ஓரு பாடல் நான் கேட்டேன்
Google Buzz Logo

ஒரு அமைதியான மாலை, அழகான அந்தி நேர மஞ்சள் வானம், குளிர்ந்த தென்றல், இந்த இனிய வேளையில் அருமையான இசை கேட்கிறது.

எனது தெலுங்கு நண்பனொருவன் அமெரிக்காவிலிருந்து புதிதாய் வாங்கி வந்த ஆப்பிள் ஐ-ப்பாடில்(சுமார் 5000 பாடல்களை சேமிக்கும் திறனுடயது) அவன் பதிவேற்றிய சில தெலுங்கு பாடல்களை கேட்டுவிட்டுத் தருகிறேன் என்று வாங்கி(பிடுங்கி)யிருந்தேன்.

முதல் பாடல். முதன்முறை கேட்டபோது நெஞ்சினில் ஏதோ இனம் புரியாத குதூகலம். வெகுநாட்களாய் கேட்டுப் பழகிய பாடல் போன்ற ஒரு உணர்வு. உடன் சேர்ந்து பாட அழைத்தது அந்த இசை. அடுத்தப் பாட்டுக்கு தாவ மனசு வரவில்லை.

மீண்டும் அதே பாடலை கேட்டேன். இம்முறை மெதுவாய் ஒவ்வொரு வார்த்தையாய் அர்த்தம் புரிந்துக்கொண்டு கேட்டேன்.

இசை மட்டுமல்ல, பாடல் வரிகளும் எளிமையாயும் அருமையாயும் இருக்கிறது.

அந்த பாடல் "அவுனன்னா காதன்னா" என்ற தெலுங்கு படத்தில் வரும் "குடிகண்டலா" என்ற பாடல். இசை ஆர்.பி.பட்னாயக். பாடலை பாடியோர் எஸ்.பி.சரண், உஷா.

பாடலை எனக்கு தெரிந்த வரை தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன். என்னதான் மொழிமாற்றம் செய்தாலும் நிஜப்பாடலின் இனிமை போல வராது. (உதாரணமாக, தமிழ் சந்திரமுகியில் வரும் தெலுங்குப் பாடல் "ராரா.. சரசகு ராரா.." இதன் தமிழ் பதிப்பு தெலுங்கு சந்திரமுகியில் "வரம் நான் உன்னைத் தேடி" என்று வரும். அது தெலுங்கில் கேட்டது போல அத்தனை அருமையாய் இல்லை.)

சரி. பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்:

கோவில் மணிபோல சிரிக்கிறாய் ஏனோ
தெரியலை எனக்கு தெரியலை
கூந்தல் மணி(குஞ்சம்) போல துள்ளுகின்றாய் ஏனோ
தெரியலை எனக்கு தெரியலை
சரி என்ன சங்கதி, ஓ! பாலா
தெரியலை தெரியலை தெரியலை தெரியலையே

(கோவில் மணிபோல..)

உன் பக்கமாய் பார்த்திருந்தால் பசியும் மறக்கின்றது.
உன் பார்வையில் கட்டுண்டேன் மந்திரம் என்ன அது!
உன் பேச்சை கேட்டிருந்தால் நாளும் உருண்டோடுது
என்னோடு நீ இருந்தால் சொர்க்கமே சின்னது
மனம் ஏன் தான் இப்படி துள்ளியோடுதோ ராமா! ......தெரியலை
மல்லிகைப்பூ போல வாசம் வீசுகின்றதேனோ! ......தெரியலை
(கோவில் மணிபோல..)

உன் நிழலிலே நானுண்டா காண ஆசையிருக்கு
இந்த இன்பத்தின் பேரென்ன புதியதாக இருக்கு
என் கண்களை வேண்டாமென்றேன், உன்னை காணுவேன் என்றது
நான் எவ்வளவுதான் சொன்னாலும் இஷ்டம் அதுவென்றது
அட இதைதான் உலகம் காதல் என்கிறதோ! ......தெரியலை
அது தூராமாயிருந்தும் நெருங்கிப் போகுதே ராமா! ......தெரியலை
(கோவில் மணிபோல..)

பி.கு:நான் கவிஞனல்ல என்பதால் இனிமையான வார்த்தைகளிட்டு மொழிபெயர்க்கத் தெரியவில்லை. தெலுங்கு தெரிந்த யாரேனும் என் தமிழாக்கத்தில் தவறுகளிருந்து சுட்டிக்காட்டினால் திருத்திக்(தெரிந்து) கொள்கிறேன்.

2 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு ஜீவா சொன்னது...

நல்லா இருக்கு.
சரணின் குரல் நான் கடைசியாய் கேட்டதிலிருந்து நிறைய வித்யாசமாய் இருந்தது.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

ஜீவா,

அதுமட்டுமல்ல.. பாடகி உஷாவின் (என்னைப் பொருத்தவரை சில படங்களுக்கு முன்வரை அவரை ஒரு பாடகி என்றே ஏற்றுக்கொள்ள முடியாது) குரலில் கூட நல்ல முன்னேற்றம் தெரிகிறது.