தமிழ்மணம் - 5, கேள்விகள் - 6, காசியும் நானும்
Google Buzz Logo

தமிழ்மண ஐந்தாண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துகள். இந்த வார தமிழ்மண நட்சத்திரமான காசியின் கேள்விகளுக்கு எனது பதில்கள்:

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இல்லை. இன்றைக்கு தமிழிணையப் பயனர்களில் பலர் தங்கள் துறையில் மிகுந்த ஆளுமையுடைய வல்லுனர்கள். ஆனால் தாங்கள் இணையத்துக்கு வருவது பொழுதுபோக்க என்ற எண்ணம் அவர்களிடையே மிகுந்திருப்பதால் பொழுது போக்கு, கருத்து உரசல், பின் தனிப்பட்ட உரசல், இப்படியாகி தேவையற்ற அரசியல், குழு மனப்பான்மை இவையே எஞ்சி நிற்கிறது.

இதை விட்டொழித்து பல துறை வல்லுனர்கள் அவர்கள் அறிந்ததை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் எளிதாக்கி எழுதினாலே இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் போதுமான அளவு பெருகும். உள்ளடக்கம் பெருகினால் தமிழிணையப் புழக்கமும் பெருகும்.


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).


தகவல் நுட்பப் புரட்சியின் விளைவுகளை பிற இந்திய மொழிகளோடு (இந்தி நீங்கலாக) ஒப்பிடும்போது தமிழ் மொழி மிகச் சிறப்பாகவே பயன்படுத்தி வருவதாக நான் கருதுகிறேன்.

அவற்றுள் ஊடாடுதல் மற்றும் இதழ்கள்,பதிவுகள் மிகப் பரவலாய் இருக்கிறது. குறும்பதிவு(microblogs) மற்றும் வெப் 2.0 போன்ற நுட்பங்களில் நாம் கடக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

தமிழ் மின்வணிகப் பயன்பாடு நான் அறிந்த வரை வெகு சிலவே. இணைய வணிகர்கள் முன்னெடுத்தால் இன்னும் பரவலாக்க இயலும்.

அரசாளுமையை முற்றிலுமாய் "இணைய மயமாக்கவே" இன்னும் இயலாத போது அதை "தமிழிணைய மயமாக்க" இன்னும் எவ்வளவு ஆண்டுகள் பிடிக்கும் எனத் தெரியவில்லை. இந்த வகையில் ஆந்திர அரசை நாம் முன்னோடியாகக் கொள்ளலாம்.


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

நாம் பயன்படுத்தும் தமிழ்நுட்ப மென்பொருள்கள், ஆங்கில மென்பொருட்களின் தமிழாக்கத் திட்டங்கள், நூலகம், விக்கிப்பீடியா போன்ற தமிழ் உள்ளடக்க திட்டங்கள் உட்பட இன்று தமிழிணைய பயன்பாட்டுக்கு தேவையானவற்றை உருவாக்கியதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது.

"கடை விரித்தேன் கொள்வார் இல்லை" என்று இத்தகைய நுட்பத் தன்னார்வலர்கள் எண்ணாத வண்ணம் இவர்களின் படைப்புகளை இணையத்தின் வாயிலாகவும், இணையத் தொடர்பில்லாத பொது மக்களிடையே ஊர் ஊராய் சென்று பயிலரங்குகள் நடத்தி அவர்களிடையே தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் இன்னொரு வகை தன்னார்வலர்களின் பங்கு இன்னும் சிறப்பானது.

இவர்களின் முன்னெடுப்பில் இனி வரும் காலத்தில் தமிழிணையத்தின் வீச்சு இன்னும் வலுவாயிருக்கும்.

தமிழ் நுட்ப தன்னார்வலர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டியன என எண்ணும் சில:
 • உடற்குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் வண்ணம் தமிழ் மென்பொருள்கள் (உரை - ஒலி, ஒலி - உரை மாற்றிகள் போன்றவை) செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும்
 • பழைய ஆவணங்களை உரையாக்கி பாதுகாக்கும் வண்ணம் மின்வருடி(Scan) பின் அதை உரையாக்கும் (OCR - Optical Code Reading) மென்பொருள்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும்
 • தமிழ் விளையாட்டுகள், பண்பாட்டை எதிரொலிக்கும் பொழுது போக்குகள் கணினி/இணைய மயமாக்கப் பட வேண்டும்.
பிற தன்னார்வலர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டியன என எண்ணும் சில:
 • பிற துறை வல்லுனர்களுக்கு தமிழிணையத்தை அறிமுகப்படுத்துதல்
 • துறை சார்ந்த உள்ளடக்கம் நிறைந்த திட்டங்களை செயல்படுத்துதல்
 • பள்ளி/கல்லூரிகள் மட்டுமின்றி சிற்றூர்களிலும் தமிழிணைய விழிப்புணர்வு பயிலரங்குகளை நடத்துதல்
4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

