பட்டைய கெளப்புற பட்டம் நம் பட்டம்
Google Buzz Logo

வர வர வயசாயிட்டே போறதுனால புத்தி மழுங்கிட்டே போவுதோன்னு தோனுச்சி. சின்னப் புள்ளைங்களுக்கு இருக்கிற அறிவு கூட நமக்கு இல்லியே என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

என் வலைப்பூவுல கடந்த ரெண்டு பதிவுகளைப் படிச்சிட்டு என் அறைவாசி, சின்னப் புள்ளைங்க அளவு அறிவு நமக்கும் கெடைக்கனும்னா நாம கூட சின்னப் புள்ளைங்களா மாறிடனும் அப்புடின்னான்.

துளசியக்கா சொன்ன மாதிரி குள்ளமா வளர முடியும்.. ஆனா வயசு கொறைவா வளர்றது எப்படின்னு தெரியல.

"டேய், சூப்பர் ஸ்டார் சந்திரமுகியில பட்டம் உட்டா மாதிரி நாம்மலும் பட்டம் உட்டாக்க மீச வெச்ச கொழந்தையாயிடலாம்" அப்படின்னான் என் அறைவாசி. சரின்னு பட்டம் செய்யத் தேவையானதை வாங்கி வரக் கிளம்பினோம்

கலர் காகிதம் தேடி ஊரு பூராம் அலைஞ்சும் கெடைக்கல. (பேருதான் ஹைட்டெக் சிட்டி, ஆனா உண்மையில ஒரு நல்ல சோப் வாங்கனும்னா கூட 4-5 கி.மீ போகனும்) சரின்னு நியூஸ் பேப்பர் (நேற்றைய நியூஸ் பேப்பர் இன்றைய வேஸ்ட் பேப்பர்னு சக வலைப்பதிவாளர் ஒருத்தர் சொன்ன மாதிரி), கோந்து, தென்னங்குச்சி, ட்வைன் நூல் எல்லாம் வச்சி ஒரு பட்டம் ரெடி பண்ணியாச்சி.

இந்த ஊருல யாரு நமக்கு டீல் போடப் போறாங்க, நம்ம பட்டம் தான் ஒரே பட்டம்!

அதனால் மாஞ்சா எல்லாம் இல்லாம் ஒரு சாதாரண ட்வைன் நூல் கண்டுல பட்டத்தை கட்டி மொட்டை மாடியில பறக்க வுட்டா கோத்தா அடிக்க ஆரம்பிச்சிடுச்சி (பட்டம் பறக்கவிட்டு அனுபவமில்லாதவங்களுக்கு.. கோத்தா அடிக்குதுன்னா பட்டம் மேலயும் கீழயுமா வட்டம் அடிக்குதுன்னு அர்த்தம்)




சரின்னு பட்டத்த கீழ எறக்கி நூலை ஒழுங்கா கட்டி (இதுக்கு எங்க வட்டாரத்துல சூத்திரம் போடுறதுன்னுவாங்க) திரும்பி பறக்க விட்டோம்




அப்பாடா! இந்த வாட்டி நல்லா பறந்தது.. சாயங்காலத்துல ஒரு ரெண்டு மணி நேரம் போனதே தெரியல. ஒரு வழியா பட்டத்தை எங்கயும் மாட்டாம (பொதுவா ஒழுங்கா எறக்காட்டி எலக்ட்ரிக் கம்பி, மரம், பக்கத்து மொட்டை மாடி இப்புடி எங்கையாவது மாட்டி கிழிஞ்சிதான் வரும்.. ) ஒழுங்கா எறக்கி அழகா மடிச்சி வச்சாச்சி..

இனி அடுத்த வாரம் பட்டம் உடனும். நீங்களும் பட்டம் உட்டுப் பாருங்க.... அதுல இருக்குற சுகமே தனி...

பட்டம் செய்வது எப்படின்னு தெரியனும்னா சுய முகவரியிட்ட தனி மின்னஞ்சலில் பத்து ரூபா போஸ்டல் ஆர்டர் அட்டாச் பண்ணி அனுப்புங்க ...

சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு - 2
Google Buzz Logo

போட்டோ

பள்ளிக்கூடத்துல ஒரு வகுப்புல எல்லாரையும் நிக்க வச்சி குரூப் போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாங்க. எடுத்து முடிச்சதும் அதை எல்லா மாணவர்களையும் வாங்க வைக்கனும்னு நெனச்ச டீச்சர் "ஆகா! எல்லாரும் இந்த போட்டோவ வாங்கி வச்சி, பெரியவங்களா ஆனப்புறம் பாத்தா எப்படி இருக்கும்! இதோ பாரு ரமேஷ், இப்ப இவன் டாக்டர்! இதோ பாரு சுரேஷ், இப்ப இவன் வக்கீல்.. இப்டி சொல்லிப் பாத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்"

சொல்லி முடிக்கறதுக்குள்ள கடைசி டெஸ்க்ல இருந்து குரல் மட்டும் வந்தது "இதோ பாரு டீச்சர்.. இப்ப இவங்க உயிரோட இல்ல"ன்னு.

ரத்தம்

ஒரு டீச்சர் ரத்தத்தைப் பத்தி பாடம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

டீச்சர்: நான் தலைகீழா நிக்கும் போது ரத்தம் தலைக்கு போய் மூஞ்சி செவப்பா ஆகுது இல்லையா?
பசங்க: ஆமா டீச்சர்!
டீச்சர்: அப்படின்னா நான் நேரா நிக்கும் போது ஏன் காலுக்கு ரத்தப் போய் செவப்பா ஆவறதில்லை?
பசங்க: ஏன்னா உங்க காலு காலியா இல்லை டீச்சர்!

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்

மதிய உணவு நேரம்,

பெரிய மேஜையில் பல விதமான உணவை வைத்து பசங்களை எடுத்து போட்டு சாப்பிட சொன்னாங்க. ஆப்பிள் வச்சிருந்த இடத்துல "ஒரு ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்! கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்" அப்டின்னு போர்டு வச்சிருந்தாங்க.

அந்த மேஜையின் இன்னொரு கடைசியில ஐஸ்கிரீம் வச்சிருந்த இடத்துல யாரோ ஒரு குறும்பு குழந்தை "எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ! கடவுள் ஆப்பிளைப் பார்த்துக்கிட்டு இருக்கார்"ன்னு கிறுக்கி வச்சிருந்தது

பி.கு: மேற்கண்ட கதைகள் ஒரு ஆங்கில மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப் பட்ட குட்டிக்(குழந்தை) கதைகளின் தமிழாக்கம்

சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு - 1
Google Buzz Logo

திமிங்கலம்

ஒரு டீச்சர், திமிங்கலத்தைப் பத்தி பாடம் எடுத்துகிட்டிருந்தாங்க. ஒரு குட்டிப் பொண்ணு "டீச்சர், ரமேஷோட அப்பா கடலுக்கு போனப்போ அவரைத் திமிங்கலம் முழுங்கிடிச்சி"ன்னா.

டீச்சர் உடனே கோவமா "என்ன கவனிச்ச நீ? இப்பத்தான் திமிங்கலத்தோட தொண்டை ரொம்பச் சின்னது அதால மனுசனை முழுங்க முடியாதுன்னு சொன்னேன்"ன்னாங்க.

அதுக்கு அந்தக் குட்டிப் பொண்ணு "நம்பலைன்னா போங்க டீச்சர், நான் செத்தப்புறம் சொர்கத்துக்கு போயி ரமேஷோட அப்பா கிட்ட கேட்டுக்கறேன்"ன்னா.

அதுக்கு டீச்சர் "ரமேஷோட அப்பா நரகத்துல இருந்தா என்ன பண்ணுவே"ன்னாங்க. உடனே குட்டிப் பொண்ணு "நீங்க செத்தப்புறம் போயி கேட்டுக்கங்க"ன்னா.

கடவுள்

ஒரு வரைகலை வகுப்புல குழந்தைகள் கிட்ட பென்சில் பேப்பர் எல்லாம் கொடுத்து எதையாவது வரையச் சொல்லியிருந்தாங்க. ஒவ்வொரு குழந்தையும் என்ன வரையுதுன்னு பாத்துகிட்டே வந்த டீச்சர் ஒரு குழந்தை என்ன வரையுதுன்னு கண்டுபிடிக்க முடியாம கொஞ்ச நேரம் பாத்துட்டு அந்தக் குழந்தைய "என்ன வரையுற நீ"ன்னு கேட்டங்க.

அதுக்கு "கடவுளை வரையுறேன்"ன்னுச்சி அந்த குழந்தை.

"கடவுளைத்தான் இது வரைக்கும் யாருமே பாத்ததில்லையே"ன்னாங்க டீச்சர்

"இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் பாப்பாங்க"ன்னுச்சி அந்த குழந்தை.

நரைச்ச முடி

ஒரு நாள் அம்மா சமையல் எல்லாம் முடிச்சி பாத்திரம் கழுவிக்கிட்டு இருக்கும் போது குட்டிப் பொண்ணு அம்மாவோட முடியில சிலது நரைச்சி போனதப் பாத்துட்டு எப்படி நரைச்சிப் போச்சின்னு கேட்டுச்சி

அதுக்கு அம்மா "ஒவ்வொரு முறை நீ என் பேச்சை கேக்காம தப்பு பண்ணும் போதும் எனக்கு ஒரு முடி நரைச்சிடும்"ன்னாங்க

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு அந்த சின்னப் பொண்ணு "இப்பத்தான் தெரியுது! பாட்டிக்கு எப்படி எல்லா முடியும் நரைச்சிப் போச்சி"ன்னு சொல்லீட்டு ஓடியேப் போயிடுச்சி


பி.கு: மேற்கண்ட கதைகள் ஒரு ஆங்கில மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப் பட்ட குட்டிக்(குழந்தை) கதைகளின் தமிழாக்கம்

வலைப்பூ உலகில் ஒரு கீதோபதேசம்
Google Buzz Logo

முன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம போயிட்டே இருக்கனும்! ஆமா!

கிஷ்டன்: குர்ஜுனா! இணையச் சேவைகளை மதிக்கக் கற்றுக் கொள்! வலைப்பூக்களில் அனானிமஸாய்ப் புகுந்து வலைப்பதிவர்களை கடைமட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு திட்டத் தயங்காதே!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா! வலைப்பூ வைத்திருப்போர் என் அருமை நண்பர்கள், தமிழ்மணத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பெரியோர்கள், வல்லுனர்கள், அவர்களுக்கெல்லாம் எப்படி நான் இத்தகைய பின்னூட்டம் இடுவேன்.

கிஷ்டன்: குர்ஜுனா! இந்தக் கணத்தில் உனக்கு எதிரியோ நண்பனோ யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வலைப்பதிவர்கள். எனவே, இணைய தர்மத்தை கடைப்பிடிப்பாயாக! எல்லோருக்கும் பின்னூட்டம் இடு முடிந்தவரையில் திட்டு! அதுதான் உன் கர்மம்! அதுவே தர்மமும் ஆகும்.

குர்ஜுனன்: கிஷ்டா! இவையெல்லாம் பார்த்தால் இணைத்தின் இணைப்பையே துண்டித்துக் கொள்ளத் தோன்றுகிறது

கிஷ்டன்: குர்ஜுனா! வலைப்பூ என்னும் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளாய். இந்த மாய உலகில் நீயும் மாயை உன்னால் திட்டப் படுபவரும் மாயை. வலைப்பூக்கள் தோன்றும் முன்பிருந்தே இது போல ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது குழுமங்களிலும் மற்ற வலைத்தளங்களிலும் இருந்துள்ளது. நீ செய்யாவிட்டாலும் இதை வேறொருவர் செய்வார். கீழ்த்தரமாய் பின்னூட்டம் இடுவது உன் கடமை! அதைச் செய்!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா!

கிஷ்டன்:குர்ஜுனா! திட்டப் படுபவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே! உனக்குத் தெரிந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் கேவலமான சிந்தனைகளையும் உலகுக்கு தெரியவைக்கத் தவறிவிடாதே!

