புகைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சூரியனை சுட்டது யாருங்க? வீக் என்ட் ஜொள்ளு..
Google Buzz Logo

சூரியனை சுட்டது யாருங்க? சூரியனை யாரும் சுடமுடியாது அது தான் நம்மை சுடும்ன்னு சூரியன் படத்துல கவுண்டமணி சொன்ன மாதிரி பதில் சொல்லாதீங்க.

கீழே இருக்கும் புகைப்படம் உலகப் புகழ் இடத்திலிருந்து இன்னோரு உலகப் புகழ் பெற்ற கட்டிடத்தின் பின் கதிர் மறைவதை உலகப் புகழ் பெற்றவர் (ஹி..ஹி..நான் தான்) சுட்டது.




எங்கே, இது எந்த இடத்திலிருந்து எடுத்தது ? படத்துல இருக்கும் உலகப் புகழ் பெற்ற கட்டிடம் எதுன்னு சொல்லுங்க பார்ப்போம். க்ளூ வேணும்னா புகைப்படத்தை சொடுக்கி பாருங்க.

பி.கு: ஹி..ஹி.. தலைப்புல வீக் என்ட் ஜொள்ளுன்னு போட்டாத்தான் இப்பொல்லாம் சில பேர் பதிவு பக்கம் வர்றாங்க.

பட்டைய கெளப்புற பட்டம் நம் பட்டம்
Google Buzz Logo

வர வர வயசாயிட்டே போறதுனால புத்தி மழுங்கிட்டே போவுதோன்னு தோனுச்சி. சின்னப் புள்ளைங்களுக்கு இருக்கிற அறிவு கூட நமக்கு இல்லியே என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

என் வலைப்பூவுல கடந்த ரெண்டு பதிவுகளைப் படிச்சிட்டு என் அறைவாசி, சின்னப் புள்ளைங்க அளவு அறிவு நமக்கும் கெடைக்கனும்னா நாம கூட சின்னப் புள்ளைங்களா மாறிடனும் அப்புடின்னான்.

துளசியக்கா சொன்ன மாதிரி குள்ளமா வளர முடியும்.. ஆனா வயசு கொறைவா வளர்றது எப்படின்னு தெரியல.

"டேய், சூப்பர் ஸ்டார் சந்திரமுகியில பட்டம் உட்டா மாதிரி நாம்மலும் பட்டம் உட்டாக்க மீச வெச்ச கொழந்தையாயிடலாம்" அப்படின்னான் என் அறைவாசி. சரின்னு பட்டம் செய்யத் தேவையானதை வாங்கி வரக் கிளம்பினோம்

கலர் காகிதம் தேடி ஊரு பூராம் அலைஞ்சும் கெடைக்கல. (பேருதான் ஹைட்டெக் சிட்டி, ஆனா உண்மையில ஒரு நல்ல சோப் வாங்கனும்னா கூட 4-5 கி.மீ போகனும்) சரின்னு நியூஸ் பேப்பர் (நேற்றைய நியூஸ் பேப்பர் இன்றைய வேஸ்ட் பேப்பர்னு சக வலைப்பதிவாளர் ஒருத்தர் சொன்ன மாதிரி), கோந்து, தென்னங்குச்சி, ட்வைன் நூல் எல்லாம் வச்சி ஒரு பட்டம் ரெடி பண்ணியாச்சி.

இந்த ஊருல யாரு நமக்கு டீல் போடப் போறாங்க, நம்ம பட்டம் தான் ஒரே பட்டம்!

அதனால் மாஞ்சா எல்லாம் இல்லாம் ஒரு சாதாரண ட்வைன் நூல் கண்டுல பட்டத்தை கட்டி மொட்டை மாடியில பறக்க வுட்டா கோத்தா அடிக்க ஆரம்பிச்சிடுச்சி (பட்டம் பறக்கவிட்டு அனுபவமில்லாதவங்களுக்கு.. கோத்தா அடிக்குதுன்னா பட்டம் மேலயும் கீழயுமா வட்டம் அடிக்குதுன்னு அர்த்தம்)




சரின்னு பட்டத்த கீழ எறக்கி நூலை ஒழுங்கா கட்டி (இதுக்கு எங்க வட்டாரத்துல சூத்திரம் போடுறதுன்னுவாங்க) திரும்பி பறக்க விட்டோம்




அப்பாடா! இந்த வாட்டி நல்லா பறந்தது.. சாயங்காலத்துல ஒரு ரெண்டு மணி நேரம் போனதே தெரியல. ஒரு வழியா பட்டத்தை எங்கயும் மாட்டாம (பொதுவா ஒழுங்கா எறக்காட்டி எலக்ட்ரிக் கம்பி, மரம், பக்கத்து மொட்டை மாடி இப்புடி எங்கையாவது மாட்டி கிழிஞ்சிதான் வரும்.. ) ஒழுங்கா எறக்கி அழகா மடிச்சி வச்சாச்சி..

