தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மொழிமாற்றிகள் 3.2 வெளியீடு
Google Buzz Logo

அனைவருக்கும் வணக்கம்.

தகடூர் தமிழ் மாற்றி மற்றும் இதர மொழி மாற்றிகளின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்து இந்த மாற்றிகளின் அடுத்த பதிப்பான 3.2  வெளியிடப்படுகிறது.

இந்த வெளியீட்டில் உள்ள புதிய‌ வ‌ச‌திகள்

  • பாமினி த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - தமிழக அரசு அலுவலகங்களிலும் புலம்பெயர் தமிழர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் பாமினி த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ பாமினி தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.
  • வானவில் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வானவில் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ வானவில் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.
  • தமிழ் மாடுலார் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - சில அச்சு ஊடக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மாடுலார் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ தமிழ் மாடுலார் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.

மொழி மாற்றிகளின் சுட்டி:
இம்மாற்றிக்கான தமிழ் மாடுலார் விசைப்பலகை வரைபடம் மற்றும் விவரங்களை அளித்து உதவிய செல்வ.முரளிக்கு எனது நன்றி.

நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன

தகடூர் தமிழ் மாற்றியில் தமிழ் 99
Google Buzz Logo

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.

தகடூர் தமிழ் மாற்றி மற்றும் இதர மொழி மாற்றிகளின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்து இந்த மாற்றிகளின் அடுத்த பதிப்பான 3.0 வை வெளியிடப்படுகிறது.

இந்த வெளியீட்டில் உள்ள புதிய‌ வ‌ச‌திகள்

  • த‌மிழ் 99 த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - த‌மிழ் 99 த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ தமிழ் 99 தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.
  • தட்டச்சு உதவிப் பட்டியல் வசதி அஞ்சல் விசைப்பலகையிலும் மற்ற மொழி மாற்றிகளின் Phonetic விசைப்பலகைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேவையில்லை எனும் போது இடப்புறம் உள்ள தெரிவுகளில் அணைத்துவிடலாம்.
  • தனிச் சாளரத்தில் திறந்த விசைப்பலகை அமைப்புப் படம் இப்போது மொழி மாற்றிக்குள்ளேயே திறக்கும். தேவை எனும் போது இடப்புறம் உள்ள தெரிவுகளில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் வேண்டிய இடத்திற்கு நகர்த்திக் கொள்ளலாம்.
இந்த மாற்றங்களை அறிவிக்கும் இந்த வேளையில் மொழிமாற்றிகளை உருவாக்கிய காலத்தில் நிரலை மேற்பார்வை செய்து வழிநடத்திய சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும், தகடூருக்காக வலைத்தளத்திற்கான இடத்தை முதல் ஆண்டு முற்றிலும் இலவசமாய் அளித்து உதவிய அமரர் திரு.தேன்கூடு சாகரன் அவர்களுக்கும், தகடூரின் மாற்றங்களுக்கு யோசனை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழி மாற்றிகளின் சுட்டி:
நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 4
Google Buzz Logo

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4


சென்ற இடுகையில் எழுத்துரு உருவாக்கப் பயன்படும் ஃபாண்ட் ஃபோர்ஜ் பற்றியும் அதை நிறுவுதல் குறித்தும் பார்த்தோம். ஃபாண்ட் ஃபோர்ஜ் மூலமாக நாம் விரும்பிய எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றும் வழி குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.

அதிக அளவில் படங்கள் இருப்பதால் இந்த இடுகை பதிவிறங்க‌ சற்று நேரம் பிடிக்கும். ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து நோக்க வேண்டியிருப்பதால் பொறுமையாய் அனைத்து படங்களும் முழுமையாய் பதிவிறங்கி தெரிந்த பின் படிக்கவும்.

1) பகுதி 3 ன் கடைசியில் உள்ளது போல் ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளில் நாம் மாற்ற வேண்டிய எழுத்துருவை திறந்து கொள்ளுங்கள்.
2) நமக்கு ஏற்கனவே உள்ள ஒரு ஒருங்குறி எழுத்துரு தேவை. இதற்காக TAMUni-Tamil042.ttf என்ற சுட்டியிலிருந்து இந்த எழுத்துருவை பதிவிறக்கி வண்தட்டில் சேமித்துக் கொள்ளுங்கள்.

3) கீழ் கண்ட படத்தில் உள்ளவாறு நாம் மாற்ற வேண்டிய எழுத்துருவுடன் மேலே பதிவிறக்கம் செய்த ஒருங்குறி எழுத்துருவை "Element -> Merge Fonts" பட்டி மூலம் தெரிவு செய்து இரண்டையும் கலப்பு செய்யுங்கள்.
4) இப்போது இரு எழுத்துருக்களும் கலந்துவிட்டன. ஆனால் ஒருங்குறிக்கு உரிய இடங்களில் உரிய எழுத்துக்கள் நாம் இணைத்த எழுத்துருவின் எழுத்து வடிவில் இருக்கிறது. இதனை மாற்ற நம்முடைய எழுத்துருவின் எழுத்து வடிவினை பின் வருமாறு நகல் எடுத்து உரிய இடங்களில் ஒட்டிவிடுங்கள்.
நகல் எடுத்து ஒட்டும் போது கீழ்கண்டவாறு Warning வந்தால் "No" எனத் தெரிவு செய்யுங்கள்.
இல்லாத எழுத்து வடிவங்களை (உம். ஔ ) உருவாக்க, நம் எழுத்துருவின் இரு எழுத்துக்களையும் அடுத்தடுத்தாக நகல் எடுத்து வேண்டிய இடத்தின் எழுத்து வடிவை double click செய்து ஒட்டி ஏற்படுத்தலாம். (உம் ஒ + ள )
5) இதே போல எழுத்துருவின் கடைசி பகுதிக்கு Scroll செய்து சென்று அங்கு உள்ள எழுத்து வடிவங்களையும் நம்முடைய எழுத்துருவின் வடிவத்துக்கு மாற்றுங்கள்.
6) இப்போது வேண்டிய எழுத்து வடிவங்கள் கிடைத்துவிட்டன ஆனால் ஒருங்குறிக்கு உரிய GSUB விதிகள் எழுதப்பட வில்லை. இதற்காக தனியே ஒவ்வொரு விதியையும் எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை. TAMUni-Tamil.fea என்ற சுட்டியில் உள்ள GSUB விதிகள் அடங்கிய கோப்பை பதிவிறக்கம் செய்து வண் தகட்டில் சேமித்துக் கொள்ளுங்கள். பின்னர் "File -> Merge Feature Info" பட்டி மூலம் GSUB விதிகள் அடங்கிய கோப்பை தெரிவு செய்து இவ்விதிகளை நம் எழுத்துருவுக்குள் ஏற்றுங்கள்.
7) இவ்வாறு ஏற்றப்பட்ட விதிகளை "Element -> Font Info -> Lookups" பட்டி மூலம் பார்வையிடலாம்.
8) இப்போது எழுத்துருவின் பெயர், விளக்கம், உருவாக்கியவர் போன்ற விவரஙகளை "Element -> Font Info -> Names" பட்டி மூலம் மாற்றலாம்.
9) சரி. எல்லாம் முடிந்தது. இப்போது ஒருங்குறியாக்கபட்ட புதிய எழுத்துருவை உருவாக்க "File -> Generate Fonts" பட்டியை தெரிவு செய்யுங்கள்.
10) வேண்டிய எழுத்துரு கோப்பின் பெயர், எழுத்துரு வகை முதலிய வற்றை தெரிவு செய்து சேமியுங்கள்.
இவ்வாறு உருவாக்கப் பட்ட எழுத்துருவை மூலம் கணினியில் நிறுவி பார்வையிடுங்கள், பயன்படுத்தி சரி பாருங்கள்.
தவறுகள் ஏதும் இருந்தால் அவற்றை மேற்கண்ட படிகளில் கூறியவாறு மீண்டும் மாற்றி சேமியுங்கள்.

