தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்
Google Buzz Logo

தமிழ் வலைப்பூ உலகம் பரிணாம மாற்றத்தை சந்தித்துக் கொண்டுள்ளது.

இதை பரிணாம வளர்ச்சி என குறிப்பிட முடியாது.

ஏனெனில் :

சிலகாலம் முன் வரை வலைப்பூக்களில் கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஓவியமோ, புகைப்படமோ, குறும்பட சுட்டிகளோ இடப்பட்டால் அத்தகைய இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் வலைப்பதிவாளர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும்.

உதாரணமாக, வருகையாளர் விரும்பிக் கேட்டதற்காக ஓய்வற்ற அலுவல்களுக்கிடையே கிடைத்த நேரத்தில் கதை, கவிதை ஆகியவை படைத்த வலைப்பதிவாளர்கள் பலர்.

பிறகு, வலைப்பூக்களை கொண்டு செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்பட்டன. உதாரணமாக ஆடியோ ப்ளாகிங் மற்றும் ப்ளாஷ் படங்களை சொல்லலாம்.

இப்போதெல்லாம் வேறு வகையான இடுகைகளே வரவேற்பினை பெறுகின்றன. உள்வட்ட/வெளிவட்ட மனப்பான்மையும் தனிமனித துவேஷங்களும் மலிந்துவிட்டன. சிரங்கு பிடித்த கையை சொரிந்து சொரிந்து இன்பம் காண்பது போல (கடுமையான வார்த்தைப் பிரயோகத்திற்கு வருந்துகிறேன்) மேலும் மேலும் இத்தகைய இடுகைகளைத் தேடித் தேடி படிப்பதில் இன்பம் காணும், ஆதரித்தும் எதிர்த்தும் குழு சேர்த்தும் சேர்ந்தும் மகிழும் மனங்களை வக்கிர மனங்களாகவே நான் பார்க்கிறேன்.

இத்தகைய சூழலிலும் நன்மனம் கொண்டோர் பலர் உள்ளனர். இத்தகையோர் இடும் ஆக்கபூர்வமான (கதை, கவிதை, கட்டுரை) இடுகைகள், வேறு வகையான இடுகைகளுக்கு இடையே புதைந்து காணாமலேயே போய் விடுகின்றன அல்லது திசை திருப்பப்பட்டு வேறு வகையான இடுகைகளாக மாற்றப்பட்டுவிடுகின்றன.

துவேஷங்களை மனதில் கொண்டு செயல்படுவோருக்கு நான் சொல்வதெல்லாம்:

புத்திக்கு தகுந்த சுகம்.

குறைந்தபட்சம் துவேஷங்களையும் தனிமனித தாக்குதல்களையும் விரும்பாத வலைப்பதிவர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு சிரமம் தராமல் உங்களுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்.

புதிய வலைப்பதிவர்களுக்கு என் வேண்டுகோள்:

தயவு செய்து ஆக்கபூர்வமாய் வலைப்பதியுங்கள்.

பி.கு:
1) மேலுள்ள இடுகையில் கூறப்பட்டவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டவை அல்ல.

2) இந்த இடுகைக்கு பின்னூட்டங்கள் அவசியமில்லை என நான் கருதியதால் பின்னூட்டப் பெட்டி வசதி எடுக்கப்பட்டது. அவசியமாய் கருத்து தெரிவித்தே ஆக வேண்டும் எனக் கருதுவோர் என் மின்னஞ்சல் முகவரிக்கு (higopi[at]gmail[dot]com) உங்கள் கருத்துக்களை அனுப்பலாம். (உங்கள் கருத்தை இந்த இடுகையில் பின்னூட்டமாக பதிப்பிக்க வேண்டுமானால் அதையும் மின்னஞ்சலில் குறிப்பிடவும்)