குர்ஜுனன்: கிஷ்டா! கீழ்த்தரமாய் பின்னூட்டம் இட்டு, திட்டுவதற்கும் சாதி மத பேதங்களுக்கும் என்ன சம்பந்தம்.

கிஷ்டன்: குர்ஜுனா! இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கும் இன்னொருவருக்கும் மனக்கசப்பு என்றால் முதலில் சாதியைக் கொண்டு திட்டவேண்டும். அப்போது தான் சாதி சார்பாக இன்னும் சில பேர் திட்டுவதற்காக அணி திரள்வார்கள். இப்படியாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது பல விதமான மூன்றாம் தர வார்த்தைகள் வலைப்பூ உலகின் வருகையாளருக்கு அறிமுகமாகும். இதனால் தமிழ் மொழி அபரிமிதமான வளர்ச்சியடையும்.

குர்ஜுனன்: கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.

கிஷ்டன்: இத்தகைய வார்த்தைகள் உடனடியாய் எதிராளியைக் காயப் படுத்த வல்லவை. இந்த வார்த்தைகளால் மனம் பாதிக்கப் பட்டவர்களை வழக்காடு மன்றம், வழக்கறிஞர் என்றெல்லாம் சிந்திக்க வைக்குமளவுக்கு கொடூரமானவை.

குர்ஜுனன்: கிஷ்டா! திட்டுவோருக்கு இதனால் என்ன பலன்.

கிஷ்டன்: குர்ஜுனா! எல்லாம் மாயை! திட்டும் போது எழுவது ஒரு அல்ப சந்தோசம். சாதியால், மதத்தினால், இன்ன பிற காரணங்களால் வலைப்பூவுலகம் பிளவுற்று, தரமான படைப்புகள் குறைந்திடும் போது இந்த அல்ப சந்தோசம் அதிகரிக்கும். இந்தத் திட்டுக்கள் சண்டைகள் தொடர்பான பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கையில் அது பலமடங்கு பெருகி பிறந்த பலனை அடைந்த இன்பம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை யாரும் அறியார். உனது கடமை யாரையேனும் திட்டிப் பின்னூட்டம் இடுவது! இதை எப்போதும் உன் மனதில் வை!

குர்ஜுனன்:கிஷ்டா!திட்டும் போது என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய?

கிஷ்டன்: இந்த வலைப்பூ உலகம் என்னும் மாயையில் திட்டுவது எப்படி உன் கடமையோ அது போலவே உன்னோடு அணி சேர்வது சிலரது கடமை.உன் எதிரணியில் சேர்வது இன்னும் சிலரின் கடமை. எனவே பயம் ஏதும் கொள்ளாமல் உன் கடமையைச் செய்!

குர்ஜுனன்: கிஷ்டா! அறியாமையில் உழன்று கொண்டிருந்த என் கண்களைத் திறந்திட்டாய். வணங்குகிறேன்.

(கிஷ்டனின் உபதேசத்தில் மனம் தெளிவடைந்த(!) குர்ஜுணன் அடுத்த சாதிச் சண்டைக்கு பின்னூட்டமிட செல்கிறான்)

பின் குறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. என்னை அறியாமல் யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
Google Buzz Logo

சரியாத்தான் பாடி வச்சிருக்காங்க.. எப்படின்னு கேக்கறீங்களா? கீழ இருக்க படத்துல இருக்குற + ஐ கொஞ்ச நேரம் உத்துப் பாருங்க, அதை சுத்தித் தெரியற வெளிர்சிகப்பு வட்டங்கள் மறைஞ்சி சுத்திக்கிட்டிருக்கிற பச்சை வட்டம் ஒன்னு தெரியும்..




ஏன்னு யாராவது அறிவியல் பூர்வமா விளக்க முடியுமா?

(பாண்டிய மாமன்னருக்கு ஒரு மாபெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதை தீர்த்து வைக்கும் சரியான பாட்டெழுதும் புலவருக்கு... ஹி. ஹி. ப்ருந்தாவனத்தில் ஒரு பின்னூட்டம் பரிசாய் அளிக்கப்படும் :-P )

புக்கு செயினு வெள்ளாடலாம் வா மச்சி
Google Buzz Logo

என்னிய ஆட்டத்துக்கு சேத்திகின என்னென்னிக்கும் லவ்வோட பாலாவுக்கு ஒரு சலாம் போட்டுக்றம்பா!