அவ்வளவே. முடிந்தது.

இது வரை இந்தத் தொடரில் வந்த இடுகைகளில் ஒரு எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றும் எளிய வழி குறித்து பார்த்தோம். இதன் விரிவான செயல்விளக்க ஒலி/ஒளி கோப்பினை பின்னொரு நாள் வலையேற்றுகிறேன்.

புதிதாய் ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்துருவை உருவாக்குவது எப்படி, GPOS, GSUB குறித்த மேலதிக விளக்கங்கள் போன்ற நுட்பங்களை பற்றி மேலதிகமாக அறிய விரும்புவோர் எனக்கு தனி மடல் இடவும்.

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3
Google Buzz Logo

பகுதி 1பகுதி 2
பகுதி 3பகுதி 4

சென்ற இடுகையில் எழுத்துரு குறித்த நுட்பங்களையும் எழுத்துரு உருவாக்கப்
பயன்படும் மென்பொருள் கருவிகளைப் பற்றியும் பார்த்தோம். அவற்றுள் நாம் பயன்படுத்த தேர்ந்தெடுத்துள்ள ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல் குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.

ஃபாண்ட் ஃபோர்ஜ் ஒரு லினக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இதனை லினக்ஸ் கணினிகளில் நிறுவ, கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து RPM கோப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். உங்கள் இயங்குதளம் உபுண்டு அடிப்படையிலானது எனில், Alien எனும் மென்பொருள் கருவி மூலமாக இந்த RPM கோப்பினை DEB கோப்பாக மாற்றி நிறுவிக் கொள்ளலாம். பதிவிறக்க சுட்டி: http://fontforge.sourceforge.net/


நாங்கள் எல்லாம் விண்டோஸ் பயனாளிகள். இந்த ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த எங்களுக்கெல்லாம் வழியே இல்லையா எனக் கேட்கிறீர்களா? வழி இருக்கிறது. CygWin என்று சொல்லக் கூடிய இலவச லினக்ஸ் எமுலேட்டர் மென்பொருளை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவி அதன் மூலம் ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம்.

அதற்கெல்லாம் எங்களுக்கு பொறுமையில்லை. விண்டோஸ் கணினியில் தரவிறக்கி எடுத்தவுடன் பயன்படுத்தும் படி எங்களுக்கு நிறுவித் தர இயலுமா என்றால், உங்களுக்கு எளிய வகையில் எல்லாமே ஆயத்த நிலையில் தரவிறக்கம் செய்ய வசதியாய் எனது தளத்தில் ஒரு கோப்பாக பதிவேற்றி வைத்துள்ளேன்.

முதலில் FontForge.7z (~ 45 MB) என்ற சுட்டியை சொடுக்கி 7-Zip கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த 7-Zip கோப்பினை திறக்க 7-Zip மென்பொருள் வேண்டும். அதை http://www.7-zip.org/ என்ற சுட்டியில் சொடுக்கி தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

இப்போது 7-Zip மூலம் மேலே தரவிறக்கம் செய்த FontForge.7z கோப்பினை திறந்து உங்கள் கணினியின் வண்தகட்டில் உங்களுக்கு தேவையான இடத்தில் நிறுவிக் கொள்ளுங்கள்.

Windows Explorer மூலம் ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவிய இடத்துக்கு சென்றால் Xterm.bat என்றொரு கோப்பு இருக்கும். அதை இருமுறை சொடுக்குங்கள். உங்கள் விண்டோஸ் டாஸ்க் பாரில் கீழ்கண்டவாறு ஒரு X குறி தெரியும். மேலும் ஒரு XTerm சாளரம் திறந்து இருக்கும்.


இந்த XTerm சாளரத்தில் /usr/local/bin/fontforge.exe என்று தட்டச்சிட்டு Enter விசையை அழுத்துங்கள். கீழ் கண்டவாறு ஃபாண்ட் ஃபோர்ஜ் சாளரம் திறக்கும். (நீங்கள் மாற்ற வேண்டிய எழுத்துருக் கோப்பினை XTerm சாளரத்தில் fontforge.exe க்கு அடுத்ததாக கொடுத்தால் அந்த எழுத்துரு ஃபாண்ட் ஃபோர்ஜ் திறந்தவுடன் தெரியும் அல்லது நீங்கள் File -> Open என்ற பட்டி மூலமாகவும் உங்கள் எழுத்துருவை திறக்கலாம்).

இன்றைய இடுகையில் நாம் ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல், பின் அதன் மூலம் ஒரு எழுத்துருவை திறப்பது எப்படி என அறிந்து கொண்டோம். அடுத்த இடுகையில் அந்த எழுத்துருவை எவ்வாறு ஒருங்குறிக்கு மாற்றுவது எனத் தெரிந்து கொள்வோம்.

பகுதி 1பகுதி 2
பகுதி 3பகுதி 4

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 2
Google Buzz Logo

பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4

சென்ற இடுகையில் பல்வேறு தமிழ் குறியேற்றங்கள் குறித்துப் பார்த்தோம் இனி எழுத்துருக்கள் குறித்துப் பார்ப்போம்.

எழுத்துருக்கள்

எழுத்துருக்கள் என்பன ஒரு எழுத்து எந்த வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும், ஒரு எழுத்துடன் இன்னொரு எழுத்தை சேர்த்தால் எவ்வாறு மாற்றமடையவேண்டும் (உ.ம்: உயிர்+மெய்=உயிர்மெய்) என்பன போன்ற சில விவரங்களை அடக்கிய ஒரு கோப்பு ஆகும். எழுத்துருக்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு குறியேற்றத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

எழுத்து வடிவம் (Glyph)

ஒரு எழுத்து எத்தகைய வடிவத்தை பெறும் என்பதை குறிப்பிடுவதே எழுத்து வடிவம் (Glyph) எனப்படும். உதாரணமாக, ‘அ’ என்ற எழுத்தை கீழ்க்கண்டவாறு பல வித வடிவங்களில் குறிக்கலாம்:




எழுத்து இட அமைப்பு (GPOS - Glyph Positioning)

ஒரு எழுத்து மற்றொரு எழுத்தோடு சேரும் போது எந்த இடத்தில்(புள்ளியில்) இரண்டையும் சேர்க்க வேண்டும் என்ற விதியே எழுத்து இட அமைப்பு (GPOS - Glyph Positioning) எனப்படும். உதாரணமாக மெய்யெழுத்து ‘க’ உடன் உயிர் எழுத்தொலி ‘ஈ’ சேரும்போது கீ என்பது உருவாகிறது, இதில் ஈ ஒலிப்புக்குறிய சுழியானது 'க' என்ற எழுத்தின் மேல் எங்கு அமையவேண்டும் என்ற விதியே GPOS ஆகும்.

