வலைப்பூ - மொழிப் போர்
Google Buzz Logo

எங்கள் நிறுவனம் பல்வேறுபட்ட மொழி/மாநில/நாடு சார்ந்த சமூகத்தினர் பணிபுரியும் இடம். தகவல் பறிமாற்றத்துக்கென ஒரு மின்னஞ்சல் குழு உண்டு. சில சமயங்களில் இந்த மின்னஞ்சல் குழுவில் சிலர் சர்ச்சைக்குறிய விஷயங்களை மின்னஞ்சலில் அனுப்ப, அதை ஆதரித்தும் எதிர்த்தும் பூகம்பங்கள் கிளம்புவதுண்டு. அப்படி சமீபத்தில் நிகழ்ந்த பிராந்திய மொழிகள சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் போரை கீழே தமிழ் படுத்தியுள்ளேன்

ஆனந்த்:"ஜீ-மெயில்" மின்னஞ்சல் அழைப்புகள்
மக்களேய்...
என்னிடம் சில "ஜீ-மைல்" மின்னஞ்சல் அழைப்புகள் உள்ளன... தங்களுக்கு தேவைப்பட்டால் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்... மீதம் இருந்தால்... உடன் அனுப்பி வைக்கிறேன்..
அன்புடன்...
ஆனந்த்
(ரோமனைஸ்ட் தமிழ்/ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் இது மட்டுமே, மற்றவை அனைத்தும் ஆங்கிலத்தில் வந்தவை)

ரவி மகேந்திரா: ஆனந்த் உங்கள் தமிழ் பற்றுக்கு பாராட்டுக்கள். ஆனால் இத்தகைய மின்னஞ்சல்களை தகவல் பறிமாற்று மின்னஞ்சல் குழுவுக்கு அனுப்பாதீர்கள், தமிழர் தவிர மற்றவரும் இக்குழுவில் உண்டு

பவன்குமார் நாகராஜூ: இது போன்ற மின்னஞ்சல்களை நம் குழுவிற்கு அனுப்பாமல் இருப்பதே நல்லது. புரியாத மொழியில் ஒரு மின்னஞ்சல் வருவதை நீங்கள் கூட விரும்ப மாட்டீர்கள் ஆனந்த்

கோபி: பவன்/ரவி சொன்னதை நான் வழி மொழிகிறேன். முன்பு சற்று "மராத்தி கோஸ்ட்" பற்றி வந்த மின்னஞ்சல் கூட மராத்தி அறியாதவர்க்கு புரியாது

கார்த்திக்: கோபியை நான் வழி-வழி (இல்லைன்னா வேற எதுவோ அதை) மொழிகிறேன். பாமர ஜனங்களுக்கு புரிய ஆனந்தின் மின்னஞ்சலை இந்திப் படுத்தியுள்ளேன்...... (இந்தியாக்கம்)

அனுராக்: "மக்களேய்!", "அன்புடன்", இதுக்கெல்லாம் இந்தில என்னான்னு நீங்க சொல்லலை கார்த்திக்

கார்த்திக்: ஐய்யையோ, அதுக்கு அர்த்தம் சொன்னா என்னை வேலைய உட்டு தூக்கிடுவாங்க, தனியா வாங்க உங்களுக்கு மட்டும் சொல்றேன் (சும்மா உலூலுவாக்கு சொன்னேன், மக்களேன்னா இந்தில (இந்தியாக்கம்)., அன்புடன்னா இந்தில (இந்தியாக்கம்).)

அநிர்பன்: ஏய் யாருப்பா அது! இந்தியாவிலுள்ள அனைவருக்கும் புரியற மாதிரி அனுப்புங்கப்பா

ஜகன் பிரசாத்:தயவு செய்து ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பாதீர்