இனி அடுத்த வாரம் பட்டம் உடனும். நீங்களும் பட்டம் உட்டுப் பாருங்க.... அதுல இருக்குற சுகமே தனி...

பட்டம் செய்வது எப்படின்னு தெரியனும்னா சுய முகவரியிட்ட தனி மின்னஞ்சலில் பத்து ரூபா போஸ்டல் ஆர்டர் அட்டாச் பண்ணி அனுப்புங்க ...

இதுக்கும் டாட்டாவுக்கும் சம்பந்தமில்லை
Google Buzz Logo

ஹி. ஹி. சும்மா உலூலூவாய்க்கு...



அட இதுவும் தமிழ் வலைப்பூ தானுங்க (என்ன சொன்னாலும் தமிழ்மணத்துக்கு புரியமாட்டேங்குதுப்பா.)

ஹூம்... இப்படி ரெண்டு மூனு வரி தமிழ்ல போட்டா தமிழ்மணம் பட்டியல்ல வருதான்னு பாக்கலாம்...

கண்ணே!
Google Buzz Logo


நம்புங்கள்! இந்தப் புகைப்படத்தை எடுத்தது ஒரு ஐந்து வயது சிறுமி!


உடல் என்னும் அற்புதம்
Google Buzz Logo

நமது உடலின் பல்வேறு பாகங்கள் மற்றும் சில நுட்பமான விஷயங்கள் பற்றி பள்ளிப் பருவத்திலே உயிரியல் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் நண்பரொருவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த படங்களைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் திகைத்துப் போனேன்.

தினமலர் வாரமலரில் வரும் "இது என்ன" பகுதி போல உங்களை கேள்வி கேட்டு (பின்னூட்டங்களை எதிர்பார்த்து) காத்திருக்க வைக்காமல், படங்களும் விளக்கமும் ஒன்றாக கீழே ....


இளஞ்சிவப்பு நிறமா அழகாய் இருப்பது வேறொன்றுமில்லை இரத்த சிகப்பணுக்கள்:



தமணியில் செறிவான பிராணவாயுவை கொண்டு செல்லும் அவை சிரையில் திரும்பும் போது அசுத்தங்களை உள்ளடக்கி கீழ்கண்டவாறு மாறிவிடும்


சிறு பாகற்காய் போல இருக்கும் இது மூளைக்கும் உடல் பாகங்களுக்கும் தகவல்களையும் கட்டளைகளையும் பறிமாற்றும் ஒரு நரம்பணு


அழுக்கான நுரை போலக் காணும் இந்தப் படத்திலுள்ளது ஒரு ஆரோக்கியமான பல். கீழே பசுமை நிறத்தில் இருப்பது பல் எனாமல் உருவாக்கும் பகுதி


மடித்து வைத்த ரொட்டித்துண்டு போல காட்சியளிப்பது சிறுகுடலின் ஒரு பகுதி. இங்கேதான் செரித்த உணவின் சத்துப்பொருள்கள் உறிஞ்சப்படும்


முட்க்காடு போல இருக்கும் இது நாக்கின் சுவையுணரும் நரம்புகளின் தொகுதி


இரைப்பையின் உட்பகுதியில் இந்தப்பகுதியில் தான் அமிலத் திரவங்களினால் இரைப்பை பாதிக்கப்படாமலிருக்க சளி போன்ற வழவழப்பான திரவம் சுரக்கிறது


அடுக்கி வைத்த அழகான சீட்டுக்கட்டு போல இருக்கும் இந்தச் சிதறல்கள் உருவாக்கும் சிறுநீரக கற்கள் மிக ஆபத்தானவை


தீக்குச்சி போன்ற இந்தப் பகுதி, மூளை மற்றும் தண்டுவடப் பகுதியை அதிர்ச்சியிலிருந்து காக்கும் நுன்மப் பொருளை உருவாக்குகின்றன


அழகாய் ரோஜாப் பூவின் இதழ்களைத் தூவி வைத்த படுக்கை போலிருக்கும் இது பெருங்குடலின் உட்பகுதி


இப்ப சொல்லுங்க உண்மையில் உடல் ஒரு அற்புதம் தானே!
(அப்பாடா ஒரு வழியா டைட்டில் வந்தாச்சி! )

வலைப்பூ - ஊர்வலம் - 5
Google Buzz Logo

செஞ்சிக் கோட்டை



சுமார் எழுனூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த கோட்டை மூன்று மலைகளை சுற்றிவளைத்து நெடுந்துயர்ந்த கோட்டை சுவர்களுடன் நடுவில் ஊர் அமைத்து உருவாக்கப்பட்ட கோட்டை.



இந்தப்பகுதியிலுள்ள மலைகளின் அமைப்பை பார்த்தீர்களானால் ஆச்சர்யப்படுவீர்கள்! ஒரு பெரிய பாத்திரத்தில் உருண்டையான பாறைகளை எடுத்து கவிழ்த்து உருவாக்கியது போல இருக்கும்.

கோட்டைச் சுவருக்கு ஏழு வாசல்கள் உண்டு. கோட்டைக்குள்ளே, ஒரு புராதன மசூதியும், சிவன் கோயிலும் அருகருகே அமைந்து மத ஒற்றுமையை பறை சாற்றிக் கொண்டு இருக்கிறது



கோட்டையின் உள்வாசலில் நுழைந்து (கட்டணம் உண்டு) சற்றே நடந்தோமேயானால் தேசிங்கு மன்னனின் அரசவை மண்டபம் (புனரமைக்கப்பட்டது), ஒரு திருமண மஹால், சில தாணியக் கிடங்குகள், குளங்கள் (இன்னும் கூட தண்ணீர் உள்ளது - ஆனால் உபயோகத்திலில்லை) ஆகியவை இருக்கின்றன. இன்னும் சில புனரமைப்புகளை தொல்பொருள்த்துறை மேற்கொண்டுள்ளது.



எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தால் ஒரு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. மரத்தடி நிழலில் சற்றே இளைப்பாறிவிட்டு மலை மேல் ஏறிப்பார்க்கலாம் என ஆரம்பித்து செங்குத்தான நெடிய பாதையில் செல்ல ஆரம்பித்தோம். இடையிடையே இளைப்பாறினோம் - வழியில் எங்கும் தண்ணீரில்லை. ஒவ்வொருவருக்கு ஒன்னரை லிட்டர் என்ற அளவில் எடுத்து சென்ற தண்ணீர் மேலே ஏற மட்டுமே பயன்பட்டது. எதிரே கீழிறங்கிக் கொண்டிருந்த சிலர் இன்னும் கொஞ்ச தூரம் தான் என உற்சாகப் படுத்தி சென்றதால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம். எங்கும் ஆளரவமில்லை சுமார் 2 மணி நேரம் நடந்தபின் ஒரு கருவூலம், இரு தாணியக்கிடங்கு ஒரு பீரங்கித் தளம், ஒரு கோவில், ஒரு மணிக்கூண்டு ஆகியனவற்றைப் பார்த்தோம். மணிக்கூண்டில் ஏறிப்பார்த்தால் மூன்று மலைகளுக்கு இடையிலே கட்டப்பட்ட கோட்டைசுவரின் முழு அமைப்பு, செஞ்சி ஊர், கோட்டையின் உள்ளேயுள்ள அத்தனை இடங்களும் தெளிவாக இருந்தது. (இந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு மேலே ஏறி வரவேண்டுமா என்று தோன்றியது. உடன் வந்த நண்பர்கள் கடுப்பாகி திட்ட ஆரம்பித்தனர். எனவே, குடும்பம் குழந்தைகளோடு வருபவர்கள் மலை மேலே ஏறி சிரமப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்)




ஒரு வழியாக கீழிறங்கி கோட்டையின் உள் வாசலிலிருக்கும் தொல்பொருள்த்துறை அலுவலகத்துக்கு வந்தடைந்தோம். தண்ணீர் தாகத்தில் தவித்த எங்களுக்கு கோட்டை உள்வாசலருகே இருக்கும் கினற்று நீர் இனித்தது (நிஜமாகவே அது அவ்வளவு உப்பாக இல்லை குடிக்கவும் அங்குள்ளவர்கள் அதைத்தான் பயன்படுத்துவதாகக் கூறினர்).

