ரஜினி செய்தது சரியா?
Google Buzz Logo

ரஜினி நிலம் வாங்கியது தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த தகவலில் வருமான வரி ஏய்ப்பு அல்லது கருப்பு பணம் என்பது எப்படி ஏற்படுகிறது எனப் பார்ப்போம்.

பொதுவாக ஏன் நிலம் வாங்கிய விலையை விட குறைவாக பதிவு செய்கிறார்கள்?

  1. மற்றவர் நலனுக்கு. ஒருவர் வாங்கிய நிலத்திற்கான பதிவு மதிப்பு பொதுவாக அதே பகுதியில் கடைசியாக பதிவு செய்த நிலத்தின் மதிப்போ அல்லது சற்று அதிகமாகவோ கொள்ளப்படுகிறது. இந்த செய்தியில் ரஜினி வாங்கிய நிலத்தின் உண்மை மதிப்புக்கு பதிவு செய்திருந்தால் அடுத்து அந்த பகுதியில் நிலம் வாங்குவோர் அனைவரும் ஏக்கருக்கு 21 லட்சம் அல்லது அதற்கு அதிகமாகத் தான் பதிவு செய்ய வேண்டியிருக்கும் (நிலப்பதிவில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. உண்மையில் நில மதிப்பீடு எப்படி செய்யப்படுகிறது என எனக்கு தெரியாது)
  2. வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணப் புழக்கத்துக்கு. ஒரு ஏக்கர் 21 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 2.3 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்வதன் மூலம்
    • வாங்குபவருக்கு பதிவு செய்த விலையை விட ஏக்கருக்கு 18.7 லட்சம் கூடுதல் எனினும், நிலம் பதிவு செய்யும் கட்டணம் (9-10% நில மதிப்பு) மற்றும் ஒவ்வொரு வருடத்துக்குமான சொத்து வரி ஆகியவை மிகவும் குறைகிறது
    • விற்பவருக்கு தம் சொத்தை விற்பதால் ஏற்படும் வருமானத்தின் மதிப்பில் ஏக்கருக்கு 18.7 லட்சம் கணக்கில் காட்டாததால் அதற்கான வருமான வரி கட்டத் தேவையில்லை
    • ஏக்கருக்கு 18.7 லட்சம் ரூபாய் புழக்கத்திலுள்ள கணக்கில் வராத கருப்புப் பண வரிசையில் கூடுதலாகிறது
இது போல குறைந்த மதிப்பில் செய்வதால் அரசுக்கு 2004-2005ல் சென்னையில் மட்டும் ஏற்பட்ட நட்டம் பற்றிய ஒரு தணிக்கை அறிக்கை இங்கே

இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் நிலம் பதிவு செய்யும் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினி கருப்பு பணத்திற்கு எதிரான பாத்திரத்தில் நடித்தார் என்பதற்காக அவர் செய்தது இது போல நிலம் பதிவு செய்யும் ஏனையோர் செய்வதை விட "கூடுதல் தவறு" என்பது நகைச்சுவை. உண்மையில் சிவாஜி படத்தின் முற்பகுதி கதை போலத்தான் ரஜினி நடந்திருக்கிறார். (இவர் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை, இவருக்கு நிலம் விற்றவர் தான் கணக்கில் வராத கருப்புப் பணமாக பெற்றிருக்கிறார்)

தவறுதல் மனித இயல்பு. ரஜினியும் மனிதரே. ரஜினி ரசிகன் என்பதற்காக ரஜினியின் தவறுகளுக்கெல்லாம் சப்பை கட்டு கட்டிக்கொண்டிருக்க வேண்டிய தேவை ஒரு நல்ல ரசிகனுக்கு இல்லை.

