வலைப்பூ - தொடர்புகளும் வலைகளும்
Google Buzz Logo

இந்த அவசர யுகத்திலே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது எத்தனை சிறப்பாக அமைகிறதோ அதைப் பொருத்தே அவர்களிருவருக்குமான உறவும் அமைகிறது

உதாரணத்துக்கு பணியிடத்திலே நீங்கள் உங்கள் மேலதிகாரியிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம், நீங்கள் நினைப்பதை மிகச் சரியாக உங்கள் மேலதிகாரி புரிந்துகொள்ளும்படி நீங்கள் வெளிப்படுத்தினால் தான் உங்கள் பணி சிக்கலேதுமில்லாமல் நடக்கும். உங்கள் மேலதிகாரிக்கும் உங்களுக்குமான உறவு, முற்றிலும் நீங்கள் அவரிடத்தில் தொடர்பு கொள்ளும்போது எவ்வாறு பேசுகிறீர்கள் என்பதைப் பொருத்தே அமையும். மேலதிகாரிக்கும் உங்களுக்குமான உறவு, பணியிடத்தில் உங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரி. இப்போது ஒருவரிடம் தொடர்பு கொள்ளும்போது எவ்வாறெல்லாம் பேசக்கூடாது என்பதைப் பார்ப்போம்

விவாத வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் "சரிதான், ஆனா" என்று ஆரம்பிக்கிறீர்கள் என்றால் "விவாத வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். உங்கள் விவாதம் சரியான ஆதாரங்களுடன் இல்லாத போது அது மற்றவருக்கு எரிச்சல் மூட்டுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மீதான மதிப்பையும் குறைக்கும்

ஒப்பீட்டு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இதேமாதிரி ஒரு முறை எங்க ஊருலகூட ஒருத்தனுக்கு நாக்கு வெளிய வந்து விழுந்துச்சிபா" என்றால் நீங்கள் "ஒப்பீட்டு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இதனால் ஒருவருக்கு நீங்கள் ஆதரவாய் பேசுவதாய் நீங்கள் நினைத்தாலும் அது அவருக்கு எரிச்சலூட்டுவதாகவே அமையும்

பரவாயில்லை வலை:உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இது பரவாயில்லைப்பா எனக்கு ஒரு முறை சளி பிடிச்சி மூக்கு சிந்தும்போது மூக்கே கழண்டு விழுந்துடுச்சி. அப்றம் 10 தையல் போட்டு ஒட்ட வச்சாங்க" என்றால் நீங்கள் "பரவாயில்லை வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். எதிராளியைவிட நாந்தான் பெரியவன் என்று மார் தட்டிக் கொள்வதால் நீங்கள் சாதிப்பது ஏதுமில்லை மாறாக உங்களை அது பாதிப்பதே அதிகம்

பழங்கதை வலை:உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இப்படித்தான் 1946ல" என்று ஆரம்பித்து சம்பந்தமே இல்லாமல் உங்கள் பழங்கதையை பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் "பழங்கதை வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இப்படிப் பேசுறதுனால பெரிய பாதிப்பு ஒன்னுமில்லை, என்ன அடுத்தவாட்டி உங்க தலை தெரிஞ்சாவே அவனவன் தலைதெறிக்க ஓடுவான்

அபிப்ராய வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "இப்படி நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும் அவன் இருமும்போது எப்பவுமே நாக்க தொங்கப் போட்டுட்டு தான் இருமுவான் அவன்லாம் உருப்படமாட்டான்" என்றால் நீங்கள் "அபிப்ராய வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். அவருக்கு ஆதரவாப் பேசுறதா நீங்க நெனைக்கலாம். ஆனா அவர் உங்களை ஒரு கோள்மூட்டும் நபராகவே பார்ப்பார்.