அப்பாலிக்கா உன்னும் யார்னா என்னிய கூப்டிருந்தா(ஹக்காங்... பெரிய இவுரு.. இன்னும் நாலு பேரு இன்விடேசன் குட்த்தாத்தான் எய்துவியா?) அவங்க அல்லாருக்கும் ஒரு டாங்க்ஸ்பா.

இன்னாடா இப்ப பாத்து ஒரு சினி இஸ்டாரு இண்ட்ரியூ கூட இல்லியேன்னு படா ஃபீலிங்ஸ் ஆவுது.(அதுல இர்ந்து ஒரு நாலஞ்சி இங்கிலிபீஸ் புக்கு பேரு எட்த்து உட்டா ஃபிகர்ல்லாம் நம்மளையப் பாத்து ஒரு லுக்கு உடாது?)

என்னாவோ சேரி.. நம்ம கதிய சொல்றேன்.. கேளு மச்சி!

கம்மி-ஜாஸ்தி லுக்கு உட சொல்லோ நம்ம கதயும் அல்வாநகர் விஜய் கத மாதிரியேதான் கீது

தமுக்கூண்டா இர்க்கொ சொல்லோ சிர்வர் மலரு, பூந்தளிரு, அம்புலிமாமா, லயன்காமிக்சு, இதுல்லாம் பட்ச்சிகினு இர்ந்தேன்

மீச மொளச்ச ஒடனே பட்ச்சது வேற புக்கு.. அதெல்லாம் கண்டுக்காத நைனா வயசு கோளாறு (தோடா... வண்ட்டாரு உத்தமப் புருசரு).

மீச மொளச்ச கொஞ்சம் நாளுல பாக்கீட் நாவல், சூப்பரு நாவல், க்ரைமு நாவல் இப்டி தமிளு நாவல் எல்லாத்தையும் பட்ச்சிகினு கெடப்பேன் (பட்டுக்கோட்டை பிரபாகரோட பரத்து-சுசி, சுபாவோட நரேனு-வைஜி, ராஜேஷ்குமாரோட விவேக்கு-ரூபலா, சுஜாதாத்தாவோட கனேசு-வசந்து அல்லாரியும் புடிக்கும்பா).

அப்பாலிக்கா தமிளு இஸ்ட்ரி மேல இண்ட்ரஸ்ட் ஆயி பொன்னியின் செல்வன், கடல் புறா, பாலகுமாரரு எய்துன உடையார், இப்புடி ஒரு ரெண்டு மூனு இஸ்ட்ரி நாவல் மேல உயுந்து பொரண்டன்.

கடேசியா தொளிலப் பாக்க அங்க இங்க போவ சொல்லோ கார்ஃபீல்டு காமிக்ஸ், ப்ரைன் டீசர் வெள்ளாட்டு புக்கு, ஜுல்ஸ்வெர்ன் சயின்ஸ் பிக்ஸன், சுஜாதாவோட சிரிரங்கத்து தேவத புக்கு இப்புடி சால்னாக் கடைல பிரியாணிய பிரிச்சி புரொட்டாவோட வச்சி சைடு கேப்புல கல்யாணி பீரை ஊத்திகின மாரி கதம்பமா பட்ச்சதுல மூளை கொயம்பிப் போய் பாய பிராண்டிக்கினு கீரேன்.

அப்பாலிக்கா டச்சு உட்டு போச்சிப்பா. எப்பன்னா ரயில்ல போவ சொல்லோ எதுனா பாத்தா வாங்கி படிக்கறன்னு ஊட்ல கடாசிடுவேன் (என்னிக்காச்சும் பாத்து டயம் கெடச்சா அப்புடி கடாசினதுல ஒன்னு ரண்டு எட்த்து பொரட்டிப் பாப்பேன்)

நம்முளுக்கு இந்த இங்கிலிபீஸ் புக்குல்லாம் அவ்ளோ தெர்யாதுபா. எங்கூட்டுகாரியாவப் போற ஃபிகருதான் அப்பப்ப ஜெஃப்ரி ஆர்ச்சரு, சிட்னி செல்டனு, அவுரு இவுருன்னு கூவிகினு கெடக்கும். தாம்மே! சும்மா கெடன்னு ஒரு கொரலு உட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவேன்

