ஓரு பாடல் நான் கேட்டேன்
Google Buzz Logo

ஒரு அமைதியான மாலை, அழகான அந்தி நேர மஞ்சள் வானம், குளிர்ந்த தென்றல், இந்த இனிய வேளையில் அருமையான இசை கேட்கிறது.

எனது தெலுங்கு நண்பனொருவன் அமெரிக்காவிலிருந்து புதிதாய் வாங்கி வந்த ஆப்பிள் ஐ-ப்பாடில்(சுமார் 5000 பாடல்களை சேமிக்கும் திறனுடயது) அவன் பதிவேற்றிய சில தெலுங்கு பாடல்களை கேட்டுவிட்டுத் தருகிறேன் என்று வாங்கி(பிடுங்கி)யிருந்தேன்.

முதல் பாடல். முதன்முறை கேட்டபோது நெஞ்சினில் ஏதோ இனம் புரியாத குதூகலம். வெகுநாட்களாய் கேட்டுப் பழகிய பாடல் போன்ற ஒரு உணர்வு. உடன் சேர்ந்து பாட அழைத்தது அந்த இசை. அடுத்தப் பாட்டுக்கு தாவ மனசு வரவில்லை.

மீண்டும் அதே பாடலை கேட்டேன். இம்முறை மெதுவாய் ஒவ்வொரு வார்த்தையாய் அர்த்தம் புரிந்துக்கொண்டு கேட்டேன்.

இசை மட்டுமல்ல, பாடல் வரிகளும் எளிமையாயும் அருமையாயும் இருக்கிறது.

அந்த பாடல் "அவுனன்னா காதன்னா" என்ற தெலுங்கு படத்தில் வரும் "குடிகண்டலா" என்ற பாடல். இசை ஆர்.பி.பட்னாயக். பாடலை பாடியோர் எஸ்.பி.சரண், உஷா.

பாடலை எனக்கு தெரிந்த வரை தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன். என்னதான் மொழிமாற்றம் செய்தாலும் நிஜப்பாடலின் இனிமை போல வராது. (உதாரணமாக, தமிழ் சந்திரமுகியில் வரும் தெலுங்குப் பாடல் "ராரா.. சரசகு ராரா.." இதன் தமிழ் பதிப்பு தெலுங்கு சந்திரமுகியில் "வரம் நான் உன்னைத் தேடி" என்று வரும். அது தெலுங்கில் கேட்டது போல அத்தனை அருமையாய் இல்லை.)

சரி. பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்:

கோவில் மணிபோல சிரிக்கிறாய் ஏனோ
தெரியலை எனக்கு தெரியலை
கூந்தல் மணி(குஞ்சம்) போல துள்ளுகின்றாய் ஏனோ
தெரியலை எனக்கு தெரியலை
சரி என்ன சங்கதி, ஓ! பாலா
தெரியலை தெரியலை தெரியலை தெரியலையே

(கோவில் மணிபோல..)

உன் பக்கமாய் பார்த்திருந்தால் பசியும் மறக்கின்றது.
உன் பார்வையில் கட்டுண்டேன் மந்திரம் என்ன அது!
உன் பேச்சை கேட்டிருந்தால் நாளும் உருண்டோடுது
என்னோடு நீ இருந்தால் சொர்க்கமே சின்னது
மனம் ஏன் தான் இப்படி துள்ளியோடுதோ ராமா! ......தெரியலை
மல்லிகைப்பூ போல வாசம் வீசுகின்றதேனோ! ......தெரியலை
(கோவில் மணிபோல..)

உன் நிழலிலே நானுண்டா காண ஆசையிருக்கு
இந்த இன்பத்தின் பேரென்ன புதியதாக இருக்கு
என் கண்களை வேண்டாமென்றேன், உன்னை காணுவேன் என்றது
நான் எவ்வளவுதான் சொன்னாலும் இஷ்டம் அதுவென்றது
அட இதைதான் உலகம் காதல் என்கிறதோ! ......தெரியலை
அது தூராமாயிருந்தும் நெருங்கிப் போகுதே ராமா! ......தெரியலை
(கோவில் மணிபோல..)

பி.கு:நான் கவிஞனல்ல என்பதால் இனிமையான வார்த்தைகளிட்டு மொழிபெயர்க்கத் தெரியவில்லை. தெலுங்கு தெரிந்த யாரேனும் என் தமிழாக்கத்தில் தவறுகளிருந்து சுட்டிக்காட்டினால் திருத்திக்(தெரிந்து) கொள்கிறேன்.

நிலாச்சாரலில் மென்பொருள் வல்லுனனின் பராசக்தி
Google Buzz Logo

சற்று நேரம் ஓய்வாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சரி, பழைய மின்னஞ்சல்களைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் வலைதளங்களை மேய்ந்து பல நாட்களாயிற்றே என எண்ணியிருந்தேன்.

மின்னஞ்சல்களுள் ஒன்று "மென்பொருள் வல்லுனன் பராசக்தி பட நீதிமன்ற வசனம் பேசினால் எப்படியிருக்கும்" என்ற தலைப்புடன் வந்திருந்தது.

மின்னஞ்சலில் இருந்த சுட்டியைத் தட்டினால், லண்டனைச் சேர்ந்த நிலாச்சாரல் வலைத்தளத்திற்கு சென்றது.

ஆஹா! மிக அருமையான நகைச்சுவை!

பிறகு அந்தத் தளத்திலுள்ள ஸ்பெஷல்ஸ் மற்றும் சில பகுதிகளை மேம்போக்காய் நோட்டமிட்ட பிறகு பார்த்தால், இத்தளத்தின் பின்னனியில் ஒரு உலகளாவிய குழுவே இருப்பது தெரிய வந்தது.

வளர்க நிலாச்சாரல் குழுவினரின் பணி! வாழ்க தாய் தமிழ் மொழி!

சரி, சரி,இந்த நிலாச்சாரலை அனுபவிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.

சில ஆங்கில வார்த்தைகள் தோன்றிய பின்னனி
Google Buzz Logo

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில ஆங்கில சொற்கள் உண்மையில் வேறு சில ஆங்கில வார்த்தைகளிலிருந்து தோன்றியவை..

உதாரணமாக,

MOPED என்ற சொல் 'Motorized Pedaling' என்பதன் சுருக்கம்.

POP MUSIC என்ற சொல் 'Popular Music'லிருந்து தோன்றியது

BUS என்ற சொல் 'Omnibus' (அனைவரும் என்று பொருள்) என்பதன் சுருக்கம்.

FORTNIGHT என்பது 'Fourteen Nights' (பதினான்கு இரவுகள்).

DRAWING ROOM என்பது 'withdrawing room' அதாவது உணவுக்குப் பின் விருந்தினர் ஓய்வெடுக்கும் அறை

NEWS என்பது (N)orth , (E)ast, (W)est மற்றும் (S)outh ஆகிய நான்கு திசையிலிருந்து வரும் செய்தி.

AGMARK என்ற சொல் 'Agricultural Marketing'லிருந்து தோன்றியது.

JOURNAL என்ற சொல் 'Journey for a day'லிருந்து தோன்றியது.

QUEUE என்ற சொல் 'Queen's Quest'லிருந்து தோன்றியது. அரசாட்சி காலத்தில் ராணியைப் பார்க்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அந்த வழக்கத்தில் தோன்றியதே இந்தச் சொல்

TIPS என்ற சொல் 'To Insure Prompt Service' என்பதன் சுருக்கம்.

JEEP என்ற சொல் 'General Purpose Vehicle (GP)'என்பதன் சுருக்கம். பிற்காலத்தில் GP என்பது JEEP ஆனது.

இது போல தமிழிலும் பல சொற்கள் உண்மையில் வார்த்தைகளின் சுருக்கம்

உங்களுக்கு தெரிந்த இது போன்ற (வார்த்தைகள் சுருங்கி உருவான) தமிழ் சொற்களை சொல்லுங்களேன்...