க +ீ = கீ

எழுத்து மாற்றமைப்பு (GSUB - Glyph Substitution)

ஒரு எழுத்து மற்றொரு எழுத்தோடு சேரும் போது முற்றிலும் புதிய வேறொரு எழுத்தாக மாற வேண்டும் என்ற விதியே எழுத்து மாற்றமைப்பு (GSUB - Glyph Substitution) எனப்படும். உதாரணமாக ‘ஸ்’ என்ற எழுத்துடன் ‘ரீ’ என்ற எழுத்து இணையும் போது அது முற்றிலும் புதிய ‘ஸ்ரீ’ என்ற எழுத்தாக அமைய வேண்டும். இந்த விதிதான் GSUB என்பது.

ஸ் + ரீ = ஸ்ரீ

இவ்வாறு ஒரு எழுத்துருவானது எழுத்து வடிவம், எழுத்து இட அமைப்பு விதிகள் மற்றும் எழுத்து மாற்றமைப்பு விதிகள் ஆகியவை அடங்கியதாக உள்ளது. ஒரு எழுத்துருவை புதிதாக உருவாக்கவோ அல்லது ஒரு குறியேற்றத்திலிருந்து மற்றொரு குறியேற்றத்துக்கு மாற்றவோ செய்யும்போது நாம் மேற்கண்ட இம் மூன்று நுட்பங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

எழுத்துரு வகைகள்

எழுத்துருக்கள் அவற்றை வடிவமைத்த நிறுவனங்கள்/தன்னார்வலர்கள் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளாக வழங்கப்படுகின்றன. அவற்றுள் சில:
  • TrueType fonts
  • OpenType fonts
  • POSTSCRIPT fonts
  • Bitmapped (bdf, FON, NFNT) fonts
இவற்றுள் பரவலாகப் பயன்படுத்தப்படுவது TrueType மற்றும் OpenType எழுத்துருக்கள் ஆகும். பெரும்பாலான தமிழ் எழுத்துருக்கள் TrueType வடிவில் தான் வழங்கப்படுகின்றன

எழுத்துரு உருவாக்கப் பயன்படும் மென்பொருள்கள்

எழுத்துருக்களை உருவாக்க மற்றும் மாற்றியமைக்க தேவையான மென்பொருள் கருவிகள் பற்றி விவாதிப்போம். இன்றைய கணினி உலகில் கிடைக்கும் எழுத்துரு உருவாக்கும் மென்பொருட்கள் சில:

1) மைக்ரோசாஃப்ட் வோல்ட் (Microsoft VOLT)

இது மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாய் அளிக்கும் ஒரு மென்பொருள். இலவசம் எனினும் இது கட்டற்ற (Free) தன்மையுடையதோ அல்லது திறவூற்று (Open Source) மென்பொருளோ அல்ல. இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://groups.msn.com/MicrosoftVOLTuserscommunity/homepage.msnw

2) ஃபாண்ட் க்ரியேட்டர் (Font Creator)

இது ஹை-லாஜிக் என்ற நிறுவனம் வழங்கும் வணிக மென்பொருள். 30 நாட்கள் வரை இந்த மென்பொருளைப் இலவசமாக பயன்படுத்திப் பார்க்க முடியும். இது ஒரு தனியுரிமை மென்பொருள். கட்டற்ற (Free) தன்மையுடையதோ அல்லது திறவூற்று (Open Source) மென்பொருளோ அல்ல. இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.high-logic.com/download.html

3) ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge)

இது இலவசமாக கிடைக்கும் ஒரு கட்டற்ற (Free) திறவூற்று (Open Source) மென்பொருள். நம்முடைய எழுத்துரு உருவாக்கும்/ஒருங்குறிக்கு மாற்றும் பணிக்கு இந்த மென்பொருள் போதுமானதும் பொறுத்தமானதும் ஆகும். இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://fontforge.sourceforge.net/

இந்த ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge) மென்பொருளை நிறுவுவது எப்படி, இதற்குத் தேவையான இயங்குதளம் முதலானவை பற்றியும், ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge) மென்பொருளைப் பயன்படுத்தி எவ்வாறு ஒரு எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றலாம் என்பதை பற்றியும் அடுத்த இடுகையில் அறியலாம்.

பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 1
Google Buzz Logo

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4


உங்களுக்கு பிடித்த அழகான தமிழ் எழுத்துரு ஒருங்குறி(Unicode) அல்லாத TAB/TAM அல்லது தனிப்பட்ட வேறு குறியேற்றங்கள் இருக்கிறதா? அதை நீங்கள் எளிய முறையில் ஒருங்குறிக்கு மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டுமா? அதற்கான வழிமுறைகளை ஆராயலாம்.

முதலில் எழுத்துரு குறித்த நுட்பங்களை விவாதிக்கும் முன்பாக இது தொடர்பான சில அடிப்படை நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

குறியேற்றங்கள்

கணினியில் அனைத்து வகையான உரையாடல்களும் எண்களாலேயே செய்யப்படுகின்றன என நாம் அறிவோம். அது போல எழுத்துக்களும் எண்களைக் கொண்டே குறிக்கப்படுகின்றன.

ஒரு குறியேற்றம் என்பது, மனிதரால் படித்தறியக் கூடிய எழுத்துக்களுக்கு, கணினியால் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பொருத்தமான எண்களை ஒதுக்கித் தருவதே. உதாரணமாக, ஆங்கிலத்தின் 'A' என்ற எழுத்துக்கு ASCII குறியேற்ற அட்டவனைப்படி 65 என்ற எண் ஒதுக்கப்படுகிறது. ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு தகவல்களை கொண்டு செல்லும் போது இந்த குறியேற்ற அட்டவனையின்படி எழுத்துக்கள் எண்களாய் சேமிக்கப்பட்டு பின் மீண்டும் எழுத்துக்களாய் மாற்றி திரையில் காட்டப்படுகின்றது.

ASCII குறியேற்றம் எல்லா இயங்கு தளங்களிலும் முன்னரே நிறுவப்பட்டு விடுவதால் நீங்கள் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சிட்டு அந்தக் உரைக் கோப்பினை எந்தக் கணினியில் திறந்தாலும் பிரச்சனை இன்றி படிக்க இயலும். ஆனால் பிற குறியேற்றங்களைப் பொறுத்தவரை அந்த குறியேற்றத்தின் அட்டவனைப்படி எழுத்துருக்கள் நிறுவாத கணினிகளில் அவ்வாறு எழுத்துக்கள் மாற்றிக் காட்டப்படாமல் புரியாத எழுத்துக்களை காட்டும்.