பிறகு அலுவலகத்திலிருந்த ஒரு கடை நிலை ஊழியரிடம் பேசுகையில் அவர் தேசிங்கு ராஜனின் வரலாற்றை கூறினார். (அதில் முக்கியமானது, தேசிங்கு ராஜன் ரகசியக் கூட்டங்களை மலைமேலிருக்கும் ஒரு மண்டபத்தில் நடத்துவார் என்பதும். அதற்கு தேசிங்கு மற்றும் முதன்மை அமைச்சர்களும் நடந்தே மேலேறி வருவார்கள் என்பதும் தான், ஹூம்... அவர்கள் பலசாலிகள்)

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

வலைப்பூ - ஊர்வலம் - 4
Google Buzz Logo

கோல்கொண்டா அற்புதங்கள்

கோல்கொண்டா கோட்டையின் அற்புதங்கள் பற்றி அனாமிகா மெய்யப்பன் அவர்கள் சிறப்பாக சொல்லியுள்ளதால் அவருக்கு சுட்டி கொடுத்துவிட்டேன்



மகாபலிபுரம்



மகாபலிபுரம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பஞ்ச பாண்டவர் ரதம், புலிக்குகை, அர்ஜுனன் தவம், என சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பூமி.

இங்குள்ள சிற்பிகள் வாழும் அற்புதங்கள், சிறிதளவே லாபம் (அல்லது மிகுந்த நஷ்டம்) என்றலும் கூட சிற்பம் தவிர பிற தொழில்களை நாடாமல் செய்துவரும் இவர்கள் கூறுவது சிற்பங்கள் வடிப்பது தவிர வேறு தொழில்கள் தெரியாது என்பதே.

உண்மைதான். ஒரு கலையை வாழ வைக்க அதைத் தவிர பிழைப்புக்கு வேறு வழியில்லாத ஆட்களால் மட்டுமே முடியும்.

மகாபலிபுர சிற்பங்களின் அழகை பறைசாற்றும் சில புகைப்படங்கள் இங்கே...
(பெரிய அளவிலான கோப்புகள் என்பதால் தனியே பதித்துவிட்டேன்)

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

வலைப்பூ - ஊர்வலம் - 3
Google Buzz Logo

ஸ்ரீசைலம் பாதாள கங்கை


ஸ்ரீசைலம் அணைக்கட்டு மற்றவைகளிலிருந்த வித்யாசமானது. எவ்வாறெனில் இந்த நீர்த்தேக்கத்தில் நீர் தேங்கியிருப்பதைப் பார்க்க மக்கள் வருவது மலைமேலிருந்து கீழிறங்கி (சுமார் 650 அடிகள்) பாதாள கங்கை என்ற இடத்திற்கு

ஆம்! ஊர் மலை மேலே உள்ளது, அணைக்கட்டு மலையடிவாரத்தில்.


சுற்றிலும் இயற்கை வளம் கொழிக்கும் காட்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கெங்கு காணினும் தண்ணீர்! தண்ணீர்!



அணைக்கட்டினை சுற்றிப்பார்க்க, பாதாள கங்கையிலிருந்து விசைப்படகு சவாரியை ஆந்திர அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ளது. ரோப் கார் (இதுக்கு தமிழ்ல என்னங்க?) வடிவமைத்து வருகிறார்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும்.

இங்கு ஊருக்குள் உள்ள சில கடைகளில் மரத்தாலான பொம்மைப் பாம்புகள் விற்கிறார்கள், அவை நெளிவதைப் பார்த்தால் நிஜமான பாம்புகள் பொலவே (பயமாக) இருக்கிறது

இங்குள்ள சிவன் கோவில் இந்துக்களின் முக்கிய சிவஸ்தலங்களுள் ஒன்று


வலைப்பூ - ஊர்வலம் - 2
Google Buzz Logo

நாகார்ஜுன சாகர்




பொதுவாக அணைக்கட்டு என்பது இரு மலைகளுக்கு இடையில் நீர்வீழ்ச்சியிலிருந்து சற்று தொலைவில் ஆர்ப்பரித்து வரும் நீர் சமாதானமாய் தேங்க தயாராகும் இடத்தில் கட்டப்படும்.



நாகர்ஜுன சாகர் இந்த வகை அணைக்கட்டுகளிலிருந்து சற்றே மாறுபட்டும் நீர்வீழ்ச்சியின் வெகு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.




நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும் நீர்வீழ்ச்சிக்கு அருகே முதலைகள் உலாவுவதை தொலைவிலிருந்தே பார்க்க முடிவதால் வாழ்வின் மேல் ஆசை கொண்டு மேற்கொண்டு செல்லவில்லை





சாகர் என்று ஏன் சொல்கிறார்கள் என அங்கு சென்ற பிறகே தெரிந்தது. அப்பப்பா! எவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு! நாங்கள் சென்ற போது அணை ஏறகுறைய நிரம்பியிருந்தது. அங்கிருந்த அரசு ஊழியரை விசாரித்ததில் ஆண்டு முழுவதுமே தண்ணீர் ஓரளவு நிரம்பியே இருக்கும் என சுந்தரத் தெலுங்கில் செப்பினார்

(மேட்டூர் அணையின் பதினாறு கதவுகளைத் தாண்டி உபரி நீரை வெளியேற்றும் காட்சியை மிகச்சிறுவனாய் இருக்கையில் பார்த்த நினைவு... ஹும்....)




பசுமையான இந்த இடத்தைப் பார்த்த பிறகு ஆந்திரத்தை ஏன் வறன்ட மாநிலம் என்கிறார்கள் எனத் தோன்றிற்று (பிறகு அங்கிருந்து ஹைதராபாத் வரும் வழியெல்லாம் பார்த்ததும் அந்த சந்தேகம் விலகியது)

வலைப்பூ - ஊர்வலம் - 1
Google Buzz Logo

ஹொகேனக்கல் - புக்ககம் பாயும் காவிரி



பிறந்த வீடான கர்னாடகத்திலிருந்து புகுந்த வீடான தமிழ்நாட்டுக்கு காவேரி வலது காலெடுத்து பொங்கிப் பாய்ந்து ஓடிவரும் இடம் தான் ஒகேனக்கல். (அரசியல்வாதிகளால் காவேரிக்கு வேறு அர்த்தம் ஆகிவிட்டதாலேயே இந்த அறிமுகம்)

நீர்வீழ்ச்சியைச் சுற்றி புகை போல நீர்ச்சாறல் தெரிப்பதனாலேயே ஹொகேனக்கல் (கன்னடத்தில் ஹொகெ என்றால் புகை) எனப் பெயர் வந்தது. நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு குளிக்கும் ஆசை வரும்.



ஆயில் மசாஜ் இங்க ரொம்ப பிரபலம். ஆயில் மசாஜ் செய்வதானால் அரசாங்க அனுமதி பெற்றவரிடம் செய்துகொள்ளுங்கள். காசு குறைவு என கண்டவர்களிடம் மசாஜ் செய்து அப்றம் அங்க வலிக்குது இங்க வலிக்குது அப்பிடின்னு கத்த வேண்டாம்.

நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.




குளித்து முடித்து பசிக்கிறதா? அசைவப் பிரியரானால் வகை வகையாய் சுவையான மீன்கள் சாப்பிடலாம். சைவமானால் வரும்போதே சமைத்து எடுத்துவருவது நல்லது (ஒன்றிரண்டு சைவ ஓட்டல்கள் இருக்கின்றன ஆனால் அவ்வளவாக ருசிக்காது)



சரி சாப்டாச்சா, வாங்க ஒரு சுத்து சுத்திப் பாத்துட்டு வரலாம். இங்க பாக்க வேண்டிய இடம்னா

1) தேசிய முதலைப் பண்ணை,
2) பாலம் தாண்டிப் போய் கர்னாடகப் பக்கத்தில் பார்த்தால் தெரியும் (குளிக்க முடியாத அளவிற்கு வேகம் அதிகமான) நீர்வீழ்ச்சிகளின் முழு அழகு,
3) நீர்வீழ்ச்சிக்கருகே சென்று பார்க்கும் பரிசல் பயணம் (மிக ஆபத்தானது தவறி விழுந்தால் உயிர் பிழைப்பது கடினம். நீந்தத் தெரிந்தாலும் தப்பிக்க முடியாது காரனம்: ஆழம், சுழல், முதலைகள்)

காலைல பெங்களூரிலிருந்து கிளம்பினீங்கன்னா ஒரு வழியா எல்லாம் முடிச்சப்றம் கொஞ்சம் காவேரிக் கரையில ஓய்வெடுத்துட்டு மாலைச் சூரியன் மறைந்த பிறகு பெங்களூர் திரும்பலாம் (பெங்களூரிலிருந்து சுமார் 180 கி.மீ).

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)