இப்ப இன்னா படிக்கரன்றியா? எல்லாம் எணையத்துல படிக்கற்தோட செரி.. பேப்பர் கடில புக்கு வாங்கி பட்ச்சே ரொம்ப நாளு ஆவுது மாம்ஸூ

செரி செரி இப்ப மேட்டருக்கு வர்ரேன்

எவ்ளோ புக்கு வச்சிகீற உன்னாண்ட அப்பிடின்னு கேட்டினாக்க, நம்ம கைல ஒரு நாலஞ்சி கலக்டர்ஸ்(கலக்டருக்கு தமிளுல பொறுக்கின்னுவாங்கபா) பேக் புக்குங்கோ இர்க்குது அவ்ளோதான். (மத்த சுட்ட புக்குல்லாம் ஆட்டதுல சேத்துக்கலான்றியா?)

கட்ச்சியா பட்ச்ச புக்கு: Journey to the Center of the Earth - Jules Vern

ரீடிங் உடனும்னு நென்ச்சிகினே கீற புக்கு:
20,000 Leagues Under the Sea - Jules Vern
(வாங்கி வெச்சி ரொம்ப நாளாவுது)

கட்ச்சியா வாங்குன புக்கு:
Jules Vern Classics - Collectors pack

பட்ச்சதுல புட்ச்ச இங்கிலிபீஸ் புக்குங்கோ(புட்ச்ச வர்ஸைல இல்ல):
1) Rapidex English speaking Course (ரவுசு தாங்கலடா சாமி!)
2) Garfield Comics - Collectors pack
3) Journey to the Center of the Earth - Jules Vern
4) From the Earth to the Moon - Jules Vern
5) Harry Potter - Collectors pack -இன்னும் ஆறாவது புக்கு (அதாம்பா ஆப் பளடட் பிரின்ஸு) வாங்கிப் படிக்கனும். நெஜம்மா படத்தவிட புக்கு படிக்க சொல்ல சூப்பரா கீது.

பட்ச்சதுல புட்ச்ச தமிளு புக்குங்கோ(புட்ச்ச வர்ஸைல இல்ல):
1) பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி
2) கடல் புறா - சாண்டில்யன்
3) கொலையுதிர்காலம் - சுஜாதா
4) தொட்டால் தொடரும் - பட்டுக்கோட்டை பிரபாகர்
5) அஷ்டாவக்ரன் - எண்டமூரி வீரேந்திர நாத் (தெலுங்கு, மலையாளம் கன்னடத்துல கூட வன்ச்சி இந்த கத)
6) வீர இளைஞர்களுக்கு - சுவாமி விவேகானந்தர்


செரி உன்னிய இன்விட் பண்ண மாரி நீ யாரப் பண்ணுவேனு கேக்றயா மச்சி? இந்த புட்ச்சிக்க

1) கொசப்பேட்ட குப்புசாமி(நம்ம கே.வி.ஆர் ஏற்கனவே சொல்ட்டாரு, ஆனாக்க நம்ம ஜிகிரி தோஸ்த்து, ரிக்சா வலிக்கிற குப்ஸாமி இன்னா சொல்றாருன்னு பாக்கலாம்)
2) துளசியக்கா
3) குப்பை அன்பு
4) மூர்த்தி
5) கொங்கு ராசா
6) மாயவரத்தான்
7) உதவாக்கரை க்ருபா சங்கர்

இன்னாது.. அஞ்சி பேருதான் சொல்லனுமா? இன்னா மச்சி... இம்மாந் நேரம் பேசிகினு கீறேன்... ஒரு கொசுறு கெடயாதா? அப்பவும் ஆறுதான்றயா கொசுறுக்கு கொசுறா உன்னோன்னு வெச்சிக்க இன்னா ?

ஏயு பேர கூப்டு கீறேன். எத்தினி பேரு வெளாட்டுக்கு வராங்கன்னு பாக்கலாம்.