இந்த வகையில் எல்காட் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் உயர்திரு.C.உமா சங்கர் இ.ஆ.ப அவர்கள் எல்காட் அளவில் மேற்கொண்ட நுட்ப மாற்றங்கள் சிறப்பானவை. இவரைப் போன்றவர்கள் கொண்ட மேலாண்மை குழுவையும் இன்று தமிழிணையத்துக்கு தன்னலமின்றி பாடுபடும் தமிழ் நுட்ப வல்லுனர்கள் கொண்டஒரு நுட்பக் குழுவையும் கொண்ட ஒரு தமிழிணைய கூட்டுறவு அமைப்பை உருவாக்கலாம்.

உடனடியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக என் மனதுக்கு தோன்றுபவை:
 • தமிழகத்தில் தமிழர்க்கு விற்கப்படும் அனைத்து கணினியிலும் கட்டாயமாக அரசு அங்கீகரம் பெற்ற தமிழ்99 விசைப்பலகையும் தட்டச்சு மென்பொருளும் இடம் பெற வேண்டும்
 • அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, வரி மற்றும் கட்டணம் செலுத்தல்) முற்றிலும் இணைய, தமிழிணைய மயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு வெளிப்படையானதாக்க இயலும். இதன் பயன்பாட்டைக் கூட்ட, இணையம் மூலம் மின் கட்டணம் முதலானவற்றை செலுத்துவோருக்கு கட்டண சலுகை அளிக்கலாம்
 • தொலைதூர, மலைசார் சிற்றூர்களிலும் இணைய வசதியை ஏற்படுத்த வேண்டும்
 • மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் உள்ள National Informatics Centre மூலமாக ஒவ்வொரு சிற்றூருக்கும் 10 இளைஞர்கள் வீதம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழிணையப் பயிற்சியளிக்க வேண்டும். இதன் பின் அவர்கள் அந்த சிற்றூர் முழுமைக்கும் தமிழிணைய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் பயன்பாட்டை பரவலாக்க இயலும்
 • உயர்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி பாடத்திட்டத்தில் தமிழ் தாள் 1(இலக்கியம்) மற்றும் தமிழ் தாள் 2(இலக்கணம்) வரிசையில் தமிழ் தாள் 3 (இணையம்) சேர்க்கப் பட வேண்டும். இது போலவே ஆங்கிலத்திலும் சேர்க்கலாம்.
 • வீட்டுக்கொரு இலவச கணினி, இணைய இணைப்பு அளிக்கப்பட வேண்டும்
5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ் வலைப்பதிவுகள் இன்றுள்ள பிற ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒரு மாற்று ஊடகமாக, பதிவுலகம் என்ற சொல்லுக்கு ஏற்ப பல்வேறுபட்டவர்கள் நிரம்பியதாக வளர்ச்சி பெற்றுள்ளது. எனினும் வளர்ந்து வரும் இந்நுட்பத்தில் இன்னும் பல உயரங்களை காண இயலும்.

புதிதாய் வலைப்பதிய வருவோருக்கு:
 • முதலில் வணக்கம். நல்வரவு
 • எதற்காக வலைப்பதிய வந்தீர்களோ அந்த நோக்கத்திலிருந்து எப்போதும் மாறிவிடாதீர்கள் (Do not get carried away)
 • வலைப்பதிவு என்பது தனியுலகம் ஆனால் அது மட்டுமே உலகமல்ல
 • நுட்பம், துறைசார் பதிவுகளுக்கு வருகையாளர்கள் குறைவு, போதிய வரவேற்பும் ஊக்கமும் கிடைப்பதில்லை எனவே அத்தகைய நோக்கத்திற்காக வலைப்பதிய வருபவர்கள் மனம் சோர்ந்து விடாமல் உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் உங்களுக்காக ஓரிடத்தில் எழுதி வைப்பதாய் எண்ணி வலைப்பதிவதை தொடருங்கள்
 • கடைசியாக, தமிழ் வலைப்பதிவுலகில் நிலவி வரும் பல்வேறு மோதல்கள் குறித்து விழிப்போடு இருங்கள். தவறியும் இதில் பங்கேற்றுவிடாதீர்கள் (உங்கள் நோக்கமே அதுவென்றாலன்றி ). சிக்கல்களில் சிக்காமலிருக்க:
  • உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒரு போதும் பொதுவில் பகிர்ந்து விடாதீர்கள்
  • பதிவுலக நட்பும் நேரடி நட்பும் ஒன்றல்ல என்பதை நினைவில் வையுங்கள்
  • இணையத்திலும் "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
   தீரா இடும்பை தரும்.
   " என்ற குறள் சொல்வது (நமக்கு மட்டுமல்ல நம் வழிமுறை/குடும்பம்/உறவுக்கும் இடர் என்பது) நடைமுறை உண்மை
6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் ஐந்தாண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துகள்.

