Merge Fonts" பட்டி மூலம் தெரிவு செய்து இரண்டையும் கலப்பு செய்யுங்கள்.
4) இப்போது இரு எழுத்துருக்களும் கலந்துவிட்டன. ஆனால் ஒருங்குறிக்கு உரிய இடங்களில் உரிய எழுத்துக்கள் நாம் இணைத்த எழுத்துருவின் எழுத்து வடிவில் இருக்கிறது. இதனை மாற்ற நம்முடைய எழுத்துருவின் எழுத்து வடிவினை பின் வருமாறு நகல் எடுத்து உரிய இடங்களில் ஒட்டிவிடுங்கள்.
நகல் எடுத்து ஒட்டும் போது கீழ்கண்டவாறு Warning வந்தால் "No" எனத் தெரிவு செய்யுங்கள்.
இல்லாத எழுத்து வடிவங்களை (உம். ஔ ) உருவாக்க, நம் எழுத்துருவின் இரு எழுத்துக்களையும் அடுத்தடுத்தாக நகல் எடுத்து வேண்டிய இடத்தின் எழுத்து வடிவை double click செய்து ஒட்டி ஏற்படுத்தலாம். (உம் ஒ + ள )
5) இதே போல எழுத்துருவின் கடைசி பகுதிக்கு Scroll செய்து சென்று அங்கு உள்ள எழுத்து வடிவங்களையும் நம்முடைய எழுத்துருவின் வடிவத்துக்கு மாற்றுங்கள்.
6) இப்போது வேண்டிய எழுத்து வடிவங்கள் கிடைத்துவிட்டன ஆனால் ஒருங்குறிக்கு உரிய GSUB விதிகள் எழுதப்பட வில்லை. இதற்காக தனியே ஒவ்வொரு விதியையும் எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை. TAMUni-Tamil.fea என்ற சுட்டியில் உள்ள GSUB விதிகள் அடங்கிய கோப்பை பதிவிறக்கம் செய்து வண் தகட்டில் சேமித்துக் கொள்ளுங்கள். பின்னர் "File -> Merge Feature Info" பட்டி மூலம் GSUB விதிகள் அடங்கிய கோப்பை தெரிவு செய்து இவ்விதிகளை நம் எழுத்துருவுக்குள் ஏற்றுங்கள்.
7) இவ்வாறு ஏற்றப்பட்ட விதிகளை "Element -> Font Info -> Lookups" பட்டி மூலம் பார்வையிடலாம்.
8) இப்போது எழுத்துருவின் பெயர், விளக்கம், உருவாக்கியவர் போன்ற விவரஙகளை "Element -> Font Info -> Names" பட்டி மூலம் மாற்றலாம்.
9) சரி. எல்லாம் முடிந்தது. இப்போது ஒருங்குறியாக்கபட்ட புதிய எழுத்துருவை உருவாக்க "File -> Generate Fonts" பட்டியை தெரிவு செய்யுங்கள்.
10) வேண்டிய எழுத்துரு கோப்பின் பெயர், எழுத்துரு வகை முதலிய வற்றை தெரிவு செய்து சேமியுங்கள்.
இவ்வாறு உருவாக்கப் பட்ட எழுத்துருவை மூலம் கணினியில் நிறுவி பார்வையிடுங்கள், பயன்படுத்தி சரி பாருங்கள்.
தவறுகள் ஏதும் இருந்தால் அவற்றை மேற்கண்ட படிகளில் கூறியவாறு மீண்டும் மாற்றி சேமியுங்கள்.
அவ்வளவே. முடிந்தது.
இது வரை இந்தத் தொடரில் வந்த இடுகைகளில் ஒரு எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றும் எளிய வழி குறித்து பார்த்தோம். இதன் விரிவான செயல்விளக்க ஒலி/ஒளி கோப்பினை பின்னொரு நாள் வலையேற்றுகிறேன்.
புதிதாய் ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்துருவை உருவாக்குவது எப்படி, GPOS, GSUB குறித்த மேலதிக விளக்கங்கள் போன்ற நுட்பங்களை பற்றி மேலதிகமாக அறிய விரும்புவோர் எனக்கு தனி மடல் இடவும்.
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |