வலைப்பூ - ஊர்வலம் - 5
Google Buzz Logo

செஞ்சிக் கோட்டை



சுமார் எழுனூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த கோட்டை மூன்று மலைகளை சுற்றிவளைத்து நெடுந்துயர்ந்த கோட்டை சுவர்களுடன் நடுவில் ஊர் அமைத்து உருவாக்கப்பட்ட கோட்டை.



இந்தப்பகுதியிலுள்ள மலைகளின் அமைப்பை பார்த்தீர்களானால் ஆச்சர்யப்படுவீர்கள்! ஒரு பெரிய பாத்திரத்தில் உருண்டையான பாறைகளை எடுத்து கவிழ்த்து உருவாக்கியது போல இருக்கும்.

கோட்டைச் சுவருக்கு ஏழு வாசல்கள் உண்டு. கோட்டைக்குள்ளே, ஒரு புராதன மசூதியும், சிவன் கோயிலும் அருகருகே அமைந்து மத ஒற்றுமையை பறை சாற்றிக் கொண்டு இருக்கிறது



கோட்டையின் உள்வாசலில் நுழைந்து (கட்டணம் உண்டு) சற்றே நடந்தோமேயானால் தேசிங்கு மன்னனின் அரசவை மண்டபம் (புனரமைக்கப்பட்டது), ஒரு திருமண மஹால், சில தாணியக் கிடங்குகள், குளங்கள் (இன்னும் கூட தண்ணீர் உள்ளது - ஆனால் உபயோகத்திலில்லை) ஆகியவை இருக்கின்றன. இன்னும் சில புனரமைப்புகளை தொல்பொருள்த்துறை மேற்கொண்டுள்ளது.



எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தால் ஒரு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. மரத்தடி நிழலில் சற்றே இளைப்பாறிவிட்டு மலை மேல் ஏறிப்பார்க்கலாம் என ஆரம்பித்து செங்குத்தான நெடிய பாதையில் செல்ல ஆரம்பித்தோம். இடையிடையே இளைப்பாறினோம் - வழியில் எங்கும் தண்ணீரில்லை. ஒவ்வொருவருக்கு ஒன்னரை லிட்டர் என்ற அளவில் எடுத்து சென்ற தண்ணீர் மேலே ஏற மட்டுமே பயன்பட்டது. எதிரே கீழிறங்கிக் கொண்டிருந்த சிலர் இன்னும் கொஞ்ச தூரம் தான் என உற்சாகப் படுத்தி சென்றதால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம். எங்கும் ஆளரவமில்லை சுமார் 2 மணி நேரம் நடந்தபின் ஒரு கருவூலம், இரு தாணியக்கிடங்கு ஒரு பீரங்கித் தளம், ஒரு கோவில், ஒரு மணிக்கூண்டு ஆகியனவற்றைப் பார்த்தோம். மணிக்கூண்டில் ஏறிப்பார்த்தால் மூன்று மலைகளுக்கு இடையிலே கட்டப்பட்ட கோட்டைசுவரின் முழு அமைப்பு, செஞ்சி ஊர், கோட்டையின் உள்ளேயுள்ள அத்தனை இடங்களும் தெளிவாக இருந்தது. (இந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு மேலே ஏறி வரவேண்டுமா என்று தோன்றியது. உடன் வந்த நண்பர்கள் கடுப்பாகி திட்ட ஆரம்பித்தனர். எனவே, குடும்பம் குழந்தைகளோடு வருபவர்கள் மலை மேலே ஏறி சிரமப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்)




ஒரு வழியாக கீழிறங்கி கோட்டையின் உள் வாசலிலிருக்கும் தொல்பொருள்த்துறை அலுவலகத்துக்கு வந்தடைந்தோம். தண்ணீர் தாகத்தில் தவித்த எங்களுக்கு கோட்டை உள்வாசலருகே இருக்கும் கினற்று நீர் இனித்தது (நிஜமாகவே அது அவ்வளவு உப்பாக இல்லை குடிக்கவும் அங்குள்ளவர்கள் அதைத்தான் பயன்படுத்துவதாகக் கூறினர்).

பிறகு அலுவலகத்திலிருந்த ஒரு கடை நிலை ஊழியரிடம் பேசுகையில் அவர் தேசிங்கு ராஜனின் வரலாற்றை கூறினார். (அதில் முக்கியமானது, தேசிங்கு ராஜன் ரகசியக் கூட்டங்களை மலைமேலிருக்கும் ஒரு மண்டபத்தில் நடத்துவார் என்பதும். அதற்கு தேசிங்கு மற்றும் முதன்மை அமைச்சர்களும் நடந்தே மேலேறி வருவார்கள் என்பதும் தான், ஹூம்... அவர்கள் பலசாலிகள்)

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

2 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு பால சுப்ரா சொன்னது...

அனைத்து பயண அனுபவங்களும் பயன்மிக்கதாக இருக்கிறது. இந்தியாவில் பார்க்கவேண்டிய இயற்கையை குறித்துக்கொள்ள வசதியாகத் தொடர்ந்து தரவேண்டும்.


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

செஞ்சியின் அழகை இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை.