தமிழ்மணத்தை காணவில்லை
Google Buzz Logo

என்னது! தமிழ்மணத்தை காணவில்லையா? அட ஆமாங்க உண்மையா தான் சொல்லுறேன். நானும் எப்படியெல்லாமோ தேடித் தேடிப் பாத்துட்டேன் எங்கேயுமே காணவில்லை. அட உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா சொல்லுங்க. இல்லாட்டி நீங்களே தேடிப்பாருங்க, கெடைச்சா எனக்கும் சொல்லுங்க.

Google


அட, ரொம்ப பயந்துடாதீங்க. அது வேற ஒன்னும் இல்லீங்க கூகிள் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு தங்களிடம் உள்ள மிகப் பழைய தேடல் விடைகளை (2001 ஜனவரியின் விடைகளை) வெளியிட்டுள்ளது. அங்கே தான் "தமிழ்மணம்", "தேன்கூடு" ஆகியவற்றை தேடினேன். சில விடைகள் வந்தன. ஆனால் அவை எதுவுமே தமிழ்மணம் திரட்டியுடனோ தேன்கூடு திரட்டியுடனோ தொடர்புள்ளவை அல்ல.

இதன் மூலம் ஜனவரி 2001ல் கூகிள் தேடலின் விடைகளில் பல வலைத்தளங்கள் எப்படி/எந்த வரிசையில் காட்டப்பட்டனன்னு தெரிஞ்சிக்கலாம். இந்த கூகிள் 2001க்கான தேடல் முகவரி: http://www.google.com/search2001.html

2001ல் அந்த தளங்கள் எப்படி இருந்தனன்னு தெரியனும்னா http://web.archive.org/ என்ற சுட்டியில போய் தேடிப்பாருங்க.

இன்று மிகப் பிரபலமாக உள்ள பல வலைத்தளங்கள் ஏழு வருடங்களுக்கு முன் இருந்த சுவடே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது கண்ணதாசனின் "யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது" என்ற வரிகளில் உள்ள உண்மை சுடுகிறது.

தகடூர் தமிழ் மாற்றியில் தமிழ் 99
Google Buzz Logo

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.

தகடூர் தமிழ் மாற்றி மற்றும் இதர மொழி மாற்றிகளின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்து இந்த மாற்றிகளின் அடுத்த பதிப்பான 3.0 வை வெளியிடப்படுகிறது.

இந்த வெளியீட்டில் உள்ள புதிய‌ வ‌ச‌திகள்

  • த‌மிழ் 99 த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - த‌மிழ் 99 த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ தமிழ் 99 தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.
  • தட்டச்சு உதவிப் பட்டியல் வசதி அஞ்சல் விசைப்பலகையிலும் மற்ற மொழி மாற்றிகளின் Phonetic விசைப்பலகைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேவையில்லை எனும் போது இடப்புறம் உள்ள தெரிவுகளில் அணைத்துவிடலாம்.
  • தனிச் சாளரத்தில் திறந்த விசைப்பலகை அமைப்புப் படம் இப்போது மொழி மாற்றிக்குள்ளேயே திறக்கும். தேவை எனும் போது இடப்புறம் உள்ள தெரிவுகளில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் வேண்டிய இடத்திற்கு நகர்த்திக் கொள்ளலாம்.
இந்த மாற்றங்களை அறிவிக்கும் இந்த வேளையில் மொழிமாற்றிகளை உருவாக்கிய காலத்தில் நிரலை மேற்பார்வை செய்து வழிநடத்திய சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும், தகடூருக்காக வலைத்தளத்திற்கான இடத்தை முதல் ஆண்டு முற்றிலும் இலவசமாய் அளித்து உதவிய அமரர் திரு.தேன்கூடு சாகரன் அவர்களுக்கும், தகடூரின் மாற்றங்களுக்கு யோசனை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழி மாற்றிகளின் சுட்டி:
நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 4
Google Buzz Logo

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4


சென்ற இடுகையில் எழுத்துரு உருவாக்கப் பயன்படும் ஃபாண்ட் ஃபோர்ஜ் பற்றியும் அதை நிறுவுதல் குறித்தும் பார்த்தோம். ஃபாண்ட் ஃபோர்ஜ் மூலமாக நாம் விரும்பிய எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றும் வழி குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.

அதிக அளவில் படங்கள் இருப்பதால் இந்த இடுகை பதிவிறங்க‌ சற்று நேரம் பிடிக்கும். ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து நோக்க வேண்டியிருப்பதால் பொறுமையாய் அனைத்து படங்களும் முழுமையாய் பதிவிறங்கி தெரிந்த பின் படிக்கவும்.

1) பகுதி 3 ன் கடைசியில் உள்ளது போல் ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளில் நாம் மாற்ற வேண்டிய எழுத்துருவை திறந்து கொள்ளுங்கள்.
2) நமக்கு ஏற்கனவே உள்ள ஒரு ஒருங்குறி எழுத்துரு தேவை. இதற்காக TAMUni-Tamil042.ttf என்ற சுட்டியிலிருந்து இந்த எழுத்துருவை பதிவிறக்கி வண்தட்டில் சேமித்துக் கொள்ளுங்கள்.

3) கீழ் கண்ட படத்தில் உள்ளவாறு நாம் மாற்ற வேண்டிய எழுத்துருவுடன் மேலே பதிவிறக்கம் செய்த ஒருங்குறி எழுத்துருவை "Element -> Merge Fonts" பட்டி மூலம் தெரிவு செய்து இரண்டையும் கலப்பு செய்யுங்கள்.
4) இப்போது இரு எழுத்துருக்களும் கலந்துவிட்டன. ஆனால் ஒருங்குறிக்கு உரிய இடங்களில் உரிய எழுத்துக்கள் நாம் இணைத்த எழுத்துருவின் எழுத்து வடிவில் இருக்கிறது. இதனை மாற்ற நம்முடைய எழுத்துருவின் எழுத்து வடிவினை பின் வருமாறு நகல் எடுத்து உரிய இடங்களில் ஒட்டிவிடுங்கள்.
நகல் எடுத்து ஒட்டும் போது கீழ்கண்டவாறு Warning வந்தால் "No" எனத் தெரிவு செய்யுங்கள்.
இல்லாத எழுத்து வடிவங்களை (உம். ஔ ) உருவாக்க, நம் எழுத்துருவின் இரு எழுத்துக்களையும் அடுத்தடுத்தாக நகல் எடுத்து வேண்டிய இடத்தின் எழுத்து வடிவை double click செய்து ஒட்டி ஏற்படுத்தலாம். (உம் ஒ + ள )
5) இதே போல எழுத்துருவின் கடைசி பகுதிக்கு Scroll செய்து சென்று அங்கு உள்ள எழுத்து வடிவங்களையும் நம்முடைய எழுத்துருவின் வடிவத்துக்கு மாற்றுங்கள்.
6) இப்போது வேண்டிய எழுத்து வடிவங்கள் கிடைத்துவிட்டன ஆனால் ஒருங்குறிக்கு உரிய GSUB விதிகள் எழுதப்பட வில்லை. இதற்காக தனியே ஒவ்வொரு விதியையும் எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை. TAMUni-Tamil.fea என்ற சுட்டியில் உள்ள GSUB விதிகள் அடங்கிய கோப்பை பதிவிறக்கம் செய்து வண் தகட்டில் சேமித்துக் கொள்ளுங்கள். பின்னர் "File -> Merge Feature Info" பட்டி மூலம் GSUB விதிகள் அடங்கிய கோப்பை தெரிவு செய்து இவ்விதிகளை நம் எழுத்துருவுக்குள் ஏற்றுங்கள்.
7) இவ்வாறு ஏற்றப்பட்ட விதிகளை "Element -> Font Info -> Lookups" பட்டி மூலம் பார்வையிடலாம்.
8) இப்போது எழுத்துருவின் பெயர், விளக்கம், உருவாக்கியவர் போன்ற விவரஙகளை "Element -> Font Info -> Names" பட்டி மூலம் மாற்றலாம்.
9) சரி. எல்லாம் முடிந்தது. இப்போது ஒருங்குறியாக்கபட்ட புதிய எழுத்துருவை உருவாக்க "File -> Generate Fonts" பட்டியை தெரிவு செய்யுங்கள்.
10) வேண்டிய எழுத்துரு கோப்பின் பெயர், எழுத்துரு வகை முதலிய வற்றை தெரிவு செய்து சேமியுங்கள்.
இவ்வாறு உருவாக்கப் பட்ட எழுத்துருவை மூலம் கணினியில் நிறுவி பார்வையிடுங்கள், பயன்படுத்தி சரி பாருங்கள்.
தவறுகள் ஏதும் இருந்தால் அவற்றை மேற்கண்ட படிகளில் கூறியவாறு மீண்டும் மாற்றி சேமியுங்கள்.

அவ்வளவே. முடிந்தது.

இது வரை இந்தத் தொடரில் வந்த இடுகைகளில் ஒரு எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றும் எளிய வழி குறித்து பார்த்தோம். இதன் விரிவான செயல்விளக்க ஒலி/ஒளி கோப்பினை பின்னொரு நாள் வலையேற்றுகிறேன்.

புதிதாய் ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்துருவை உருவாக்குவது எப்படி, GPOS, GSUB குறித்த மேலதிக விளக்கங்கள் போன்ற நுட்பங்களை பற்றி மேலதிகமாக அறிய விரும்புவோர் எனக்கு தனி மடல் இடவும்.

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

தகடூர் தமிழ் இணையப் பயிலரங்கும் தமிழ்ச் சங்க விழாவும்
Google Buzz Logo

கடந்த ஞாயிறன்று (14 செப்டெம்பர் 2008) தருமபுரியில் காலை 10:00 மணிக்கு விஜய் வித்யாலயா மேனிலைப் பள்ளிஅரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கும் அன்று மாலை 6:00 மணிக்கு பெரியார் அரங்கில் தமிழ்ச் சங்க விழாவும் நிகழ்ந்தது.

  • பயிலரங்குக்கு சில நாட்களுக்கு முன் தான் முனைவர். மு. இளங்கோவன் உடனான எனது மின்னஞ்சல் தொடர்பும் தொடங்கியது. தமிழ்மணம் காசி அவர்கள் என்னைப் பற்றி முனைவர். மு. இளங்கோவனிடம் கூறியிருக்கிறார். தருமபுரி பயிலரங்கம் குறித்த விவரங்களை முனைவர் எனக்கு மின்மடலில் அனுப்பியிருந்தார்.

  • முனைவர் மு.இளங்கோவனை முதல் முறையாய் சந்தித்தேன். சனியன்று இரவே தருமபுரி வந்தடைந்தார். புகைப்படத்தில் உள்ளது போலவே இருக்கிறார் என்பதால் எளிதாய் அடையாளம் கண்டுகொண்டேன்.

  • பேருந்து நிலையத்தில் சந்தித்த பின் மருத்துவர். கூத்தரசன் (பயிலரங்கு மற்றும் விழா ஏற்பாட்டாளர்) அவர்களின் இல்லத்திற்கு வந்தடைந்தோம்.

  • தமிழ் இணையத்தில் நுட்பப் பங்களித்து வரும் பலரின் பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

  • சத்தமில்லாமல் தமிழ் இலக்கியத்தில் மாபெரும் சாதனைகள் படைத்த பல பெரியோர்கள் குறித்து இடுகைகளை பதிவு செய்து வருவதாகவும், அவர்களை சந்தித்தது குறித்த சுவையான பல தகவல்களையும் முனைவர். மு. இளங்கோவன் உற்சாகமாய் விளக்கிக் கொண்டிருந்தார்.

  • மருத்துவர். கூத்தரசன் தருமபுரி நகரில் எங்கள் பகுதியை சேர்ந்தவர். எனது பங்களிப்புகளை பற்றி அறிந்து, எனது செயலிகளுக்கு தகடூரின் பெருமை மிக்கவர்களின் பெயர் வைப்பதை குறித்து குறிப்பிட்டு பாராட்டினார்.

  • ஞாயிறன்று பயிலரங்கில் சந்திப்பதாய் கூறி விடை பெற்றேன்.

  • மறுநாள் காலை முகுந்த் 9:25 மணியளவில் தருமபுரி வந்தடைந்தார். அவரை வரவேற்று சிறிது இளைப்பாறிய பின் நானும் அவரும் பயிலரங்கம் நடக்கும் அரங்கத்துக்கு வந்தடைந்தோம்.

  • விரிவான அறிமுகத்துக்கு பின் பயிலரங்கம் துவங்கியது. முனைவர். மு. இளங்கோவன் மின்னஞ்சல் துவங்குவதில் தொடங்கி வலைப்பதிவு உருவாக்கம். பின்னூட்டம். கூகிள் உரையாடல் என பலவற்றை விளக்கினார். இடையிடையே நானும் முகுந்தும் அவருக்கு உதவி செய்தோம்.

  • பயிலரங்கு ஒரு மணியளவில் முற்று பெற்றது. இந்தப் பயிலரங்கின் பயனை அறிய வருகையாளர் சிலரை முனைவர் மு. இளங்கோவன் மேடைக்கு அழைத்தார்.

  • பெரும்பாலான பார்வையாளர்கள் கணினியில் தமிழை பயன்படுத்துவது இவ்வளவு எளிதானது என பயிலரங்குக்கு பின்னரே அறிந்ததாகவும் உடனடியாய் வலைப்பதிவு துவங்கி தத்தமது படைப்புகளை வலையேற்றப் போவதாகவும் கூறிய போது, அவர்களுள் ஒரு ஐம்பது பேராவது வலைப்பதிய வருவார்கள் என்று தோன்றியது.

  • பயிலரங்குக்கு பின் மருத்துவர். கூத்தரசன் அவர்கள் இல்லம் வந்தடைந்தோம். மாலை தமிழ்ச் சங்க விழாவுக்கு வருவதாகக் கூறி விடை பெற்றேன்.

  • மாலை தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொண்டேன். எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த தமிழாசிரியர்கள், தகடூரைச் சேர்ந்த பல தமிழ் இலக்கியப் பங்களிப்பாளர்களால் அரங்கம் நிறைந்திருந்தது.

  • செயலர் உரைக்குப் பின் எனக்கு "இணையத் தமிழ் மென்பொருளறிஞர்" விருது அளித்தனர். எனது தமிழாசிரியர்களுக்கு முன் நான் பிறந்த மண்ணில் தமிழ்ச் சங்க விழாவில் இத்தகைய ஒரு விருது பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏதும் இல்லை.

  • ஐதராபாத் சேல்ல வேண்டிய தொடர்வண்டிக்கு நேரமானதால் விழாவின் நடுவிலேயே விடைபெற்று தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன்.

  • தமிழ்ச் சங்க விழாவில் முனைவர். மு. இளங்கோவன் மற்றும் தமிழா! முகுந்த் ஆகியோரின் விருது மற்றும் உரைகளை கேட்க இயலாமல் போனது குறித்து சிறு வருத்தம். எனினும், ஒலி/ஒளிப் பதிவு செய்யப் பட்டிருப்பதால் பின்னர் அதில் பார்த்துக் கொள்ள இயலும் என்பதால் சற்று ஆறுதலாய் உள்ளது.
விரிவான செய்திகள் மற்றும் படங்களை முனைவர் திரு. மு. இளங்கோவன் அவர்களின் கீழ்கண்ட இடுகைகளில் காணலாம்:

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3
Google Buzz Logo

பகுதி 1பகுதி 2
பகுதி 3பகுதி 4

சென்ற இடுகையில் எழுத்துரு குறித்த நுட்பங்களையும் எழுத்துரு உருவாக்கப்
பயன்படும் மென்பொருள் கருவிகளைப் பற்றியும் பார்த்தோம். அவற்றுள் நாம் பயன்படுத்த தேர்ந்தெடுத்துள்ள ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல் குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.

ஃபாண்ட் ஃபோர்ஜ் ஒரு லினக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இதனை லினக்ஸ் கணினிகளில் நிறுவ, கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து RPM கோப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். உங்கள் இயங்குதளம் உபுண்டு அடிப்படையிலானது எனில், Alien எனும் மென்பொருள் கருவி மூலமாக இந்த RPM கோப்பினை DEB கோப்பாக மாற்றி நிறுவிக் கொள்ளலாம். பதிவிறக்க சுட்டி: http://fontforge.sourceforge.net/


நாங்கள் எல்லாம் விண்டோஸ் பயனாளிகள். இந்த ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த எங்களுக்கெல்லாம் வழியே இல்லையா எனக் கேட்கிறீர்களா? வழி இருக்கிறது. CygWin என்று சொல்லக் கூடிய இலவச லினக்ஸ் எமுலேட்டர் மென்பொருளை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவி அதன் மூலம் ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம்.

அதற்கெல்லாம் எங்களுக்கு பொறுமையில்லை. விண்டோஸ் கணினியில் தரவிறக்கி எடுத்தவுடன் பயன்படுத்தும் படி எங்களுக்கு நிறுவித் தர இயலுமா என்றால், உங்களுக்கு எளிய வகையில் எல்லாமே ஆயத்த நிலையில் தரவிறக்கம் செய்ய வசதியாய் எனது தளத்தில் ஒரு கோப்பாக பதிவேற்றி வைத்துள்ளேன்.

முதலில் FontForge.7z (~ 45 MB) என்ற சுட்டியை சொடுக்கி 7-Zip கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த 7-Zip கோப்பினை திறக்க 7-Zip மென்பொருள் வேண்டும். அதை http://www.7-zip.org/ என்ற சுட்டியில் சொடுக்கி தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

இப்போது 7-Zip மூலம் மேலே தரவிறக்கம் செய்த FontForge.7z கோப்பினை திறந்து உங்கள் கணினியின் வண்தகட்டில் உங்களுக்கு தேவையான இடத்தில் நிறுவிக் கொள்ளுங்கள்.

Windows Explorer மூலம் ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவிய இடத்துக்கு சென்றால் Xterm.bat என்றொரு கோப்பு இருக்கும். அதை இருமுறை சொடுக்குங்கள். உங்கள் விண்டோஸ் டாஸ்க் பாரில் கீழ்கண்டவாறு ஒரு X குறி தெரியும். மேலும் ஒரு XTerm சாளரம் திறந்து இருக்கும்.


இந்த XTerm சாளரத்தில் /usr/local/bin/fontforge.exe என்று தட்டச்சிட்டு Enter விசையை அழுத்துங்கள். கீழ் கண்டவாறு ஃபாண்ட் ஃபோர்ஜ் சாளரம் திறக்கும். (நீங்கள் மாற்ற வேண்டிய எழுத்துருக் கோப்பினை XTerm சாளரத்தில் fontforge.exe க்கு அடுத்ததாக கொடுத்தால் அந்த எழுத்துரு ஃபாண்ட் ஃபோர்ஜ் திறந்தவுடன் தெரியும் அல்லது நீங்கள் File -> Open என்ற பட்டி மூலமாகவும் உங்கள் எழுத்துருவை திறக்கலாம்).

இன்றைய இடுகையில் நாம் ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல், பின் அதன் மூலம் ஒரு எழுத்துருவை திறப்பது எப்படி என அறிந்து கொண்டோம். அடுத்த இடுகையில் அந்த எழுத்துருவை எவ்வாறு ஒருங்குறிக்கு மாற்றுவது எனத் தெரிந்து கொள்வோம்.

பகுதி 1பகுதி 2
பகுதி 3பகுதி 4

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 2
Google Buzz Logo

பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4

சென்ற இடுகையில் பல்வேறு தமிழ் குறியேற்றங்கள் குறித்துப் பார்த்தோம் இனி எழுத்துருக்கள் குறித்துப் பார்ப்போம்.

எழுத்துருக்கள்

எழுத்துருக்கள் என்பன ஒரு எழுத்து எந்த வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும், ஒரு எழுத்துடன் இன்னொரு எழுத்தை சேர்த்தால் எவ்வாறு மாற்றமடையவேண்டும் (உ.ம்: உயிர்+மெய்=உயிர்மெய்) என்பன போன்ற சில விவரங்களை அடக்கிய ஒரு கோப்பு ஆகும். எழுத்துருக்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு குறியேற்றத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

எழுத்து வடிவம் (Glyph)

ஒரு எழுத்து எத்தகைய வடிவத்தை பெறும் என்பதை குறிப்பிடுவதே எழுத்து வடிவம் (Glyph) எனப்படும். உதாரணமாக, ‘அ’ என்ற எழுத்தை கீழ்க்கண்டவாறு பல வித வடிவங்களில் குறிக்கலாம்:




எழுத்து இட அமைப்பு (GPOS - Glyph Positioning)

ஒரு எழுத்து மற்றொரு எழுத்தோடு சேரும் போது எந்த இடத்தில்(புள்ளியில்) இரண்டையும் சேர்க்க வேண்டும் என்ற விதியே எழுத்து இட அமைப்பு (GPOS - Glyph Positioning) எனப்படும். உதாரணமாக மெய்யெழுத்து ‘க’ உடன் உயிர் எழுத்தொலி ‘ஈ’ சேரும்போது கீ என்பது உருவாகிறது, இதில் ஈ ஒலிப்புக்குறிய சுழியானது 'க' என்ற எழுத்தின் மேல் எங்கு அமையவேண்டும் என்ற விதியே GPOS ஆகும்.

க +ீ = கீ

எழுத்து மாற்றமைப்பு (GSUB - Glyph Substitution)

ஒரு எழுத்து மற்றொரு எழுத்தோடு சேரும் போது முற்றிலும் புதிய வேறொரு எழுத்தாக மாற வேண்டும் என்ற விதியே எழுத்து மாற்றமைப்பு (GSUB - Glyph Substitution) எனப்படும். உதாரணமாக ‘ஸ்’ என்ற எழுத்துடன் ‘ரீ’ என்ற எழுத்து இணையும் போது அது முற்றிலும் புதிய ‘ஸ்ரீ’ என்ற எழுத்தாக அமைய வேண்டும். இந்த விதிதான் GSUB என்பது.

ஸ் + ரீ = ஸ்ரீ

இவ்வாறு ஒரு எழுத்துருவானது எழுத்து வடிவம், எழுத்து இட அமைப்பு விதிகள் மற்றும் எழுத்து மாற்றமைப்பு விதிகள் ஆகியவை அடங்கியதாக உள்ளது. ஒரு எழுத்துருவை புதிதாக உருவாக்கவோ அல்லது ஒரு குறியேற்றத்திலிருந்து மற்றொரு குறியேற்றத்துக்கு மாற்றவோ செய்யும்போது நாம் மேற்கண்ட இம் மூன்று நுட்பங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

எழுத்துரு வகைகள்

எழுத்துருக்கள் அவற்றை வடிவமைத்த நிறுவனங்கள்/தன்னார்வலர்கள் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளாக வழங்கப்படுகின்றன. அவற்றுள் சில:
  • TrueType fonts
  • OpenType fonts
  • POSTSCRIPT fonts
  • Bitmapped (bdf, FON, NFNT) fonts
இவற்றுள் பரவலாகப் பயன்படுத்தப்படுவது TrueType மற்றும் OpenType எழுத்துருக்கள் ஆகும். பெரும்பாலான தமிழ் எழுத்துருக்கள் TrueType வடிவில் தான் வழங்கப்படுகின்றன

எழுத்துரு உருவாக்கப் பயன்படும் மென்பொருள்கள்

எழுத்துருக்களை உருவாக்க மற்றும் மாற்றியமைக்க தேவையான மென்பொருள் கருவிகள் பற்றி விவாதிப்போம். இன்றைய கணினி உலகில் கிடைக்கும் எழுத்துரு உருவாக்கும் மென்பொருட்கள் சில:

1) மைக்ரோசாஃப்ட் வோல்ட் (Microsoft VOLT)

இது மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாய் அளிக்கும் ஒரு மென்பொருள். இலவசம் எனினும் இது கட்டற்ற (Free) தன்மையுடையதோ அல்லது திறவூற்று (Open Source) மென்பொருளோ அல்ல. இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://groups.msn.com/MicrosoftVOLTuserscommunity/homepage.msnw

2) ஃபாண்ட் க்ரியேட்டர் (Font Creator)

இது ஹை-லாஜிக் என்ற நிறுவனம் வழங்கும் வணிக மென்பொருள். 30 நாட்கள் வரை இந்த மென்பொருளைப் இலவசமாக பயன்படுத்திப் பார்க்க முடியும். இது ஒரு தனியுரிமை மென்பொருள். கட்டற்ற (Free) தன்மையுடையதோ அல்லது திறவூற்று (Open Source) மென்பொருளோ அல்ல. இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.high-logic.com/download.html

3) ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge)

இது இலவசமாக கிடைக்கும் ஒரு கட்டற்ற (Free) திறவூற்று (Open Source) மென்பொருள். நம்முடைய எழுத்துரு உருவாக்கும்/ஒருங்குறிக்கு மாற்றும் பணிக்கு இந்த மென்பொருள் போதுமானதும் பொறுத்தமானதும் ஆகும். இந்த மென்பொருளை கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://fontforge.sourceforge.net/

இந்த ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge) மென்பொருளை நிறுவுவது எப்படி, இதற்குத் தேவையான இயங்குதளம் முதலானவை பற்றியும், ஃபாண்ட் ஃபோர்ஜ் (FontForge) மென்பொருளைப் பயன்படுத்தி எவ்வாறு ஒரு எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றலாம் என்பதை பற்றியும் அடுத்த இடுகையில் அறியலாம்.

பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 1
Google Buzz Logo

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4


உங்களுக்கு பிடித்த அழகான தமிழ் எழுத்துரு ஒருங்குறி(Unicode) அல்லாத TAB/TAM அல்லது தனிப்பட்ட வேறு குறியேற்றங்கள் இருக்கிறதா? அதை நீங்கள் எளிய முறையில் ஒருங்குறிக்கு மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டுமா? அதற்கான வழிமுறைகளை ஆராயலாம்.

முதலில் எழுத்துரு குறித்த நுட்பங்களை விவாதிக்கும் முன்பாக இது தொடர்பான சில அடிப்படை நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

குறியேற்றங்கள்

கணினியில் அனைத்து வகையான உரையாடல்களும் எண்களாலேயே செய்யப்படுகின்றன என நாம் அறிவோம். அது போல எழுத்துக்களும் எண்களைக் கொண்டே குறிக்கப்படுகின்றன.

ஒரு குறியேற்றம் என்பது, மனிதரால் படித்தறியக் கூடிய எழுத்துக்களுக்கு, கணினியால் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பொருத்தமான எண்களை ஒதுக்கித் தருவதே. உதாரணமாக, ஆங்கிலத்தின் 'A' என்ற எழுத்துக்கு ASCII குறியேற்ற அட்டவனைப்படி 65 என்ற எண் ஒதுக்கப்படுகிறது. ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு தகவல்களை கொண்டு செல்லும் போது இந்த குறியேற்ற அட்டவனையின்படி எழுத்துக்கள் எண்களாய் சேமிக்கப்பட்டு பின் மீண்டும் எழுத்துக்களாய் மாற்றி திரையில் காட்டப்படுகின்றது.

ASCII குறியேற்றம் எல்லா இயங்கு தளங்களிலும் முன்னரே நிறுவப்பட்டு விடுவதால் நீங்கள் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சிட்டு அந்தக் உரைக் கோப்பினை எந்தக் கணினியில் திறந்தாலும் பிரச்சனை இன்றி படிக்க இயலும். ஆனால் பிற குறியேற்றங்களைப் பொறுத்தவரை அந்த குறியேற்றத்தின் அட்டவனைப்படி எழுத்துருக்கள் நிறுவாத கணினிகளில் அவ்வாறு எழுத்துக்கள் மாற்றிக் காட்டப்படாமல் புரியாத எழுத்துக்களை காட்டும்.

இதை விளக்க, நடைமுறை ஒப்பீடாக 'நல்ல' என்ற தமிழ் வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இந்த வார்த்தைக்கு தமிழ் அறிந்த அனைவரும் பொருள் விளங்கிக் கொள்வர். அதே சமயம் 'நல்ல' என்று ஒரு தமிழ் அறியாத தெலுங்கு மொழி பேசுபவரிடம் சொன்னால் அதனை தெலுங்கிலே அவர் 'கருப்பு' என பொருள் கொள்வார். 'நல்ல' என்னும் வார்த்தை இரு மொழியிலும் இருப்பதால் பொருள் வேறாயினும் இருவரும் புரிந்து கொள்வர். ஆனால் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படும். இருவருமே ஒரே மொழியை பேசுபவர்களாய் இருப்பின் இந்த குழப்பம் நேராது.

அது போல, கணினி தகவல் பரிமாற்றத்தில், பயனர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு குறியேற்றத்தை பயன்படுத்துவதன் மூலம் தகவல் பரிமாற்றக் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

இன்றைய தமிழ்க் கணிமை உலகில் பல்வேறு குறியேற்றங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் சில:
  • தாம் (TAM - Tamil Monolingual)
  • தாப் (TAB - Tamil Bilingual)
  • திஸ்க்கி (TSCII - Tamil Standard Code for Information Interchange)
  • ஒருங்குறி (Unicode)
இந்த குறியேற்றங்களில் இன்று இணையத்தமிழில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது ஒருங்குறி.

கணினி மயமாக்கப்பட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் தாம்/தாப் தகுதரம் பயன்பாட்டில் உள்ளது. அரசு சார் இணையதளங்களில் திஸ்கி பயன்படுத்தப்படுகிறது.

இது தவிர, அச்சு மற்றும் பத்திரிக்கை துறையினர் பல்வேறு தனிப்பட்ட தமிழ் குறியேற்றங்களையும் அதன் அடிப்படையில் அமைந்த எழுத்துருக்களையும் பயன்படுத்துகின்றனர்.

இந்த குறியேற்றங்களின் அட்டவனையை பார்த்தீர்களானால் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் ஒரு எழுத்தெண் வழங்கப்படுவது தெரியும்.

படம் 1 தாம் அட்டவனை

படம் 2 தாப் அட்டவனை

படம் 3 திஸ்கி அட்டவனை

படம் 4 ஒருங்குறி தமிழ் அட்டவனை


சரி, இன்றைய இடுகையில் குறியேற்றங்கள் பற்றி அறிந்து கொண்டோம். இன்னும் சில எழுத்துரு தொடர்பான நுட்பங்களை பற்றி அடுத்த இடுகையில் அறிவோம்.

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

மேதாவி மதன்
Google Buzz Logo

இந்த வார (20 ஆகஸ்ட் 2008) விகடன் இதழில் "ஹாய் மதன்" பகுதியில் வெளியான மதன் பதில்களில் சில:
--------------------------------------------------------------
மா.அண்ணாமலை, சென்னை-1.
Surrender என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரண் என்று தமிழில் வருகிறதே! சரண் என்ற சொல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் போனதா? இல்லை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்ததா?

இது போல ஒற்றுமையுள்ள பல ஆச்சர்ய வார்த்தைகள் உண்டு! பண்டைய பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. Surrender. Sur-என்றால் 'முடிந்துவிட்டது'. render என்றால் 'கொடுத்துவிடு' அதாவது வாளை! இந்தப் பிரெஞ்சு வார்த்தை லத்தீனிலிருந்து வந்தது. லத்தீனுக்கும் சம்ஸ் கிருதத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அப்படியே அது தமிழுக்கும் வந்திருக்கக்கூடும்.

எஸ்.ராஜகோபாலன், சென்னை-7.
உயில் என்பது தமிழ்ச் சொல்லா?

உயில் தமிழ் வார்த்தையாகிவிட்டது என்றாலும், அதன் வேர் பண்டைய சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருதத்திலிருந்துதான் சிறிது மாறி ஆங்கிலத்தில் 'வில்' (Will) என்று ஆனது. அடிப்படை அர்த்தம் - மகிழ்விக்க. ஆனால், பல உயில்களால் வெட்டுக் குத்து ஏற்படுவதும் உண்டு!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?

பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி!

---------------------------------------------------------------

அடேயப்பா! ஒரே வாரத்துல இருக்குற பதினொரு கேள்வியில மூனு கேள்வி சமஸ்கிருதத்துக்கு பில்டப் குடுக்கவே போயிடுச்சி.

அதாவது மெத்தப் படித்த மதன் என்ன சொல்றாருன்னா உலகத்துல மக்கள் பேசுற பல மொழிகளில் இருக்கும் பல வார்த்தைகள் சமஸ்கிருதத்துல இருந்து வந்தது தானாம்.

அப்படிப்பட்ட சமஸ்கிருதத்தை இப்ப யாரு பேச்சு மொழியா பயன்படுத்தறாங்க அதை எழுத எந்த எழுத்துரு பயன்படுது அப்படின்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்.

எந்த ஒரு வார்த்தையும் தம் தாய்மொழியில் தோன்றியது என பெருமை கொள்வது மனித இயல்பு. உதாரணமாக, என்னைக் கேட்டால் catamaran, betrothal போன்ற ஆங்கில வார்த்தைகள் தமிழில் இருந்து தோன்றியன என ஆதாரங்களுடன் நிறுவ முயற்சிப்பேன். ஒருவேளை மதன் அவர்களின் தாய் மொழி சமஸ்கிருதமாய் இருக்குமோ?

என்ன மக்களே! என்ன சொல்லுறீங்க?

யூத்ஃபுல் விகடனில் தகடூர் நிரல்
Google Buzz Logo

சமீபத்தில் லக்கிலுக்கின் டமாரு கொமாரு கதையை படிக்க யூத்ஃபுல் விகடன் வலைத்தளத்தில் பெயர் பதிந்தேன். பெயரை தமிழில் தட்டச்சிட வசதி செய்திருந்தனர். ஆர்வத்துடன் நிரலை பார்த்தபோது மகிழ்ந்தேன். அது தகடூரின் நிரல்.

GPL கட்டற்ற உரிமத்தின் அடிப்படையில் வெளியீட்டுள்ள இந்த நிரலில் கூறப்பட்ட விதி:

"Further to the terms mentioned you should leave this copyright
notice intact, stating me as the original author."
என்பதை மதித்து நிரலில் GPL கட்டற்ற உரிம உரையை நீக்காமல் பயனர் பதிவு பக்கத்தில் பயன்படுத்தியுள்ளனர். அதற்காக பாராட்டுக்கள்.

அதே சமயத்தில் பின்னூட்டப் பெட்டியில் தமிழ் தட்டச்சிட வசதி செய்த நிரலாளருக்கு கட்டற்ற மென்பொருளின் அடிப்படை தெரியவில்லை என நினைக்கிறேன். தகடூரின் நிரலை மாறிகளின் பெயரை மட்டும் குறுக்கி GPL கட்டற்ற உரிம உரையை நீக்கிவிட்டு பயன்படுத்தியுள்ளனர்.

யூத்ஃபுல் விகடன், தகடூர் தமிழ் மாற்றியின் நிரல் பயன்பாட்டின் ஒரு பகுதியில் GPL கட்டற்ற உரிமத்தின் விதிகளை பின்பற்றியதற்கு பாராட்டுக்களையும் இன்னொரு பகுதியில் அதன் விதிகளை மீறியதற்காக கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

விகடன் தரப்பிலோ அதன் நிரலர் தரப்பிலோ தகடூர் நிரலை பயன்படுத்துவது குறித்து இது வரை எனக்கு மின்மடல் ஏதும் அனுப்பப்படவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

எனக்கு மின்மடலிடுவது கட்டாயமில்லை எனினும் தகடூர் நிரலை பயன்படுத்துவோர் குறித்த புள்ளி விவரத்துக்கும், நிரலை புதுப்பிக்கும் போது பயனர்களுக்கு புதிய நிரல் குறித்து அறிவிக்கவும் இது உதவும்.

ஃபயர்ஃபாக்ஸ் 3 பதிவிறக்க உலக சாதனை தினம் 18 ஜூன் 2008 - பங்குகொள்வீர்!
Google Buzz Logo

நீங்கள் ஃபயர்ஃபாக்ஸ் ஆர்வலரா? ஃபயர்ஃபாக்ஸ் உலக சாதனை படைக்க வேண்டுமா? உங்களால் அதற்கு உதவ முடியும்.

ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபயர்ஃபாக்ஸ் 3.0 வெளியீட்டை இன்று (18 ஜூன் 2008) பதிவிறக்க வகை செய்திருக்கிறது. ஒரே நாளில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை படைக்க இந்நிறுவனத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.

அதற்கு உங்களால் உதவ முடியும். இந்திய நேரம் 18 ஜூன் 2008 இரவு 11:46க்குள் http://www.spreadfirefox.com/en-US/worldrecord என்ற சுட்டியிலிருந்து ஃபயர்ஃபாக்ஸ் 3 ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் கணினிகளில் நிறுவிக் கொள்ளுங்கள்.

ஃபயர்ஃபாக்ஸ் உலக சாதனை படைக்க நீங்களும் பங்கு பெறுங்கள்.

தொழில்நுட்ப பதிவர்களின் கவனத்துக்கு - கணிமொழி
Google Buzz Logo

கணிமொழி வலைத்தளத்தின் அறிமுகம் மற்றும் படைப்புகளுக்கான விண்ணப்ப மடலை தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவுக்கு தபுண்டு லினக்ஸ் குழுவைச் சார்ந்த ஆமாச்சு (ம. ஸ்ரீ ராமதாஸ்) அனுப்பியிருந்தார்.

தங்கள் வலைப்பதிவுகளில் தொழில்நுட்பம் (முக்கியமாய் ஒரு குறிப்பிட்ட நுட்பம் பற்றி கற்று தரும் பாடங்கள்) சார்ந்த பதிவுகளை எழுதிவரும் பதிவர்கள் தங்கள் படைப்புகளை கணிமொழி தளத்துக்கு அனுப்பலாமே.