இதை விளக்க, நடைமுறை ஒப்பீடாக 'நல்ல' என்ற தமிழ் வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இந்த வார்த்தைக்கு தமிழ் அறிந்த அனைவரும் பொருள் விளங்கிக் கொள்வர். அதே சமயம் 'நல்ல' என்று ஒரு தமிழ் அறியாத தெலுங்கு மொழி பேசுபவரிடம் சொன்னால் அதனை தெலுங்கிலே அவர் 'கருப்பு' என பொருள் கொள்வார். 'நல்ல' என்னும் வார்த்தை இரு மொழியிலும் இருப்பதால் பொருள் வேறாயினும் இருவரும் புரிந்து கொள்வர். ஆனால் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படும். இருவருமே ஒரே மொழியை பேசுபவர்களாய் இருப்பின் இந்த குழப்பம் நேராது.

அது போல, கணினி தகவல் பரிமாற்றத்தில், பயனர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு குறியேற்றத்தை பயன்படுத்துவதன் மூலம் தகவல் பரிமாற்றக் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

இன்றைய தமிழ்க் கணிமை உலகில் பல்வேறு குறியேற்றங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் சில:
  • தாம் (TAM - Tamil Monolingual)
  • தாப் (TAB - Tamil Bilingual)
  • திஸ்க்கி (TSCII - Tamil Standard Code for Information Interchange)
  • ஒருங்குறி (Unicode)
இந்த குறியேற்றங்களில் இன்று இணையத்தமிழில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது ஒருங்குறி.

கணினி மயமாக்கப்பட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் தாம்/தாப் தகுதரம் பயன்பாட்டில் உள்ளது. அரசு சார் இணையதளங்களில் திஸ்கி பயன்படுத்தப்படுகிறது.

இது தவிர, அச்சு மற்றும் பத்திரிக்கை துறையினர் பல்வேறு தனிப்பட்ட தமிழ் குறியேற்றங்களையும் அதன் அடிப்படையில் அமைந்த எழுத்துருக்களையும் பயன்படுத்துகின்றனர்.

இந்த குறியேற்றங்களின் அட்டவனையை பார்த்தீர்களானால் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் ஒரு எழுத்தெண் வழங்கப்படுவது தெரியும்.

படம் 1 தாம் அட்டவனை

படம் 2 தாப் அட்டவனை

படம் 3 திஸ்கி அட்டவனை

படம் 4 ஒருங்குறி தமிழ் அட்டவனை


சரி, இன்றைய இடுகையில் குறியேற்றங்கள் பற்றி அறிந்து கொண்டோம். இன்னும் சில எழுத்துரு தொடர்பான நுட்பங்களை பற்றி அடுத்த இடுகையில் அறிவோம்.

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

ஃபயர்ஃபாக்ஸ் 3 பதிவிறக்க உலக சாதனை தினம் 18 ஜூன் 2008 - பங்குகொள்வீர்!
Google Buzz Logo

நீங்கள் ஃபயர்ஃபாக்ஸ் ஆர்வலரா? ஃபயர்ஃபாக்ஸ் உலக சாதனை படைக்க வேண்டுமா? உங்களால் அதற்கு உதவ முடியும்.

ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபயர்ஃபாக்ஸ் 3.0 வெளியீட்டை இன்று (18 ஜூன் 2008) பதிவிறக்க வகை செய்திருக்கிறது. ஒரே நாளில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை படைக்க இந்நிறுவனத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.

அதற்கு உங்களால் உதவ முடியும். இந்திய நேரம் 18 ஜூன் 2008 இரவு 11:46க்குள் http://www.spreadfirefox.com/en-US/worldrecord என்ற சுட்டியிலிருந்து ஃபயர்ஃபாக்ஸ் 3 ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் கணினிகளில் நிறுவிக் கொள்ளுங்கள்.

ஃபயர்ஃபாக்ஸ் உலக சாதனை படைக்க நீங்களும் பங்கு பெறுங்கள்.

தொழில்நுட்ப பதிவர்களின் கவனத்துக்கு - கணிமொழி
Google Buzz Logo

கணிமொழி வலைத்தளத்தின் அறிமுகம் மற்றும் படைப்புகளுக்கான விண்ணப்ப மடலை தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவுக்கு தபுண்டு லினக்ஸ் குழுவைச் சார்ந்த ஆமாச்சு (ம. ஸ்ரீ ராமதாஸ்) அனுப்பியிருந்தார்.

தங்கள் வலைப்பதிவுகளில் தொழில்நுட்பம் (முக்கியமாய் ஒரு குறிப்பிட்ட நுட்பம் பற்றி கற்று தரும் பாடங்கள்) சார்ந்த பதிவுகளை எழுதிவரும் பதிவர்கள் தங்கள் படைப்புகளை கணிமொழி தளத்துக்கு அனுப்பலாமே.

மடலின் நகல் கீழே:

அறிமுகம்

கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம் உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும் மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள். இரண்டாவது உருவாக்குபவருக்கே உரித்தான தனியுரிம மென்பொருள். இவ்விரண்டினுள் கட்டற்ற மென்பொருள் உலகின் விடயங்களை மொழிய விழையும் முயற்சி கணிமொழி.

இலக்குகள்

  • கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விடயங்கள் துவங்கி அதிநுட்ப விடயங்களையும் அறிந்திட விழையும் ஒருவருக்கு வேண்டிய தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது.
  • உரை, ஒலி, ஒளி என இயன்ற ஊடக வகைகளில் படைப்புகளை ஊக்குவிப்பது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்துறையில் நிகழ்பவற்றை எடுத்துரைப்பது. தற்போதைய இலக்கு ஒரு மாத கால இடைவெளி.
  • எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது.
  • அச்சுப் பிரதிகள் இட்டும் விநியோகிக்கப்படும். (சிறிய அளவில் துவங்க உத்தேசம்.)
  • தங்கள் பகுதியில் அச்சிட்டு விநியோகிப்பது அதிக பலனைத் தருமாயின் அங்ஙனம் செய்ய முனைந்து முயற்சிகள் மேற்கொள்ளவும்.
  • விவரங்கள் வளர வளர அவற்றை புத்தகங்களாகவும் வட்டுக்கள் உள்ளிட்ட ஏனைய சேமிப்பு ஊடகங்களின் வாயிலாகவும் வெளியிடுவது.

பங்களிக்க

  • விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
  • கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த விடயமாக இருத்தல் வேண்டும்.
  • பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு காபிலெப்ட்.
  • தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
  • கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவையாகவும் இருக்கலாம்.
  • படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
  • தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசுவைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
  • தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
  • தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக திட்டப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கவும்.
  • தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் தாங்கள் பங்களிக்கலாம்.
  • ஐயங்களிருப்பின் திட்டப் பொறுப்பாளருக்கு மடலியற்றவும்.

விண்ணப்பங்கள்

  • தொழில்நுட்பத்தை அறிய விழையும் எளிய மக்களுக்காக மேற்கொள்ளப்படும் சிறிய முயற்சியாகும் இது.
  • இதில பங்களிக்க தாங்கள் அதிநுட்ப ஆற்றல் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
  • தங்களுக்கு தெரிந்த விடயத்தை இயன்ற எளிய முறையில் எடுத்துரைக்க ஆர்வம் இருப்பின் போதுமானது.
  • இதன் வளர்ச்சி நம் ஒவ்வொருவரின் கையிலுமே உள்ளது.
  • குறைகளிலிருப்பின் முறையாக தெரியப்படுத்தி முன்னேற்றத்திற்கு தோள் கொடுக்கவும்.

