சுதந்திரம்னா என்ன அங்கிள் ?
சுதந்திரதினத்தன்று மதியம் ஹாயாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தின் நாலரை வயது வாண்டு அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
"சுதந்திரம்ங்கிறது அடுத்தவங்க சுதந்திரத்துல தலையிடாம இருக்கிறது" என்று குழப்ப ஆரம்பித்து (இவளுக்கு இந்திய சுதந்திரம் பற்றி சொன்னால் புரியுமா என்ற சந்தேகத்தில்) தனிமனித சுதந்திரத்தைப் பற்றி விளக்கினேன்.
பொறுமையாக கேட்டவள், "அப்ப எதுக்கு சன்டே ஸ்கூல் வச்சி ப்ரேயர் முடிஞ்சதும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க?" என்றாள். சரி இவளுக்கு விளக்குவதற்கு பதிலாக டி.வி. பார்க்கச் சொன்னால் இது பற்றி ஏதாவது சொல்வார்கள் என நினைத்து டி.வியில் தமிழ் சேனல்களை திருப்ப ஆரம்பித்தேன் (முன்தினம் ஜெயா டி.வியில் "வரலாற்று வடுக்கள்" நிகழ்ச்சி சுதந்திரப் போராட்ட வரலாற்றை விளக்குவதாக இருந்தது)
விஜய் டி.விக்காரர்கள் அதிகமாக சினிமா பார்ப்பார்கள் போல, சுதந்திரப் போராட்ட வீரர் நடிகர் விஜயகாந்த் பற்றி "விஜி @ கேப்டன்" என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். பிறகு இந்தப் பாவத்தை(புன்னியத்தை?) போக்க "காமராஜ்" படம் ஒளிபரப்பினார்கள்.
ராஜ் டி.வியில் ராத்திரி 9 மணிக்கு திடீர் ஞானோதயமாக "வீரப்பாண்டிய கட்டபொம்மன்" படம் ஒளிபரப்பினார்கள்.
சன் டி.வியில் இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாம் என நினைத்தார்களோ என்னவோ முக்கால்வாசி நிகழ்ச்சிகள் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளாகவே இருந்தன.
மற்றபடி அனைத்து டி.விக்காரர்களும் வரைமுறையின்றி சுதந்திரப் போராட்ட வீரர்களான தனுஷ், ப்ரசாந்த், விஜய், ஏ.ஆர். ரகுமான், ரீமாசென், கோபிகா போன்றவர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.
இவர்கள் அனைவரும் ஏனோ இன்னோரு சுதந்திரப் போராட்ட வீரரான நடிகர் அர்ஜூன் (இவர் ஒரு சுதந்திர தினத்தில் பிறந்ததால் என்னவோ தானே இந்தியாவை தோளில் தாங்குவதாக படமெடுப்பவர்) பற்றி ஏதும் சொல்லவில்லை.
என்னவோ பண்ணித்தொலையட்டும் அவங்க சுதந்திரத்துல ஏன் தலையிடனுங்கிறீங்களா ? அதுவும் சரிதான்
இந்த நிகழ்ச்சிகளெல்லாம் பார்த்துப் பார்த்து சலித்துப் போனதாலோ என்னவோ பக்கத்து வீட்டு வாண்டு தூங்கிப்போயிருந்தாள். அப்படியே அவள் தூக்கம் கலையாமல் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன்.
அவளுக்குப் புரிந்திருக்கும் சுதந்திரம்னா என்னன்னு. உங்களுக்குப் புரிந்ததா?
0 கருத்து(க்கள்):
நீங்க சொல்லுங்க