ஆனந்த்: மன்னிக்க, "ஜீ-மெயில்" அழைப்புகள் சிலவே என்னிடம் இருந்தன, குறைந்த அளவு மக்களுக்கு மட்டுமே என் செய்தி சென்றடைய வேண்டும் என தமிழில் அனுப்பினேன். தவறு என்றால் எல்லாரும் அதை செய்வதை நிறுத்தனும். கொஞ்சம் முன்னாடி அனுப்பப்பட்ட கன்னட ஜோக், மராத்தி பிசாசு, தெலுங்கு கவிதை, இந்தி செய்தி இதெல்லாம் பரவாயில்லையாம், தமிழ்ன்னு வரும்போது எல்லாருக்கும் ஏன் இப்படி பொத்துகிட்டு வருதுன்னு தெரியலை :-(

பரேஷ்: ஏப்பா ஆனந்த்! எதுக்கு வீனா ப்ரச்சனைய கிளப்புற, உனுக்கு வேனும்னா தமிழ் தகவல் பறிமாற்றக் குழு வச்சிக்க, பொதுவுல இப்படி அசிங்கம் பண்ணாத

பார்த்தசாரதி: ஒரு பொதுவான குழுவுல தமிழனுக்கு மட்டும் நல்லது பண்ணுவேன்னு சொல்றது சரியில்ல ஆனந்த். சக தமிழனா இதுக்காக வெட்கப்படுறேன் வேதனைப்படுறேன்

சாய் கிரண்: பிராந்திய மொழி கவிதைகள் போன்றவை மொழிபெயர்த்தால் அதன் முழு கருத்து மக்களைச் சென்றடையாது ஆனால் "ஜீ-மெயில்" போன்ற தகவல்களை தயவு செய்து ஆங்கிலத்தில் அனுப்புங்கள்

சுனில்: மற்ற மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பக் கூடாதுன்னா அது இந்தி, மராத்தி உட்பட எல்லா ப்ராந்திய மொழிகளுக்கும் பொருந்துமில்ல?

கிரண் ஹெக்டே: இந்தி தேசிய மொழி! அதை யாரும் ப்ராந்திய மொழி லிஸ்ட்ல சேக்காதிங்க

மகாதேவன்: ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா!

சிவா: இந்தி தேசிய மொழியா இருக்கலாம் ப்ரதர். ஆனா அதை எல்லாரும் தெரிஞ்சு வச்சிருக்கனும்னு அவசியமில்லை. ஆனா ஆங்கிலம் தெரியாம நம்ம நிறுவனத்துல வேலை பாக்க முடியாது அதனால ஆங்கிலத்துல மட்டும் மின்னஞ்சல் அனுப்பினா நல்லது

ஜோஜித் பானர்ஜி: தேசியக்கொடி, தேசியப்பறவை மாதிரி தேசியமொழி, இந்தி தெரியாதுன்னு ஒரு இந்தியன் சொல்றதுக்கு வெக்கப்படனும்.

தெய்வத் ஆவஸ்யா: இந்தியரான நம்ம அனைவருக்கும் தெரிந்த ஒரே பொது மொழி ஆங்கிலம்னு நெனச்சா வேதனையா இருக்கு

கோபி: அவ்வளவு தேசியப்பற்று இருக்கற இந்தியனான நீங்க, ஆங்கிலத்தை அலுவல் மொழியா கொண்ட ஒரு அமெரிக்க நிறுவனத்துல பணிபுரியறத நெனச்சி வெக்கப்படலையா ? வேதனைப்படலையா ?

பாலாஜி: ஒரு மொழி பிராந்திய மொழின்னா தாழ்வுமில்ல தேசிய மொழின்னா உயர்வுமில்ல, எத்தன பேர் பேசுறாங்க/உபயோகப்படுத்துறாங்கன்றத பொறுத்துதான் அந்த மொழி இன்னும் எத்தனை காலம் வாழும்னு சொல்லலாம்.