ரஜினியின் ஆளுமை போலவே அவர் செய்யும் சிறு தவறும் பல மடங்காக பெரிதாக்கப்பட்டு ஊடக விற்பனைக்கு பலிகடா ஆக்கப்படுகிறது. ரஜினி என்ற சக்தியின் பெயரில் எந்த செய்தியைப் போட்டாலும் காசு பண்ணலாம் என்பது பல ஊடகத்துறையினர் அறிந்தது. அதை இம்முறை செயல்படுத்தி பலன் கண்டது குமுதம் ரிப்போர்டர்.

அவர் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று கருத்து சொல்லிக் கொண்டிருப்பதை விட, இது போன்ற சூழ்நிலையில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்றால்:

1) நான் முதலில் வாங்கிய போது விற்றவர் ஏற்படுத்திய கருப்புப் பணத்தை அவராய் நினைத்தால் மட்டுமே ஒழிக்க முடியும். எனவே அதை இப்போது என்னளவில் திருத்திக் கொள்ள முடியாது.

2) என் வரையில் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை என்ற நிம்மதியும் இரவில் நல்ல தூக்கமும் பெற
  • அரசு குறைமதிப்பு சொத்துக்கள் குறித்த தணிக்கை நடத்தும் போது நான் வாங்கிய நிலத்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்து அபராதத்துடன் மறுபதிவு செய்து கொள்வேன் (அல்லது)
  • எனக்கு தெரிந்த ஒருவருக்கு விற்று அதை மீண்டும் வாங்கி உண்மையான நில மதிப்புக்கு மறுபதிவு செய்து கொள்வேன். இதனால் ஏற்படும் நிலப்பதிவு செலவுகளுக்கும் நண்பர் செலுத்த வேண்டிய வருமான வரிக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்வேன்.
ஆயினும் சட்டப்படி இது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியவில்லை.

இதே செய்தியில் விக்ரம் நிலம் வாங்கியது பற்றியும் செய்தி வந்துள்ளது. அது உண்மையானால், அவர் நடித்த அன்னியன் படத்தில் இதே போன்ற நிலப்பதிவுக் காட்சியில் அவர் பேசிய வசனத்துக்கு ஏற்ப நடந்திருக்கிறார். அரசுக்கு நட்டம் ஏற்படுத்தவில்லை என்பதில் அவருக்கு பாராட்டுக்கள்.

18 கருத்து(க்கள்):

தகடூர் கோபி(Gopi) |

இந்த இடுகையை தமிழ்மணம் இற்றைப்படுத்தவில்லை. பதிலாக எனது சில மிகப் பழைய தொழில்நுட்ப பதிவுகளை இற்றைப்படுத்தியுள்ளது. ரஜினி என்ற சொல்லுக்கு தொழில்நுட்பம் கூட பயப்படுகிறதா?


உண்மைத்தமிழன் |

ராசா..

கவர்ன்மெண்ட் ஒரு கமிட்டி போட்டு என்கொயரி பண்ணிருக்காங்க..

அந்தப் பகுதியில் அப்போதைய நிலையில் இருந்த மார்க்கெட் விலையைவிட கூடுதலான விலைக்குத்தான் நிலம் விற்கப்பட்டுள்ளது என்றும், இதனால் இந்த நில விற்பனை முறையானதுதான் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


tommoy |

குறைந்த விலையில் வாங்கியதாக பதிவு செய்தது தவிர்த்து மற்றுமொரு விஷயம் ரிப்போர்ட்டரில் சொல்லப்பட்டிருப்பது, ரஜினி நேரில் செல்லாமல், பத்திரப்பதிவேடு அவர் வீட்டுக்கி எடுத்து செல்லப்பட்டது என்றும், அது பற்றி கேட்கப்பட்டதுக்கு முரண்பட்ட தகவலை பதிவு அலுவலர்கள் சொன்னது.
இது ரஜினியின் தவறு அல்ல, நெறிமுறைகளை பின்பற்றாதது அந்த அலுவலர்கள் தவறு.
// ரஜினி என்ற சக்தியின் பெயரில் எந்த செய்தியைப் போட்டாலும் காசு பண்ணலாம் என்பது பல ஊடகத்துறையினர் அறிந்தது. அதை இம்முறை செயல்படுத்தி பலன் கண்டது குமுதம் ரிப்போர்டர்.//

மிகச்சரியான கருத்து. ஆனாலும், சமூகத்தில் ஒரு வி ஐ பி செய்யும் தவறு பெரிதாக பேசப்படும் தானே?