மடலின் நகல் கீழே:

அறிமுகம்

கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம் உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும் மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள். இரண்டாவது உருவாக்குபவருக்கே உரித்தான தனியுரிம மென்பொருள். இவ்விரண்டினுள் கட்டற்ற மென்பொருள் உலகின் விடயங்களை மொழிய விழையும் முயற்சி கணிமொழி.

இலக்குகள்

  • கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விடயங்கள் துவங்கி அதிநுட்ப விடயங்களையும் அறிந்திட விழையும் ஒருவருக்கு வேண்டிய தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது.
  • உரை, ஒலி, ஒளி என இயன்ற ஊடக வகைகளில் படைப்புகளை ஊக்குவிப்பது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்துறையில் நிகழ்பவற்றை எடுத்துரைப்பது. தற்போதைய இலக்கு ஒரு மாத கால இடைவெளி.
  • எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது.
  • அச்சுப் பிரதிகள் இட்டும் விநியோகிக்கப்படும். (சிறிய அளவில் துவங்க உத்தேசம்.)
  • தங்கள் பகுதியில் அச்சிட்டு விநியோகிப்பது அதிக பலனைத் தருமாயின் அங்ஙனம் செய்ய முனைந்து முயற்சிகள் மேற்கொள்ளவும்.
  • விவரங்கள் வளர வளர அவற்றை புத்தகங்களாகவும் வட்டுக்கள் உள்ளிட்ட ஏனைய சேமிப்பு ஊடகங்களின் வாயிலாகவும் வெளியிடுவது.

பங்களிக்க

  • விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
  • கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த விடயமாக இருத்தல் வேண்டும்.
  • பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு காபிலெப்ட்.
  • தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
  • கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவையாகவும் இருக்கலாம்.
  • படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
  • தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசுவைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
  • தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
  • தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக திட்டப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கவும்.
  • தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் தாங்கள் பங்களிக்கலாம்.
  • ஐயங்களிருப்பின் திட்டப் பொறுப்பாளருக்கு மடலியற்றவும்.

விண்ணப்பங்கள்

  • தொழில்நுட்பத்தை அறிய விழையும் எளிய மக்களுக்காக மேற்கொள்ளப்படும் சிறிய முயற்சியாகும் இது.
  • இதில பங்களிக்க தாங்கள் அதிநுட்ப ஆற்றல் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
  • தங்களுக்கு தெரிந்த விடயத்தை இயன்ற எளிய முறையில் எடுத்துரைக்க ஆர்வம் இருப்பின் போதுமானது.
  • இதன் வளர்ச்சி நம் ஒவ்வொருவரின் கையிலுமே உள்ளது.
  • குறைகளிலிருப்பின் முறையாக தெரியப்படுத்தி முன்னேற்றத்திற்கு தோள் கொடுக்கவும்.

முதல் இதழ் வரும் சித்திரையிலிருந்து துவங்கும். தங்கள் படைப்புகளை ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இணையதளம்: http://kanimozhi.org.in

தற்காலிக மடலாடற் குழு: http://groups.google.com/group/kanimozhi-aakkam

ரஜினி செய்தது சரியா?
Google Buzz Logo

ரஜினி நிலம் வாங்கியது தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த தகவலில் வருமான வரி ஏய்ப்பு அல்லது கருப்பு பணம் என்பது எப்படி ஏற்படுகிறது எனப் பார்ப்போம்.

பொதுவாக ஏன் நிலம் வாங்கிய விலையை விட குறைவாக பதிவு செய்கிறார்கள்?

  1. மற்றவர் நலனுக்கு. ஒருவர் வாங்கிய நிலத்திற்கான பதிவு மதிப்பு பொதுவாக அதே பகுதியில் கடைசியாக பதிவு செய்த நிலத்தின் மதிப்போ அல்லது சற்று அதிகமாகவோ கொள்ளப்படுகிறது. இந்த செய்தியில் ரஜினி வாங்கிய நிலத்தின் உண்மை மதிப்புக்கு பதிவு செய்திருந்தால் அடுத்து அந்த பகுதியில் நிலம் வாங்குவோர் அனைவரும் ஏக்கருக்கு 21 லட்சம் அல்லது அதற்கு அதிகமாகத் தான் பதிவு செய்ய வேண்டியிருக்கும் (நிலப்பதிவில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. உண்மையில் நில மதிப்பீடு எப்படி செய்யப்படுகிறது என எனக்கு தெரியாது)
  2. வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணப் புழக்கத்துக்கு. ஒரு ஏக்கர் 21 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 2.3 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்வதன் மூலம்
    • வாங்குபவருக்கு பதிவு செய்த விலையை விட ஏக்கருக்கு 18.7 லட்சம் கூடுதல் எனினும், நிலம் பதிவு செய்யும் கட்டணம் (9-10% நில மதிப்பு) மற்றும் ஒவ்வொரு வருடத்துக்குமான சொத்து வரி ஆகியவை மிகவும் குறைகிறது
    • விற்பவருக்கு தம் சொத்தை விற்பதால் ஏற்படும் வருமானத்தின் மதிப்பில் ஏக்கருக்கு 18.7 லட்சம் கணக்கில் காட்டாததால் அதற்கான வருமான வரி கட்டத் தேவையில்லை
    • ஏக்கருக்கு 18.7 லட்சம் ரூபாய் புழக்கத்திலுள்ள கணக்கில் வராத கருப்புப் பண வரிசையில் கூடுதலாகிறது
இது போல குறைந்த மதிப்பில் செய்வதால் அரசுக்கு 2004-2005ல் சென்னையில் மட்டும் ஏற்பட்ட நட்டம் பற்றிய ஒரு தணிக்கை அறிக்கை இங்கே

இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் நிலம் பதிவு செய்யும் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினி கருப்பு பணத்திற்கு எதிரான பாத்திரத்தில் நடித்தார் என்பதற்காக அவர் செய்தது இது போல நிலம் பதிவு செய்யும் ஏனையோர் செய்வதை விட "கூடுதல் தவறு" என்பது நகைச்சுவை. உண்மையில் சிவாஜி படத்தின் முற்பகுதி கதை போலத்தான் ரஜினி நடந்திருக்கிறார். (இவர் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை, இவருக்கு நிலம் விற்றவர் தான் கணக்கில் வராத கருப்புப் பணமாக பெற்றிருக்கிறார்)

தவறுதல் மனித இயல்பு. ரஜினியும் மனிதரே. ரஜினி ரசிகன் என்பதற்காக ரஜினியின் தவறுகளுக்கெல்லாம் சப்பை கட்டு கட்டிக்கொண்டிருக்க வேண்டிய தேவை ஒரு நல்ல ரசிகனுக்கு இல்லை.

ரஜினியின் ஆளுமை போலவே அவர் செய்யும் சிறு தவறும் பல மடங்காக பெரிதாக்கப்பட்டு ஊடக விற்பனைக்கு பலிகடா ஆக்கப்படுகிறது. ரஜினி என்ற சக்தியின் பெயரில் எந்த செய்தியைப் போட்டாலும் காசு பண்ணலாம் என்பது பல ஊடகத்துறையினர் அறிந்தது. அதை இம்முறை செயல்படுத்தி பலன் கண்டது குமுதம் ரிப்போர்டர்.

அவர் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று கருத்து சொல்லிக் கொண்டிருப்பதை விட, இது போன்ற சூழ்நிலையில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்றால்:

1) நான் முதலில் வாங்கிய போது விற்றவர் ஏற்படுத்திய கருப்புப் பணத்தை அவராய் நினைத்தால் மட்டுமே ஒழிக்க முடியும். எனவே அதை இப்போது என்னளவில் திருத்திக் கொள்ள முடியாது.