ஸ்ரீராம்: யப்பா, இந்தி மட்டும் தேசிய மொழியில்லப்பா, இந்திய அரசு லிஸ்ட்டப் பாருங்க. இதுல பாத்தீங்கன்னா மற்ற தேசத்தை சேர்ந்த நேபாளி, உருது கூட நம்ம தேசியமொழி! அதவிட ஒரு விஷயம் என்னன்னா, வழக்கொழிந்து போய் பேச ஆளே இல்லாத சில மொழிகள் கூட நம்ம தேசிய மொழி லிஸ்ட வருதுப்பா
(அதோட நகல் கீழே இருக்கு)

அங்கீகரிக்கப்பட்ட இந்திய தேசிய மொழிகள் (அலுவலக உபயோகத்துக்கு மட்டும்)
1) அஸ்ஸாமி (அஸ்ஸாம் அலுவல் மொழி)
2) பெங்காலி (வங்க, திரிபுரா அலுவல் மொழி)
3) போடோ (அஸ்ஸாம் அலுவல் மொழி)
4) தோக்ரி (ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி)
5) குஜராத்தி (குஜராத் மற்றும் சில பகுதிகளின் அலுவல் மொழி)
6) இந்தி (அந்தமான்/நிகோபார், பீகார், சன்டிகார், தில்லி, ஹரியானா, சட்டீஸ்கர், ஜார்கன்ட், இமாசலப்ரதேசம், மத்தியப்ரதேசம், ராஜ்ஸ்தான், உத்திரப்ரதேசம், உத்திராஞ்சல் ஆகியவற்றின் அலுவல் மொழி)
7) கன்னடம் (கர்னாடக அலுவல் மொழி)
8) காஷ்மீரி
9) கொங்கனி (கோவா அலுவல் மொழி)
10) மைதிலி (பீகார் அலுவல் மொழி)
11) மலையாளம் (கேரளா, லட்சத்தீவு ஆகியவற்றின் அலுவல் மொழி)
12) மணிப்பூரி (மணிப்பூர் அலுவல் மொழி)
13) மராத்தி (மகாராஷ்டிர அலுவல் மொழி)
14) நேபாளி (சிக்கிம் அலுவல் மொழி)
15) ஒரியா (ஒரிஸ்ஸா அலுவல் மொழி)
16) பஞ்சாபி (பஞ்சாப் அலுவல் மொழி)
17) சமஸ்கிருதம்
18) சாந்தலி
19) சிந்தி
20) தமிழ் (தமிழ்நாடு, பாண்டிச்சேரி அலுவல் மொழி)
21) தெலுங்கு (ஆந்திரப்பிரதேச அலுவல் மொழி)
22) உருது (ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி)

மத்திய நிர்வாக அலுவலுக்கு மட்டுமான தேசிய மொழிகள்:
1) இந்தி
2) ஆங்கிலம்

சுவாமிநாதன்: நிறுத்தனும், எல்லாத்தையும் நிறுத்தனும், இந்தியா சகல மொழியினரும் வாழும் நாடு, நாம எல்லாம் இந்தியர்.

திலீப்: குறைஞ்சபட்சம் எல்லாருக்கும் புரியற மாதிரி ஆங்கில மொழியாக்கத்தையும் கூடவே அனுப்பலாம்

நாட்டாமை (குழு நிர்வாகி): தகவல் பறிமாற்றத்துக்கான இந்த குழுவுல எல்லாரும் சொந்த தகவல்களை நல்லாவே பறிமாறிகிட்டீங்க, உருப்படியா தகவல் சொன்ன ஸ்ரீராம் தவிர மற்ற அனைவரையும் ஒரு மாதத்துக்கு குழுவை விட்டு விலக்கி வைக்கிறேன்.

(இதுக்கப்புறம் நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு ஒரு மின்னஞ்சல் சங்கிலி ஆரம்பிச்சி அது வேற மின்னஞ்சல் குழுவிலிருந்து இன்னும் பலர் நீக்கப்பட காரணமா இருந்தது)

4 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு காசி சொன்னது...

நிஜம்மாவா, இல்லை ரீலா?
பரவாயில்லையே இதெல்லாமா பேசிக்கறீங்க?


பெயரில்லா |

மணிக்கு Arun சொன்னது...

Seems real..!
If it is, its unnecessary fight! Its better to send emails in English when oter language people are around. I will feel the same, If I get a Hindhi email.


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

இப்படி ஒரு பிரச்னையை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது விவாதம்!


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

நிஜம்மா நடந்ததுங்க, தமிழ்ப் படுத்தும் போது கருத்து மாறாமல் சுவைக்காக சிலவற்றை சேர்த்துள்ளேன் (உ.ம். மகாதேவன்: ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா! )