//இது போல நிலம் பதிவு செய்யும் ஏனையோர் செய்வதை விட "கூடுதல் தவறு" என்பது நகைச்சுவை//
நகைச்சுவை என எடுத்துக்கொள்ளமுடியாது. மற்றவர்கள் சரி, ஆணால் ரஜினி சொல்வது , செய்வது என்று எதையும் வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் , தெய்வசெயலாக பார்க்கும் ரசிகர்கள் பலர் இருக்கும் போது ரஜினி சற்று உஷாராகத்தானே இருக்கவேண்டும்.. அதிலும், ரஜினி எனபவர் சினிமா என்றில்லாமல், சில நிஜ வாழ்வின் பேட்டிகளிலும், பேச்சுக்களிலும் தன்னை நல்லவர் என்பது போலவே தான் portrait செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


தகடூர் கோபி(Gopi) |

//ஆனாலும், சமூகத்தில் ஒரு வி ஐ பி செய்யும் தவறு பெரிதாக பேசப்படும் தானே?//

சரியாச் சொன்னீங்க. நீங்களோ நானோ செய்திருந்தால் அது செய்தியாகியிருக்காது.

//ரஜினி எனபவர் சினிமா என்றில்லாமல், சில நிஜ வாழ்வின் பேட்டிகளிலும், பேச்சுக்களிலும் தன்னை நல்லவர் என்பது போலவே தான் portrait செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது//

இங்கே நான் முரண்படுகிறேன். ரஜினியை நல்லவராகவோ கெட்டவராகவோ காட்டுவது ஊடகங்கள் செய்யும் வேலை. அவரது ஆரம்பகாலப் பேட்டிகளை படித்தீர்களானால் தெரியும் அவர் (பெண்பித்தர்,புகைப்பழக்க அடிமை உட்பட) தன் எல்லாத் தவறுகளையும் எவ்வளவு வெளிப்படையாய் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது.


சாய்ராம் கோபாலன் |

அதுக்குத்தான் விவரமாக "சிவாஜி" படத்தில் அரசியல்வாதி மற்றும் கல்லூரி நடத்துபவர் தான் கேட்டவர் என்றும் "சினிமா துறையில் இருப்பவர்கள்" ஏன் ரஜினி நடித்த கதாபாத்திரமான "ஐ.டி. துறையும்" தவறு செய்கின்றது என்று சொல்லவில்லை ?

"நல்லவருக்கெல்லாம் சாட்சிகள் உண்டு, ஒன்று மனசாட்சி" பாடல் நினைவுக்கு வருகின்றது

- சாய்ராம்


தகடூர் கோபி(Gopi) |

சாய்ராம்,

என்னங்க இவ்வளவு வெகுளியா இருக்கீங்க.

நானும் பத்து வருசமா தகவல் தொழில்நுட்பத் துறையில இருக்கேன், சிவாஜி படத்துல ரஜினி சம்பாதித்ததா சொல்றதுல ஆயிரத்துல ஒரு பங்கு கூட என்னால் சம்பாதிக்க முடியலை.

சினிமா படமெல்லாம் பார்த்தோமா ரசிச்சோமா வீட்டுக்கு போனமான்னு இருக்கனும். இப்படியெல்லாம் யோசிக்க கூடாது.


Sridhar V |

//நிலம் பதிவு செய்யும் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். //

பெரும்பாலான மக்கள் என்றால்? உங்களுக்கு தெரிந்த யாராவது 'வாங்கிய' விலைக்கே பத்திரம் பதிவு செய்திருக்கிறார்களா?

பத்திரப் பதிவு அதிகாரிகளே அதற்கு சம்மதிக்க மாட்டார்கள் தெரியுமா? ஏனென்றால் நீங்கள் பதிவு செய்யும் விலையை வைத்துதான் அரசாங்கம் அந்த பகுதிக்கான 'சந்தை' விலயை அளவிடுகின்றது. உங்களுக்கு அடுத்து அந்த இடத்தில் வேறு யாராவது நிலத்தை வாங்க முற்படும்போது அரசாங்க 'சந்தை' விலை ஏறிவிடும். நில பத்திர பதிவு துறைக்கே அது சவாலாக முடியும்.

மதுரையில் ஒரு முறை இப்படிப்பட்ட சம்பவம் நடந்த பொழுது அரசியல்வாதிகளால் பின்னர் பஞ்சாயத்து செய்யப்பட்டது.

ஆக, ரஜினி மட்டுமல்ல... இந்தியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அ்ம்பானியே தனது சொந்த உபயோகத்திற்க்காக நிலம் வாங்கினால் அரசாங்கம் நிர்ணயம் செய்த சந்தை விலைக்கு மேல் பத்திரத்தில் பதிவு செய்ய மாட்டார்கள். செய்ய முடியாது. இதுதான் உண்மை.


தகடூர் கோபி(Gopi) |

//பெரும்பாலான மக்கள் என்றால்? உங்களுக்கு தெரிந்த யாராவது 'வாங்கிய' விலைக்கே பத்திரம் பதிவு செய்திருக்கிறார்களா? //

'வாங்கிய' விலைக்கே பத்திரம் பதிவு செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதனால் தான் பெரும்பாலான மக்கள் என்று சொன்னேன்.

சந்தை மதிப்புக்கும் அரசு மதிப்புக்குமான வேறுபாட்டால் நீங்கள் குறிப்பிட்ட சிக்கலும் வருவதுண்டு.

இது போலத்தான் நான் வாங்கிய விலையை விட அதிக விலைக்கு பதிவு செய்திருக்கிறேன். நான் வாங்கிய பகுதியின் அரசாங்க மதிப்பு சந்தை மதிப்பை விட கூடுதல். ஆனால் எனக்கு நிலம் விற்றவர் சந்தை மதிப்புக்கும் அரசு மதிப்புக்குமான மிகுதிப் பணத்தை பெறாமலேயே பதிவுப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். எல்லோருக்கும் இப்படிப் பட்ட நிலம் விற்பவர் அமைவதில்லை.

எனவே, வாங்குவது ரஜினியா அல்லது முகேஷ் அம்பானியா என்பது முக்கியமில்லை. வாங்கும் பகுதியின் சந்தை மதிப்புக்கும் அரசாங்க மதிப்புக்கும் உள்ள வேறுபாடு தான் முக்கியம்.


வவ்வால் |

//ஆக, ரஜினி மட்டுமல்ல... இந்தியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அ்ம்பானியே தனது சொந்த உபயோகத்திற்க்காக நிலம் வாங்கினால் அரசாங்கம் நிர்ணயம் செய்த சந்தை விலைக்கு மேல் பத்திரத்தில் பதிவு செய்ய மாட்டார்கள். செய்ய முடியாது. இதுதான் உண்மை.//

அந்த குமுதம் ரிப்போர்ட்டரை நல்லாப்படிங்க இல்லைனா , இதே பதிவில் விக்ரம் பற்றி வந்துள்ள செய்தியும் படிங்க, வாங்கிய விலைக்கு பதிவு செய்யலாம். விக்ரம் செய்துள்ளாரே?

