எரிதங்கள் வாழ்க
Google Buzz Logo

மின்னஞ்சல் எரிதங்களும் மின்னஞ்சல் சங்கிலித் தொடர்களும் எரிச்சலூட்டக் கூடியவை என்றாலும் அவற்றால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்!

அவற்றால் நான் அறிந்த சில விஷயங்கள்:

 1. கோக் குடிப்பதற்கு மட்டுமல்ல (கழிவறையைக் கழுவவும் பயன்படும். )
 2. திரையரங்கில் எயிட்ஸ் ஊசி இருக்கும் (என்பதால் திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு போக வேண்டியதில்லை)
 3. வாசனைத் திரவியங்கள் மூலம் புற்றுநோய் வரும் (ஆனா இப்ப கப்படிக்குதுங்க... )
 4. தனியா கார்ல போனா மயக்க மருந்து குடுத்து கொள்ளையடிச்சிடுவாங்க (காருக்கு போடுற பெட்ரோல் இப்பல்லாம் மிச்சம்)
 5. டின்ல அடைச்சி விக்குற எல்லா உணவுலயும் எலியோட எச்சங்கள் கலந்து வருது (டின்ல விக்கறதெல்லாம் வாங்கறதுக்கு காசு இல்லீங்கோவ்)
 6. போன்ல சில நம்பருக்கு டயல் செஞ்சா அத வச்சி அவுங்க நம்ம போனைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கெல்லாம் கால் பண்ணீடுவாங்க (மூனு மாசமா கால் பண்ணாம வாடகை மட்டும் கட்டுறனுங்க)
 7. பார்டிக்கெல்லாம் போனா சில அழகான பொண்ணுங்க வசிய மருந்து குடுத்து மயக்கிடுவாங்க(பெரிய மன்மதன்னு நெனப்பு.. நம்மையெல்லாம் யாருங்க மயக்கப் போறாங்க...)
 8. என்கிட்ட இருந்த எல்லா காசையும் ஏமி புரூஸுக்கு தானம் குடுத்துட்டேன் (பாவம் இந்த பொண்ணு, தீராத வியாதியால 1993ல இருந்து பல முறை ஒரு வாரத்துல செத்துக்கிட்டு இருக்கு)
 9. மின்னஞ்சல் அனுப்பினா யாஹூ, மைக்ரோசாப்ட், AOL, எல்லாம் ஆளாளுக்கு ஒரு மின்னஞ்சலுக்கு 2 ரூபா குடுப்பாங்க.. (ஆனா அது கூடிய சீக்கிரம் வந்துகிட்டே இருக்குதுங்க)
 10. மின்னஞ்சல் அனுப்பினா இலவச நோக்கியா மொபைல்.. டிஸ்னி வோர்ல்டுக்கு இலவச அனுமதி.. எல்லாம் கெடைக்கும்.. (கெடச்சா யாராவது.. எனக்கும் ஒன்னு குடுங்களேன்)
 11. வங்கிக் கணக்கு எண் குடுத்தா பல்கேரியாவுல ராஜ பரம்பரையச்சேர்ந்த ஒருத்தர் அவரோட பரம்பரை சொத்துல இருந்து கோடிக் கணக்குல பணம் அனுப்புவாரு(இதுக்காகவே புதுசா காசே இல்லாம ஒரு கணக்கை தொடங்கி வச்சி காசு வரும்னு காத்துக்கிட்டு இருக்கனுங்க)
 12. மதுரை மீனாட்சி கோயிலை உலக அதியசயத்துல ஒன்னா ஆக்கனும்னா ஆளுக்கு ஒரு போன் ஓட்டு போட்டாப் போதும் (எங்க வீட்ட உலக அதிசயமா ஆக்கலாம்னு ஒரு யோசனை..)
 13. திருப்பதி வெங்கடாஜலபதி கிட்ட மின்னஞ்சல் முகவரி.. இணைய இணைப்பு எல்லாம் இருக்கு . (அப்பப்ப அவரு அனுப்பற மின்னஞ்சலை எல்லாருக்கும் அனுப்பினா நேரா சொர்க்கம்தான் நமக்கு)

முக்கிய அறிவிப்பு: இந்த பக்கத்தின் சுட்டியை ஒரு மின்னஞ்சலில் 1246 பேருக்கு உடனே அனுப்பலைன்னா இன்னிக்கு சாயந்திரம் 6:30 மணிக்கு உங்க தலை மேல காக்கா அசிங்கம் பண்ணீரும்... ஜாக்கிரதை!

பின் குறிப்பு: ஹி..ஹி வேற ஒன்னுமில்லீங்க.. எரிதங்களால் வெறுத்துப் போன நண்பர் ஒருவர் அனுப்பின எரிதத்தின் தமிழாக்கம் இது.