எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |
சென்ற இடுகையில் எழுத்துரு குறித்த நுட்பங்களையும் எழுத்துரு உருவாக்கப்
பயன்படும் மென்பொருள் கருவிகளைப் பற்றியும் பார்த்தோம். அவற்றுள் நாம் பயன்படுத்த தேர்ந்தெடுத்துள்ள ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல் குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.
ஃபாண்ட் ஃபோர்ஜ் ஒரு லினக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இதனை லினக்ஸ் கணினிகளில் நிறுவ, கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து RPM கோப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். உங்கள் இயங்குதளம் உபுண்டு அடிப்படையிலானது எனில், Alien எனும் மென்பொருள் கருவி மூலமாக இந்த RPM கோப்பினை DEB கோப்பாக மாற்றி நிறுவிக் கொள்ளலாம். பதிவிறக்க சுட்டி: http://fontforge.sourceforge.net/
நாங்கள் எல்லாம் விண்டோஸ் பயனாளிகள். இந்த ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த எங்களுக்கெல்லாம் வழியே இல்லையா எனக் கேட்கிறீர்களா? வழி இருக்கிறது. CygWin என்று சொல்லக் கூடிய இலவச லினக்ஸ் எமுலேட்டர் மென்பொருளை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவி அதன் மூலம் ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம்.
அதற்கெல்லாம் எங்களுக்கு பொறுமையில்லை. விண்டோஸ் கணினியில் தரவிறக்கி எடுத்தவுடன் பயன்படுத்தும் படி எங்களுக்கு நிறுவித் தர இயலுமா என்றால், உங்களுக்கு எளிய வகையில் எல்லாமே ஆயத்த நிலையில் தரவிறக்கம் செய்ய வசதியாய் எனது தளத்தில் ஒரு கோப்பாக பதிவேற்றி வைத்துள்ளேன்.
முதலில் FontForge.7z (~ 45 MB) என்ற சுட்டியை சொடுக்கி 7-Zip கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த 7-Zip கோப்பினை திறக்க 7-Zip மென்பொருள் வேண்டும். அதை http://www.7-zip.org/ என்ற சுட்டியில் சொடுக்கி தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இப்போது 7-Zip மூலம் மேலே தரவிறக்கம் செய்த FontForge.7z கோப்பினை திறந்து உங்கள் கணினியின் வண்தகட்டில் உங்களுக்கு தேவையான இடத்தில் நிறுவிக் கொள்ளுங்கள்.
Windows Explorer மூலம் ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவிய இடத்துக்கு சென்றால் Xterm.bat என்றொரு கோப்பு இருக்கும். அதை இருமுறை சொடுக்குங்கள். உங்கள் விண்டோஸ் டாஸ்க் பாரில் கீழ்கண்டவாறு ஒரு X குறி தெரியும். மேலும் ஒரு XTerm சாளரம் திறந்து இருக்கும்.
இந்த XTerm சாளரத்தில் /usr/local/bin/fontforge.exe என்று தட்டச்சிட்டு Enter விசையை அழுத்துங்கள். கீழ் கண்டவாறு ஃபாண்ட் ஃபோர்ஜ் சாளரம் திறக்கும். (நீங்கள் மாற்ற வேண்டிய எழுத்துருக் கோப்பினை XTerm சாளரத்தில் fontforge.exe க்கு அடுத்ததாக கொடுத்தால் அந்த எழுத்துரு ஃபாண்ட் ஃபோர்ஜ் திறந்தவுடன் தெரியும் அல்லது நீங்கள் File -> Open என்ற பட்டி மூலமாகவும் உங்கள் எழுத்துருவை திறக்கலாம்).
இன்றைய இடுகையில் நாம் ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல், பின் அதன் மூலம் ஒரு எழுத்துருவை திறப்பது எப்படி என அறிந்து கொண்டோம். அடுத்த இடுகையில் அந்த எழுத்துருவை எவ்வாறு ஒருங்குறிக்கு மாற்றுவது எனத் தெரிந்து கொள்வோம்.
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |