அண்ணா பல்கலை பழைய மன்னராட்சி
முகமூடியின் அண்ணா பல்கலை மன்னராட்சி பதிவைப் பார்த்ததும் இதைப் பதிக்கனும்னு தோனுச்சி.
இது அண்ணா பல்கலையில் இப்போதிருக்கும் துனைவேந்தருக்கு முன்னிருந்த பாலகுரு மன்னருக்கு முன்னிருந்த கலையான நிதி மன்னர் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவம்:
அப்போது தான் சுற்றுப்புற சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த சமயம்.
காலையில் நேரம்..
நண்பனொருவனும் உடன் படித்த இன்னொரு அம்மணியும் மாலை நடக்க இருந்த தேர்வுக்கு உலோகவியல் பாடப்பிரிவின் எதிர்ப்புறமிருந்த மரத்தடி மேடையில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
இருவரும் படிப்பு முடிந்து பணியில் அமர்ந்ததும் திருமணம் செய்து கொள்ள எண்ணியிருந்தவர்கள். எனவே அவர்கள் அந்நியோன்னியத்தை கெடுக்க விரும்பாமல் வழக்கம் போல அருகிலிருந்த இன்னோரு மரத்தடி மேடையில் அமர்ந்து நானும் இன்னொரு நண்பனும் படித்துக் கொண்டிருந்தோம்.
சிறிது நேரம் கழித்து மிகவும் வெறுமையாய் உணர்ந்ததால் (அதானே படிக்கும் போது தான் நமக்கு போர் அடிக்கும்...) கேண்டீனில் போய் பூனம் கேசர்பாதாம் (அறிமுகமான புதிது.. கேண்டீனில் சலுகை விலை) அருந்திவிட்டு வரலாம் என நானும் என்னுடன் படித்த நண்பனும் மட்டும் சென்றோம்.
சற்று நேரம் கழித்து திரும்பி வந்தால் கலையான நிதி மன்னர் காரசாரமாய் நண்பனிடமும் அம்மணியிடமும் கத்திக் கொண்டிருந்தார்..
விஷயம் இது தான்... அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களின் அடையாள அட்டையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு "பெற்றோரை கூட்டிவா.. ஆ.. ஊ.." என கத்தியுள்ளார். (நல்லா கவனிங்க இது ஏதோ ஒரு ஆரம்ப பாடசாலையில நடக்கலை.. முதுநிலை பட்டய படிப்பின் போது நடந்தது). நண்பன் பதிலுக்கு கத்தியுள்ளான்.
அப்றம் என்ன.. கலையான மன்னர் வேகமாய் அந்த இடத்தைவிட்டு போய்விட்டார்.
அப்புறம் எப்படி அடையாள அட்டையை திரும்பி வாங்கினாங்கன்னு கேக்கறீங்களா.. அந்த நண்பனின் தந்தை அப்போது அண்ணா பல்கலையில் ஒரு பாடப்பிரிவின் தலைவராய் இருந்தவர். அவருக்கு நண்பனின் காதல் விஷயம் நன்கு தெரியும். கலையான மன்னர் போன உடனே அவர் பின்னாலேயே இவர் போய் "எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்று சொல்லி அடையாள அட்டையை திரும்ப வாங்கிக் கொடுத்தார். (கொடுக்கும் போது கலையான நிதி மன்னரின் முகத்தில் தெரிந்த ஏமாற்ற உணர்ச்சியை காணக் கண் கோடி பத்தாது. இன்னிக்கு நெனச்சி பாத்தாலும் மறக்கமுடியாது அந்த முகத்தை..)
பின் குறிப்பு: இந்தப் பதிவு "டீ.சர்ட் அணிய தடை" சம்பந்தமானதல்ல. அந்த விதி சம்பந்தமான எனது கருத்து:
மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் படிக்கவும்: விதிமுறைகள் மீறுவதற்கே - Rules are made to be broken.