குறுக்கீட்டு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து.. " என்று பேசிக்கொண்டிருக்கும் போதே சம்பந்தமில்லாமல் குறுக்கிட்டு "மீனுக்கு நாக்கு இருக்குதா இல்லையா" என்றால் நீங்கள் "குறுக்கீட்டு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இது சம்பந்தப்பட்டவரை மற்றுமின்றி எல்லோரையும் எரிச்சலடையச் செய்யும்

குற்றச்சாட்டு வலை/சுயபட்சாதாப வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதற்கு நீங்கள் "எனக்கு கூட சளி இருக்கு ஒருத்தனுக்கும் என்னைப் பத்தி கவலையில்லை" என்றால் நீங்கள் "குற்றச்சாட்டு வலை/சுயபட்சாதாப வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இப்படியே பேசிக்கிட்டிருந்தா பழங்கதை வலைல ஆன மாதிரி அடுத்தவாட்டி உங்க தலை தெரிஞ்சாவே அவனவன் தலைதெறிக்க ஓடுவான்

கிசு கிசு வலை: உங்களிடம் ஒருவர் "எங்க ஊருல ஒருத்தனுக்கு சளி பிடிச்சி இருமும்போது நாக்கு வெளியில வந்து விழுந்துடுச்சி" என சொன்னால் அதைக்கேட்டுக் கொண்டு வந்து பிறகு பல பேரிடம் ரகசியமாக (சம்பந்தமில்லாதவரிடம் கூட) கூறுகிறீர்கள் என்றால் நீங்கள் "கிசு கிசு வலை"யில் விழுகிறீர்கள் என அர்த்தம். இருக்கறதுலயே மோசமான வலை இதுதான். கிசு கிசு பேசுறவங்களை நண்பன் எதிரி ரெண்டு பேருமே விரும்பமாட்டார்கள்

இப்படி எந்த வலையிலும் சிக்காமல் ஒருத்தரிடம் பேசி நம்ம சொல்லவந்த விஷயத்தை சரியாகச் சொன்னால் தொடர்புகளையும் நட்புகளையும் எந்தச் சிக்கலுமில்லாமல் நடத்திச் செல்லலாம்

(என்று சொன்னாலும் எந்த வலையிலும் சிக்காமல் இதுவரை என்னால் இருக்க முடியவில்லை. எந்த வலையிலும் சிக்காத யாராவது இருக்கீங்களா?)

10 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு கண்ணன் சொன்னது...

:-) மிக அருமையான அலசல். இனிமேல் சாதாரண உரையாடலின் பொழுதும் இப்பதிவு ஞாபகத்தில் வந்து தொலைக்குமே, அப்பொழுது எதிராளி எந்தப்பக்கம் போகிறார் என்று மனதிற்குள் அலசத்தோன்றும் "கண்டுபிடிப்பு வலையில்" விழாமலிருதால் சரி.

(ஆமாம், இது என்ன வலையாம்? :-) )


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால் சொன்னது...

நல்ல பதிவு! ஆமாம், இப்ப நாங்க என்னவலையிலே விழணும்ன்னு சொல்லறீங்க?

ஆபத்து இல்லாத ஒரு வலை இருக்கா?

என்றும் அன்புடன்,
துளசி.


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

பல இடங்களில் 'பேசா வலை'தான் ஓரளவு ஆபத்தில்லாதது. இது 'தற்காப்பு வலை', 'ஜால்ஜாப்பு வலை', 'தப்பிப்பு வலை', 'எஸ்கேப் வலை', 'ஊமை வலை' என்ற பல பெயர்களில் அழைக்கப்படும். தாமஸ் ஆல்வா எடிசன் கூட சொன்னாரே(ஹி... ஹி... சொல்லிக்க வேண்டியதுதான்:) "மூளைக்கு இணையான ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் சில சமயம் பேசாமல் இருப்பது, அமைதி காப்பது மூளைக்கு இணையானது"...

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்....


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால் சொன்னது...

ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்


பெயரில்லா |

மணிக்கு சீனு சொன்னது...

கோபால்,
அற்புதமான அலசல்...


பெயரில்லா |

மணிக்கு சீனு சொன்னது...

கோபால்,
அற்புதமான அலசல்...


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

எப்போதுமே விவாத அலைதாம்பா நமக்கு வசதி!


பெயரில்லா |

மணிக்கு கிறிஸ்டோபர் சொன்னது...

தூள் கண்ணா தூள்...


பெயரில்லா |

மணிக்கு suresh சொன்னது...

இதுக்கு கருத்து சொன்ன அபிப்ராய வலையில் நான் விழுன்திடிவேனோன்னு பயமா இருக்கு!


பெயரில்லா |

மணிக்கு யோசிப்பவர் சொன்னது...

இப்ப நான் என்ன சொன்னாலும் மாட்டிப்பேனே? என்ன பண்றதுன்னு தெரியலையே?@-)