இந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு மாற்றங்களை தமிழ்மணம் சந்தித்திருக்கிறது. தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி என்ற வரையறைக்குள் நின்றுவிடாமல் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டிருக்கிறது.

இவற்றுள் பதிவுகளை மட்டுமின்றி மறுமொழிகள், படங்கள் போன்றவற்றை திரட்டும் "ம" திரட்டி, தமிழ் நிழல் போன்ற சேவைகள் சிறப்பனவை. ஈழம் போன்ற கொள்கை சார் பதிவுகள், மருத்துவம், செய்திகள் போன்ற துறை சார் பதிவுகளை தனியே திரட்டுவது அவற்றில் ஆர்வமுடைய வருகையாளர்களிடையே எளிதாய் பதிவை அடையச் செய்யும்.பதிவர் நூல்கள் பகுதியும் ஒரு நல்ல முயற்சி.

மேற்கண்ட பல புதிய முயற்சிகளே பல தமிழ் திரட்டிகள் நிறைந்த இந்நாளிலும் தமிழ்மணத்தை தனிச்சிறப்புடன் மிளிர வைக்கிறது.

இனி வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்ய வேண்டிய வசதிகளாக என் எண்ணத்தில் தோன்றுபவை
 • நுட்பரீதியாக
  • பதிவருக்கான (தேன்கூடு திரட்டியில் இருந்ததைப் போல) Control Panel வசதி
  • இன்ன பிற இணையக் கருவிகளில் (செல்பேசி, கையடக்க கணினி) தமிழ்மணம் வசதியை அறிமுகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்
  • ஒருங்குறித் தமிழ் அல்லாத பதிவுகளை ஒருங்குறிக்கு மாற்றி திரட்டுதல்
 • உள்ளடக்கரீதியாக
  • "பூங்கா" இதழை மீண்டும் தொடர வேண்டும்
  • பதிவர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் பல நடத்தப்பட வேண்டும்
  • வலைப்பதிவு பயிலரங்குகளை தொடர வேண்டும்
தமிழ்மணம் இன்று இருக்கும் நிலையை எட்டுவதற்காக அயராது உழைத்த நுட்பக்குழு, நிர்வாகக் குழு, பதிவர்கள் மற்றும் வருகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேன்மேலும் இது போல இன்னும் பல ஆண்டுகளை கடந்து தமிழ்மணம் சேவை தொடர வாழ்த்துகள்.

நன்றி.

ராவண வதம்
Google Buzz Logo

இந்த ராவண வதம் என்ற ஒரு நிகழ்வு மற்றும் அதை தொடர்ந்து ராவணனின் எதிரிகள் அதைக் கொண்டாட விழா எடுப்பது என்பதை நான் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து பல முறை பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ராவணனின் உருவப் பொம்மையை பத்து தலைகளுடன் உருவாக்கி எதிரே ராமன் போல ஒருவன் வேடமிட்டு வந்து ஊரெல்லாம் சுற்றிவிட்டு பின் ஒரு திடலில் வைத்து அம்பு வீசி ஒவ்வொரு தலையாக பத்து தலைகளையும் கொய்து சாய்ப்பதாக ராவணன் வதம் முடிவுறும். சில ஊர்களில் இப்படி அம்பு வீசி கொய்யப் பொறுமை இல்லாமல் எரியூட்டி ராவண உருவத்தை சாம்பலாக்கி ராவணன் வதம் முடிவுறும்.


இது போல ஒவ்வொரு முறையும் ராமன் வேசம் போடும் நபர் மட்டுமே வேறாக இருக்கும். அவ்வப்போது கிடைக்கும் வண்ணம், வெளிச்சம், மற்றும் இன்ன பிற மூலப் பொருள்களுக்கு ஏற்ப ராவணன் உருவ பொம்மை மற்றும் வதம் செய்யும் முறை மட்டுமே மாறும். மற்றதெல்லாம் மாறாது.

இப்படிப் பட்ட ராவணன் வதம் இப்போது எங்கள் பக்கத்து ஊரில் நடந்து முடிந்ததாக செய்தி சொன்னார்கள். அதிலும் இந்த முறை விபீசனன் வேசமெல்லாம் கூட ஒருவன் போட்டதாகவும், செத்தது ராவணன் தான் ராவணன் உருவ பொம்மையில்லை என்று விபீசனன் வேசம் போட்டவன் கூட உறுதியா சொன்னதாகவும் சொன்னார்கள். முதலில் ராவணனை எரித்து பொசுக்கியதாகவும் பின் ஒரு நாள் கழித்து அம்பு வீசி கொன்றதாகவும் சொன்னார்கள். எது உண்மையோ அது அந்த ராமனுக்கும் ராவணனுக்கும் தான் வெளிச்சம்.

ஒவ்வொரு முறையும் ராவணன் வதம் முடிந்தபின் அடுத்த முறை மீண்டும் ராவணன் வதம் செய்ய இவர்களுக்கு எப்படி எங்கிருந்து ராவணன் மீண்டும் உயிருடன் வருகிறான் என்பதைப் பற்றி பொது மக்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.

அப்படியே கேட்டாலும் "அது போன தடவை... நான் சொல்றது இந்த தடவை" அப்படின்னு 'வின்னர்' பட வடிவேல் போல சமாளிக்க இதை விழாவா கொண்டாடுற ராவணனின் எதிரிகளும் பொய் சொல்ல கூச்சப் படுறதே இல்லை.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குன்னு எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க. ஆனாலும் ஒவ்வொரு முறையும் புளுகறவன் புளுகிட்டு தான் இருக்கான். மக்களும் அப்போதைக்கு நம்பிகிட்டு தான் இருக்காங்க. இந்த ராவண வதமும் மறுபடி மறுபடி நடந்துக்கிட்டு தான் இருக்கு.

பி.கு:
1) இது "ராவணன் வதம்" என்று பல ஊர்களில் நிகழும் ஒரு நிகழ்வை குறித்த என் பார்வை.
2) நான் ராமனையோ ராவணனையோ கும்பிடுவதில்லை.
3) இந்த இடுகையில் வேறெந்த உள்குத்தும் இல்லை.

வலைத்தளங்களுக்கான அதியமான் எழுத்துரு மாற்றி 1.0
Google Buzz Logo

நீங்கள் TAM/TAB/TSCII/TUNE போன்ற குறியேற்றத்தில் அமைந்த தமிழ் வலைத்தளத்தின் உரிமையாளர் அல்லது வலை நிர்வாகியா? உங்கள் வலைத்தளத்தை ஒருங்குறிக்கு மாற்ற வேண்டும் என்று எண்ணி அந்தத் திட்டத்தை போதிய நேரம்/ஆள் பலம் இன்றி தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

இத்தகைய வலைத்தளத்தின் வலைப்பக்கங்களை முழுமையாக ஒருங்குறிக்கு மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே "வலைத்தளங்களுக்கான அதியமான் மாற்றி" (Adhiyaman for websites)

இந்த மாற்றியைப் பயன்படுத்தி உங்கள் முழு வலைத்தளத்தையும் TAM/TAB/TSCII/TUNE போன்ற குறியேற்றத்திலிருந்து ஒருங்குறிக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்குப் பார்க்க http://www.higopi.com/a4web/ReadMe.html


நீங்கள் வலை நிர்வாகியாக இல்லாவிட்டாலும் உங்களுக்குத் தெரிந்த அத்தகைய வலைத்தளங்களின் உரிமையாளர்கள்/நிர்வாகிகளுக்கு இந்தத் தகவலை அறியத் தருமாறு வேண்டுகிறேன்.

இந்த நிரல் திட்டத்திக்கான தேவையைத் தெரிவித்து எனக்கு ஊக்கமளித்த
உலக பொதுவுடைமையாளர் வலைத்தளத்தை (http://www.wsws.org/tamil/) சேர்ந்த உலகன் மற்றும் இரா.குமரன் ஆகியோருக்கும், இதன் முன் வெளியீட்டுக் கோப்பினை சோதித்துப் பார்த்து அடுத்த வெளியீட்டுக்கும் இப்போதே பல தேவைகள்/வசதிகள் குறித்த யோசனைகளை அளித்த தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவைச் சார்ந்த முகுந்த், க்ருபா சங்கர், அமலசிங், மு.மயூரன் மற்றும் கா.சேது ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் தனிமடல் மூலம் தெரிவிக்கவேண்டுகிறேன்.

உலாவும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்