முதல் இதழ் வரும் சித்திரையிலிருந்து துவங்கும். தங்கள் படைப்புகளை ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இணையதளம்: http://kanimozhi.org.in

தற்காலிக மடலாடற் குழு: http://groups.google.com/group/kanimozhi-aakkam

ஔவைக்கு குரல் கொடுங்கள்
Google Buzz Logo

தற்போது உருவாக்கத்தில் இருக்கும் ஔவை உரை பேசி சேவைக்கான குரல் கோப்புகள் தயாரிப்பில் இதுவரை சரியான உச்சரிப்புடைய கோப்புகள் கிடைக்கவில்லை.

ஔவை உரைபேசிக்கு குரல் கொடுக்க விரும்புவோர் ஔவை ஆத்திச்சூடியை (ஆத்திசூடி by ஔவையார், ATHICHOODI by Auvaiyar) உரக்கப் படித்து கணினியில் MP3 கோப்பாக சேமித்து rapidshare, megaupload போன்ற தளங்களில் பதிவேற்றி சுட்டியை எனக்கு தனிமடலில் (higopi [at] gmail [dot] com) அனுப்புங்கள்.

குரல் பதிந்து அனுப்புவோர் கவனத்துக்கு:

  1. ஒலிக் கோப்பின் MP3 பதிவுத் தெரிவுகள்: 128 kbps, mono, 44khz
  2. ஓரிரு வரிகளை பதிவு செய்து மீண்டும் Play செய்து Noice இல்லை என உறுதிபடுத்திக் கொண்டு முழுவதும் பதிவு செய்யுங்கள்.
  3. அமைதியான சூழலில் பதிவு செய்யுங்கள். கூடுமானவரை சுற்றுப்புற ஓசைகள் இல்லாதிருத்தல் நல்லது.
  4. பதிவு செய்ய ஆடாசிடி http://audacity.sourceforge.net/ பயன்படுத்துங்கள்.
  5. தேவையெனில் திருத்தங்களுக்கும் மறு பதிவுக்கும் நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டி வரலாம்.
ஔவை உரைபேசி குறித்து மேலதிக தகவல்கள் இங்கே.

ஔவைக்கும் தமிழுக்கும் குரல் கொடுங்கள்.

அதியன் 3.0.0 வெளியீடு
Google Buzz Logo

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 3.0.0ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

இந்த வெளியீட்டில் களையப்பட்ட வழுக்கள்:

  1. ஆங்கில சொற்றொடர்களும் தெரிவு செய்த தகுதரத்துக்கு மாறுகின்றன
  2. ஒகர ஓகார ஔகார ஒற்றுக்களின் canonical equivalence வழு
இந்த வெளியீட்டில் புதிய வசதிகள்:

அ.வலைத்தள முன் தெரிவுகள்

குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு தேவையான எழுத்துரு மாற்றத்தை முன் தெரிவு செய்ய இயலும். அவ்வலைத்தளங்களில் உலாவும் போது தானியங்கு முறையில் எழுத்துரு மாற்றம் செய்யப்படும். சில தகுதரம் அறியப்பட்ட தளங்கள் முன் தெரிவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆ.புதிய எழுத்துரு மாற்றங்கள்

தினத்தந்தி, தினமணி ஆகிய தளங்களுக்கான எழுத்துரு மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இ. வலச்சொடுக்கிப் பட்டியல்

இப்போது எந்தெந்த எழுத்துரு மாற்றங்களை வலச்சொடுக்கிப் பட்டியலில் காட்ட வேண்டும் என்பதை தெரிவு செய்ய இயலும். வலைத்தள முன்தெரிவில் தேர்ந்தெடுத்த எழுத்துரு மாற்றங்கள் ஏற்கனவே வலச்சொடுக்கிப் பட்டியலில் தெரிவு செய்யப்படாதிருந்தால் தானாகவே தெரிவு செய்துவிடும்.

விரைவில் இந்த வெளியீடு மொசில்லா நீட்சிகள் தளத்திலும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அப்போது ஏற்கனவே இந்நீட்சியை நிறுவியுள்ளோரின் உலாவிகள் புதுப்பிக்க சோதிக்கும் போது தானியங்கு முறையில் தரவிறக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

இந்த வெளியீட்டின் வழுக்களை சோதித்து விரிவான வழு அறிக்கை அளித்த தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவைச் சேர்ந்த சேது அவர்களுக்கும் மற்றும் இதன் முன் வெளியீட்டு சோதனையின் போது பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் http://adhiyan.mozdev.org/bugs.html என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

உலகெங்கும் உலாவும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

தமிழ்விசை 0.4.0 வெளியீடு
Google Buzz Logo

தமிழ்விசையின் அடுத்த பதிப்பான 0.4.0 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டில் களையப்பட்ட வழுக்கள்:

  1. சாட்ஜில்லாவில் தமிழ் விசை இயங்க மறுத்தது.
  2. தமிழ்விசை 0.3.2 புதிய ஜி-மெயிலில் இயங்க மறுத்தது.
  3. தமிழ் 99 விதிகள் 5,7,9,10,11 ஆகியவை இல்லை.
  4. தமிழ் 99 விசைப்பலகையில் (௺,௹) போன்ற சிறப்புக் குறியீடுகள் இல்லை.
  5. தமிழ் 99 ஆய்தம் 'ஃ' தட்டச்சிட முடியவில்லை.
  6. அஞ்சல் விசைப்பலகையில் qpyarqpaakS என தட்டச்சினால் 'ஃபயர்ஃபாக்ஸ்' என்று மாறவில்லை.
  7. பாமினி,புதிய/பழைய தட்டச்சு விசைப்பலகைகளில் கொம்பு, புள்ளி குறித்த வழுக்கள்.
  8. பாமினி,புதிய/பழைய தட்டச்சு விசைப்பலகைகளில் ஒகர ஓகார ஔகார canonical equivalences பிரச்சனை.
  9. பாமினி,புதிய தட்டச்சு விசைப்பலகைகளில் ஔகாரம் அடுத்துவரும் ஒற்று பிரச்சனை
  10. பாமினி விசைப்பலகையில் விடுபட்ட எழுத்துக்கள்.
இந்த வெளியீட்டில் புதிய வசதிகள்:

அ. வலைத்தள முன் தெரிவுகள்

குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு தேவையான விசைப்பலகைகளை முன் தெரிவு செய்ய இயலும். அவ்வலைத்தளங்களில் உலாவும் போது தானியங்கு முறையில் விசைப்பலகை தெரிவு செய்யப்படும்.

ஆ. காட்சியமைப்பில் மாறுதல்

தமிழ் விசைப்பலகைகள் தெரிவில் உள்ளபோது தட்டச்சு உரைப் பெட்டியின் பின்புலம் வெளிர்நீல நிறத்திலும், எல்லைக் கோடு நீல நிறத்திலும் மாறும்.