சரி டயம் ஆவுது .. அல்லாருக்கும் டாட்டா சொல்லிக்கறான் கோபி..

வர்ட்டா!.. போலாம் ரெய் ரெய் ரெய்ய்ய்ய்ட்...

பி.கு:நகைச்சுவைக்காக சென்னைத் தமிழில் எழுதப்படுள்ள இந்தப் பதிவை தமிழ்க் குடிதாங்கிகள் யாரும் தார் பூசி அழித்திட வேண்டாம் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் (மீட்டிங் முடிஞ்சாக்க இஸ்டேஜ் பின்னால வாங்கப்பா அல்லாரையும் பெசலா சிக்கன் பிரியானி பார்சல், வாட்டர் பாக்கிட்டோட கவுன்ச்சிடுரேன்)

இதுக்கும் டாட்டாவுக்கும் சம்பந்தமில்லை
Google Buzz Logo

ஹி. ஹி. சும்மா உலூலூவாய்க்கு...



அட இதுவும் தமிழ் வலைப்பூ தானுங்க (என்ன சொன்னாலும் தமிழ்மணத்துக்கு புரியமாட்டேங்குதுப்பா.)

ஹூம்... இப்படி ரெண்டு மூனு வரி தமிழ்ல போட்டா தமிழ்மணம் பட்டியல்ல வருதான்னு பாக்கலாம்...

எதிர்பாராது வந்த பிறந்தநாள் பரிசு
Google Buzz Logo

பொதுவா பிறந்தநாளை அமைதியா குடும்பத்தோட ஏதாவது ஒரு குழந்தைகள் வாழும் கோவிலுக்கு(எதுன்னு அங்கு சென்றவர்களுக்கு புரியும்) சென்று நிம்மதியா இருந்து சந்தோசமா திரும்பி வருவேன்.

இந்த முறை திருமணத்துக்கு முன் கடைசி பிறந்தநாள் என்பதால் நண்பர்களோடு மகிழ்ந்திருக்க எண்ணி ஹைத்ராபாத்துலயே தங்கிட்டேன். நள்ளிரவு கேக் வெட்டி அழுகிய முட்டை/கேக் அடித்து விளையாடி மேற்கத்திய முறையில் அழிச்சாட்டியம் பண்ணி முடிச்சி குறைத்தூக்கம் போட்டு எந்திரிச்சி காலைக்கடன் எல்லாம் முடிச்சா அம்மணி கிட்ட இருந்து தொலைபேசி! (எல்லாரும் நள்ளிரவு 12:00 வாழ்த்துவாங்க, ஆனா எங்க அம்மணி நான் பிறந்த மணித்துளியில் கூப்பிட்டு பேசுவாங்க)

அதுல பேசி முடிச்சி, தயாராகி இனிப்பெல்லாம் வாங்கிகிட்டு அலுவலகம் போய் வேலைய ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சி, அப்றமா தனி மின்னஞ்சல்களை பார்க்க ஆரம்பித்தேன். நெருங்கிய நண்பர்களின் வாழ்த்துச் செய்திகள்.. எல்லாம் படிச்சுட்டு பாத்தா மதுரையைச் சேர்ந்த பத்திரிக்கையாள நண்பரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதுல தினமலர் டாட்காம் பகுதி சுட்டி கொடுத்து (இல்லைன்னா இன்றைய தினமலர் நாளிதழில் இரண்டாம் பக்கம்) போய் பாருன்னு எழுதியிருந்தாரு!

அட! இந்தப் பாமரனின் வலைப்பூவைப் பத்தி ஒரு பத்தி!

கணங்கள்,ப்ருந்தாவனம்,என்றென்றும் அன்புடன் பாலா,இட்லிவடை,அல்வாசிட்டி,மாயவரத்தான்,லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.. ஆகியவற்றின் சுட்டிகளோட...

இன்று என் பிறந்தநாள் என்று அறியாமலேயே எனக்கு எதிர்பாராத பிறந்தநாள் பரிசளித்த அந்த மதுரைப் பத்திரிக்கையாளருக்கு(பேரைச் சொல்லவா.. அது நியாயமாகுமா...)

இதயத்திலிருந்து நன்றி!