2) என் வரையில் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை என்ற நிம்மதியும் இரவில் நல்ல தூக்கமும் பெற
  • அரசு குறைமதிப்பு சொத்துக்கள் குறித்த தணிக்கை நடத்தும் போது நான் வாங்கிய நிலத்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்து அபராதத்துடன் மறுபதிவு செய்து கொள்வேன் (அல்லது)
  • எனக்கு தெரிந்த ஒருவருக்கு விற்று அதை மீண்டும் வாங்கி உண்மையான நில மதிப்புக்கு மறுபதிவு செய்து கொள்வேன். இதனால் ஏற்படும் நிலப்பதிவு செலவுகளுக்கும் நண்பர் செலுத்த வேண்டிய வருமான வரிக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்வேன்.
ஆயினும் சட்டப்படி இது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியவில்லை.

இதே செய்தியில் விக்ரம் நிலம் வாங்கியது பற்றியும் செய்தி வந்துள்ளது. அது உண்மையானால், அவர் நடித்த அன்னியன் படத்தில் இதே போன்ற நிலப்பதிவுக் காட்சியில் அவர் பேசிய வசனத்துக்கு ஏற்ப நடந்திருக்கிறார். அரசுக்கு நட்டம் ஏற்படுத்தவில்லை என்பதில் அவருக்கு பாராட்டுக்கள்.

சூரியனை சுட்டது யாருங்க? வீக் என்ட் ஜொள்ளு..
Google Buzz Logo

சூரியனை சுட்டது யாருங்க? சூரியனை யாரும் சுடமுடியாது அது தான் நம்மை சுடும்ன்னு சூரியன் படத்துல கவுண்டமணி சொன்ன மாதிரி பதில் சொல்லாதீங்க.

கீழே இருக்கும் புகைப்படம் உலகப் புகழ் இடத்திலிருந்து இன்னோரு உலகப் புகழ் பெற்ற கட்டிடத்தின் பின் கதிர் மறைவதை உலகப் புகழ் பெற்றவர் (ஹி..ஹி..நான் தான்) சுட்டது.




எங்கே, இது எந்த இடத்திலிருந்து எடுத்தது ? படத்துல இருக்கும் உலகப் புகழ் பெற்ற கட்டிடம் எதுன்னு சொல்லுங்க பார்ப்போம். க்ளூ வேணும்னா புகைப்படத்தை சொடுக்கி பாருங்க.

பி.கு: ஹி..ஹி.. தலைப்புல வீக் என்ட் ஜொள்ளுன்னு போட்டாத்தான் இப்பொல்லாம் சில பேர் பதிவு பக்கம் வர்றாங்க.

நீங்க சைவமா அசைவமா?
Google Buzz Logo

நீங்க சைவமா அசைவமான்னு கேக்கறத்துக்கு முன்னால சைவம், அசைவம்னா என்னன்னு பாக்கலாம்.

சில பேர் சொல்லுறாங்க கோழி, ஆடு, மாடு, மீன் இதை சாப்பிடறவங்க எல்லாம் அசைவம்னு. எதனால அப்படின்னு கேட்டா அதுக்கெல்லாம் நம்மை மாதிரியே சிவப்பு ரத்தம். நரம்பு, வலி எல்லாம் இருக்குன்னு.

சில பேர் சொல்றாங்க, சிவப்பு ரத்தம் இல்லைன்னாலும் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய, வலி உணரும் திறமுள்ள எந்த உயிரையும் கொன்று தின்றால் அது அசைவம்னு.

இன்னும் சில பேர் சொல்லுறாங்க தாவரங்களைத் தவிர எது சாப்பிட்டாலும் அசைவம்ன்னு. ஏன்னா தாவரங்களுக்கு வலியை உணர முடியாதாம். உணர்ச்சி இல்லையாம். ஆனா விஞ்ஞானி ஜே.சி.போஸ் சொல்றாரு எல்லா தாவரங்களும் வலியை உணரக்கூடியவை, மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவைன்னு. அப்ப தாவரம் சாப்பிடுறவங்களும் அசைவம் தானா?

அப்புறம் சில பேர் சொல்றாங்க, ஆடு, மாடு இதையெல்லாம் கொன்னா தான் தப்பு, அது தர்ற பால் குடிக்கறது தப்பில்லைன்னு. பால் தயிரா மாறுவது ஈஸ்ட்ன்னு ஒரு வகை பூஞ்சைக் காளான் மூலமா அப்படின்னு சின்ன வயசுல படிச்சிருப்பிங்க. ரொட்டி/கேக் தயாரிப்பிலும் இதை சேர்ப்பாங்க. தயிரை சாப்பிடும்போது இந்த ஈஸ்ட்டையும் சேத்து தான் உயிரோட விழுங்கறோம்.

சமீபத்துல ஈஸ்ட்டும் பிற உயிர்களைப் போலவே வெப்பம், குளிர், அழுத்தம் போன்ற சுற்றுப்புற இறுக்கங்களுக்கு பதிலளிப்பதாவும் தம்மை மாற்றிக் கொள்வதாகவும் கண்டுபிடிச்சிருக்காங்க (இது பற்றி அறிய விரும்புவோர் "Stress response of Yeast"ன்னு கூகுளில் தேடிப் பாருங்கள்). அப்படின்னா ஈஸ்ட்டுக்கு உணர்வுகள் உண்டுன்னு தானே அர்த்தம்.

வாழ்க்கையில ஒரு முறையாவது ரொட்டி/கேக்/தயிர்/யோகர்ட் சாப்பிடாத ஆளை நான் இன்னும் சந்திச்சதில்லை. அதனால உலகத்துல எல்லாருமே அசைவமா?

நீயும் அசைவம் நானும் அசைவம் நெனச்சி பாத்தா எல்லாம் அசைவம்..

இப்ப சொல்லுங்க.. நீங்க சைவமா அசைவமா? அசைவம்னா மேல சொன்ன எந்த வகை அசைவம் ?

பிற்சேர்க்கை: அப்படியே, தாவரங்கள் எப்படியெல்லாம் மனிதர்களால் கொடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டு கடைசியில் உண்ணப்படுகின்றன அப்படின்னு ஒரு எட்டு http://www.vegetablecruelty.com/gallery/?show=1க்கு போய் பாத்துருங்க.
(இளகிய மனம் கொண்டோர், இதயநோயாளிகள் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

ஔவைக்கு குரல் கொடுங்கள்
Google Buzz Logo

தற்போது உருவாக்கத்தில் இருக்கும் ஔவை உரை பேசி சேவைக்கான குரல் கோப்புகள் தயாரிப்பில் இதுவரை சரியான உச்சரிப்புடைய கோப்புகள் கிடைக்கவில்லை.

ஔவை உரைபேசிக்கு குரல் கொடுக்க விரும்புவோர் ஔவை ஆத்திச்சூடியை (ஆத்திசூடி by ஔவையார், ATHICHOODI by Auvaiyar) உரக்கப் படித்து கணினியில் MP3 கோப்பாக சேமித்து rapidshare, megaupload போன்ற தளங்களில் பதிவேற்றி சுட்டியை எனக்கு தனிமடலில் (higopi [at] gmail [dot] com) அனுப்புங்கள்.