கிழக்கு கடற்கரை சாலைப்பகுதி போன்றவற்றில் வாங்கும் இடம் , அரசு வழிக்காட்டி விலை இரண்டும் கிட்ட தட்ட சமமாக இருக்கும். அங்கே எல்லாம் குறைந்த பட்ச விலையே என்ன என்று வெளிப்படையாக் தெரிந்து விட்டதும் காரணம், அங்கும் கூட அரசுக்கு கொஞ்சம் இழப்பு ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் ரொம்ப குறைத்து அங்கே பதிவிட முடியாது.

ஆரணி பகுதில் எல்லாம் ஒரு ஏக்கர் 25 லட்சம் அளவுக்கு எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை.ஒரு 10 லட்சம் அளவுக்கு இருக்கலாம் அதுவே அதிகம் உட்பகுதிகளில் இன்னும் குறைவாக இருக்கும். ஆரணிக்கு சென்று பார்த்தாலே தெரியும். கொஞ்சம் மிகைப்படுத்தி அல்லது, வேண்டும் என்றே விலை ஏற்றி புரோக்கர்கள் சொல்வதன் மூலம் அங்கு நில சந்தையை பெரிதாக்க பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.


பெயரில்லா |

உங்க மூஞ்சில கரி.
ரசினி எந்த தப்பும் செய்யலுன்னு அரசே சொல்லிடிச்சு.. போய்யா போய் வேலைய பாரு.


தகடூர் கோபி(Gopi) |

யோவ் அனானி,

//உங்க மூஞ்சில கரி.
ரசினி எந்த தப்பும் செய்யலுன்னு அரசே சொல்லிடிச்சு.. போய்யா போய் வேலைய பாரு.//

மொட்டையா சொன்னா? யாருக்கு சொல்ற? எனக்கா?

சட்டரீதியா ரஜினி எந்த தப்பும் பண்ணலைங்கிறது தான் எல்லாருக்கும் தெரியுமே. நான் சொல்றது நன்னெறிப்படி (ethics) சரியா என்பது பற்றி.

முதல்ல என் பதிவை முழுசா படி. என்ன சொல்லியிருக்கேன்னே தெரியாம கருத்து சொல்ல வந்துட்ட?

பெயர் சொல்ல வக்கில்லாதவங்களுக்கு எல்லாம் ஒருமையில தான் பதில்.

தேவையில்லாத சொல்லாடல்களை தவிர்க்க, தற்காலிகமாக அனானி பின்னூட்ட வசதியை மூடிவிட்டேன்.


Arun Kumar |

//பெயர் சொல்ல வக்கில்லாதவங்களுக்கு எல்லாம் ஒருமையில தான் பதில். மரியாதை வேணும்னா பெயரோட வாங்க.//

சொட்டை
முதல்ல உன் ஒரிஜினல் போட்டவை போடு அதுகு அப்புறம் பாக்கலாம்


Arun Kumar |

டேய் சொட்டைன்னு சொன்னது உன்னைதாண்டா :) சகாரா பாலைவனம் போல ஆகி போன உன் தலை :) நீ கூட சின்ன வயசு போட்டோவை போட்டு ஊரை ஏமாத்துல அது போலத்தான் இதுவும் ..

போங்க சார்

அதான் அரசாங்கம் சொல்லிடாங்கள போய் வேலைய பாரு


தகடூர் கோபி(Gopi) |

Talan,

மரியாதையை குடுத்து மரியாதையை வாங்கினா நல்லது.

ப்ரொபைலே இல்லாத நீங்க என் போட்டோவை கேக்குறீங்க. பரவாயில்லை தர்றேன். நான் யாரு என்னான்னு விரிவா சொல்லியிருக்கேன் இங்கே போய் பாத்துக்கோங்க. இன்னும் விரிவா தெரியனும்னா இந்தப் பக்கத்தில பாத்துக்கோங்க.


Arun Kumar |

//மரியாதையை குடுத்து மரியாதையை வாங்கினா நல்லது.//

அத நீ(ங்க) முதல்லியே என் அனானி பதிவுக்கு சொல்லி இருந்தா நான் ஏன் சொல்ல போறேன்,முதல்ல உங்களுக்கு தான் எல்லாம் தெரியும் ஏதோ technical புலி போல வேசம் கட்ட வேண்டாம்.

ரஜினி பதிவு செய்த விலை அரசின் விலையை விட அதிகம் என்று அரசு அறிவுப்பு வந்து விட்டது. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை???
உங்க பதிவில் வயித்து எரிச்சல் தவிர வேற ஒன்னும் இல்லை..சும்மா ஒரு அனானி பின்னோட்டம் வந்ததுக்கே அனானி ஆப்சனை மூடும் உங்களிடம் எல்லாம் நேர்மையான பதில் வரும் என்ற நம்பிக்கை இல்லை :)


தகடூர் கோபி(Gopi) |

Talan,

நீங்க முதலிலேயே பேரோட வந்திருந்தா மரியாதை கொடுத்திருப்பேன்.

'டெக்கினிக்கல் புலி' வேசமெல்லாம் நான் போடலீங்க நீங்க தான் அப்படி நெனைக்கறீங்க போல இருக்கு.

எனக்கென்னங்க வயத்தெரிச்சல். நானும் ரஜினி ரசிகன்தான். அது மட்டுமில்லை, நான் ரஜினி ரசிகர் வளைத்தளத்தின் தொழில்நுட்ப ஆலோசகன். ரசிகன்னா கண்ணை மூடிட்டு தலையாட்டனுமா? ரஜினியே "விமர்சனங்களை வரவேற்கிறேன்"ன்னு சொல்லியிருக்கார் என்பது உங்களுக்கு தெரியுமா?

//நேர்மையான பதில் வரும் என்ற நம்பிக்கை இல்லை :)//

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்னும் போது நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பப் போவதில்லை. எனவே உங்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் நானும் நடந்து கொள்ளப் போவதில்லை :-)


கிரி |

Talan, கோபி ரஜினியை பற்றி தவறாக கூறியதாக எனக்கு தோன்றவில்லை. நானும் ஒரு ரஜினி ரசிகன் என்ற முறையில் கூறுகிறேன்..ரஜினியின் பெயரை வைத்து காசு சம்பாதிக்கும் ஊடங்கங்கள், இந்த முறையிலும் தங்கள் விற்பனையை உயர்த்திக்கொள்கின்றன. இன்னும் சொல்ல போனால் நாம் தான் இதை பற்றி பேசி சண்டை போட்டு கொள்கிறோமே தவிர ரஜினி இதை பற்றி மறுபடியும் பேசப்போவது இல்லை. அரசும் கூறி விட்டது அவ்வாறு இல்லைஎன்று. என் மனதில் பட்டதை கூறினேன், மற்றபடி நான் இந்த விவாதத்திற்கு திரும்ப வரவில்லை. நான் ரஜினியின் தீவிர ரசிகனே தவிர வெறியன் கிடையாது. அன்புடன்


தகடூர் கோபி(Gopi) |

கிரிராஜ்,

எனது இடுகையை சரியான வகையில் புரிந்து கொண்டதற்கு நன்றி.

என்னங்க செய்யறது, ரஜினியைப் பத்தி ஒரு சிறு விமர்சனம் வைத்தாலும் அது சரியா தவறான்னு கூட பாக்காம சிலருக்கு அடக்க முடியாத கோவம் வருகிறது.

//நான் ரஜினியின் தீவிர ரசிகனே தவிர வெறியன் கிடையாது.//

நானும் அப்படியே. ரசிக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய் தீவிரமாய் ரசிக்கலாம். ஆனால் கண்மூடித்தனமான வெறியனா யாருமே இருக்க வேண்டாம் என்பது சக ரசிகனாய் என் வேண்டுகோள்.