ரஜினி செய்தது சரியா?
Google Buzz Logo

ரஜினி நிலம் வாங்கியது தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த தகவலில் வருமான வரி ஏய்ப்பு அல்லது கருப்பு பணம் என்பது எப்படி ஏற்படுகிறது எனப் பார்ப்போம்.

பொதுவாக ஏன் நிலம் வாங்கிய விலையை விட குறைவாக பதிவு செய்கிறார்கள்?

  1. மற்றவர் நலனுக்கு. ஒருவர் வாங்கிய நிலத்திற்கான பதிவு மதிப்பு பொதுவாக அதே பகுதியில் கடைசியாக பதிவு செய்த நிலத்தின் மதிப்போ அல்லது சற்று அதிகமாகவோ கொள்ளப்படுகிறது. இந்த செய்தியில் ரஜினி வாங்கிய நிலத்தின் உண்மை மதிப்புக்கு பதிவு செய்திருந்தால் அடுத்து அந்த பகுதியில் நிலம் வாங்குவோர் அனைவரும் ஏக்கருக்கு 21 லட்சம் அல்லது அதற்கு அதிகமாகத் தான் பதிவு செய்ய வேண்டியிருக்கும் (நிலப்பதிவில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. உண்மையில் நில மதிப்பீடு எப்படி செய்யப்படுகிறது என எனக்கு தெரியாது)
  2. வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணப் புழக்கத்துக்கு. ஒரு ஏக்கர் 21 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 2.3 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்வதன் மூலம்
    • வாங்குபவருக்கு பதிவு செய்த விலையை விட ஏக்கருக்கு 18.7 லட்சம் கூடுதல் எனினும், நிலம் பதிவு செய்யும் கட்டணம் (9-10% நில மதிப்பு) மற்றும் ஒவ்வொரு வருடத்துக்குமான சொத்து வரி ஆகியவை மிகவும் குறைகிறது
    • விற்பவருக்கு தம் சொத்தை விற்பதால் ஏற்படும் வருமானத்தின் மதிப்பில் ஏக்கருக்கு 18.7 லட்சம் கணக்கில் காட்டாததால் அதற்கான வருமான வரி கட்டத் தேவையில்லை
    • ஏக்கருக்கு 18.7 லட்சம் ரூபாய் புழக்கத்திலுள்ள கணக்கில் வராத கருப்புப் பண வரிசையில் கூடுதலாகிறது
இது போல குறைந்த மதிப்பில் செய்வதால் அரசுக்கு 2004-2005ல் சென்னையில் மட்டும் ஏற்பட்ட நட்டம் பற்றிய ஒரு தணிக்கை அறிக்கை இங்கே

இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் நிலம் பதிவு செய்யும் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினி கருப்பு பணத்திற்கு எதிரான பாத்திரத்தில் நடித்தார் என்பதற்காக அவர் செய்தது இது போல நிலம் பதிவு செய்யும் ஏனையோர் செய்வதை விட "கூடுதல் தவறு" என்பது நகைச்சுவை. உண்மையில் சிவாஜி படத்தின் முற்பகுதி கதை போலத்தான் ரஜினி நடந்திருக்கிறார். (இவர் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை, இவருக்கு நிலம் விற்றவர் தான் கணக்கில் வராத கருப்புப் பணமாக பெற்றிருக்கிறார்)

தவறுதல் மனித இயல்பு. ரஜினியும் மனிதரே. ரஜினி ரசிகன் என்பதற்காக ரஜினியின் தவறுகளுக்கெல்லாம் சப்பை கட்டு கட்டிக்கொண்டிருக்க வேண்டிய தேவை ஒரு நல்ல ரசிகனுக்கு இல்லை.

ரஜினியின் ஆளுமை போலவே அவர் செய்யும் சிறு தவறும் பல மடங்காக பெரிதாக்கப்பட்டு ஊடக விற்பனைக்கு பலிகடா ஆக்கப்படுகிறது. ரஜினி என்ற சக்தியின் பெயரில் எந்த செய்தியைப் போட்டாலும் காசு பண்ணலாம் என்பது பல ஊடகத்துறையினர் அறிந்தது. அதை இம்முறை செயல்படுத்தி பலன் கண்டது குமுதம் ரிப்போர்டர்.

அவர் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று கருத்து சொல்லிக் கொண்டிருப்பதை விட, இது போன்ற சூழ்நிலையில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்றால்:

1) நான் முதலில் வாங்கிய போது விற்றவர் ஏற்படுத்திய கருப்புப் பணத்தை அவராய் நினைத்தால் மட்டுமே ஒழிக்க முடியும். எனவே அதை இப்போது என்னளவில் திருத்திக் கொள்ள முடியாது.

2) என் வரையில் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை என்ற நிம்மதியும் இரவில் நல்ல தூக்கமும் பெற
  • அரசு குறைமதிப்பு சொத்துக்கள் குறித்த தணிக்கை நடத்தும் போது நான் வாங்கிய நிலத்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்து அபராதத்துடன் மறுபதிவு செய்து கொள்வேன் (அல்லது)
  • எனக்கு தெரிந்த ஒருவருக்கு விற்று அதை மீண்டும் வாங்கி உண்மையான நில மதிப்புக்கு மறுபதிவு செய்து கொள்வேன். இதனால் ஏற்படும் நிலப்பதிவு செலவுகளுக்கும் நண்பர் செலுத்த வேண்டிய வருமான வரிக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்வேன்.
ஆயினும் சட்டப்படி இது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியவில்லை.

இதே செய்தியில் விக்ரம் நிலம் வாங்கியது பற்றியும் செய்தி வந்துள்ளது. அது உண்மையானால், அவர் நடித்த அன்னியன் படத்தில் இதே போன்ற நிலப்பதிவுக் காட்சியில் அவர் பேசிய வசனத்துக்கு ஏற்ப நடந்திருக்கிறார். அரசுக்கு நட்டம் ஏற்படுத்தவில்லை என்பதில் அவருக்கு பாராட்டுக்கள்.