இ. இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகை

இந்தப் பதிப்பில் புதிதாக இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகை சேர்க்கப்பட்டுள்ளது. இனி இந்த விசைப்பலகை பயனர்களும் தமிழ்விசை நீட்சியை பயன்படுத்த இயலும்.

ஈ. அவ்வை விசைப்பலகை:

இந்தப் பதிப்பில் புதிதாக அவ்வை விசைப்பலகை சேர்க்கப்பட்டுள்ளது. இனி இந்த விசைப்பலகை பயனர்களும் தமிழ்விசை நீட்சியை பயன்படுத்த இயலும்.

உ. வலச்சொடுக்கிப் பட்டியல்

இப்போது எந்தெந்த விசைப்பலகைகளை வலச்சொடுக்கிப் பட்டியலில் காட்ட வேண்டும் என்பதை தெரிவு செய்ய இயலும். வலைத்தள முன்தெரிவில் தேர்ந்தெடுத்த விசைப்பலகைகள் ஏற்கனவே வலச்சொடுக்கிப் பட்டியலில் தெரிவு செய்யப்படாதிருந்தால் தானாகவே தெரிவு செய்துவிடும்.

இந்த புதிய பதிப்பை பதிவிறக்கி நிறுவ http://tamilkey.mozdev.org/installation.htmlல் சொல்லியபடி செய்யவும்.

விரைவில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 தளத்திலும் இந்த புதிய பதிப்பு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தமிழ்விசை 0.4.0 வெளியீடு தரவிறக்க கிடைக்கும் போது தற்சமயம் இந்த நீட்சியைப் பயன்படுத்தும் கணினிகளில் தானியங்கி முறையில் புதிப்பித்துக் கொள்ளும்.

இந்த வெளியீட்டின் வழுக்களை சோதித்து விரிவான வழு அறிக்கை அளித்த தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவைச் சேர்ந்த சேது, மயூரேசன் ஆகியோருக்கும், மேம்பாடுக்கான யோசனைகள் அளித்து உதவிய சுரதா யாழ்வாணன், ரவிசங்கர், பாலபாரதி ஆகியோருக்கும் மற்றும் இதன் முன் வெளியீட்டு சோதனையின் போது பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் http://tamilkey.mozdev.org/bugs.html என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

உலகெங்கும் உலாவும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

வலைத்தளத்தில் சில மாற்றங்கள்
Google Buzz Logo

எனது வலைத்தளத்தில்[www.higopi.com] சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

  1. தளத்தின் அனைத்து வலைப்பக்கங்களும் க்ணூ FDL உரிமத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன.
  2. தளத்தில் பயன்பாட்டில் உள்ள அதியமான், தகடூர் உட்பட அனைத்து கருவிகளும் அடுத்த வெளியீடு (2.0) செய்யப்பட்டு க்ணூ GPL உரிமத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன.
  3. பக்க அமைப்பின் வார்ப்புரு மாற்றப்பட்டுள்ளது.
  4. News மற்றும் FORUM பிரிவுகள் புதிய வார்ப்புருவில் அமைக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளன.

புதிய வார்ப்புரு தெரிவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உங்கள் உலாவியின் Cache ஐ நீக்கிவிட்டு மறுபடி உலாவிப் பாருங்கள்.

மேலும் இந்த க்ணூ GPL உரிமத்தின் கீழ் நிரல்களை மறுபயன்பாட்டிற்காக எடுத்தாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
  1. நிரல்களை யார் வேண்டுமானாலும் க்ணூ GPL உரிமத்தின் அனைத்து விதிகளுக்குட்பட்டு நிரல் மாற்றம் அல்லது மறுபயன்பாடு செய்யலாம்.
  2. நிரல்களின் Comments ல் மூல நிரல் என்னுடையது என்பது குறித்துள்ள எந்த வரிகளும் நீக்கப்படவோ மாற்றப்படவோ கூடாது.
  3. இந்த உரிமம் கட்டற்ற திறவூற்று நிரலுக்கானது, எனவே இதர கட்டற்ற திறவூற்று நிரலுடன் மட்டுமே சேர்த்துப் பயன்படுத்தவோ மறுவெளியீடு செய்யவோ முடியும். எந்த தனியுரிமை (Properitory) நிரலுடனும் சேர்த்து பயன்படுத்தவோ அல்லது சேர்த்து மறு வெளியீடு செய்யவோ முடியாது.

சமீபத்தில் எனது நிரல்களை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இந்த உரிமப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

உங்கள் ஆதரவுக்கும் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கும் நன்றி.

அதியன் 2.0.4 வெளியீடு
Google Buzz Logo

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 2.0.4ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

மாற்றங்கள்:

1) குமுதம், தினகரன் ஆகிய வலைத் தளங்களின் சில வலைப்பக்கங்களில் திடீரென ஒருங்குறி மாற்றம் செயல்படவில்லை (மற்ற தளங்களிலிருந்து நேரடியாய் விளம்பரம் வெளியிடும் தளங்களில் Firefox Security Exception காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டது.) இவ்வழு இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

இந்த வெளியீடு மொசில்லா நீட்சிகள் தளத்திலும் கிடைக்கும். ஏற்கனவே இந்நீட்சியை நிறுவியுள்ளோரின் உலாவிகள் புதுப்பிக்க சோதிக்கும் போது தானியங்கு முறையில் தரவிறக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

பி.கு: இந்த வெளியீடு சில நாட்களுக்கு முன்பே பதிவிறக்கக் கிடைத்தாலும் இது குறித்த அறிவிப்பை இன்றுதான் வெளியிட முடிந்தது (அலுவலகத்துல ஆணி அதிகமாயிடிச்சிங்க)

அதியன் 2.0.3 வெளியீடு
Google Buzz Logo

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 2.0.3ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

மாற்றங்கள்:

1) TSCII -> ஒருங்குறி மாற்றத்தில் ஒரு சிறிய வழு சரிசெய்யப்பட்டது.
2) TAB மற்றும் TAM தகுதரங்களிலிருந்து ஒருங்குறிக்கு மாற்றும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. (இதன் மூலம் தினகரன் போன்ற நாளிதழ் வலைத் தளங்கள், குமுதம், விகடன் ஆகிய வலைத் தளங்களை ஒருங்குறிக்கு மாற்றி படிக்க/சேமிக்க இயலும்.)

இந்த மாற்றங்கள் அதியமான் மாற்றியிலும் சேர்க்கப்பட்டுவிட்டன.

இந்த வெளியீடு மொசில்லா நீட்சிகள் தளத்திலும் கிடைக்கும். ஏற்கனவே இந்நீட்சியை நிறுவியுள்ளோரின் உலாவிகள் புதுப்பிக்க சோதிக்கும் போது தானியங்கு முறையில் தரவிறக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

தமிழ் விசை 0.3.2 வெளியீடு
Google Buzz Logo

தண்டர்பர்ட் மின்னஞ்சல் செயலியின் புதிய வெளியீடான 2.0.0.0 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த புதிய செயலியில் பதிப்பு வேறுபாடுகள் காரணமாய் தமிழ்விசை 0.3.1 இயங்க மறுத்தது.