குரல் பதிந்து அனுப்புவோர் கவனத்துக்கு:

  1. ஒலிக் கோப்பின் MP3 பதிவுத் தெரிவுகள்: 128 kbps, mono, 44khz
  2. ஓரிரு வரிகளை பதிவு செய்து மீண்டும் Play செய்து Noice இல்லை என உறுதிபடுத்திக் கொண்டு முழுவதும் பதிவு செய்யுங்கள்.
  3. அமைதியான சூழலில் பதிவு செய்யுங்கள். கூடுமானவரை சுற்றுப்புற ஓசைகள் இல்லாதிருத்தல் நல்லது.
  4. பதிவு செய்ய ஆடாசிடி http://audacity.sourceforge.net/ பயன்படுத்துங்கள்.
  5. தேவையெனில் திருத்தங்களுக்கும் மறு பதிவுக்கும் நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டி வரலாம்.
ஔவை உரைபேசி குறித்து மேலதிக தகவல்கள் இங்கே.

ஔவைக்கும் தமிழுக்கும் குரல் கொடுங்கள்.

அதியன் 3.0.0 வெளியீடு
Google Buzz Logo

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 3.0.0ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

இந்த வெளியீட்டில் களையப்பட்ட வழுக்கள்:

  1. ஆங்கில சொற்றொடர்களும் தெரிவு செய்த தகுதரத்துக்கு மாறுகின்றன
  2. ஒகர ஓகார ஔகார ஒற்றுக்களின் canonical equivalence வழு
இந்த வெளியீட்டில் புதிய வசதிகள்:

அ.வலைத்தள முன் தெரிவுகள்

குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு தேவையான எழுத்துரு மாற்றத்தை முன் தெரிவு செய்ய இயலும். அவ்வலைத்தளங்களில் உலாவும் போது தானியங்கு முறையில் எழுத்துரு மாற்றம் செய்யப்படும். சில தகுதரம் அறியப்பட்ட தளங்கள் முன் தெரிவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆ.புதிய எழுத்துரு மாற்றங்கள்

தினத்தந்தி, தினமணி ஆகிய தளங்களுக்கான எழுத்துரு மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இ. வலச்சொடுக்கிப் பட்டியல்

இப்போது எந்தெந்த எழுத்துரு மாற்றங்களை வலச்சொடுக்கிப் பட்டியலில் காட்ட வேண்டும் என்பதை தெரிவு செய்ய இயலும். வலைத்தள முன்தெரிவில் தேர்ந்தெடுத்த எழுத்துரு மாற்றங்கள் ஏற்கனவே வலச்சொடுக்கிப் பட்டியலில் தெரிவு செய்யப்படாதிருந்தால் தானாகவே தெரிவு செய்துவிடும்.

விரைவில் இந்த வெளியீடு மொசில்லா நீட்சிகள் தளத்திலும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அப்போது ஏற்கனவே இந்நீட்சியை நிறுவியுள்ளோரின் உலாவிகள் புதுப்பிக்க சோதிக்கும் போது தானியங்கு முறையில் தரவிறக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

இந்த வெளியீட்டின் வழுக்களை சோதித்து விரிவான வழு அறிக்கை அளித்த தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவைச் சேர்ந்த சேது அவர்களுக்கும் மற்றும் இதன் முன் வெளியீட்டு சோதனையின் போது பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் http://adhiyan.mozdev.org/bugs.html என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

உலகெங்கும் உலாவும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

தமிழ்விசை 0.4.0 வெளியீடு
Google Buzz Logo

தமிழ்விசையின் அடுத்த பதிப்பான 0.4.0 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டில் களையப்பட்ட வழுக்கள்:

  1. சாட்ஜில்லாவில் தமிழ் விசை இயங்க மறுத்தது.
  2. தமிழ்விசை 0.3.2 புதிய ஜி-மெயிலில் இயங்க மறுத்தது.
  3. தமிழ் 99 விதிகள் 5,7,9,10,11 ஆகியவை இல்லை.
  4. தமிழ் 99 விசைப்பலகையில் (௺,௹) போன்ற சிறப்புக் குறியீடுகள் இல்லை.
  5. தமிழ் 99 ஆய்தம் 'ஃ' தட்டச்சிட முடியவில்லை.
  6. அஞ்சல் விசைப்பலகையில் qpyarqpaakS என தட்டச்சினால் 'ஃபயர்ஃபாக்ஸ்' என்று மாறவில்லை.
  7. பாமினி,புதிய/பழைய தட்டச்சு விசைப்பலகைகளில் கொம்பு, புள்ளி குறித்த வழுக்கள்.
  8. பாமினி,புதிய/பழைய தட்டச்சு விசைப்பலகைகளில் ஒகர ஓகார ஔகார canonical equivalences பிரச்சனை.
  9. பாமினி,புதிய தட்டச்சு விசைப்பலகைகளில் ஔகாரம் அடுத்துவரும் ஒற்று பிரச்சனை
  10. பாமினி விசைப்பலகையில் விடுபட்ட எழுத்துக்கள்.
இந்த வெளியீட்டில் புதிய வசதிகள்:

அ. வலைத்தள முன் தெரிவுகள்

குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு தேவையான விசைப்பலகைகளை முன் தெரிவு செய்ய இயலும். அவ்வலைத்தளங்களில் உலாவும் போது தானியங்கு முறையில் விசைப்பலகை தெரிவு செய்யப்படும்.

ஆ. காட்சியமைப்பில் மாறுதல்

தமிழ் விசைப்பலகைகள் தெரிவில் உள்ளபோது தட்டச்சு உரைப் பெட்டியின் பின்புலம் வெளிர்நீல நிறத்திலும், எல்லைக் கோடு நீல நிறத்திலும் மாறும்.

இ. இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகை

இந்தப் பதிப்பில் புதிதாக இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகை சேர்க்கப்பட்டுள்ளது. இனி இந்த விசைப்பலகை பயனர்களும் தமிழ்விசை நீட்சியை பயன்படுத்த இயலும்.

ஈ. அவ்வை விசைப்பலகை:

இந்தப் பதிப்பில் புதிதாக அவ்வை விசைப்பலகை சேர்க்கப்பட்டுள்ளது. இனி இந்த விசைப்பலகை பயனர்களும் தமிழ்விசை நீட்சியை பயன்படுத்த இயலும்.

உ. வலச்சொடுக்கிப் பட்டியல்

இப்போது எந்தெந்த விசைப்பலகைகளை வலச்சொடுக்கிப் பட்டியலில் காட்ட வேண்டும் என்பதை தெரிவு செய்ய இயலும். வலைத்தள முன்தெரிவில் தேர்ந்தெடுத்த விசைப்பலகைகள் ஏற்கனவே வலச்சொடுக்கிப் பட்டியலில் தெரிவு செய்யப்படாதிருந்தால் தானாகவே தெரிவு செய்துவிடும்.

இந்த புதிய பதிப்பை பதிவிறக்கி நிறுவ http://tamilkey.mozdev.org/installation.htmlல் சொல்லியபடி செய்யவும்.

விரைவில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 தளத்திலும் இந்த புதிய பதிப்பு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தமிழ்விசை 0.4.0 வெளியீடு தரவிறக்க கிடைக்கும் போது தற்சமயம் இந்த நீட்சியைப் பயன்படுத்தும் கணினிகளில் தானியங்கி முறையில் புதிப்பித்துக் கொள்ளும்.

இந்த வெளியீட்டின் வழுக்களை சோதித்து விரிவான வழு அறிக்கை அளித்த தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவைச் சேர்ந்த சேது, மயூரேசன் ஆகியோருக்கும், மேம்பாடுக்கான யோசனைகள் அளித்து உதவிய சுரதா யாழ்வாணன், ரவிசங்கர், பாலபாரதி ஆகியோருக்கும் மற்றும் இதன் முன் வெளியீட்டு சோதனையின் போது பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் http://tamilkey.mozdev.org/bugs.html என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

உலகெங்கும் உலாவும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்