எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 2
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |
சென்ற இடுகையில் பல்வேறு தமிழ் குறியேற்றங்கள் குறித்துப் பார்த்தோம் இனி எழுத்துருக்கள் குறித்துப் பார்ப்போம்.
எழுத்துருக்கள்
எழுத்துருக்கள் என்பன ஒரு எழுத்து எந்த வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும், ஒரு எழுத்துடன் இன்னொரு எழுத்தை சேர்த்தால் எவ்வாறு மாற்றமடையவேண்டும் (உ.ம்: உயிர்+மெய்=உயிர்மெய்) என்பன போன்ற சில விவரங்களை அடக்கிய ஒரு கோப்பு ஆகும். எழுத்துருக்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு குறியேற்றத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
எழுத்து வடிவம் (Glyph)
ஒரு எழுத்து எத்தகைய வடிவத்தை பெறும் என்பதை குறிப்பிடுவதே எழுத்து வடிவம் (Glyph) எனப்படும். உதாரணமாக, ‘அ’ என்ற எழுத்தை கீழ்க்கண்டவாறு பல வித வடிவங்களில் குறிக்கலாம்:
எழுத்து இட அமைப்பு (GPOS - Glyph Positioning)
ஒரு எழுத்து மற்றொரு எழுத்தோடு சேரும் போது எந்த இடத்தில்(புள்ளியில்) இரண்டையும் சேர்க்க வேண்டும் என்ற விதியே எழுத்து இட அமைப்பு (GPOS - Glyph Positioning) எனப்படும். உதாரணமாக மெய்யெழுத்து ‘க’ உடன் உயிர் எழுத்தொலி ‘ஈ’ சேரும்போது கீ என்பது உருவாகிறது, இதில் ஈ ஒலிப்புக்குறிய சுழியானது 'க' என்ற எழுத்தின் மேல் எங்கு அமையவேண்டும் என்ற விதியே GPOS ஆகும்.
க +ீ = கீ
எழுத்து மாற்றமைப்பு (GSUB - Glyph Substitution)
ஒரு எழுத்து மற்றொரு எழுத்தோடு சேரும் போது முற்றிலும் புதிய வேறொரு எழுத்தாக மாற வேண்டும் என்ற விதியே எழுத்து மாற்றமைப்பு (GSUB - Glyph Substitution) எனப்படும். உதாரணமாக ‘ஸ்’ என்ற எழுத்துடன் ‘ரீ’ என்ற எழுத்து இணையும் போது அது முற்றிலும் புதிய ‘ஸ்ரீ’ என்ற எழுத்தாக அமைய வேண்டும். இந்த விதிதான் GSUB என்பது.
ஸ் + ரீ = ஸ்ரீ
இவ்வாறு ஒரு எழுத்துருவானது எழுத்து வடிவம், எழுத்து இட அமைப்பு விதிகள் மற்றும் எழுத்து மாற்றமைப்பு விதிகள் ஆகியவை அடங்கியதாக உள்ளது. ஒரு எழுத்துருவை புதிதாக உருவாக்கவோ அல்லது ஒரு குறியேற்றத்திலிருந்து மற்றொரு குறியேற்றத்துக்கு மாற்றவோ செய்யும்போது நாம் மேற்கண்ட இம் மூன்று நுட்பங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
எழுத்துரு வகைகள்
எழுத்துருக்கள் அவற்றை வடிவமைத்த நிறுவனங்கள்/தன்னார்வலர்கள் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளாக வழங்கப்படுகின்றன. அவற்றுள் சில:
- TrueType fonts
- OpenType fonts
- POSTSCRIPT fonts
- Bitmapped (bdf, FON, NFNT) fonts
எழுத்துரு உருவாக்கப் பயன்படும் மென்பொருள்கள்
எழுத்துருக்களை உருவாக்க மற்றும் மாற்றியமைக்க தேவையான மென்பொருள் கருவிகள் பற்றி விவாதிப்போம். இன்றைய கணினி உலகில் கிடைக்கும் எழுத்துரு உருவாக்கும் மென்பொருட்கள் சில:
1) மைக்ரோசாஃப்ட் வோல்ட் (Microsoft VOLT)
இது மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாய் அளிக்கும் ஒரு மென்பொருள். இலவசம் எனினும் இது கட்டற்ற (Free) தன்மையுடையதோ அல்லது திறவூற்று (Open Source) மென்பொருளோ அல்ல. இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://groups.msn.com/MicrosoftVOLTuserscommunity/homepage.msnw
2) ஃபாண்ட் க்ரியேட்டர் (Font Creator)
இது ஹை-லாஜிக் என்ற நிறுவனம் வழங்கும் வணிக மென்பொருள். 30 நாட்கள் வரை இந்த மென்பொருளைப் இலவசமாக பயன்படுத்திப் பார்க்க முடியும். இது ஒரு தனியுரிமை மென்பொருள். கட்டற்ற (Free) தன்மையுடையதோ அல்லது திறவூற்று (Open Source) மென்பொருளோ அல்ல. இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.high-logic.com/download.html
3) ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge)
இது இலவசமாக கிடைக்கும் ஒரு கட்டற்ற (Free) திறவூற்று (Open Source) மென்பொருள். நம்முடைய எழுத்துரு உருவாக்கும்/ஒருங்குறிக்கு மாற்றும் பணிக்கு இந்த மென்பொருள் போதுமானதும் பொறுத்தமானதும் ஆகும். இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://fontforge.sourceforge.net/
இந்த ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge) மென்பொருளை நிறுவுவது எப்படி, இதற்குத் தேவையான இயங்குதளம் முதலானவை பற்றியும், ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge) மென்பொருளைப் பயன்படுத்தி எவ்வாறு ஒரு எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றலாம் என்பதை பற்றியும் அடுத்த இடுகையில் அறியலாம்.
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |
3 கருத்து(க்கள்):
வாழ்த்துக்கள் கோபி! நிறுத்திவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி!
நன்றி ஹீரோ அவர்களே..
இப்போதாவது பாடம் நடத்தத் தோணியதே.. அந்த முருகனுக்கு நன்றி சாமி..
பாடங்களைத் தொடருங்கள்..
எத்தனை எழுத்துருக்கள் வந்திருந்தாலும் நம் மனதுக்குப் பிடித்தவையாக இருப்பது 5 அல்லது 6 எழுத்துருக்களாகத்தான் இருக்கின்றன..
நானும் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறேன். முழு பாடத்தையும் படித்துவிட்டு செய்து பார்க்கிறேன்..
வாழ்க வளமுடன்
நல்ல தொடர் கோபி. உகந்த தகவல்.
நீங்க சொல்லுங்க