இந்த வழுவை சரி செய்து தமிழ்விசையின் அடுத்த பதிப்பான 0.3.2 இன்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய பதிப்பை பதிவிறக்கி நிறுவ http://tamilkey.mozdev.org/installation.htmlல் சொல்லியபடி செய்யவும். இந்த வெளியீட்டில் புதிய வசதிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. எனவே, ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோர் தமிழ் விசை 0.3.1 லிருந்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

விரைவில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 தளத்திலும் இந்த புதிய பதிப்பு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தமிழ்விசை 0.3.2 தரவிறக்க கிடைக்கும் போது தற்சமயம் இந்த நீட்சியைப் பயன்படுத்தும் கணினிகளில் தானியங்கி முறையில் புதிப்பித்துக் கொள்ளும்.

பிற்சேர்க்கை: இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் http://tamilkey.mozdev.org/bugs.html என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அதியன் 2.0.2 வெளியீடு
Google Buzz Logo

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 2.0.2ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

மாற்றங்கள்:

1) TSCII -> Unicode மாற்றத்தில் ஒரு சிறிய வழு சரிசெய்யப்பட்டது.
2) ᮯᮯ போன்ற (Character Encoding -> UTF8 என்று வைத்த பின்னும்) படிக்க இயலாத எழுத்துக்களை மாற்றி படிக்க முடியும்.
(புது ப்ளாக்கரில் இந்த வழுவை சரி செய்ய எழுதிய நிரலில் சிறு மாற்றம் செய்து இணைத்துவிட்டேன் )

இந்த மாற்றங்கள் அதியமான் மாற்றியிலும் சேர்க்கப்பட்டுவிட்டன

இந்த வெளியீடு கூடிய விரைவில் மொசில்லா நீட்சிகள் தளத்திலும் கிடைக்கும். அப்போது ஏற்கனவே இந்நீட்சியை நிறுவியுள்ளோரின் உலாவிகள் தானியங்கு முறையில் தரவிறக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

புது ப்ளாக்கரில் கோபி பிரச்சனை
Google Buzz Logo

புது ப்ளாக்கருக்கு மாறிய வலைப்பதிவுகளி்ல் சில இடுகைகளில் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர் பெயர் accented ஆகத் தெரிகிறது.

புதிய இடுகைகளின் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர் பெயர் சரியாக தெரிகிறது. எனினும் பழைய இடுகைகளில் ஏற்கனவே உள்ள பின்னூட்டமிட்டவர் பெயர் accented ஆகத் தெரிகிறது.

இது குறித்து ப்ளாக்கரின் Known Issues பக்கங்களில் பார்த்தால் "ஆங்கிலமல்லாத வலைப்பதிவுகளுக்கான ஆதரவு தருவது மிகப்பெரிய வேலை... சென்று கொண்டிருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார்கள்.

நமது வலைப்பதிவின் வார்ப்புருவில் மாற்றம் செய்து பழைய இடுகைகளில் ஏற்கனவே உள்ள பின்னூட்டமிட்டவர் பெயரை சரியாக தெரிய வைக்கலாம்.

உங்கள் வார்ப்புருவில் </HEAD> என்பதற்கு முன்னால் கீழ்க்காணும் நிரல்த் துண்டை சேர்த்திடுங்கள்:

<script>
function asc2uni(istr)
{
retstr = "";
i = 0;
while( i < istr.length)
{
if(istr.charCodeAt(i) < 128 || istr.charCodeAt(i) > 255 )
{
retstr += String.fromCharCode(istr.charCodeAt(i));
i++;
}
else
{
chr = istr.charCodeAt(i+2);
if(istr.charCodeAt(i+1) == 175)
chr += 64;
retstr += "&#x0B"+ tohex(chr)+";";
i+=3;
}
}
return retstr;
}

function tohex(i)
{
hexarr = '0123456789ABCDEF'.split("");
a2 = '';
ihex = Math.floor(eval(i +'/16'));
idiff = eval(i + '-(' + ihex + '*16)');
a2 = hexarr[idiff] + a2;
while( ihex >= 16)
{
itmp = Math.floor(eval(ihex +'/16'));
idiff = eval(ihex + '-(' + itmp + '*16)');
a2 = hexarr[idiff] + a2;
ihex = itmp;
}
a1 = hexarr[ihex];
return a1 + a2 ;
}
</script>
பின்னர் வார்ப்புருவில்

பழைய ப்ளாக்கர் வார்ப்புரு எனில்:

<$BlogCommentAuthor$> என்பதைத் தேடி அதை கீழ்க்கண்டவாறு மாற்றிக் கொள்ளுங்கள்:

<script>
document.write(asc2uni('<$BlogCommentAuthor$>'));
</script>


புதிய ப்ளாக்கர் வார்ப்புரு எனில்:

ஜெகத் கைமண்ணளவு பதிவில் சொல்லியபடி செய்யுங்கள்

வார்ப்புருவை சேமித்திடுங்கள். அவ்வளவு தான்! இப்போது உங்கள் வலைப்பதிவின் பின்னூட்டப் பெயர்கள் "கோபி (Gopi)" என்பது போல் சிதறாமல் "கோபி (Gopi)" என்பது போல் சரியாய் காட்டும்.

பி.கு:
1) இது உங்கள் இடுகையிலுள்ள பின்னூட்டப் பெயர்களை மட்டுமே சரியாகக் காட்டும். ப்ளாக்கர் பின்னூட்டப் பெட்டியில் சரி செய்ய இயலாது.
2) இது ஒரு தற்காலிக தீர்வே. இப் பிரச்சனையை ப்ளாக்கர் சரி செய்துவிட்டால் தேவைப்படாது.
3) இந்த நிரல் ஒருங்குறியி்லுள்ள எல்லா மொழிகளுக்குமானதல்ல. தமிழுக்கு மட்டுமே சரியாய் செயல்படும்.

மணி மேனேஜர் Ex இப்போது தமிழில்!
Google Buzz Logo

மணி மேனேஜர் Ex என்பது தனிநபர் பண மேலாண்மைக்காக உலக அளவில் பரவலாய் பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருள் (free open source software).

இச்செயலி மூலம் தனிநபர் எவரும் தன்னுடைய ஒவ்வொரு வரவு செலவையும் கணக்கில் கொள்ள இயலும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை (Budget) அமைத்து, வரவும் செலவுகளும் அத்திட்டத்துள் செயல்படுகின்றதா (Budget Performance) என்பதை கண்காணிக்க இயலும்.

இதன் அறிக்கைகள்(Reports) வசதி மூலம், குறிப்பிட்ட கால வரையில் நாம் செலவிடும் பணம் எங்கு, எவருக்கு, எவ்வளவு செல்கிறது என்பதை தெளிவாக அறிந்திட இயலும்.

மேலும், இச்செயலியில் பங்கு சந்தை, வாகனம், நிலம், நகை இதர முதலீடுகளையும் அதன் விவரங்களையும் இட்டு அதன் தற்போதைய மதிப்பினை கணக்கிட இயலும்.
(உ.ம்:இச்செயலியின் அறிக்கையின் வாயிலாக எனது வாகன எரிபொருளுக்கான ஆண்டு செலவையும் வாகன முதலீட்டின் தற்போதைய மதிப்பையும் அறிந்து, செலவைக் குறைக்க முடிந்தது)

மொத்தத்தில் இந்த செயலி எந்த ஒரு கணத்திலும் நம் நிதி/சேமிப்பின் தற்போதைய மதிப்பு என்ன என்பதை அறிந்திடவும், தேவையற்ற செலவுகளை குறைத்து, தேவையானவற்றில் சரியான வழியில் செலவிடவும் திட்டமிட/கண்காணிக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள்.

பல்வேறு கட்டற்ற தமிழ் கணிமை திட்டங்களை குறித்து முகுந்த் அவர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்த போது இச்செயலியின் தமிழாக்கம் குறித்தும் பேசப்பட்டது. பின்னர் இச்செயலியினை வடிவமைத்து நிரல் திட்டத்தை நடத்தி வரும் மதன் கனகவேல் (இவர் ஒரு தமிழர்) அவர்களுக்கு மடல் அனுப்பிய போது, இச்செயலியினை தமிழில் மாற்ற இசைவு தெரிவித்தார். உடனடியாய் தமிழா! மொழிபெயர்ப்பு வலைத்தளத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒருவாரத்துக்குள் தமிழாக்கம் நிறைவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் பெருமளவில் நானும், முகுந்த் அவர்களும் பங்கு பெற்றோம்.

நான் முதன் முதலாய் நிரல் எழுதாமல் தமிழாக்கத்தில் மட்டும் பங்கு பெற்ற தமிழ் கணிமைத் திட்டம் இது.

இவ்வாரம் வெளியான இதன் புதிய வெளியீடான மணி மேனேஜர் 0.8.0.2வில் தமிழ் மொழி தெரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இச்செயலியை மணிமேனேஜர் தரவிறக்கப் பக்கத்திலிருந்து இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.

நம் பணம் எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்! தேவையற்ற செலவுகளை குறைக்க திட்டமிடுவோம்!

தமிழ்விசை நீட்சி 0.3 வெளியீடு
Google Buzz Logo

அண்மையில் தமிழ்விசை ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் 0.3 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட்சியின் நிரலாக்கத்தில் பங்கேற்றதற்காக மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

இதன் முந்தைய 0.2 பதிப்பினை நான் பயன்படுத்த ஆரம்பித்த நாள் முதல் சில மேம்பாடுகளை செய்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியதுண்டு. முகுந்த் அவர்களை சந்தித்த போது இந்த மேம்பாடுகளைக் குறித்து சொன்னேன். உடனடியாக அவர் எனக்கு நிரல் மாற்ற உரிமையளித்ததோடு எந்த ஒரு தடையுமின்றி எனது விருப்பம் போல செயல்பட அனுமதித்தார். அதற்காக அவருக்கு எனது நன்றி.

வாய்ஸ் ஆன் விங்க்ஸ் அவர்களின் முந்தைய நிரலை பார்வையிட்டபோது மலைத்தேன். அப்பாடா! என்ன ஒரு நுட்பம்!! அவரின் நிரலிலிருந்து புதிதாய் பலவற்றை கற்றுக் கொண்டேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

முன் வெளியீட்டுக் கோப்புகளை "கட்டற்ற தமிழ்க் கணிமை" குழுவுக்கு அளித்தபோது முழு ஈடுபாட்டோடு வழுக்களை கண்டறிந்து உடனுக்குடன் சொன்ன ரவி, திவே மற்றும் சேது ஆகிய அன்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அவர்கள் இல்லையேல் இந்த வெளியீடு முழுமை பெற்றிருக்காது.

இனி இந்த வெளியீடு பற்றி:

1) தமிழ் கீ நிரலாக்கத் திட்டத்தின் பெயர் "தமிழ்விசை" என மாற்றப்பட்டுள்ளது.
2) தமிழ்விசையமைப்புகள் வலது சொடுக்கி பட்டியலில் துணைப் பட்டியலாக இணைக்கப்பட்டுள்ளது.
3) தமிழ்விசை 0.2 பதிப்பின் வழுக்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டன.
4) பாமினி, மற்றும் புதிய/பழைய தட்டச்சு விசையமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.
5) குறுக்கு விசைகள் மாற்றப்படுள்ளன : "Alt + F8" லிருந்து "Alt + F12" வரை.
6) குறுக்கு விசைகளை பயனரே தெரிவு செய்து கொள்ள இயலும்.

தமிழ்விசை 0.3யின் xpi கோப்பினை http://tamilkey.mozdev.org/installation.html என்ற சுட்டியிலிருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளலாம். விரைவில் https://addons.mozilla.org/firefox/2994/ என்ற சுட்டியிலும் கிடைக்க வகை செய்யப்படும்.

இந்தப் பதிப்பில் வழுக்கள் இருந்தால் அதனை தமிழ்விசை வழுப் பட்டியலில் சேர்த்திடுங்கள். உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பின்னூட்டமிடுங்கள்.

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி
Google Buzz Logo

சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறுவும் உரிமை(Admin Rights) மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயே இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றி படிப்பதற்காக அதியமான் எழுத்துரு மாற்றி உருவாக்கப்பட்டது.

அதியமான் பயன்படுத்தும் போது சில வரையரைகள் இருந்தன.

அவற்றுள் சில:

  1. உள்நுழைவு(login) தேவைப்படும் வலைத்தளங்களில் பயன்படுத்த இயலாது.
  2. ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript) பயன்படுத்தும் சில தளங்கள் சரியாக பார்க்க இயலவில்லை.
  3. குக்கீஸ்(Cookies) பயன்படுத்தும் சில தளங்கள் சரியாக பார்க்க இயலவில்லை.
இந்த குறைகளை களைய உருவாக்கப்பட்டதே அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி (Firefox Extension). இந்த நீட்சியை ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோர் மொஸில்லா தளத்திலிருந்து உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் எளிதாய் நிறுவிக்கொள்ளலாம். ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியை நிறுவ Admin Rights தேவையில்லை.

இந்த நீட்சியின் மூலம், TSCIIஅல்லது TUNE தகுதரத்திலுள்ள வலைப்பக்கத்தை படிக்கும் போது Right Click செய்து Context Menuவில் Unicode தகுதர மாற்றத்தை தேர்வு செய்வதன் மூலம் எழுத்துரு நிறுவாமலேயே படிக்கலாம்.


இது போலவே Tools Menuவிலிருந்தும் தேவையான தகுதர மாற்றத்தை தேர்வு செய்யலாம்.



இந்த ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியை உருவாக்க ஊக்கம் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதியன் பற்றி மேலும் அறிய : http://www.higopi.com/adhiyan/

பிடித்திருந்தால் அனைவருக்கும் சொல்லுங்கள்.
பாராட்டுகள் மட்டுமென்றால் தனிமடலில் சொல்லுங்கள்.
குறையிருந்தால் இங்கே பின்னூட்டமாக சொல்லுங்கள்.